பிரித்தானியா போய் படிச்சு அறிவ பெருசா வளர்க்காட்டியும் பிழை கண்டுபிடிக்கிற திறமைய மலையளவாக்கினதில சின்னதா எப்பவும் ஒரு சந்தோசம்.முந்தி தமிழர் கலாச்சாரம் எண்டா இன்றளவுக்கும் பொரிபடாமல் காலம் காலமா அடைகாக்கப்படுகிற விலைமதிப்பில்லா ஆனையளவு முட்டையாக்கும் என்று இருந்த எண்ணம் போய் அது கிப்ஸ் சாறம் போல மலிவான ஒன்று தான் எனவெண்ணும் படி ஆகிவிட்டேன்.உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை காலனியாதிக்கம் தந்த சுவடுகளை சுமந்தபடி "வெள்ளைக்காரர் சரியான குப்பையன்களாம்,நெறியில்லாதவங்களாம் உண்மையோடா தம்பி?" என கேள்வி கேட்கும் ஆன்ரிமாரை நினைக்க அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.பிரத்தியோக அடையாளங்கள் என்ன?,அன்னிய வழக்கங்கள் என்னவென்றே தெரியாமல் வாழும் அளவுக்கு வரம்புகள் பலவீனமான இனமா எங்களுடையது என எண்ணும் போது விரக்தியும் வெறுப்பும் மேலிடுவதை தடுக்க முடியவில்லை.

சனம் முழுதையும் நடுரோட்டில் நிக்கவைச்சு சத்தமாக ஒலிபெருக்கி பூட்டி...
"சப்பாத்து போட்டு ரை கட்டின தமிழ் கலாச்சார ஐயாமாரே,பாவாடை சட்டை போட்ட கலாச்சார அம்மாமாரே!,பஞ்சாபி கட்டிய இளம் பிகருகளே,டெனிம் போட்ட காளைகளே! காலமை எழும்பி ரீ குடிச்சு,வேர்க்குக்கு போய் டயர்ட் ஆகி வீடு வந்து ரைஸ் சாப்பிட்டு உடம்பு வளர்க்கும் மறவர்களே!,நீங்கள் போடுகிற பிராவும் யட்டியும் கூட சோழர்காலத்தில் இருந்து போட்டு வந்தவை தானா?,மனமுவந்து கேக் வெட்டி மகிழ்கின்ற பிறந்த நாளும்,மோதிரம் மாற்றி செய்கிற ரெஜிஸ்ரேசனும் சங்ககாலம் தொட்டு இருப்பவை தானா?
வெள்ளைக்காரன் நூற்றாண்டுகளுக்கு முன் போட்ட பாடவிதானத்தை அடியொற்றி கல்வி கற்று,அவன் போட்ட தண்டவாளத்திலும் றோட்டிலும் இன்றளவும் ஓட்டிக்கொண்டிருக்கிற உங்களுக்கு என்னடா நாகரீகம்?,அவனைப்போல வாழவேண்டும்,அவன் மொழி பேச வேண்டும் என்று நடை,உடை,பாவனை என ஒன்று விடாமல் பிரதியெடுக்கிற நீங்கள் காமத்துக்கு மட்டும் உருமறைப்பு போட்டால் அது தனிக்காலாச்சாரம் ஆகிவிடுமா?.பெண்பிள்ளை வயசுக்கு வந்ததை ஊர்முழுக்க சொல்ல விழா எடுப்பது,தனிமனித அந்தஸ்த்து,உழைப்பு என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பணப்பெறுமதியில் திருமணங்களை நிர்ணயிப்பது போண்ற கேலவங்களைக்காட்டிலும் அவங்களின்ர டேட்டிங்கும் கோயிங் அவுட்டும் எவ்வளவோ மேலானதடா.முன்னால் வீற்றீருக்கும் காலாச்சார இளைஞர் இளைஞிகளே! நீங்கள் வாழ்க்கைத்துணை தேடும் போடும் முக்கியமாக அவதானிப்பது வெள்ளையா கருப்பா? என்ற வெள்ளைக்காரன் விதைத்துவிட்ட பேதத்தைத்தானே?....

என்று கிழி கிழி என்று இயலுமானவை கிழித்து எறியவேண்டும் என்று சமீப நாளாய் எனக்குள் ஒரு ஆசை ஓடிக்கொண்டு இருக்கிறது.ஆனால் சொல்லி முடிக்க என்னை விடமாட்டார்கள் என்பதுவும்,முடிக்க விட்டாலும் விசரன் என்று குறித்துவிடுவார்கள் என்பதும் நன்றே தெரிந்ததால் என்னவாவுக்கு கடிவாளம் போடும்படியாயிற்று.

வெறும் பேச்சுக்களுக்கு அப்பால்ப்பட்டு யதார்தமாக சிந்திக்குமிடத்து ஐநூறு ஆண்டுகளாக பீடித்திருந்த காலனியாதிக்கம் நம்மையறியாமலே எமக்குள் ஊடுருவி கலாச்சாரம் என்ற விடயத்தை ஒரு காமெடி பீஸ் போல ஆக்கிசென்றுவிட்டது என்பது புலப்படும்.ஆனால் அவ்வாதிக்கம் இன்று விடுபட்ட போதிலும் ரத்தத்தில் ஊறிப்போன செருப்புப்புத்தி காரணமாக வலிந்து அதற்க்குள் எம்மை திணித்துக்கொண்டிருப்பதுதான் சோகமான விடயம்.சரி கலாச்சாரம் தான் கிழிந்த சாறம் போலாகிவிட்டது.மிகப்பழைமையான ஒப்பில்லாத செம்மொழியாம் தமிழ் செம்மையாக மொழியை பேணினாலே போதுமே.இனத்துக்குரிய தனித்துவ அடையாளம் வந்துவிடப்போகிறது.ஆனால் இதற்க்குக்கூட மரத்தமிழன் தயாராக இல்லை என்பது துக்ககரமான உண்மையாகும்.



ஒரே மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் அறிமுகமாகும் போது பொது மொழியில் பேசிக்கொண்டாலும் பின்னர் சொந்த மொழியில் பேசுவதையே விரும்புவார்கள்.பாழாய்ப்போன பண்டித்தமிழன் மட்டும் தமிழன் என்று தெரிந்து அறிமுகமானாலும் ஆங்கிலத்தை குறுக்கே ஓட்டி விடுவான்.கட்டிப்போட்டு சுட்டாலும் ஆங்கிலம் ஒரு அறிவு அல்ல மொழி என்பது உறைக்காது.பொதுவாக உரையாடலில் ஒருவர் மேலோங்க விரும்பும் சந்தர்ப்பத்தில் தலையங்கம் சார்பாக ஆழமான கருத்துக்களை முன்வைப்பார்கள்.ஆனால் மரத்தமிழன் மட்டும் ஆங்கிலதில் பிறர்க்கு புரியாமல்ப்பேசி ஆதிக்கம் நிலைநாட்ட முயல்வான்.இந்த இயல்பு பலரால் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும் இது ஒரு வகையான தாழ்வுமனப்பிரச்சினையே ஆகும் என பெரியபிரித்தானிய சம்பவங்கள் சிலவற்றை வைத்து முடிவெடுக்கும் படியானது.

லண்டன் மாநகரில் 40+ வயதுகளை தாண்டிய அநேக மரத்தமிழர் 20 வருடங்களுக்குட்பட்ட காலப்பகுதியில் வந்தவர்கள்.படித்த,படிக்காதவர் என்ற வரையறைகளை தாண்டி இவர்களால் சரளமாக பிரித்தானிய உச்சரிப்புடன் ஆங்கிலம் பேச பெரும்பாலும் முடிவதில்லை.இவ்வாறான பேர்வழிகள் ஊரிலிருந்து புதிதாக வந்தா யாராவது சிக்கினால் தங்கள் புலமையை காட்டாமல் விட மாட்டார்கள்.சிக்கினவன் புரியாம முழுசினா "மிஞ்சிவிட்டாயடா இவனை" எண்டு தங்களைத்தாமே பாராட்டி விட்டு அமைதியாகி விடுவார்கள்.மாறாக அவன் நம்ம கேதார் போல எழும்பி நிண்டு வெளுத்து வாங்கினா சரண்டராகி விடுவார்கள்.ஆனால் ஆயுளுக்கும் கடுப்பை உள்ளே தேக்கி வைத்திருப்பார்கள்.
இன்னொரு சாரார் புலம்பெயர் டமிலரின் லண்டன் வாரிசுகள்.இவர்கள் சிறிய வயதில் குடிபெயர்ந்தவர்கள்/ லண்டனில் பிறந்தவர்கள் என வகைப்படுவார்கள்.இங்கும் குறித்த வீதத்தினர் செருப்புப்புத்தி மிகு பெற்றார்காரணமாக டமிலர்களாகி விடுகின்றனர்.ஏனையோர் பிறமொழிபேசுபர்களோடு பிரித்தானிய உச்சரிப்போடு ஆங்கிலத்தை பேசும் அதே வேளை என்போண்ற தமிழர்களோடு கலப்படமின்றி தமிழை பேசுவதை அநேக இடங்களில் அவதானித்து இருக்கிறேன்.அவர்களால் ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டுமே பார்க்க முடிவதால் அவ்வாறு பேச முடிகிறது.மாறாக செருப்பு சிந்தனைச்சூழலில் வளர்ந்தவர்கள் ஆங்கிலத்தை அறிவாக நினைப்பதை தவிர்க்க முடியவில்லை.எப்படியோ ஆங்கிலம் சர்வதேச மொழியாகி தவிர்க்கமுடியாததாகி விட்டது.தமிழனோ,அரைத்தமிழனோ அவன் விரும்புகிற மொழியில் உரையாடலை தொடரவே நான் விரும்புகிறேன்.எந்த ஒரு புள்ளியிலாவது ஆங்கில மொழியை தனது அறிவாக காட்டும் கருவியாக பயன்படுத்துகிறான் என அடையாளப்படுத்துகிறேனோ...அவ்விடத்திலேயே உரையாடலை தாய்மொழிக்கு மாற்றிவிடுகிறேன்.பலரும் விரும்புவது போல ஆங்கிலத்தில் பதிலளித்து மதிப்பை தக்கவைக்கும் செருப்புச்சிந்தனைக்குள் நான் போவதில்லை.

ஆயிரம் மொழிவேண்டும் என்றாலும் பேசலாம்.ஒரு மொழியை இன்னொரு மொழியோடு கலந்து பேசக்கூடாது.அதைவிடக்கேவலம் ஒன்றுமில்லை.இலங்கைக்கு வந்தது தொடக்கம் இந்தக்கலப்பட உரையாடல்களில் கொடூரத்தை மீள் உணரத்தொடங்கி இருக்கிறேன்.வானொலி,தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் தமிழன்னை மீது பாலியல் வன்முறை நித்தம் புரிந்தபடி இருக்கிறார்கள்.சில காலம்முன் இருந்ததை விட கலப்பட வீதம் கூடியிருப்பது தெளிவாக தெரிகிறது.ஐந்தாமாண்டு படிக்கிற சிறுவன் கரங்கள் வரை போய் சேர்ந்திருக்கிற கைத்தொலை பேசிகளும்,கணனிகளும் ஆங்கில அறிவை வளர்த்ததை விட அறியப்படும் ஆங்கிலச்சொற்களின் எண்ணிக்கையைக்கூட்டி கலப்பட வீதத்தை அதிகரித்து இருக்கின்றன.

"ஹேய் மச்சான்!,எப்ப வந்த?,ஸ்ரடீஸ் எல்லாம் முட்ன்சுதா?,இனி அப்றோட் போற பிளான் இல்யா?,சிரிலங்கா எப்டி? சிராவாயிருக்கா?"

டேய்! இன்னொரு தடவை யாராவது வந்து இப்படி கதைச்சா,நான் அழுதுடுவன்டா!

வேண்டாம்,விட்டுடுங்கோ!,நான் கச்ச தீவுப்பக்கமா போய் குடியேறப்போறன்.

உங்களுக்கு கடைசி மட்டும் விளங்காது, ஆனா எனக்கு தெரியும்!

தேம்ஸ்ல குளிச்சாலும் காக்கை "ஸ்வான்" ஆகாது.

3 comments:

கார்த்தி said...

பல உண்மைகள் கடுப்பான உங்கள் பாணியில். சிலவற்றை ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் எம்மக்கள் பண்ணபடவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

‎/* பாழாய்ப்போன பண்டித்தமிழன் மட்டும் தமிழன் என்று தெரிந்து அறிமுகமானாலும் ஆங்கிலத்தை குறுக்கே ஓட்டி விடுவான்.கட்டிப்போட்டு சுட்டாலும் ஆங்கிலம் ஒரு அறிவு அல்ல மொழி என்பது உறைக்காது */

காலம் காலமாக இதைதான் பார்த்து வருகிறோம். அண்மையில் கூட இதை கண்கூடாக கண்டிருக்கிறேன். எனது நண்பன் ஒருவனின் வீண்வெட்டி பந்தாவிலிருந்து...

Kaipillai said...

சிலவற்றை அல்ல கார்த்தி! பலவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.போகுமிடமெல்லாம் வாக்குவாதம் வளர்த்து எனது நட்பு வட்டாரம் இன்று வெகுவாக குறுகி விட்டது.எதையும் வார்த்தைகளால் சொல்லி எம்மினத்துக்கு புரியவைக்க முடியாது.

செழியன் said...

போகும் இடமெல்லாம் உன்னை யார் வாக்குவாதம் போடச் சொன்னது? போற இடத்தில பேசாம சிரிச்சிட்டு உன்ர வேலையை பாத்திட்டு போய்ட்டே இருக்கணும் அப்பதான் நல்ல தம்பி எண்ட பேர் கிடைக்கும்!ஆனா நீ எழுதினது சிந்திக்க வச்சது!தொடர்ந்து எழுது!