"அஒ அவ்னா"

வடக்கே எழுந்த சூரியன் தெற்கே மறைய பன்கா மரத்தில் இருந்து விழும் கனிகள் தரையை தொட எடுக்கும் நேரத்தைப்போல 4 மடங்கு காலம் எடுக்கும் என்பதை குத்துமதிப்பாக கணித்த "அஒ" உழுபொறியில் பூட்டியிருந்த எருதுக்கு ஒப்பான உடல்வலுக்கொண்ட பீனிக்ஸ் பறவைகளுக்கு தற்காலிக ஓய்வு தரும் பொருட்டு விடுதலை அளித்தார்.பிரகாசமான மேனி கொண்ட அப்பறவைகள் விண்ணில் ஏறி கொத்துக்கொத்தாய் மிதந்து வந்த பச்சை நிற மேகங்களுக்குள் மூக்கை நுழைத்து இரைதேடத்தொடங்கின."அஓ" 1400 சூரிய உதயங்களையும்  1399 அஸ்தமனங்களையும் பார்த்துவிட்டார்.இந்த அஸ்தமனம் பார்த்து 1401வது உதயம் வரமுதல் சொந்தங்கள் எல்லாம் வீட்டில் வாழ்த்துவதற்காக வரிசையில் நிற்பார்கள்."டைட்டன்" கிரகத்து குடும்பத்தலைவனுக்கு ஓய்வு பெறுவதற்கான வயது அது.உறவுகள் வாழ்த்தி பரிசுப்பொதிகள் தந்ததோடு நிற்காமல் அந்த ஒரு விடயத்தையும் மறக்காமல் கேட்பார்கள்."பொறுப்புக்கள் எல்லாம் முடிந்தனதானே?"

"அஓ" போண்ற சுறுசுறுப்பான பேர்வழியின் பொறுப்புக்கள் 1400 அஸ்தமனம் ஆகியும் அகலாதது அசாதாரமானது.ஆற்றல் குறைந்த குடும்பத்தலைவர்கள் கூட கால எல்லை நெருங்க முதல் அடுத்தவன் காலைப்பிடித்தாவது எல்லாவற்றையும் வெட்டிவிடுவார்கள்.ஏனென்றால் கடமையைகளை சரிவர நிறைவேற்றாதவனை சமுதாயத்தில் ஏறெடுத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.நான்கு பிள்ளைகளுக்கும் குன்றின் உச்சியில் மாளிகை போல தனித்தனி வீடு கட்டி,சாரல் முழுவதையும் திருத்தி விளைநிலங்கள் ஆக்கி, உழுவதற்க்கு வலிமையான பீனிக்ஸ் பறவைகளை வளர்த்து,நெடிய பயணம் செய்ய சொந்தமாக காற்றுப்படகுகள் வாங்கிப்போட்டும் பொறுப்புக்கள் முடியவில்லை என்பதை நினைக்கும் போது கடைசி மகள் "அவ்னா" மீது கோபம் கோபமாக வந்தது.

என்னதான் இருந்தாலும் கடைசி மகள்  மீது "அஓ" வுக்கு கொள்ளைப்பிரியம்.நல்ல பச்சை நிறம்.கூரிய நாசி.அகபோனிஸ் பறவையின் இறகைப்போல் நீண்ட கூந்தல்.சிரிக்கும் போது அம்மாவை அப்படியே நேரே பார்த்தது போலிருக்கும்.விளைநிலங்கள் எல்லாம் அமிலமழை பொழிந்து அழிந்த ஒரு உதயமன்று பிறந்தவளைப்பார்த்து "எல்லாத்தையும் முடிக்க வந்திருக்கிறாள்" என்று சொன்னதுக்காக பச்சைஉடம்பு எண்டும் பாராமல் மனைவிக்கு "பன்கா" மரமட்டையால் அடித்தவர் அவர்.அப்பா என்ன சொன்னாலும் பெரிய கண்களை விரித்து  முகமலர்வோடு ஏற்றுக்கொண்டவள் தனது 500வது உதயம் வந்த நாளில் திருமணப்பேச்சை எடுத்த போது மறுபேச்சு பேசி முகத்தை திருப்பிக்கொண்டாள்.
தொழில் நுட்பம் பூமியில் இருந்து 132 ஒளி நிமிடங்கள் தூரத்தில் இருந்த டைட்டன் கிரகமக்களையும் இணையத்தினுள் உள்வாங்கி சாதித்து இருந்த நாட்களில் யாழ்ப்பாணம் அரசடி வீதியில் வசித்து வந்த தினேஸ்சுக்கு செம கடுப்பாக இருந்தது."2040 ஆம் ஆண்டிலும் இந்த விசரியள் திருந்துறாளவை இல்லை" எண்டு அலுத்துக்கொண்டான்.ரியூசனுக்கு போய் விட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த அயல்வீட்டு பெட்டையை தாரை இயந்திரம் பூட்டப்பட்ட பறக்கும் பல்சரில் விரட்டும் போது அவள் "செருப்பாலை அடிப்பன் நாயே" எண்டு சொல்லி காறித்துப்பியதும் சந்தியில நிண்ட ஆமிக்காறனட்ட போய் "இஞ்சருங்கோ.இதுகள ஒருக்கா கவனியுங்கோ" எண்டு போட்டுக்குடுத்து லேசர் துவக்கு கட்டையால் அடிவாங்கி தந்ததும் மனதில் மீள மீள பிம்பங்களாய் அணிவகுத்தபடியிருந்தன."இந்த மனுசப்பெண்கள் சவகாசமே வேண்டாமப்பா" என்று அலுத்தபடி முகநூலை திறந்து டைட்டன் கிரக பிகர்களின் புறபைலுகளை நோண்டத்தொடங்கிய நாளில்த்தான் அவ்னா அவனிடம் சிக்கினாள்.



"அஓ அவ்னா" பழங்காலத்து கிழவியள் கணக்கா போர்த்துக்கட்டின ஆடைகளோடு இருந்த புறபைல் படத்த பார்த்ததும் "கட்டினா உங்களைப்போல குடும்பப்பாங்கா பிகரதான் கட்டோணும்"என்ற குறும்செய்தியை உள்ளடக்கி தினேஸ் அழைப்பை விட்டான்.132 நிமிடம் கழித்து அவ்னா அதை எடுத்துப்பார்த்தாள்.அவனது புறபைல் படத்தைப்பார்க்க மரங்களில் தாவி ஏறும் இகுனா மிருகத்தின் சாயல் நினைவுக்கு வந்து கன்னத்தில் குழி பெரிதாய் விழ சிரித்தாள்.நட்புவரிசையில் சேர்த்து அடுத்த 132வது நிமிடம்  "நான் இதை சொல்லியே ஆகணும்.நீங்கள் அவ்வளவு அழகு" என்று வந்த "சட்"டை பார்த்ததும் அவ்னாவுக்கு உடலெல்லாம் வியர்க்கத்தொடங்கிவிட்டது.அவளிடம் ஒரு ஆண்மகன் இதுவரை இப்படிச்சொன்னதே இல்லை.டைட்டனில் இருக்கும் எந்த ஆண்மகனும் திருமணத்துக்கு முன் பிற பெண்களை ஏறெடுத்துக்கூடபார்க்க மாட்டார்கள்."யாராவது பார்த்தால் என்ன ஆவது" என்ற பதற்றத்தில் இணையப்பொறியை மூடிவிட்டு ஓடிப்போய் படுக்க முயற்சி செய்தாள்.கனவிலும் தினேஸ் வந்து "நான் இதை சொல்லியே ஆகணும்" என்று அடம் பிடித்தான்.இந்த சம்பவம் நடந்து 3 உதயங்கள் கழிந்த நாளில் அப்பா திருமண பேச்சை தொடக்க அவள் மறுத்து பேசியது நடந்தது.


இப்போது பறவைகள் வேலைக்கு திரும்பிவிட்டிருந்தன.இது தான் இறுதி உழவு.அடுத்தமுறை சூரியன் வரும் போது மகன்களில் ஒருவன் விதைப்பிற்காக வருவான்.பீனிக்ஸ் பறவைகள் நன்றாக உண்டிருக்க வேண்டும்.வேகமாக உழுது முடித்து விட்டன."அஓ" அண்டநடப்புகள் தெரியாத ஆள் கிடையாது.ஓய்வுவேளைகளில் நேரம் போவதே தெரியாமல் வாசித்துக்கொண்டு இருப்பார்."அப்பா ஒரு மானிடனை விரும்புகிறேன்.அவர்ட பேர் தினேஸ்" எண்டு அவ்னா ஆரம்பித்தபோதே "பூமிக்கிரகத்தில் இருக்கும் மனித இனத்தில் பழமையானதும் தற்போதைய நாட்களில் கேவலமாய் வாழ்வதுமான தமிழ் இனத்தைச்சேர்ந்த யாரோ ஒரு காய்ஞ்சு போன ஆண் உயிரினத்தின் வேலைதான் இது" எண்டது அவருக்கு விளங்கிவிட்டது.மானிடர்களிடம் உள்ள அதிவேகமான கலங்களில் பயணித்தாலும் அவன் இங்கே வந்து சேர 90 உதயங்கள் எடுக்கும்.வந்தாலும் வன்மையான கரட்டீன் சருமம் கொண்ட டைட்டன் பெண்ணும் மானிடனும் குடும்பம் நடத்துவது சாத்தியமாகாது.ஆனால் இதையெல்லாம் அவ்னாவுக்கு விளங்கப்படுத்த முடியாது.எல்லாத்தையும் பொறுமையாக கேட்டிக்கொண்டிருந்துவிட்டு  "எனக்கு தினேஸ்தான் வேணும்" எண்டு கடைசியாக சொல்லுவாள்.


காலை விடிந்ததில் இருந்து தினேசுக்கு ஒரே புளுகமாய் இருந்தது.இப்பிடி ஒரு ஸ்ரக்சரோட கொப்பும் குலையுமா ஒரு பிகர் தானா வந்து சிக்கி இருக்கெண்டா நான் எவ்வளவு அழகன் எண்டு உள்ளுக்குள்ளே பூரித்துப்போய் கிடந்தான்.புறபைலில் இருந்த ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமாய் சூடாக்கின.அந்த நேரம் சிவபூசையில் கரடி போல "அவ்னா" ஒன்லைனுக்கு வந்து "சாப்பிடீங்களா?" என்று ஆரம்பித்து பதிலுக்கு காத்திராமல் தொடர்ச்சியாய் மொக்கைய போட்டது கடுப்பாக்கியது.அடுத்த 132 வது நிமிடம் டைட்டன் கிரகத்தில் அவ்னா ஓவென்று அழுதபடி தந்தையின் தோளில் சாய்ந்துகொண்டாள்.தினேஸ் அவளை "புளொக்" பண்ணிவிட்டிருந்தான்.
 அஓவுக்கு மனிதர்களை நினைக்க சிரிப்பு சிரிப்பாய் வந்தது.முற்றத்தில் நிற்கும் பன்கா மரத்திலிருந்து கனி ஒன்று நழுவி விழ ஆரம்பித்த பொழுதில்த்தான் அந்த கள்ள புறபைலை முகநூலில் திறந்து தினேசுக்கு றிக்வெஸ்ற் விட்டிருந்தார்.சந்தேகம் வராதபடி குட்டைப்பாவாடை அணிந்த மானிட இளம்பெண் ஒருத்தியின் படங்களை இணையத்தில் தரவிறக்கி வேறு போட்டிருந்தார்.பன்காபழம் இப்போது பாதித்தூரம் தாண்டி விட்டிருந்தது.அது தரையைத்தொடுவதற்கு பூமிக்கணக்கில் ஒரு நாள் தேவைப்படும்.அவ்னாவை யாராவது ஒரு பொறுப்பான டைட்டன் கையில் பிடித்துக்கொடுப்பதற்கு "அஓ"வுக்கு அதைவிட அதிக காலம் தேவைப்படாது.