கதையின் நாயகன் டானியல் பரபரப்போடு அந்த முப்பரிமாண உரையாடல்ப் பொறி முன்பாக காத்திருந்தான்.இன்னும் 438 வினாடிகள் கடந்ததும் ஐக்கிய தமிழ் ராட்சியத்தின் தலைவனான திராவிடா வந்து கேள்விகளை அடுக்க தொடங்கும்.பதில்களில் அதற்கு திருப்தியென்றால் பக்கவாட்டில் புலி பாய்கிற சின்னம் பதித்த கடவுச்சீட்டு கையில் கிடைக்கும்.பிடிக்காவிட்டால் முகத்தை திருப்பி விடும்.பிறகு.....நாசமாப்போன இங்கிலாந்துக்கு திரும்ப போக வேண்டியது தான்.அங்கு போய் காய்ஞ்ச பார்கருக்கும் நெய்ந்து போன உருளைக்கிழங்கு சிப்சுக்கும் நாய்படாப்பாடு பட வேண்டியிருக்கும்.ஹீத்ரோ விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்த அம்மா எம்மா செஸ்டனின் கவலை தேய்ந்த முகம் நினைவில் வந்தது."நீ அந்த நாட்டிலிருந்து அனுப்பும் ஒவ்வொரு சதத்துக்கும் இங்கே கட்டுக்கட்டாக பவுண்ட்ஸ் கிடைக்கும்.நம்பிக்கையோடு அனுப்புகிறேன்.கவிழ்த்துவிடாதே" விடைபெற்ற இறுதி கணத்திலும் திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தாள்.கிபி 2113,மாசி 23ம் திகதி பிரித்தானியா முழுக்க பனி படர்ந்த நாளொன்றில் டானியலோடு இன்னும் 499 பேர் கிளம்பியிருந்தார்கள்.வேல்ஸ் முருகனை நேர்துவிட்டு கிளம்பியபோதிலும் அதிஸ்டம் டானியல் பக்கம் இருக்கவில்லை.ஆள்க்கடத்தல் முகவர் நிறுவனத்தின் கடந்த நூற்றாண்டை சேர்ந்த அந்த ராட்சத விமானம் ஐதரா வை நெருங்கமுன்  நடுவானில் கண்ணில் எண்ணெய் ஊற்றி கண்காணித்துக்கொண்டிருந்த "கருடன்" வானூர்தியிடம் வசமாக மாட்டிக்கொண்டது. அகோரப்பசியில் இருக்கும் பெலிகன் பறவை முழு மீனை சாப்பிடுவதுபோல நடுவானில் கருடன் போயிங் 747 ஐ பெரும் சப்தத்தோடு முழுங்கியபோது "அக்ளி ஆஸ்கோல்" என்று தொடங்கி முருகனை கண்டபடி டானியல் திட்டியிருந்தான்.

பஞ்சம் தலைவிரித்தாடும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள இளைஞர்களின் குறிக்கோளெல்லாம் ஐ.த.ராவுக்கு போகவேண்டும் என்பது தான்.டானியல் பள்ளிக்கூடத்தில் ஐந்தாமாண்டு  படிக்கும் போதே முளைவிட்டிருந்த நெடுநாள் ஆசை அது.ஆசிரியர் வருங்காலத்தில் என்னவாகப்போகிறீர்கள் என்று வகுப்பில் வரிசையாக கேட்டு வந்த போது ஐதராவுக்கு போக போகிறேன் என்று சொல்லி சிரித்தவன் அவன்."நீ நினைத்த படியே நடக்கட்டும்.ஆனால் சர்வதேச தமிழ் மொழி பரீட்சையில் 10 இற்கு 9 எடுப்பது எந்த ஆங்கிலேயனாலும் முடியாதேப்பா" என்று அவர் சொன்னதைக்கேட்டும் கலங்காமல் தமிழ் வகுப்புக்கு போக தொடங்கியவன்.டானியல் பிறக்க சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரித்தானியா முழுக்க தமிழ் கலாச்சார மோகம் தலைவிரித்து ஆட தொடங்கி விட்டது.கடும் குளிரிலும் வேட்டி,சேலை கட்டி இளசுகள் அலைந்து கொண்டிருந்தார்கள்.தமிழ் பெண்கள் போல ஊதிப்பெருத்த அழகிய இடை வேண்டுமென்பதற்காக பிரித்தானிய மகளிர் கண்டதையும் மென்று கொண்டிருந்தார்கள்.ஆறே வாரத்தில் கருப்பழகு கிரீமுகள் சந்து பொந்தெல்லாம் விற்பனையாகிக்கொண்டிருந்தன.பள்ளிக்கூட பெடியள் தமிழ் சினிமா நாயகர்கள் பெயரில் ரசிகர் மன்றங்கள் திறந்து ஆளுக்காள் அடிபட்டுக்கொண்டிருந்தார்கள்.டானியலும் நண்பர்களும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக மனம் கவர்ந்த கவர்ச்சி நடிகை கும்காவுக்கு டூட்டிங் நிலக்கீழ் நிலையமருகே சிலை வைத்தார்கள்.தொப்பை வயிறும் குலைந்து விழும் கொங்கைகளுமாய் நின்ற கும்கா சிலையை கண்ணாலே கற்பழிப்பதற்கே தினம் தோறும் பெரிய கூட்டம் வந்து போனது.கும்கா,குடி,குட்டி என்று ஒரு பக்கம் அலைந்தாலும் தமிழ் படிப்பில் விடாப்பிடியாய் இருந்தான்.வெறியாய் தமிழ் படித்து முதல் தடவை பரீட்சை எழுதியபோது பத்துக்கு ஐந்து வந்தது.இரண்டாம் தடவை 5.5 மூன்றாம் தடவை 6.அதுக்கு பிறகு எத்தனை தடவை எழுதினான் என்று அவனுக்கே தெரியாது.ஆறை தாண்டி அரை இஞ்சி கூட நகரவில்லை.கிழட்டு தமிழிச்சியை எண்டாலும் இணையத்தில் மடக்கி ஐக்கிய தமிழ் ராட்சிய குடிமகனாகலாம் என்ற எண்ணத்திலும் சட்ட விதிகளை மாற்றி மண்ணை போட்டு விட்டார்கள்.அதன் பிறகு களவாகப்போய் கையை தூக்குவதை தவிர வேறு வழி டானியலுக்கு இருக்கவில்லை.

"ஐக்கிய தமிழ் ராட்சியம் வடக்கே இந்திய உபகண்டத்திலிருந்து ஈழத்தீவு வரை பரந்துள்ளது.உலகத்திலேயே பணக்கார நாடு.உலக மகா சண்டியன் நாடு.அதி புத்திசாலிகள் நிறைந்த தேசம்.உலகிலேயே கவர்ச்சிகரமான பெண்கள் வாழுகிற இடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.மூன்று தசாப்தங்களுக்கு முன்பு அன்ரோமீடா பால்வெளியில் இருந்து நீசிகள் படையெடுத்த போது உலகின் வல்லாதிக்கங்கள் எல்லாம் தகர்ந்து போக ஐதரா ராணுவம் நின்று போரிட்டது.உலகம் இறுதி கணங்களை எண்ணிக் கொண்டிருக்க நீசிகளின் பலவீனத்தை பிடித்துக்கொண்ட தமிழர்கள் திருப்பி தாக்க தொடங்கினார்கள்.வலிந்ததாக்குதல்,முற்றுகைச்சமர்,ஊடறுப்பு சமர் என்று காற்று மண்டலத்திலிருந்து சந்திரமண்டலம் தாண்டி பரந்த நெடும் போரில் ஏலியன்களை தோற்று ஓடத்தொடங்கிய போது தமிழ் ராஜ்சியத்தின் வலிமை வெளிப்பட்டது.இன்றும் கூட உலகை பாதுகாக்க பல ஒளியாண்டுகள் தாண்டிய தூரங்களிலெல்லாம் சமரிட்டுக்கொண்டிருக்கும் தேசம் அது.இப்படிப்பட்ட தேசத்தின் தலைவன் தான் "திராவிடா".அதற்கு ஏழு அறிவு.முக்காலமும் தெரியும்.உலகின் எல்லா மொழிகளும் தெரிந்திருந்தாலும் தமிழ்தான் பேசும்.நம்மையெல்லாம் பாடாய் படுத்தி எடுக்கும் சர்வதேச தமிழ் மொழி பரீட்சை முறையை கொண்டு வந்ததும் அது தான்"

தமிழாசிரியர் டொமினிக் கூப்பர் சொல்லிக்கொண்டு போன போது டானியல் குறுக்கிட்டிருந்தான்.

"ஒரு நாட்டின் தலைவரை தமிழ் இலக்கணப்படி "மேதகு" என்று சொல்வது தானே முறை?.ஏன் திராவிடாவை "அது" என்கிறீர்கள்?"

அன்று தான் திராவிடாவுக்கு உயிரே கிடையாது என்று டானியலுக்கு தெரிந்தது.ஒற்றுமையில்லாத தமிழர்கள் தமக்கென நாடு உருவான பின்பும் தலைமை கதிரைக்காக சண்டையிட்டு கொண்டிருந்தார்களாம்.வெறுத்துப்போன தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து திராவிடா என்கிற செயற்கை மூளையை உருவாக்கி அதை மக்கள் பிரதி நிதிகள் மூலமாக கட்டுப்படுத்தும் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.தினமும் ஆயிரக்கணக்கான பொறியியலாளர்களாலும்,விஞ்ஞானிகளாலும் மெருகேற்றப்பட்டபடியிருந்த செயற்கை மூளைக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் ஒரு கட்டத்தில் கிடைத்தது யாருக்கும் தெரியவில்லை.அயல் நாட்டோடு ஏற்பட்ட எல்லைத்தகராறில் சமாதானமாக போவதா? சண்டை பிடிப்பதா? என்று பிரதிநிதிகள் முரண்பட்டுக்கொண்டிருக்க திராவிடா பொறுமையிழந்து எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.ஒரே நாளில் அந்த அயல் நாட்டை அடித்து துவம்சம் செய்து வெற்றி வாகை சூடிய போது இளைஞர்கள் எல்லோரும் திராவிடாவின் ரசிகர்களாகிப்போனார்கள்.பிறகு இந்தியாவை எதிர்பாராமல் தாக்கி துண்டு துண்டாக பிரித்து தமிழ் நாட்டை கூட இணைத்து ஐக்கிய தமிழ் ராஜ்ஜியத்தை உருவாக்கி கொண்டது.உயிர் அல்லாத தன்னை தமிழ் இலக்கணப்படி "அது" என்றே அழைக்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவைக்கூட போட்டு வைத்திருக்கிறதாம்.

டானியல் தடுப்பு முகாமில் இருந்த கடந்த ஒரு மாதமும் தமிழர்கள் பாடாய் படுத்திவிட்டார்கள்.காலை ஆகாரத்தின் பின்னர் கிரகிப்பு கட்டில்களில் போய் படுக்க வேண்டியது தான்.கல்தோண்ற முன்னர் வந்த மூத்த குடி என்று தொடங்கி முதலில் விமானம் விட்டது,அணு சக்தியை அறிந்தது,விண்வெளிக்கு போனது எல்லாமே தமிழன் தான் என்று முடிப்பார்கள்.கேட்கச்சொன்னால் காதை பொத்தலாம்.வாசிக்க சொன்னால் கண்ணை மூடலாம்.நேரடியாக மூளை நரம்புகளுக்கு அனுப்பினால் என்ன செய்வது?.கண்ணை மூடிக்கொண்டு கிரகிக்க வேண்டியது தான்.குமரிக்கண்ட நகரங்களை கடலுக்கு வெளியே இழுத்து கொண்டு வந்து காட்சிக்கு வைத்தது,ராவணனை காட்டிக்கொடுத்த விபீசணனை காலம் கடந்து பயணித்து போய் போட்டு தள்ளியது,சந்திரனில் அவ்வை பாட்டிக்கு சிலை வைத்தது என "திராவிடாவின்" சாதனைகளை எல்லாம் காணொளியாக பார்க்கும் படி செய்வார்கள்.அதை விட தமிழ் உச்சரிப்பு பயிற்சி என்ற பெயரில் தட்டிப்பிழிவார்கள்.நாக்கு வீங்கி ஒரு நாள் பேச முடியாமல் கூட ஆனது.திரும்ப இங்கிலாந்துக்கு போவமா என்று கூட சில நேரம் யோசித்து இருக்கிறான்.அந்த நேரத்தில்த்தான் அனித்தாவின் அறிமுகம் கிடைத்தது.அனித்தா நான்கு தலைமுறைக்கு முன்னர் பிரித்தானியா வந்து கையைத்தூக்கிய தமிழனின் வழி வந்தவள்.இடையில் காப்பிலி,ஜெர்மன்,சோமாலிய இனங்கள் கலந்து அனித்தாவை விசித்திர உருவமாக மாற்றிவிட்டிருந்தது.அவளுக்கு நீல கண்களும் பொன்னிற கூந்தலும் இருந்தாலும் தோல் நிறத்தில் பழுப்பாய் இருந்தாள்.பருத்து இருந்த இடை மட்டும் அச்சு அசப்பில் கும்காவினது போல் இருந்தது.அனித்தாவோடு கடலை போட தொடங்கிய பிறகு டானியலுக்கு நாள் போனதே தெரியவில்லை.

கருவி முன் மெலிதாக வெட்டிய மின்னல் மறையமுதல் திராவிடா ஒளிப்பிழம்பாய் வந்து நின்றது.அதன் அடி கருவியில் இருக்க முடி வானை நோக்கி முடிவில்லாமல் சென்றது.முடியை தேடிப்பிடிச்சால்த்தான் உனக்கு வீசா என்று சொல்லப்போகுதோ என்று டானியல் பயந்தான்.திராவிடாவும் மனிதர்கள் போல மெல்லிய செருமலுடன் தான் ஆரம்பித்தது.

"ராஜராஜ சோழனுக்கு பிறகு வந்த தமிழர்களின் ஒப்பில்லா தலைவரின் தந்தையின் பெயர் என்ன?"

"திர்வேங்கட் வேலுப்பில்லை"

"தலைவர் இருக்கிறாரா? இல்லையா?"

டானியல் மௌனித்தான்.திராவிடா 30 வினாடிகளை காற்றில் ஒளிரவிட்டு குறைக்க தொடங்கியது.

"இருக்கிறார்"

"புதிய ஐக்கிய தமிழ் ராட்சியத்தின் குடிமகனுக்கு வாழ்த்துக்கள்" என்றபடி நீட்டிய இயந்திரகரங்களில் புத்தம் புதிய கடவுச்சீட்டு மின்னிக்கொண்டிருந்தது.


0 comments: