சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும்.சட்டை மட்டுமில்லை. சிலசமயம் யட்டி கூட கிழிபட வாய்ப்பிருக்கிறது. கட்டிய கோவணம் களவு போன கதை கேள்விப்பட்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்னர் கட்டிய கோவணம் மட்டுமில்லை. அரை நாண் கயிறே தெறித்துப்போன சம்பவம் சிங்கபுரியில் நடந்தது. இப்போதெல்லாம் கேவலமான சம்பவம் ஒன்று நடந்தால் அதனை உடனடியாக ஆவணப்படுத்திவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தாமதிக்கும் ஒரிரு நாட்களுக்குள் ஒரு போத்தில் உற்சாகபானத்தோடு அந்த வரலாற்றை மாற்றி எழுதிவிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த கேவலம் நடந்ததே எனக்குத்தான் என்று மாற்றிவிடுகிறார்கள். பல வருடங்களாக புறஜெக்ட் மனேச்சராக இருப்பவர்களுக்கு தெரியாததை தெரிந்ததாக கதைப்பது, வரலாற்றை மாற்றி எழுதுவது எல்லாம் கைவந்த கலையாக இருப்பதால் அவர்கள் முன் நான் கையாலாகாதவனாகி விட்டேன்.

இந்த கதைக்கு அவசியப்படுகிற கிளைக்கதையை சொல்ல ஒரிரு மாதங்கள் பின்னே சென்றாக வேண்டும்.மலேசிய விமானம் காணாமல் போயிருந்த சமயம்.யாரோ ஒரு அமெரிக்க புத்திசாலி இணையத்தளம் விமானத்தை தீவிரவாதிகள் தரையிறக்கியிருக்கக்கூடிய சாத்தியமுள்ள இடங்கள் என்ற வரிசையில் பலாலி விமானத்தளத்தையும் சேர்த்து காமெடி பண்ணியிருந்தார்கள். "பலாலியில் போர் ஜெட்விமானமே இறக்க முடியாது. போயிங்கை எப்படி இறக்க முடியும்?" என்று ஒரு மொக்கையான கருத்தை வெளியிட்டுவிட்டு அருகேயிருந்த நண்பர்களின் பதிலுக்காக காத்திருந்தேன். வழமையாக இப்படிப்பட்ட "அதிமேதாவித்தனமான" உரையாடல்களை வளர்ப்பதில் ஆர்வமுடைய பேர்வழிகள் அமைதியாக இருக்க பதிலளித்த நண்பர் வாசிப்புப்பழக்கம் அறவே இல்லாதவர். புத்தகவாசிப்பு மட்டுமல்ல இணைய வாசிப்புப்பக்கம் கூட அண்டாதவர். அப்படிப்பட்ட அவர் "பிளேனை கடல்ல இறக்கிட்டு போட்டால கட்டி இழுத்திட்டு வரலாம்" என்ற பதிலோடு வீராப்பாக வீற்றிருந்தார்.

"கடல்ல இறக்க அது என்ன கடல் விமானமா?" நான் விடவில்லை.

"போடா பேயா! போயிங்ட Catalog புத்தகத்தை எடுத்து பார்.கடல்ல மிதக்கும் என்று தெளிவா எழுதி இருக்கு"

கில்மா புத்தகம் கூட வாசிக்கும் பழக்கம் இல்லாதவன் போயிங் கற்றலொக் வாசிக்கிற அளவுக்கு போயிட்டானா?. அல்லது இவன்ட கையில் கற்லொக் சிக்குற அளவுக்கு போயிங் கொம்பனி தரமிழந்து விட்டதா?என்று எனக்கு பல விதமான குழப்பம். இருந்தாலும் கமுக்கமாக இருந்து அவனை சில நாட்கள் தொடர்ந்து அவதானித்தேன். புதிதாக வந்து IT பெடியனொருவன் தனது வேலை பற்றி பெரிதாக பில்டப் குடுக்கப்போக குறுக்கிட்ட இவன் " எல்லாம் பூச்சியம் ,ஒன்றுக்க தான்.தேவையான Out put ஐ வரையறுத்திட்டு அதுக்கேற்ற மாதிரி கோடிங் எழுதினா சரி" என்று ஒரே போடாக போட்டு விட்டான். பாவம் IT அப்பாவி. இதுவரை நாமாக கேட்டாலும் இவனுக்கு முன்னால் தனது வேலை சம்மந்தமாக பேச மறுக்கிறான். இந்த அட்டகாசம் இதோடு நிற்கவில்லை. சில நாட்களின் பின்னர் ஒரு நண்பன் ஒருவன் சிங்கபுரியில் சிறிய சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொண்ட விடயத்தை குழுவாக ஆராய்ந்து கொண்டிருந்த போது "சிங்கப்பூர் சட்டத்தில் வெளிநாட்டு தனி நபருக்கான உரிமை என்ற பகுதியே கிடையாது" என்று குண்டை கொழுத்தி இவன் போட வாதம் சூடு பிடித்தது. இபிகோ 335 , 336 என்று பேசாத குறையாக விளக்கம் கொடுத்து "அட இவனுக்கு சட்டமும் தெரியுமா?" என்று எண்ண வைத்து விட்டான். அடுத்த நாள் இன்னொரு வாதம். இந்த முறை மருத்துவம். இதிலும் நம்ம ஆள் சத்திர சிகிச்சை நிபுணர் ரேஞ்சுக்கு அசத்தி விட்டான்.

மேலோட்டமாக பார்த்தால் சகலகலா வல்லவன் என்ற எண்ணம் ஏற்படுமளவுக்கு இருக்கும் அவனது பேச்சு. கூர்ந்து அவதானித்தால் எதுவுமே இருக்காது. உதாரணத்துக்கு நீங்கள் நியூசிலாந்து நல்லின கறவை மாடு பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது முதலாம் ஆண்டு படிக்கும் சிறு பிள்ளை குறுக்கிட்டு "பசு பால் தரும், பசுவிற்கு நான்கு கால் உண்டு, பசு புல் தின்னும், பசு கன்று ஈனும், பசுவின் சாணம் எருவாக பயன்படும்" என்று சொல்வது போலத்தான் பேச்சின் உள்ளீடு இருக்கும். இதன் பின்னணி குறித்து ஆராய வெளிக்கிட்ட போது தான் அவனுக்கு புதிதாக காதலி கிடைத்திருப்பது தெரியவந்தது. கோவேறு கழுதை குதிரையாகி கொம்பு வச்சு அலைவதன் மர்மம் விளங்கி விட்டது. அடுத்த வாரம் நானும் நண்பர்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தபடி அவன் வரும் நேரத்தில் இந்தியா செவ்வாயை நோக்கி அனுப்பிய மாங்கல்யான் பற்றி வலிந்து பேச்சை ஆரம்பித்தோம். வலை விரித்திருப்பது தெரியாமல் பயல் செருமலோடு கருத்து சொல்ல ஆரம்பித்தான்.

"எல்லாம் நீயூட்டன்ட தேர்ட் லோ தான்டா, செவ்வாய்க்கு கிட்ட போகேக்க தான் அடிபட சான்ஸ் இருக்கு"

"பெண் நண்பி கிடைத்தால் தன்னம்பிக்கை கூடும் என்பது இதைத்தானா?. அப்படி என்றால் எனக்கு நண்பியே தேவையில்லை.ஏனண்டா எனக்கு தேவையை விட அதிகமா தன்னம்பிக்கை இருக்கு.அவ்வ்வ்வ்வ்"

     ......................................................................................................

மறுபடி சட்டை கிழிந்த கதைக்கு வருகிறேன். 2011 ஆம் ஆண்டில் ஒரு நாள். நானும் நண்பர்களும் உண்வருந்திக்கொண்டிருந்த மேசைக்கு அருகே கவர்ச்சியான மலேசிய கட்டழகி . கூடவே ஒரு நாற்பது வயதுகளை தாண்டிய முதிர்ந்த பெண். கட்டழகி மார்பில் வரைந்திருந்த டாட்டூவில் பாதி வெளியே எட்டிப்பார்க்கும் படி உடை அணிந்திருந்தாள். மற்றவன் என்றால் பார்த்தமா ரசித்தமா என்று போயிருப்பான். எதையும் ஆராய்ந்து பார்க்கும் நமக்கு முழு டாட்டூ உருவம் என்னவாயிருக்கும் என்பதை அறிய வேண்டுமென்ற அவா ஏற்பட்டு விட்டது.ஒருவன் வண்ணாத்து பூச்சி என்றான். இன்னொருவன் நட்டுவக்காலி என்றான். இல்லையில்லை இரட்டை இலை என்றேன் நான். சந்தேகத்தை கேட்க நேரடியாக அவளிடமே கேட்பது என்று முடிவானது. கேட்பதற்கு நெஞ்சின் துணிவும், குளறாத நாவும் உள்ள ஒரு ஆண் மகன் வேண்டுமே?. நான் அடுத்த நொடி கட்டழகி மேசையருகே நின்றேன்.

"உங்களது டாட்டூ அருமை. என்ன வரைந்திருக்கிறீர்கள் அதில்?"

பல ஆங்கில தூசணங்களை கட்டுக்கட்டாக கட்டழகி வீசினார்.

" மிக்க நன்றி. இவ்வளவையுமா எழுதி வைத்திருக்கிறீர்கள்?"

பதிலைக்கேட்ட கட்டழகி காட்டேரியாக மாறிப்போனார். நான் ஒரே ஓட்டமாய் ஓடி வந்துவிட்டேன். நண்பர்கள் வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்கள். இப்போது எல்லோர் முகத்திலும் ஒரு ஏக்கம். அந்த டாட்டூவிலிருப்பதை அறியாமலே போய் விடுமா?.  இந்த நேரத்தில்தான் அது வரை அமைதியாகவிருந்த ஹீரோ அலியப்பா அறிமுகமாகிறார்.

"கட்டழகியை இவன் கடுப்பாக்கிட்டான். அதாலை கூடவிருக்கும் ஆன்ரிக்கு கண்ணி வைக்கப்போகிறேன். அவளிடம் கேட்டாலும் சொல்லுவாள் தானே?"

அடுத்த அரை மணித்தியாலங்கள் அலியப்பா அன்ரியை நோக்குவதும் ஆன்ரி திரும்பவும் நோக்குவதாய் கழிந்தது.

"எப்படியும் தலை ஆன்ரியை மடக்கிடும். ஆன்ரிட போன் நம்பரை வாங்கி கதையை போட்டு கட்டழகிட நம்பர வாங்கி அவளையும் கவிக்க போகுது"

சிரிப்பு ரவுடி தலையை உசுப்பேத்திக்கொண்டிந்த போது தான் மஞ்சள் நிற தலை மயிரோடு கொடூரமான வில்லன் போல ஒரு மலேசியாக்காரன் அதிரடியாக அறிமுகமானான்.

"டேய் என்ர மனுசியை பார்த்தது எவன்டா?"

இதற்குப் பிறகு நடந்ததை சொன்னால் சட்டை கிழிந்த கதை ஆபாசமாகிவிடும்.
          ...........................................................................................................................

மூன்று வருடங்களுக்குப்பிறகு அதே சிங்கபுரியில் அதே நண்பர்களோடு மீளவும் ஒரு ஆனந்தமான சனிக்கிழமை இரவு. தலைவர் அலியப்பா ஆரம்பித்தார்.

"இப்பெல்லாம் காய்ஞ்ச மாடு கம்பில விழுந்தது போல அலையுறாங்கள் பெடியள். கிழவி கிடைச்சாக்கூட காணும் என்று திரியுறாங்கள்"

"அப்பவே மலேசியா கிழவியை மடக்க முயற்சி செய்த நீ இதை சொல்லக்கூடாது"

நான் ஒரே போடாக போட்டு தலையை அமத்த முயற்சி செய்தேன்.

அலியப்பா அசரவில்லை. அமைதியாக சுற்றும் முற்றும் பார்த்தார். சபையில் அச்சம்பவம் பற்றியே அறிந்திராத புதியவர்கள் நான்கு பேர் இருந்தனர். நிபந்தனையற்ற ஆதரவு வழங்க சிரிப்பு ரவுடி இருந்தார். அதை விட மாங்கல்யான் புகழ் நண்பரும் பக்க பலமாக இருந்தார்.

"மலேசிய ஆன்ரிக்கு நூல் விட்டு அவளின்ர புருசனட்ட அடிவாங்க பார்த்தது நீ தான். என்ன கதையை மாத்துறியா?"

அதன் பிறகு நான் வைத்த வாதம் எதுவும் எடுபடவில்லை. சில தருணங்களில் குறுக்குக் கேள்விகள் கேட்டு அலியப்பாவை சற்று ஆட்டம் காண வைத்த பொழுதுகளில் எல்லாம் "மாங்கல்யான்" குதித்து என்னை தாக்க ஆரம்பித்தான். என் மீது என்ன கடுப்போ?.  தாக்குப்பிடிக்க முடியாமல் உறங்கச்சென்றுவிட்டேன். அது தான் நான் செய்த மிகப்பெரும் வரலாற்றுத்தவறு. இரவிரவாக ஒரு போத்திலோடு அந்த வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டார்கள்.

         .....................................................................................................

சிங்கபுரியில் ஒரு நாள் ஞாயிறுக்கிழமை. ஊரிலிருந்து புதிதாக வந்திருந்த ஒருவனோடு MRT இல் போய்கொண்டிருந்தேன். எனக்கு அருகே ஒரு 50 வயதை தாண்டிய பெண்மணி வந்து இடப்பக்கமாக அமர வலப்பக்கமாக இருந்தவன் முழங்கையால் விலாவில் இடித்து விட்டு காதில் கிசுகிசுத்தான்.

"மடக்குங்கோ! மடக்குங்கோ"

"எதை?"

"பக்கத்த இருக்கிற ஆன்ரியைத்தான்"

"கறுமம். இதையா?"

"சும்மா நடிக்காதையுங்கோ. ஆன்ரிமார் மேல உங்களுக்கு பிளான் எண்ட விசயம் ஊருக்கே தெரியும்"

அவ்வ்வ். சண்டையில் சட்டை கிழிந்தால் நியாயம். சண்டையே இல்லாமல் சட்டையை கிழித்து கழுசானை கழற்றினால் நான் என்ன செய்வேன்?


0 comments: