பலவருடங்களுக்கு முன்னர் வன்னி பெருநிலப்பரப்பில் வாழ்ந்து வந்த ஒரு விவசாயிடம் நல்லின பசுமாடு ஒன்று இருந்தது. இனச்சேர்க்கைக்குரிய காலம் வந்ததும் அவர் அதை பொருண்மிய நிறுவனத்தின் இனச்சேர்க்கையிடத்துக்கு அழைத்துச்சென்றார். பசு மாட்டையும் காளை மாட்டையும் அருகருகே கட்டியாகிவிட்டது. காளைமாடு பார்ப்பதற்கு அவ்வழவு அழகாக திமிறிக்கொண்டு நின்றது. விவசாயிக்கோ அளவில்லாத சந்தோசம். "சினைப்பட்டு இதே மாதிரி நாம்பன் கன்று போட்டால் பத்து ஏக்கர் உழலாம், பசுக்கன்று போட்டாலும் பத்து லீற்றர் கறக்கும்" என்று அவரது மனது கணக்கு போட்டபடியிருந்தது. நேரம் ஓட ஓட எதுவுமே நடக்கவில்லை. அந்த வாட்டசாட்டமான காளை அருகே போவதும் முகர்வதும் பின்வாங்குவதுமாய் இருந்தது. இதைப்பார்த்த விவசாயிக்கு காளையின் ஆண்மைத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அங்கே வேலை செய்த இளைஞனிடம் கேட்டே விட்டார். 

"தம்பி! உந்த நாம்பன் சேர்க்கைக்கு புதுசோ?"

"அண்ணே! மாட்டுக்கு நோக்கம் இருக்கு! ஆனா ஊக்கம் இல்லை!"

இக்கதை ஒரு செவிவழியாக கம்பசில் பரவி "ஊக்கமில்லாதவர்களை" எள்ளிநகையாட பயன்பட்டது. 

எமது மட்டத்தில் ஒரு நோக்கம் மிகுந்த "X-Man" ஒருவர் இருந்தார். ஆள் நடந்தால் தூரத்திலிருந்து பார்க்கும் போது கால்கள் எக்ஸ்வடிவில் இருக்கும். உடம்பில் அந்துசந்து இருக்காது. தொப்புள் தெப்ப குளம் போல இருக்கும். நண்பர்கள் அவருக்கு  அன்பாக வைத்த பெயர்களின் ஒன்று "கருப்பு நமீதா". எக்ஸ்மான் கிழமைக்கு ஒரு தடவை தான் குளிப்பார். செமஸ்டர் பரீட்சை வந்துவிட்டால் மாதக்கணக்கில் குளிக்க மாட்டார். கிட்ட போகும் போது கெட்ட வாடை வீசும். அனுபவப்பட்டவர்கள் அவ்வாடையை அழுகிய மீன் நாற்றத்திற்கும், இன்னும் சிலர் அதை குட்டை நாயின் மணத்திற்கும் வேறு பலர் பன்னித்தொழுவ வாடைக்கும் ஒப்பிடுவார்கள். முதல் வருடத்தின் இரண்டாம் செமஸ்டர் எக்ஸாம் நாட்களின் போது எங்கள் மட்டத்தின் "ஆடம்பர அழகி" நூலகத்திலிருந்து படித்துக்கொண்டிருந்தார். எக்ஸ்மானுக்கு அழகியில் பல நாட்களாகவே ஒரு "நோக்கம்".ஆனால் போதிய "ஊக்கம்" இல்லாததால் அருகில் நின்று பேசுவதற்கே தயங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் "நோக்கமிருக்கு ஆனா ஊக்கமில்லை" என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தோம்.


மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நாள் "ஆடம்பர அழகி" அருகே சென்று உட்கார்ந்து விட்டார். சந்தேகம் கேட்கிறேன் என்று சொல்லி ஓரிரண்டு மொக்கை கேள்விகளை தொடுத்தார். ஆடம்பர அழகிக்கோ எக்ஸ்மானில் இருந்து வீசிய நாற்றம் தாங்க முடியவில்லை. எவ்வளவு நேரத்துக்குத்தான் தாங்குவது?. ஒரு கட்டத்தில் கைக்குட்டையை எடுத்து மூக்கை மூடியபடி பதிலளிக்க ஆரம்பித்தார். ஊக்கத்தின் உச்சியில் இருந்த எக்ஸ்மானோ அழகி வெட்கத்தின் மிகுதியில் மூடிக்கொள்வதாக கணக்கு போட்டார். தான் பேசியதால் மகிழ்ச்சியடைந்து தானாக புன்னகைக்கும் உதடுகளை மறைக்கவும் கைக்குட்டையை அழகி பாவிக்கிறார் என எண்ணி புளகாங்கிதமடைந்தார். அத்தோடு நிறுத்தாமல் அன்று  இரவுதங்கிமிடத்துக்கு வந்தவர் நண்பர்களிடம் அவளை மடக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்.

நண்பர்கள் எக்ஸ்மேனின் ஊக்கத்தை வெளியே பாராட்டினாலும் உள்ளே கடுப்பில் இருந்தார்கள். நமக்கு மைனா சிக்காவிட்டாலும் அடுத்தவனுக்கு காக்கா கூட சிக்கக்கூடாது என்ற தெளிவான கொள்கையுடையவர்கள் அவர்கள். அவ்வழகிக்கு நெருக்கமான வாளிகள் மூலமாக விசாரித்தார்கள். அழகி அளித்த பதில் எக்ஸ்மேனை ஒரே நாளில் இசற்மான் ஆக்குமளவுக்கு இருந்தது.அப்படி என்ன தான் அவர் சொல்லியிருப்பார்?



" நான் ஒண்டும் அவரைக்கண்டு வெட்கப்படேலை. சரியான நாத்தமா இருந்தது. அதுதான் லேஞ்சியால பொத்தினான்"

0 comments: