T.அசுவத்தாமன்




சுப்பவைசர் அசுவத்தாமனை சிலர் காட்டேரி என்றும் வேறு பலர் சாமக்கோடாங்கி என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்த போதிலும் அநேகரை கேட்டால் கடுமையான நேர்மையான உழைப்பாளி என்றே சொல்லுவார்கள். சிங்கபுரியில் இரவு பகலாக 24 மணித்தியாலமும் வேலை நடக்கும் அந்த கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் இரண்டு சிப்டுகளில் மாறி வேலை செய்த போதிலும் அசுவத்தாமன் இரண்டு சிப்டுகளையும் தனி ஆளாக பார்த்துக்கொள்வான். காலை நேரத்தில் வலது கண்ணாலும் இரவு வேளையில் இடது கண்ணால் தூங்குவதாலேயே இப்படி முழுநாளும் வேலை செய்ய முடிகிறது என வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். புறஜெக்ட் மனேச்சராக பெயருக்கு நான் இருந்த போதிலும் அசுவத்தாமன்தான் சைட்டை தனியாளாக ஓட்டுகிறான் என்பது எல்லோருக்குமே தெரியும். எனது சம்பளத்தை விட அவனின் சம்பளம் பல மடங்கு அதிகம். இது குறித்து நான் சில சமயங்களில் வருத்தப்பட்ட போதிலும் அவனது திறமைக்கு சரியான சன்மானத்தை பெறுவதாக கருதி மனதை ஆறுதல்ப்படுத்தியிருக்கிறேன்.





அசுவத்தாமன் ஆறரை அடி உயரம் இருப்பான். அவன் நடக்கும் போது அரபுபுரவி போலிருக்கும். பரந்து விரிந்த மார்பும் ஒடுங்கிய வயிறுமாக அவன் தோற்றம் இதிகாசநாயகர்களை நினைவு படுத்தும். அவனது திமிறிய தசைகளையும் கூரிய நாசியையும் நேரிய புருவங்களையும் பார்க்கும் எந்தப்பெண்ணுமே தடுமாறித்தான் போவாள். அப்படித்தான் கருப்பு சரும தென்னாசியர்கள் என்றாலே இளக்காரத்தோடு பார்க்கும் ஒப்பிரேசன் மனேச்சர் "லிடியா இங்" க்கும் அசுவத்தாமனிடம் நிலைகுலைந்து போனாள். லிடியா திருமணமானவள். ஐந்து வயதில் பிள்ளை வேறு உண்டு. ஆனாலும் கட்டுக்குலையாத காரிகை அவள். சூழல் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம், போக்குவரத்து துறை போண்ற அரசாங்க நிர்வாக பிரிவுகள் பாயும் போதெல்லாம் சமாளிப்பது அவள் தான். எங்களைக்கண்டால் பொங்கியெழும் அரச அலுவலர்கள் லிடியாவை கண்டதும் வாயெல்லாம் பல்லாகி அடங்கி விடுகிறார்கள். 




நடப்பாண்டில் எமது நிறுவனம் 5 வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அவற்றில் பெரியது இந்த புறஜெக்ட் தான். 100 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள திட்டம் இது. 3 km நீளமான நிலத்தடி புவியீர்ப்பு கழிவுநீர்கற்றல் தொகுதியை 18 மாதங்களில் நிர்மாணித்தாக வேண்டும்.  அதிகமான பாறைகளை கொண்ட தரைப்பகுதியில் அதிகமான ஆழத்தில் மைக்ரோ டனல் இயந்திரத்தை இயக்குவது சிக்கலாக இருக்கும் என்று அநேக நிறுவனங்கள் பின்வாங்க எங்கள் முதலாளி மட்டும் விடாப்படியா நின்று டென்டர் போட்டு இந்த வேலையை கைப்பற்றினார். அவரது ஒரே நம்பிக்கை அசுவத்தாமன். அவன் கடந்த 20 வருடமாக செய்த வேலைத்திட்டம் எதிலும் துளையிடும் இயந்திரம் இடைநடுவே சிக்கியதாக வரலாறில்லை. இது வழமைக்கு மாறானது. சிங்கப்பூரில் இயந்திரம் சிக்காமல் முடிந்த புரஜெக்ட்களை விரல் விட்டு எண்ணலாம்.முதலாளி அனுமாசிய சக்திகளில் நம்பிக்கை கொண்டவர். பேய்க்கு படையல் வைத்து அடிக்கடி பீதியை கிளப்புவார். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் அவர் அசுவத்தாமனோடு உரையாடும் வேளையில் மட்டும் தனி மரியாதை தொனிப்பதை கண்டிருக்கிறேன்.




அசுவத்தாமனின் அல்லக்கை என்று கருதக்கூடிய ஒரு வேலையாள் இருக்கிறான். அவன் ஓரு தடவை போதையில் சொன்ன தகவல்கள் முதுகெலும்பை சில்லிட வைத்தன. Tuasல் வேலை செய்த போது துளையிட்டபடி சென்ற இயந்திரம் இடைநடுவே பழுதாகிவிட்டதாம். அசுவத்தாமன் நள்ளிரவில் தன்னை Manhole வாசலில் நிற்கச்செல்லிவிட்டு பிராணவாயுவே இல்லாத குழாய் வழியாக தவன்று சென்று இயந்திரத்தை சரி செய்து விட்டு திரும்பினானாம். இன்னொரு நாள் பாரம் தூக்கி பழுதாகிய போது வேலையாட்களை மதிய உணவுக்கு அனுப்பி விட்டு வெறும் கைகளால் பல தொன் நிறையுள்ள I-Beamகளை தூக்கி அடுக்கிக் கொண்டிருந்தானாம். விடிகாலையில் மழைநீர் தேங்கிய வெட்டப்பட்ட குழிகளில் இறங்கி அரையளவு நீரில் நின்று சூரிய வணக்கம் செய்வதுமுண்டாம். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு அசுவத்தாமனோடு மிகுந்த எச்சரிக்கையோடு பழக ஆரம்பித்தேன்.



சிங்கப்பூர் சீனர்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை கொண்ட லிடியா அசுவத்தாமனிடம் விழுந்ததன் பின்னணியில் சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. லிடியா சைட்டில் உலாப்போய்க்கொண்டிருந்த போது தற்காலிக மண்வீதி மழை ஈரத்தில் பொறிய வாகனம் பள்ளத்தில் சாய்ந்தது. வேகமாக ஓடிப்போன அசுவத்தாமன் வெறும் கரங்களால் பிரண்டு போயிருந்த லாண்ட் ரோவரை நிமிர்த்தி லிடியாவை தூக்கிக்கொண்டு வந்தான். அன்று தான் லிடியா அவனை வெகு அண்மையில் பார்த்திருக்க வேண்டும். அடுத்து கழிந்த நாழிகை முழுவதும் அடிக்கடி அசுவத்தாமனை பார்த்து புன்னகைப்பதும் நன்றி கூறுவதுமாக இருந்தாள். வெகு நேரத்திற்கு இது நீடிக்காது என்று நான் எண்ணியதற்கு மாறாக மறுநாள் இருவரும் ஒன்றாய் மதிய உணவுக்கு புறப்பட்டு போனார்கள். லிடியா அவனை "அஸ்வன்" என்று செல்லப்பேர் வேறு வைத்து அழைக்கத்தொடங்கியிருந்தாள். எனது மற்றும் நிறுவனத்திலிருக்கும் அநேகரின் வயிற்றெரிச்சலையும் மீறி வளர்ந்த இந்த காதல் லிடியா கர்ப்பமாவதில் போய் முடிந்தது.

"சுகன்! நான் இப்போ மூன்று மாசம். அஸ்வன் கருவை கலைக்கச்சொல்லி வற்புறுத்துகிறார். உங்களால் அவரோடு பேசி சமாதானப்படுத்த முடியுமா?"

பூட்டிய மீட்டிங் அறையில் லிடியா வெடிகுண்டை வீசினாள்.

"உங்களுக்கு திருமணமாகி விட்டதே லிடியா?"

"அதனாலென்ன விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். குழந்தை பிறந்தவுடன் அஸ்வனை மறுமணம் செய்வதாக இருக்கிறேன்."

"சரி உங்களுக்காக அவனோடு பேசுகிறேன்"





அழைத்து சில நிமிடங்களில் உடலை வில்லாக வளைத்து குனிந்தபடி தலை மேலே இடிக்காதவாறு  உள்ளே வந்தான் அசுவத்தாமன்.

""வரச்சொன்னீர்களாமே! என்ன விடயம்?" 

"நடிக்காதே! நீ செய்த ஈனச்செயல் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்"

"எது ஈனச்செயல்? நான் செய்தது ஒரு இரவு நேர வலிந்த தாக்குதல். Night raid என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நீதியை மீறி யுத்தம் செய்தவர்களை இரவில் தாக்குவது தவறாகாது. அப்படிப்பார்த்தால் உங்களது ஊரில் நடைபெற்ற ஒப்பறேசன் எல்லாளனும் போர்தர்மங்களை மீறிய தாக்குதல் தான்."

"நாம் கர்ப்பத்தைப்பற்றி பேசுகிறேன் நீ ஏன் தொடர்பே இல்லாமல் எல்லாளனை இழுக்கிறாய்?"

"ஓ கர்ப்பமா? அது அபிமன்யுவின் மனைவி உத்தாராவினுடையது. அப்பா இல்லாத அந்த குழந்தை பிறந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும்?. நான் அதன் வேதனையை போக்கியிருக்கிறேன். அதைப்பற்றி நீ யோசித்ததுண்டா?"

"குழப்புகிறாயே? . முதல்ல ஹெல்மெட்டை கழட்டு. ஒபிசுக்குள்ள எதுக்கு சேப்டி ஹெல்மெட்?"

அசுவத்தாமன் ஹெல்மெட்டை கழற்ற மேல்நெற்றியில் நீண்ட ஆழமான வடு தென்பட்டது. தலைமயிரை முன்னே இழுத்து வடுவை மறைக்க முயற்சித்தான்.

"இது கிருஸ்ணன் செய்த சதியால் உருவான வடு இது. 22ம் திகதி மார்கழி மாதம் கிறிஸ்துவுக்கு முன் 3067ம் ஆண்டு தொடங்கின சண்டை 18 நாளா நடந்து தை மாசம் 10 திகதி முடிந்தது.11 திகதி நான் பிரமாஸ்திரம் அடிச்சனான். அண்டைக்குத்தான் இந்த காயமும் வந்தது"

காயத்தை மறைத்த படி அசுவத்தாமன் சொல்லிக்கொண்டு போக எனக்கு உடம்பெல்லாம் உதறல் எடுக்க தொடங்கியது.

"இரவு நேர தாக்குதல், பிரம்மாஸ்திரம் , நெற்றியில் வடு இதெல்லாத்தையும் வச்சுப்பார்த்தால் நீ துரோணர் மாஸ்டர்ட மகன் அசுவத்தாமன் தானே? அடப்பாவி கிருஸ்ணர் உன்னை காட்டுக்கை அலையோணும் எண்டெல்லோ சாபம் போட்டவர். எப்படி நாட்டுக்கை வந்தனி?"

""காடு என்று சாபம் போட்ட பார்த்தன் எந்தக்காடு என்பதை வரையறுக்காம விட்டுட்டான். சிங்கப்பூரும் ஒரு கொங்கிறீட்டு காடு தானே?. அவன்ட சாபத்திலை இருக்கிற ஓட்டையை பயன்படுத்தி இங்கு வந்து விட்டேன்"

"வந்ததும் பத்தாமல் ஒரு வேற்றின குடும்ப பெண்ணை கர்ப்பமாக்கி விட்டாயே படுபாவி!"

நான் கோபத்தோடு கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பிக்க என்னை சற்றும் பொருட்படுத்தாத அசுவத்தாமன் மேசையில் இருந்த பேனை மூடியை எடுத்து விரலிடுக்கில் வைத்தபடி கண்களை மூடி மந்திரம் உச்சரிக்கலானான். சில நொடிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளியோடு கிளம்பிய அந்த பேனா அஸ்திரம் கூரையை பிளந்து கொண்டு லிடியா வயிற்றில் வளரும் கருவை நோக்கி பறக்கலானது.





பிற்குறிப்பு : பாரதப்போரின் முடிவில் கருவில் இருந்த குழந்தையை பிரம்மகணை தொடுத்து கொண்ற பாவத்துக்காக கண்ணனின் சாபத்துக்கு ஆளான அசுவத்தாமன் இன்று வரை காடுகளில் அலைந்து திரிகிறான். இதுவரை அவனை கண்டதாகவும் உரையாடியதாகவும் பல கதைகள் உண்டு. மரணத்தை தழுவ முடியாமல் யாருடைய அன்பையும் பெற முடியாமல்  சிரஞ்சீவியாக வாழும் அவன் கலியுக முடிவிலே மூப்படைவான் என்கிறது பாரதம்.







0 comments: