புழுதி கிளம்பாத பளபளக்கும் சிங்கபுரி நகரின் நடைபாதைகளில் உலாப்போகும் போதெல்லாம் எதிரே தகதகக்கும் தங்க நிற தொடைகளை காட்டியபடி குதிரை நடைபோட்டு வரும் மங்கோலிய வாலைக்குமரிகள் வனப்பினை சூரியக்கண்ணாடிகள் அணிந்து திருட்டுத்தனமாக ரசிப்பது ஷெர்லக்ஹோம்ஸ் என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சிங்கபுரியை வசிப்பிடமாகவும் கொண்ட சேரலாதனுக்கு எப்போதுமே உவப்பானது. இருக்கிறதா? அல்லது இல்லையா? என சந்தேகம் எதிர்ப்படும் சில சீனத்து அழகிகளின் இடை குறித்து அடிக்கடி ஏற்படுகின்ற போதிலும் அதை இடை நடுவே நின்று நிதானித்து முன் பின்னாக பார்த்து ஆராய்வது நாகரிக குறைவாக இருக்குமென்று எண்ணி தவிர்ப்பதுண்டு. ஆனால் லிடியா வந்த போது ஷெர்லக் ஹோம்சால் தவிர்க்க முடியவில்லை. குட்டைப்பெண்கள் அணிவகுத்து வந்த நடைபாதையில் குதிஉயர் காலணி இல்லாமலே தனியாக தெரிந்தாள். இலங்கையில் இருக்கும் ஆபத்தான வீதி வளைவுகளை விட மோசமாக அவள் மேனி வளைவுகள் இருந்தன.  நெருங்கி வரும் போது தரித்து நின்றும் பக்கவாட்டில் கடந்த போது மெலிதாக புன்னகைத்தபடியும் தாண்டி நடந்த போது திரும்பியும் பார்த்தார். சந்தேகமேயில்லாமல் ஆயிரத்தில் ஒருத்தி தான் அவள். சிங்கை நகரில் ஷெர்லக் ஹோம்சுக்கு இரண்டாவதாக பிடித்தது பனி விழாவிட்டாலும் குளிராக இருக்கும் கட்டடங்களை. எனினும் முதலாவதாக பிடித்தது குறைவாக ஆடை அணிந்தாலும் நிறைவாக இருக்கும் சிங்கபுரி குமரிகளைத்தான்.

ஆளாளுக்கு அதிகம் பேசிக்கொள்ளாத சிங்கபுரி சீனப்பெண்களை மேலோட்டமாய் பார்ப்பவர்கள் "துவேசம் பிடித்தவர்கள்" என்பார்கள். பழகிப்பார்த்தவர்கள் பாசக்காரிகள் என்று சொல்லுவார்கள். கண்டவனோடு கடலை போடும் மேற்குலக பெண்களையும் வெட்கப்பட்டு, முறைத்து உணர்வுகள் காட்டும் தமிழ்ப்பெண்களோடும் ஒப்பிட்டால் பேச்சு மூச்சில்லாமல் பிளாஸ்டிக் முகத்தோடு சிமார்ட் போனை முறைத்துப்பார்த்தபடி தொடரூந்திலும் பேரூந்துகளிலும் பயணம் செய்யும் சீனத்து அழகிகள் அந்நியமாய் தெரிவார்கள்.

யாழ்ப்பாணத்தில் பேக்கரி லேன் மதகில் குந்தி இருந்து வெட்டிப்பொழுது கழித்துக்கொண்டிருந்த ஷெர்லக் கோம்ஸ் எனப்படும் சேரலாதன் தனியார் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து சிங்கபுரிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. வந்தவுடன் வேலை கிடைத்ததுமில்லாமல் ஒரு வருடத்திலேயே முகாமையாளராகவும் பதவி உயர்வு கிடைத்திருந்தது. ஷெர்லக் ஹோம்சை பொறுத்தவரை இதெல்லாம் சாதாரண விடயங்கள். கேட்டால், சிங்கபுரியில் குடியுரிமை வாங்க வேண்டும், கொம்பனி தொடங்க வேண்டும் அதன் பிறகு வெளியே சொல்லிக்கொள்ளலாம். முகநூலிலும் போட்டு படம் காட்டலாம் என்பார்.

ஷெர்லக் ஹோம்ஸ் சரியாக குளிக்க மாட்டார். ஒரு தடவை போட்ட யட்டியை திருப்பி தோய்த்து போடுவது போண்ற கெட்ட பழக்கம் எல்லாம் அவருக்கு இருந்ததில்லை. ஆடைகள் துவைப்பதும் முகச்சவரம் செய்வதுவும் நேரவிரயம் செய்யும் வேலைகள் என்பதுவும் அவரது மிகச்சிறந்த கருத்துக்களிலொன்று. அதற்காக அடிப்படை சுகாதரத்தை புறக்கணிக்கும் நபர் என்றும் சொல்ல முடியாது. காலையும் மாலையும் இரவும் சாப்பிட்டு விட்டு 3 தரம் கைகழுவதை விட இரவு சாப்பாட்டை முடித்து விட்டு ஒரு தடவை மட்டும் கைகழுவி நீர்வளத்தையும் பெறுமதியில்லாத நேரத்தையும் சேமிக்கலாமே எனும் அவரது வாதம் தர்க்க ரீதியாக புறக்கணிக்க முடியாதது. இப்படியான அந்நியத்தனமான பழக்க வழக்கங்களை கொண்டதாலோ என்னவோ சிறிய ஓரறை  பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தனிமனிதனாக தங்கியிருந்தார். வருமானத்தின் கணிசமான பகுதி வாடகைக்கு செலவானாலும் இன்னொருவரோடு இருப்பிடத்தை பகிர்து கொள்வது பற்றி சிந்தித்ததேயில்லை வாட்சன் சிங்கபுரிக்கு வரும் வரைக்கும்.

லண்டனில் ஸ்ரூடன் விசாவில் படிக்க சென்ற வாகீசன் எனும் வாட்சன் படிப்பு முடிந்தும் நாடு திரும்ப மனமில்லாமல் முதுகில் சூடு போட்டுவிட்டு அசைலம் அடித்திருந்தான். விசாரித்த யூகே போடர் எஜென்சி ஆபீசர் புத்திசாலி. எடக்கு மடக்கா கேள்வி கேட்டு மடக்கி தஞ்சக்கோரிக்கையை நிராகரித்து இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட்டார். ஊரில் லண்டன் ரிரேன் என்று சொல்லி சிலகாலம் பருப்பை அவித்தபடி திரிந்த வாட்சன் தகப்பனாரின் திட்டு தாங்க முடியாமல் சிங்கபுரிக்கு மூட்டையை கட்டுவம் என்று முடிவெடுத்த போது தான் ஷெர்லக் ஹோம்சிடம் வந்தான். வாட்சன் அழைப்பு எடுத்தவுடனேயே ஷெர்லக் தன்னோடு தங்கி கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்து விட்டார். ஆறு வருடங்கள் முன்பு பேக்கரி லேன் மதகடியில் தனக்கு சீடனாக இருந்த வாட்சன் இங்கும் பணிவாக பேச்சுத்துணையாக இருப்பான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

சாங்கி விமான நிலையத்தில் வாட்சனை வரவேற்க போயிருந்த ஷெர்லக் ஹோம்சிற்க்கு ஆச்சரியம். பற்றிக்சரத்தோடும் பாட்டா செருப்போடும் யாழ்ப்பாணத்தில் திரிந்த வாட்சன் நீளமான இத்தாலியன் கோட்டு, வெள்ளை நிற நைக்கி சப்பாத்து என மாறிப்போயிருந்தான். காதில் போட்டிருந்த கெட் போனை ஒரு கையால் லாவகமாக கழற்றியபடி மறுகையை நீட்டியபடி நைஸ் ரு மீற் யூ பிளட் என்றான். சரி நைஸ் ரு யூ என்று ஷெர்லக் ஹோம்ஸ் தடுமாறினார். எதாவது குடிப்பம் வாடா என்று ஷெர்லக் அழைக்க வாட்சன் குடித்தால் ஸ்டார் பக் தான் குடிப்பேன் என்றான். இதென்னடா சாக்கடைக்க கிடந்த கபறக்கொய்யாவ வீட்டுக்குள் வரவழைத்து விட்டேனா என்று ஆரம்பித்து ஷெர்லக் பலவாறு சிந்தனையில் ஆழ்ந்திருக்க விமான நிலையத்திலிருந்து டாக்சி வீட்டைநோக்கி விரையலாயிற்று. வாட்சன் கெட் போனை மாட்டிக்கொண்டான். காதில் லேடி காக்கா "Tryin' to keep control
Pressure's takin' its toll" என்று கத்திக் கரையத்தொடங்கினார்.
(வளரும்)