Showing posts with label மலரவன் கதைகள். Show all posts
Showing posts with label மலரவன் கதைகள். Show all posts





முடிவில்லா இணைய தகவல் களஞ்சியத்தினை கூகிள் தேடுபொறி மூலம் சல்லடை போடுகையில் தென்பட்ட சில பைட்டுக்கள் கூட பெறாத அந்த விவகாரமான விளம்பரம் பார்த்தவுடன் கவனத்தை ஈர்த்தது.கார் விற்பவர்கள்,வீடு வாடகைக்கு விடுபவர்கள்,பிரத்தியோக ரியூசன் கொடுப்பவர்கள் என்றிருந்த சாதாரண விளம்பரங்களிலும் படம்வரைய நிர்வாண மாடல்கள் தேவை ,ஜிம் பயிற்றுனராக அழகான பெண் தேவை,ஹொலிடே கூட்டி செல்ல கட்டுடல் ஆண் தேவை என்றிருக்கும் வகையறாக்களே மலரவன் கவனத்தை அதிகம் ஈர்ப்பதுண்டு.ஆனாலும் இன்று புதிதாக வந்திருந்த "எனது மனைவியை இயற்கை வழிகளில் கர்ப்பமாக்க பரிபூரணமான ஆண்மகன் தேவை" என்ற அழைப்பு மொத்த கவனத்தையும் தன் பால் இழுத்து விட்டிருந்தது.உயிரணு வழங்கி ஒருவர் மூலம் செயற்கையாகயாக கருத்தரிப்பது புதிதான விடயமில்லை.இயற்கையான உறவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடும் முதிர்கன்னிகள் பற்றியும் மலரவன் கேள்விப்பட்டதுண்டு.இது தவிர லெஸ்பியன் தம்பதிகள் குழந்தை பெற மட்டும் சிறப்பான உயிரணுக்களை வழங்க கூடிய ஆண்களை நாடுவது வழமை.ஆனாலும் ஒரு இங்கிலாந்து வாழ் தென்னாசியன் தனது மனைவியோடு இயற்கை உறவு வைத்து குழந்தை பெற பிற ஆண்களுக்கு அழைப்பு விடுத்து விளம்பரம் போடுகிறான் என்றால் பின்னால் ஏதோவொரு மர்மம் இருப்பதாக உள்ளுணர்வு எச்சரித்தது.ஆயினும் இவ்வாறான விடயங்கள் குறுக்கிடும் போது உருவாகும் அதீத ஆர்வம் உந்தித்தள்ள மூளையின் கட்டளைக்கு காத்திராமல் விரல்கள் அந்த விளம்பரத்துக்கு பதிலெழுத தொடங்கிவிட்டிருந்தன.




திங்கள் கிழமை தொடங்கி வெள்ளி வரை அசுர வேகத்தில் நகரும் இயந்திர நாட்கள் முடிந்து ஓய்வாக படுக்கையில் சரிந்த போது மீள அந்த விளம்பரம் நினைவுக்கு வந்தது.இப்படியான வேலைகளுக்காகவே வைத்திருக்கும் மெயில் பெட்டியை திறந்து பார்க்க பதில் இருந்தது.


"உங்கள் விண்ணப்பம் கிடைத்தது.புகைப்படம் அனுப்ப முடியுமா?".


இரண்டு புகைப்படங்களை தரவேற்றம் செய்து அனுப்பி சில நிமிடங்களுக்குள்ளாகவே மீள இன் பாக்ஸ் மிளிர்ந்தது.


"நீங்கள் பொருத்தமானவராகா இருப்பீர்கள் என நினைக்கிறேன்.முடியுமானால் அலைபேசி இலக்கம்?".


அனுப்பியதும் ஒலிக்கதொடங்கிய கைத்தொலைபேசியை வெகு எச்சரிக்கை உணர்வோடும்,ஆப்பு குறித்த விழிப்புணர்வோடும் கழிவறைக்குள் ஒதுங்கி காதுகளில் பொருத்தியதும் எதிர்முனையில் பேசிய ஆண்குரலில் அதீத மென்மை இருந்தது.

"எனது பெயர் பவல் நாத்.இந்த விடயம் மிகவும் உணர்வு பூர்வமானது.நீங்களும் இதை விளையாட்டாக கருதவில்லை என்று நினைக்கிக்கிறேன்" என்று தொடங்கி நீண்ட அறிமுக பேச்சு முடியும் போது "அட இவன் ரொம்ப நல்லவன்" என்ற பிம்பத்தை கிட்டத்தட்ட எனக்குள் ஏற்படுத்தியிருந்தான்.

"பவல் நாத்! எனது பெயர் மலரவன்!,எனக்குள் இது தொடர்பில் சந்தேகங்கள் இருக்கின்றன.இந்த விடயத்தில் உடன்பட முன்னர் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன்.முதலாவதாக "நீங்கள் ஒரு குழந்தையை உருவாக்கும் ஆற்றல் அற்றவர் என்றால் டொக்டர் உங்களை விந்தணு வங்கி உதவியை நாடும்படி பரிந்துரைக்கவில்லையா?".

நல்ல கேள்வி என்று சொல்லிவிட்டு சிரித்துகொள்கையில் அவன் பதிலுக்காக கால அவகாசம் எடுத்துக்கொள்வது புரிந்தது.

"மலரவன்! நீங்கள் எல்லா விடயங்களும் அறிந்தவராக இருக்கிறீர்கள்,டொக்டர் அப்படி சொல்லிவிட்டு இன்னொரு விடயமும் சொன்னார்.செயற்கை முறையாக உருவாக்கப்படும் குழந்தையில் வெறும் பொம்மை போல இருக்குமேயன்றி அதில் உயிரோட்டம் இருக்காது.உணர்வுகள் நிரம்பிய குழந்தை நெருக்கமான பாலுறவில்தான் உருவாகும் என்பது உங்களுக்கு தெரியாதா?".

நெத்தியடியாக பதில் சொல்லிவிட்டதாக எண்ணியோ என்னவோ இந்த தடவை சிரிப்பை குறுகிய நேர அவகாசத்தில் முடித்துக்கொண்டான்.கலாச்சார பிண்னணியில் வளர்ந்த ஒரு தென்னாசியன் தனது மனைவி இன்னொருவனோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள அனுமதிப்பது அசாதாரணமானது என நான் தொடங்க அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தான்.

"அவள் என் மீது அளவில்லா அன்பை வைத்திருக்கிறாள்.உன்னோடு கூடுவதால் அதற்கு எந்த பங்கமும் வந்துவிடாது.குழந்தையை உருவாக்க என்னால் முடியாது.மாறாக அவளால் முடிகிற போது அதற்கேன் தடை போட வேண்டும்?.அவள் மீது கொண்டுள்ள அதீத காதல் இப்படியான முடிவுக்கு காரணமாய் இருந்திருக்கலாம் மலரவன்"

இவனோடு பேசிப்பிரியோசனமில்லை நேரே சந்திக்கலாம் என முடிவெடுத்து காலம்,இடம் குறித்து அழைப்பை அணைத்த பின் மாறன் நினைவுக்குள் வந்தான்.






"டேய்! பெரிய பருப்பு மாதிரி கனக்க கதைச்சுக்கொண்டு இருப்பாய் இவனை பற்றி சொல்லு பார்ப்பம்?"


"மச்சான்! இவன் நடிகர் கூலி இல்லாம நீலப்படம் எடுக்க வெளிக்கிட்டான் போல,இல்லாட்டி நீ மனிசியோட மினக்கெடேக்க அதை வீடியோவா எடுத்து பிளாக்மெயில் பண்ணி காசு பார்க்கிற ஆளாவும் இருக்கலாம்.மனுசியட்ட இருந்து விவாக ரத்து பெற வலுவான வீடியோ ஆதாரம் தேடுகிறவனாகவும் படுகிறான்"

"எப்ப பார்த்தாலும் வீடியோ,பலான படம் பற்றிய சிந்தனை தான், வித்தியாசமா ஏதாவது யோசித்து சொல்லடா"

"உன் மூலமா பிள்ளைய பெற வச்சிட்டு அதை காட்டி மாதம் மாதம் காசு கறக்கிற நீண்டகால திட்டமாகவும் இருக்கலாம்"

"பிறக்கப்போகிற பிள்ளைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதினாப்பிறகுதான் எல்லாமே ஆரம்பிக்கும் என சொல்லியிருக்கிறான்டா"

"இந்த வயசில அப்பா ஆகோணும் எண்டு ஆசை வாறது வழமை தான்.அதுக்காக இவ்வளவு கேவலமா போவாய் எண்டு நினைக்கேலை மச்சான்.அதுக்கு முதல்ல பிள்ள குடுக்கிறதுக்கும் ஒரு தில் வேணும் அது உன்னட்ட இருக்கா என்ன?"

கதையை நிப்பாட்டு வாற சனிக்கிழமை கனறிவோவ் DLR நிலையத்தில அவன் மனிசியோட என்னை சந்திக்க வாறான்.வீட்டுக்கு போய் தடல்புடலான விருந்துக்கு பிறகு வேலைய ஆரம்பிக்கலாம் எண்டு சொல்லி இருக்கிறான்.வீட்டுக்குள்ள போன உடன I.Phone G.P.S அடையாளப்படுத்தியை நிப்பாட்டுறன்.அந்த அப்ளிகேசன் எனக்கு Postcode ஐ e mail லஅனுப்பும்.என்ர இமெயில லொக் இன் பண்ணி அடிக்கடி Refresh பண்ணி பார்.வந்த உடன நீ கமல்ஸோட அந்த வீட்டுவாசலுக்கு கிட்டவா வந்து காருக்குள்ள இரு"

"பிறகு?"

"எனக்கு இந்த விசயம் உண்மையா எண்டு அறியோணும்.இல்லாட்டி தலையே வெடிச்சிடும் போல இருக்கு.பிரச்சினை எண்டா கதவை உடைச்சு உள்ள வா சரியோ?

"அப்ப பிரச்சினை இல்லாட்டி?"

"பேசாம கமல்ஸோட கதைச்சுக்கொண்டு இரு.நான் பிள்ளைய குடுத்துட்டு வாறன்."

மாறன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க மலரவன் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நடக்கவாரம்பித்தான்.



(பாகம் இரண்டில் முற்றும்)





மிலாமிளிக்கா!.மிதப்புக்காலணிகள் மீது மிருதுவான பாதம் வைத்து புரவி நடை போடும் ஐந்தடி உடம்புக்காரி.உயரம் மட்டும் மட்டுப்பட்டதே தவிர, கட்டுமீறிய அளவுகளாய் மீதம் எல்லாம் வாய்த்திருந்தன.முதல்சந்திப்பிலேயே காதல் சொன்ன காளைகளை எல்லாம் முரட்டுப்பார்வையாலேயே விரட்டிய அவளுக்கு அவன் வந்து முன்னால் நின்றபோது மூச்சே வரவில்லை.அவள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்த உதடுகளால் அவன் அழகாய் புன்னகைத்த போது பைத்தியமாகிப்போனாள்.கலாச்சாரம் கட்டுப்பாடு எல்லாம் மறந்து,உணர்ச்சி நிரம்பிய கணமொன்றில் சனநெருக்கடியான வீதியோரமாய் அவனோடு ஆழமாய் உதட்டு முத்தம் பரிமாறிக்கொண்டதை ஊரே பரபரப்பாய் கதைத்தது.விடயம் அறிந்தவர்கள் அவளை காணும் தருணங்களில் வீசும் விசித்திரப்பார்வைகள் அம்முத்தத்தை மீளவும் நினைவுக்குள் கொண்டுவந்து கிளர்ச்சியூட்டினவே தவிர அவமானத்தை தருபவையாக இருக்கவில்லை.அவள் அங்குலம் அங்குலமாய் உணர்வு ஊற்றி வளர்த்த காதல்ச்செடிக்கு ஒரு ஆண்டு வயது ஆகிய தருணங்களில்த்தான் அந்த அரிதான,உவப்பான வாய்ப்பு தேடி வந்தது.சிறுவயதிலிருந்து அவளின் கனவுகளினிருப்பிடமாகி இருக்கும் லண்டன்,சொகுசுக்காரில் வந்து இறங்கும் கணவனின் கோட்டுப்பைகளிலிருக்கும் பணத்தின் கனதி,நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வாழ்க்கை என கண் முன்னே நின்ற பிம்பங்களை சுருக்குப்பையில் போட்டுகட்டி உளத்தாரசின் ஒரு தட்டில் போட்டுவிட்டு மறுதட்டில் அவன் காதலை போட்டபோது ஈடாகவில்லை."என்னை மன்னிச்சிடுடா!, தற்கொலை செய்வம் எண்டு மிரட்டுற வீட்டுக்காரருக்கு முன்னால என்னால எதுவுமே செய்ய முடியேலை,உனக்கு என்னை விட நல்ல ஒருத்தி கிடைப்பா" என்று சில கண்ணீர்த்துளிகளை இலவச இணைப்பாக்கிச்சொல்லி முடித்து நிமிர்ந்த போது அவன் பலவீனமான நடையோடு போய்க்கொண்டிருந்தான்.



நாட்களின் ஓட்டத்தில் பழைய நினைவுகள் மழுங்கிப்போயிருந்தன.தொலைபேசியில் புதியகாதலை எதிர்கால வெளிநாட்டு கணவனோடு வளர்ப்பதொண்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. குறிக்கப்பட்ட மணநாள் நெருங்க பரபரப்பாகி அழகு சிகிச்சை நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தபோது தான் அந்த கொடூரமான ஒற்றைத்தலைவலி அவளைத்தாக்கியது.சகல மாத்திரை மருந்துகளுக்கும் அடங்காமல் கபாலத்தில் தொடர் சம்மட்டி அடிகளாய் பிறந்த வேதனையின் வீச்சம் தாங்க முடியாமல் இறுதியாய் டொக்டர் மலரவனிடம் வந்தாள்.மிளாமிளிக்காவை மல்லாக்க வைத்து ரொமோகிறபி ஸ்கானருள் செலுத்தி முப்பரிமாண படங்களை எடுத்துப்பார்த்த போது கபாலத்தின் வலது பக்கமாக மேலே கருப்பாக புள்ளியாய் எதோ ஒன்று தெரிந்தது.அசாதாரண வளர்ச்சி கொண்ட கலங்களால் உருவாகும் விம்பத்திலும் பார்க்க அது வேறுபட்டிருந்தது.ஆழ அலசி கூர்ந்து பார்க்க அப்புள்ளியூடு சென்ற எக்ஸ் கதிர்கள் எவையும் தெறித்து வரவேயில்லை என்பது விளங்கிற்று.சக்திக்கதிர்களை உறிஞ்சி தெறிக்கவிடாமல் வைத்திருக்கும் புள்ளி என்றால்......... மனித உடல்க்கலங்களுக்கு அப்படியான ஒரு இயல்பு இருப்பதேயில்லையே?....விலகலை உண்டாக்கும் கதிரியக்க உலோகங்கள் கூட எக்ஸ் கதிர்களை முழுமையாக சிறைப்பிடிப்பதில்லை......சாத்தியமான தகவுகளூடு பாய்ந்த எண்ணஓட்டம் ஒரு புள்ளியின் தரித்து நின்ற போது மலரவன் முகத்தின் வியர்வைத்துளிகள் ஏசி குளிர்மையையும் மீறி பூத்திருந்தன.



காஸ்மிக் கருந்துளைகள் பிரபஞ்சத்தின் பிரமாண்ட மர்மப்புள்ளிகள்.அளவிடமுடியா திணிவையும் மிகக்குறுகிய கன அளவையும் கொண்ட அவை அளவில்லா ஈர்ப்பு விசையால் ஒளியையும் தப்பவிடாமல் சிறைப்பிடிக்கும் வல்லமையுள்ளவை. சூழவுள்ள திணிவுகளை விழுங்கி விரிந்து செல்லும் இவற்றுள் திணிவழியும் வீதம் உள்ளிழுப்பதை விட அதிகமாயிருக்கும் என்பதால் வளர்ச்சி எக்காலத்திலும் கட்டுப்படாதென பௌதீக ஆசிரியர் அக்காலத்தில் சொன்னது நினைவில் வந்தது.இவற்றுக்கு மாறாக மிகச்சிறிய அளவிலான கருந்துளைகளும் உள்ளன.திணிவில் 5000 புரோட்டன்களுக்கு சமனானானதும் அளவில் புரோட்டனை விட 1000 மடங்கு சிறியதுமான திணிவு கருந்துளையாக தொழில்படுமென நவீன விஞ்ஞானம் சொல்கிறது.உடலியல் கூறுகளிலொன்று பிரிகையடைந்து மிகமிக சிறியதாகும் பட்சத்தில் அது பிறகலங்களை விழுங்கும் துளையாக மாறி வளர்ந்து கொண்டே செல்வதற்கான வாய்ப்பு பில்லியனில் ஒன்றேனும் இருப்பதாக மனம் சொல்லியது.




"செல்வி மிளாமிளிக்கா! உங்களுக்கு வந்திருப்பது பிரபஞ்ச மூலைமுடுக்குகளிலும் இல்லாத அரிதான நோய் ஒன்று.கபாலத்துள் இருந்த கல அணுக்களில் ஒன்று படுவேகமாக பிரிகையடைந்து கருந்துளையை உருவாக்கி இருக்கிறது.அது சூழவுள்ள கலங்களை விழுங்கி வளர்ச்சியடைந்து வருகிறது.கால ஓட்டத்தில் அது உம்மை மட்டுமல்ல உலகத்தையே விழுங்கவல்லதாகவும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.மலரவன் சொல்லிக்கொண்டு போன வார்த்தைகள் பிம்பங்களாக அணிவகுக்க, மிளாமிளிக்கா மிரளத்தொடங்கினாள்.




"நிறைகுறைதல்,கலச்சிதைவுக்கு காரணமான HCG ஓமோனின் ஒரு வடிவமே இச்சிக்கலுக்கு மூலமாக இருக்கும் என நினைக்கிறேன்.மனதை விட்டு நீக்க முடியாமல் இருக்கும் துன்பியல் நினைவு ஏதாவது நீண்ட நாளாய் இருக்கிறதா செல்வி மிளாமிளிக்கா?"

"அப்படி ஒன்றுமே இல்லை டொக்டர்"

"குற்ற உணர்வு?,யாருக்காவது தீங்கு அல்லது துரோகம் இழைத்ததாய் உணர்வு?,அதுவும் HCG சுரப்பை தூண்டும்"

"ம்ம்ம்.இல்லை.ஆனா கொஞ்சமா.அதை சரியாக்கேலும் எண்டு நினைக்கிறன்"

"முதல்ல அதை செய்யுங்கோ,கடவுள் உங்கள் பக்கம் நிற்பாராகட்டும்.
முக்கியமாக இதைப்பற்றி எவருக்கும் சொல்லி விடாதீர்கள்.உங்களால் தமக்கு ஆபத்து என நினைப்பவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்."



சில மாதங்களின் பின்பு குளிர்மையான மழை நாள் ஒன்றில் மலரவனை சந்திக்க யாரோ பூங்கொத்துக்களோடு காத்திருப்பதாய் உதவியாளர்கள் சொல்லிப்போனார்கள்.சென்று பார்த்த போது மலர்ந்த முகத்தோடு அவன் நின்றிருந்தான்."டொக்டர்,அவ சம்மதம் சொல்லிட்டா,வாற மாதம் கலியாணம்.நீங்க அவசியம் வந்தாகணும்,நான் இப்ப ட்ரக்ஸ் எல்லாம் விட்டு வேளா வேளைக்கு சாப்பிட்டு எப்பிடி மாறிட்டன் பாருங்கோ" வார்த்தைகளில் குழந்தையின் குதூகலம் தெரிந்தது.

அன்றிரவு மலரவன் வழமை போல ஆழமான சிந்தனைக்குள் தன்னை அமிழ்த்திக்கொண்டிருந்தார்.அவரால் நிச்சயம் அவன் திருமணத்தில் பங்கேற்க முடியாது.அது விரும்பத்தகா விளைவுகளை ஏற்படுத்தலாம்.அநேகமாக மிளாமிளிக்கா கழுத்தில் அணிந்திருக்கும் கனமான ஆபரணம் திருமணம் முடிந்த பின் பெட்டிக்குள் உறங்கச்சென்றதும் அந்த ஒற்றைத்தலைவலி அகன்றுவிடும். உதவி தேடி வந்தவளுக்கு புனைகதை சொல்லி குழப்பியது கிஞ்சித்தும் வருத்தத்தை தரவில்லை.காதல் துரோகத்தாலுண்டான வலிகள் நிரம்பிய பாதை வழி வந்தவன் அவ்வலி இன்னொருவனுக்கு கிடைப்பதை ஒருபோதும் விரும்பமாட்டான்.



ஜுராசிக் காலத்தின் செழிப்பு மிக்க பொழுதுகள் அவை.அகன்று விரிந்திருந்த கானகங்கள் எங்கும் கனமான உயிரிகள் நடமாடிக்கொண்டிருந்தன.ஒவ்வொரு மூச்சிலும் வளியில் இருந்த 40% ஒக்சிசனை தொன்கணக்கில் உறிஞ்சி உடல்சூட்டில் அனல் காற்றாக மாற்றி வெளியே அனுப்பிக்கொண்டிருந்த "செல்லாத்தா" என்றுமில்லாதவாறு இன்று மெலிதான சுவாசத்தோடு இடிந்து போய் விழுந்து கிடந்தது.அதன் கண்களில் இருந்து ஓடிய நீர்த்தாரைகள் தற்போதைய உலகின் குட்டி அருவி ஒன்றின் பரிமாணத்துக்கு ஒப்பிடக்கூடியதாய் இருந்தது."செல்லாத்தா" டைனோசரில் பச்சைத்தாவரம் மட்டும் உண்டு வாழ்கிற வகை.மிச்ச டைனோசர் சகவாசமே வேண்டாம் என்று தான் குடும்பத்தையும் இழுத்துக்கொண்டு இலங்கைத்தீவின் கட்டுப்பெத்தை கானகப்பக்கமா ஐஞ்சாறு மாசங்களுக்கு முன் குடி பெயர்ந்திருந்தது.செழிப்பான ஆற்றங்கரையெங்கும் பரவியிருந்த ஈரலிப்பான மரங்களும் பிற டைனோசர்களின் தொந்தரவில்லா சூழலும் அதற்கு நன்றாகவே பிடித்துப்போக சாப்பாடும் தூக்கமுமாக நாட்கள் கவிதையாக நகர்ந்து கொண்டிருந்தன.ஆனால் அந்த மகிழ்வுக்கெல்லாம் முடிவு வைப்பது போல நடந்து விட்டிருந்தது நேற்று நடந்த சம்பவம்.

செல்லாத்தாவின் ஒரே மகள் "றைனா".அவளைப்போலவே நீண்ட கழுத்து, மெழுகு பூசினால்ப்போல மென்பச்சை கரட்டீன் சருமம்,மொழு மொழு வயிறு, எடுப்பான பின்புறம்,வளைவுகள் நிறைந்த வால் என்று அம்சமா இருந்தாள். புருசன்காரன் "நல்லாம்பி" செல்லாத்தாவை விட உயரம் குறைவு என்றாலும் நல்ல கம்பீரம்."உங்கட மூஞ்சி அப்படியே இவளுக்கு வந்திருக்கு" எண்டு அடிக்கடி அவரிடம் செல்லாத்தா சொல்லிக்கொள்ளுவாள்."எங்களுக்கு வச்சது போல மொக்கையா பேர வைக்காம நவீனமா வைக்கோணும்" எண்டு நாள்கணக்கில் பிளான் பண்ணி வச்ச பேர் தான் "றைனா".எட்டாவது வயசில் அவள் வயதுக்கு வரும் மட்டும் எல்லாம் நல்லாத்தான் இருந்தது.அதுக்குப்பிறகு இளம்பெடியள் முதல்க்கொண்டு கிழவன்கள் வரை றைனாவ எங்க பார்த்தாலும் கலைக்கத்தொடங்கீட்டாங்கள்.நல்லாம்பி தெம்பா இருக்குமட்டும் வாலால வெளுத்து கழுத்தால அடிச்சு மகள் பின்னால வாறவங்கள கலைச்சுப்போடுவார்.ஆனா போனவருச தொடக்கத்தில் ஒரு வகை மாமிச உண்ணி ரெக்ஸ் டைனோசரோட பொருதேக்க கடி விழுந்து வலக்கால் இயங்காம போய் எல்லாம் சிக்கலாகிப்போட்டுது.அதுக்குப்பிறகு தான் பெருநிலத்துண்டில இருந்து தண்ணி வற்றின நேரமா இந்த தீவுக்கு இடம்பெயருற முடிவை அவசரமா எடுக்கும்படியானது.ஆனா இங்கயும் பிரச்சினை வந்திட்டுது.நேற்று "றைனா" ஆற்றில குளிச்சிட்டு வரேக்க இருட்டான கானக பகுதியில வச்சு ஒரு பெடியன் டைனோசர் வால கவ்விப்பிடிச்சு இழுத்திட்டுது. றைனா முதல்ல திடுக்கிட்டாலும் உதறி எறிஞ்சிட்டு பின்னங்கால் வால்ல பட ஓடி வந்திட்டுது.மகள் ஓடி வந்து மரஒளிவுக்கை போய் நடுங்கிக்கொண்டு இருந்த பார்த்து நல்லதம்பி கடுப்பாகி காடு முழுக்க உறுமிக்கொண்டு திரிஞ்சாலும் ஒருத்தரும் தட்டுப்படேலை.குழப்பத்தின் உச்சத்தில் இனிப்புச்செடியள வயிறு நிறைய திண்டுட்டு "சுகர் ரஸ்" ஆகி மல்லாக்க படுத்திருக்கேக்க மலரவன் நினைவு வந்தது.

காலங்கள் தாண்டி கணநேரத்தினுள் ஓடிய அவ் அப்பழுக்கில்லா உயிரியின் கூரிய எண்ண அலைகள் கட்டுப்பெத்தை கம்பஸ் வளாகத்தில் விரிவுரைக்கு மட்டம் போட்டுவிட்டு கல்மேசையில் குப்புற படுத்திருந்த மலரவனின் தூக்கத்தை குலைத்தன.கணநேரத்துள் உடம்பினுள் உறைந்திருந்த அனைத்து சக்தியையும் புள்ளியாய் குவித்தபோது உருவம் அரூபமாகி இறந்து போன மில்லியன் ஆண்டுகள் வழி பயணம் சென்று நல்லதம்பி காலடியில் நின்று உருவமாகியது.உடம்பில் அனலாய் கொதித்த காய்ச்சலுக்குள்ளும் றைனா கடுமையா வெட்கப்பட்ட தொடங்கியது."உனது உடலில் கடி விழுந்த இடத்தை பார்த்தாக வேண்டும்" என்ற மலரவன் கேட்டது றைனாவின் மென்பச்சை முகத்தில் சென்நிற நிழல்களை உருவாக்கி விட்டிருந்தது."ஒரு டைனோசர் பொண்ணு எத வேணும் எண்டாலும் காட்டுவா....ஆனா வாலை மட்டும் காட்ட மாட்டா,நீங்க ஒரு மனுசப்பொண்ணுட்ட இடுப்பை காட்டு எண்டு கேட்டா அவுத்து காட்டுவாவா?" றைனா கேட்காமல் கேட்பதாய் பட்டது.கமெராவை உருவி வாலை குறிவைத்து மின்னலாய் அழுத்தி உருப்பெருப்பித்த போது கடி காயம் கனதியாய் தெரிந்தது.பற்கள் பொதிந்திருந்த ஆழத்தில் கடித்த உயிரியின் வேட்கை புரிந்தது.


றைனாவின் அழகுக்கு இன்னும் அழகூட்டி இலைகுழைகளால் அலங்கரித்து ஆற்றங்கரையருகே நிறுத்தி விட்டு மறைத்திருந்து அவதானிக்கத்தொடங்கிய மலரவனை செல்லாத்தாவும் நல்லாம்பியும் குழப்பத்தின் ரேகைகள் முகத்தில் பரவ பின்னால் நின்று பார்த்தபடி நின்றன.நேரம் ஓட ஆற்றங்கரையோரம் புதர்கள் முறியும் ஓசை தோண்றி சமீபமாக வர, கட்புலனை கூர்மையாக்க பிரமாண்டமாய் ஒரு உருவம் றைனாவின் வாலை குறிவைத்து நெருங்குவது விளங்கியது.சிலகணங்கள் நிலையெடுத்த அது.......திடீரென்று வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக பாய்ந்து வாலில் பற்களை பதிக்க முன் மலரவன் கையில் இருந்த வலைத்துப்பாக்கி முழங்கி சிறைப்பிடித்தது.


கொழுப்பின் உறைவிடமாக இருந்த அப்பருத்த டைனோசரை ஏறங்க இறங்க பார்த்த எட்டுப்பட்டி டைனோசர்களுக்கும் நாட்டாமையான புறண்டோசரஸ் வழக்கமான கேள்விகளை கேட்டபின் "இவனை யுராசிக் காலத்திலிருந்து கண்காணா காலத்துக்கு நாடு கடத்துங்கள்" என்று மலரவனிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த செம்பில் நீண்டநேரமாக சப்பியபடியிருந்த மரச்சக்கைகளை துப்பியதும் பிறக்கப்போகும் காலங்களூடு பயணம் மீள தொடங்கியது.மலரவன் அருவமாக இழுத்துச்சென்ற உருவமான அந்த வெறி பிடித்த டைனோசர் உருச்சிறுத்து பல்லியாகி மரமேறி குரங்காகி வளர்ந்து நிமிர்ந்து ரோமங்கள் கொட்டுண்டு உருமாறி நிலைமாறி கூடச்சென்றது.சக்தியெல்லாம் திரட்டி காலப்பெருவெளியின் சூட்சும பாதையிலிருந்து 2008 ஆம் ஆண்டுப்புள்ளிக்கு அவ்வுருவை இழுத்து வீசி விட்டு கிட்ட நடந்து சென்று பார்த்த மலரவனுக்கு பல்லாயிரம் வோல்ற் மின்சாரம் மர்ம ஸ்தானத்தில் பாய்ந்த்து போல இருந்தது.அங்கே ரஜீந்திரதாஸ் குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்தான்.