ரொக்கற் வெளிக்கிட்டு உயரத்துக்கு வந்தாப்பிறகு தான் விளங்கிச்சுது நல்லா என்னை உசுப்பேத்தி அனுப்பிட்டாங்கள் எண்டது.முதல்லயே புத்தியா யோசிச்சு களவா எண்ட அப்பிள் ஐபேனை அப்பிள் பிறாண்ட் அண்டவெயாருக்குள்ள ஒளிச்சு கொண்டு வந்திருந்ததாலதான் இந்த விசயம் பிடிபட்டது.இல்லாட்டி வெள்ளிபார்த்துக்கொண்டு போய்க்கொண்டிருந்திருப்பன்.முதன் முறையா தமிழர்கள் ரொக்கட் விடுறாங்கள் எண்டதால சகல ரீவிக்காரனுகளும் என்ர மூஞ்சிய போட்டு பிரிச்சுமேஞ்சிட்டாங்கள் போல.நான் போய்த்துலையுறன் எண்டத அறிஞ்சு சந்தோசத்திலை எண்ட நண்பர்கள்,உறவுகள் எல்லாம் நூற்றுக்கணக்கில குறுந்தகவல அனுப்பி அண்டாவியாரை அதிரவைச்சுக்கொண்டிருந்தார்கள்.அதிர்வு மோட்ல இருந்த போனின்ர அதிர்வு தங்காமல் அப்பிளுக்க இருந்த அப்பிள எடுத்து படிச்சுப்பார்த்தா அதிலயும் அதிர்ச்சி. ஆரோ ஒரு குறுக்கால போன ரீவிக்காறன் நான் எப்பவோ பொட்டுத்துணியில்லாம குளிக்கேக்க எடுத்த வீடியோவ போட்டு இவர்தான் விண்வெளிக்கு போறார்,முழு வீடியோவும் பார்க்க சந்தா கட்டுங்கோ என்று கேட்கிறாங்களாம்.அதால இங்க ஒரே பரபரப்பா,கிளுகிளுப்பா இருக்கு மச்சான் எண்ட ஒரே விசயத்தைத்தான் சொல்லிவைத்தால்ப்போல எல்லா மூதேவியளும் குறுந்தகவல் போட்டிருந்துதுகள்.அடக்கறுமம் எண்ட வெத்து பாடிய கண்ணாடி முன்னால நிண்டு வெற்றுக்கண்ணால பார்க்கிற தைரியம் எனக்கே இன்னும் வரேலை.இவங்கள் அத சந்தா வேற கட்டி பார்க்கிறாங்களா? தலையில ஒருக்கா அடிச்சுக்கொள்ளுவம் எண்டு பார்த்தா,அதுக்குள்ள சடக்,படக் எண்டு பாய்ந்து வந்த தானியங்கி பட்டிகள் கையகால அசைய விடாமல் இறுக்கிக்கொண்டன."இலகுவாய் நில்,நிமிர்ந்து நில்,காலம் குறி"எண்டு பச்சைதமிழ்ல அறிவிப்புக்கள் ஸ்பீக்கர்ல வரத்தொடங்க றொக்கெட்ட கொழுத்தப்போறாங்கள் எண்டது என்ர மரமண்டைக்கு விளங்கிட்டுது.பதட்டத்த தணிக்க கந்தஜட்டிக்கவசம் சொல்லுவம் எண்டு பார்த்தா அதுவும் ஞாபகத்துக்கு வருதில்லை.அப்பிள் போன் கொண்டந்தமாதிரி கந்தஜட்டி கவசத்தையும் ஜட்டிக்க வச்சு கொண்டாந்திருக்கலாமே,பிழைவிட்டுட்டியே எண்டு என்னை நானே திட்டி முடிப்பதற்குள் பூமியை வெட்டு வேகுதூரம் வந்துவிட்டிருந்தது றொக்கெட்."என்னடாப்பா முதல்தமிழனா விண்வெளிக்கு போறாய்,அதுவும் யாழ்ப்பாணத்தில இருந்து வெளிக்கிடுறாய்,பிறகேன் உசுப்பேத்தி அனுப்பிட்டாங்கள் அது,இது எண்டு புலம்புறாய்?"எண்டு பச்சைத்தமிழனெண்டா இந்நேரம் கேட்டிருப்பியள்.அதுக்கு பதில் சொல்ல தமிழ்சினிமா மரபின் படி நான் பிளாஸ் பேக்ல சென்றே ஆகோணும்.வாங்கோ.

றெக்கை கட்டிப்பறக்குதய்யா அண்ணாமலை றொக்கட்



ஆறு மாதங்கள் முன்பு....
வளலாய்,யாழ்ப்பாணத்தின் வடக்கு எல்லைக்கிராமங்களில் ஒன்று.எங்கும் பச்சைபோர்த்தியது போல வயல்வெளிகள்.தொண்டமானாறை தாண்டி வரும் உப்புக்காற்று உதைப்பில் இயங்கும் காற்றாலைகள் நிலத்தடி நீரை பாசனவாய்க்கால்களூடு ஓட்டியபடி இருந்தன.வயல்களில் இரை தேடும் பறவைகள்,தலைக்குமேல் அவலக்குரல் எழுப்பி பறக்கும் ஆட்காட்டிகள் என எங்கும் இயற்கையின் வனப்பு நிறைந்திருக்கிறது.திடீரென சூழலின் அமைதியை குலைத்துக்கொண்டு தாழ்வாக வருகிறது ஒரு இலகுரகவிமானம்.வயல்வெளிகளுக்கு மருந்து விசிறுவதே அந்த விமானத்தின் பணி.அரை மணித்தியாலங்களாக மேலாக வட்டமிட்ட விமானம் கிழக்குப்புறமாக உள்ள ஒரு வெளியில் தரையிறங்குகிறது.விமானத்தில் இருந்து குதித்து இறங்கிய வலவன் முகத்தில் அணிந்திருந்த காப்புக்களை நீக்குகிறான். ......அட...அது தான் நான்.(நாயகன் அறிமுகக்காட்சி)

தங்கமகனின்று சிங்கநடைபோட்டு அருகில் இறங்கி வந்தான்



கைப்பிள்ளையாகிய நான் குடும்பத்தில் மூத்த பிள்ளை.கவிதைபோல ஒரு தங்கச்சி,அன்பான அம்மா,அப்பா என அழகான குடும்பம்.தங்கச்சி மேல உயிரையே வச்சு இருக்கிறன்.அவள் என்ன சொன்னாலும் தலையாட்டும் நான் "அந்த ஒரு" விடயத்தில் மட்டும் விட்டுக்கொடுப்பதில்லை.அந்த "அந்த" என்னெண்டா தங்கச்சிக்கு மாப்பிள்ளையாவரப்போறவன் தலைநகரம் திருகோணமலைக்காரனாத்தான் இருக்கோணும் எண்டதுதான்.வேற இடத்து மாப்பிள்ளையள்ட குறிப்புகள கொண்டாந்த தரகருக்கு நான் சாத்தின கதைய ஊரே ஒரு மாதமா கதைச்சது எண்டா பாருங்கோவன்.கொள்கையில விடாப்பிடியா இருந்து ஒருமாதிரி கலியாணத்த "ஜாம் ஜாம்" எண்டு நடத்திட்டு,தங்கச்சிய புருசனோட திருகோணமலைக்கு அனுப்பிட்டு பீலிங்கில ஒரு சோக பாட்டை பாடி மனச தெம்பாகிட்டு,பழையபடி மருந்தடிக்க போவம் எண்டு பிளைட்ட கிளப்புறன்.. தங்கச்சிட்ட இருந்து அழைப்பு வருகுது.எதோ பிரச்சினை போல எண்டு பரபரத்து நேர திருகோணமலைக்கு போய் அவள்ட வீட்டு பின் வளவுக்க பிளைட்ட இறக்கிட்டன்."டேய் என்னடா நடக்குது இங்க" எண்டு மாப்பிள்ளைட சேர்ட் கொலர பிடிச்சு உலுக்க "அய்யோ அண்ணா இவர் புதுசா ஒரு அப்பிள் ஐபோன் பரிசா தந்தவர் முழுவியளம் நல்லா இருக்கட்டும் எண்டு முதல் அழைப்பை உனக்கு போட்டன்,என்ன எது எண்டு கேட்காமல் கோடிக்க வந்து இறங்கிட்டியே!" எண்டு தங்கச்சி கத்த எனக்கு ஒரே வெட்கமா போச்சுது.கால் பெருவிரலால நிலத்தில வட்டம் கீறிக்கொண்டு நிலத்தபாத்துக்கொண்டு "சொறி ஐ ஆம் வெறி சொறி" எண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறன்.திடீரெண்டு பார்த்தா முதுகில ஆரோ சொறியினம்.திரும்பிப் பார்த்தா.....



அவள பார்த்த உடன உடன பாட்டு தொடங்குது...



பாட்டு முடிய காட்சி ராவணன் வெட்டில திறக்குது.நானும் அவளும் கைய பிடிச்சுக்கொண்டு ஆளையாள் பார்த்துக்கொண்டு நிக்கிறம்."நீங்கள் சொறி சொறி எண்ட உடன உங்களுக்கு கடி தாங்க முடியேலை எண்டு நினைச்சு கண்டபடி சொறிஞ்சதுக்கு சொறி,ரொம்ப வலிச்சுதாங்க?"...அவள் கேட்பது எதுவும் என் காதில் விடவில்லை,ஏனென்றால் அவள் அவ்வளவு அழகு.இதை விட அழகா ஒரு அழகை யாரும் பார்த்திருக்க மாட்டாங்கள்.அவள்தான் என்னோட தங்கச்சி மாப்பிள்ளைட தங்கச்சி.பெயர் சில்வியா.நான் இதை சொல்லியே ஆகணும் "ஐ ஆம் இன் லவ் வித் யூ","ஐ ஆம் மாட்லி இன் லவ்","ஐ ஆம் கிறேசி இன் லவ்" எண்டு தெரிஞ்ச இங்கிலீஸ் எல்லாத்தையும் அவளட்ட சொல்லிட்டு அக்கம்பக்கமா காவல்த்துறை ஆட்கள் நிக்கினமா? எண்டு பார்த்துட்டு இல்லையெண்ட உடன நிம்மதியா பெருமூச்சு விடுறன்.நல்லவேளை யாராவது கேட்டிருந்தா தமிழோடு பிறமொழியைகலப்படம் செய்த குற்றத்துக்காக உள்ள போயிருப்பன்.தன்னால தான் இவன் மூச்சு வாங்குறான் எண்டு நினைச்ச சில்வியா "யூ நீட் சம் ஒக்சிஜன்" எண்ட நான் "ஒக்சிஜன் இல்லாமலும் இருப்பன்,நீ இல்லாம இருக்க மாட்டன்" எண்டு வழிய அவள் "நாளைக்கு உலகம் அழிஞ்சாலும் நான் உன்னை விட்டு பிரிய மாட்டன்" எண்டு என்னை இறுக்கிக்கட்டிப்பிடிக்க கறண்ட் அடிச்சது போல இருந்திச்சுது.ஒரு மாதிரி சமாளிச்சுக்கொண்டு "லூசா உனக்கு?,உலகம் ஏன் அழியப்போகுது?,அப்படி எல்லாம் நடக்காது,நான் விடமாட்டன்" என்று சொன்ன உடன கமெரா Zoom out ஆகி பூமி புள்ளியா தெரியும் உயரத்துக்கு போய் மெதுவா திரும்பினா.... பூதாகரமாய் வேகமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு விண்கல்.



நாசா விண்வெளி ஆய்வு கூடம்.விஞ்ஞானிகள் எல்லாம் வாயெல்லாம் பல்லாக கூட்டமாக இருந்து மொக்கை போட்டுக்கொண்டு இருந்தனர்."தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்து தம்மை எல்லாம் காய்ச்சி எடுத்துக்கொண்டிருந்த 60 வயதுக்காரரான விஞ்ஞானி அலிபாய் அங்கு ரைப்பிஸ்ற் ஆக வேலை பார்த்துக்கொண்டிருந்த 50 வயது தமிழ் கிழவி "பமீத்தா" உடனான காதல் தோல்வியடைந்ததை அடுத்து அலரிக்காய அரைத்துச்சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக" கிடைத்த தகவலே அவர்களின் மனமகிழ்வுக்கு காரணம்.பமீத்தாவிற்க்கு செவ்வாய்க்குற்றம் இருப்பதால் அலிபாயின் 80 வயது அம்மா திருமணத்துக்கு சிவப்புக்கொடி காட்டியமையே செய்வாயில் தண்ணீர் இருக்கிறது என கண்டுபிடித்திருந்தவர் அலரிக்காய் உண்ணும் முடிவை எடுத்ததற்க்கு காரணமாக இருக்கலாம் என சற்றுமுன் சி.என்.என் செய்திகளில் சொல்லப்பட்டதாக யாரோ கொளுத்திப்போட எழும்பிய சிரிப்பலை அவசரகால அலாரம் அடிக்கும் வரை நீண்டது.நிம்மதியா மொக்கை போடவும் விடுறாங்கள் இல்லையே என்ற எரிச்சலோடு விஞ்ஞானிகள் விழுந்தடித்து ஓடி அவரவர் பணியிடங்களில் இருந்து என்னவென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது.பூமியைப்போல ஆயிரத்தில் ஒரு மடங்கு திணிவுடைய பொருள் நூறு மில்லியன் மைல்கள் தூரத்துக்கப்பால் வந்துகொண்டிருப்பதை அண்டவெளியில் நிறுவியிருந்த தானியங்கு கண்காணிப்பு மையங்களில் ஒன்று அறிந்ததும் அதன் பயணப்பாதையை கணித்து ஆறு மாதங்களுக்குள் பூமியோடு அந்தவிண்கல் படுவேகமாக மோதும் என எச்சரிக்கை சமிக்கைகளை அனுப்பி இருக்கிறது.அவசர அவசரமாய் உலக நாட்டு விஞ்ஞானிகளை எல்லாம் அழைத்து, விசேட ஒன்று கூடல் ஏற்பாடு செய்து குற்றுயிரா கிடந்த தலைமை விஞ்ஞானி அலிபாயை தண்ணியடிச்சு எழுப்பி ஸ்ரெச்சரில் இருத்திக்கொண்டந்து நிலவரத்தை விளக்கினால் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "டேய் நீங்கள் ஆறுமாசத்துக்கு பிறகு தான் சாகப்போறீங்க,இந்த அலிபாய் இப்பவே பிணமடா,என் இதயம் லப் டப் என்று துடிக்காம பமீ,பமீ என்றுதான்யா துடிக்குது" என புலம்ப விஞ்ஞானிகள் எல்லாம் ஆளாளுக்கு கையில கிடைச்ச சாமானோடு அலிபாய் மீது பாய்ந்து விட்டார்கள்.அந்த கலவரச்சூழலை சமாளிக்க அலிபாயின் அம்மா வரவழைக்கப்பட்டார்."பமீத்தாவ கட்டித்தாறனடா,பூமி இருந்தாத்தானே நான் செவ்வாய் குற்றமா?,இல்லையா எண்டு பார்க்கலாம்,அத முதல்ல காப்பாத்துடா செல்லம்" என அவர் சொன்னதுதான் தாமதம் அலிபாய் ஸ்பிரிங் குதிரை போல குதித்தெழும்பி தலைமைக்கதிரையில் அமர்ந்து சத்தமாக தொண்டையை கனைத்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

அலிபாய் தலைமையில் மீட்டிங்



விண்கல் மோதுவதை தடுப்பது எப்படி என ஆளுக்கொரு ஐடியா கட்டாயம் தரவேண்டும் என அலிபாய் உத்தரவிட்டதும் விஞ்ஞானிகள் ஆளாளுக்கு அவிழ்த்து விட ஆரம்பித்தார்கள்."பூமியில் விண்கல் சைசுக்கு ஓட்டை போட்டு வாற விண்கல்லை ஒரு வழியால் விட்டு மறுவழியால் வெளியேற்றி விட வேண்டும்"என ஐடியா குடுத்த இந்திய நாட்டு விஞ்ஞானியை நோக்கி நாலைந்து கெட்ட வார்த்தைகளை ஏவிவிட்டார் அலிபாய்."அந்த விண்கல்லுக்கு மேல் செயற்கை மழை பெய்யவைத்து அது பூமிக்கு கிட்ட வர முதல் கரையவைத்துவிடலாம்"எனச்சொன்ன சீன விஞ்ஞானி பாண்டிமூனை கேவலமான பார்வையை வீசியே அடக்கினார்.அமெரிக்க,ரஸ்ய விஞ்ஞானிகள் அறிவுபூர்வமாக திட்டங்களை முன்வைத்தாலும் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.இறுதியாக பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் ஈழவிஞ்ஞானி "மலரவன்" சொன்ன திட்டம் ஏகமனதாக வரவேற்க்கப்பட்டது."பில்லியன் தொன் TNT வெடிப்பு சக்தியை தரவல்ல அணுப்பிளவை றொக்கெட் மூலமாக விண்கல்லில் மோதி நிகழ்துவதன் மூலம் அதன் பாதையை திசைமாற்றிவிடலாம்" என்ற அந்த ஐடியா அலிபாய்க்கு நன்றாக பிடித்துப்போனது.

சக்கை றொக்கட்.(சக்கை லொறி போலயோ?)



"விண்கல்லில் மோதி வெடிக்கும் பணியை தானியங்கு ஏவுகணை மூலம் செய்வதில் தவறுகள் நடைபெற வாய்ப்புக்கள் உண்டு எனவே அதில் மனிதர்களும் இருக்கவேண்டியது அவசியமாகிறது"என அலிபாய் அறிவித்து விட்டு கூட்டத்தை ஆழமாக பார்க்க விஞ்ஞானிகள் ஆளாளுக்கு நழுவத்தொடங்கினார்கள்."நாங்கள் விடிஞ்சா மப்பு,இருட்டினா பப்பு என்று வாழற ஆட்கள்,றொக்கெட்டில போய் கல்லில இடிக்கிற அளவுக்கு மனத்துணிவு வருமா அலிபாய்?,அப்படிப்போனாலும் கிட்ட போய் சுழிச்சுக்கொண்டு ஓடி வந்திடுவம்,நாங்க இதுக்கு வரல,சாரி"என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஒதுங்கிக்கொண்டார்கள்.இந்திய விஞ்ஞானியோ"கல்பனா செத்த கவலையே இன்னும் போகேலை அதுக்குள்ள இன்னொரு விண்வெளி வீரரை இழந்தா பாரத மாதா தாங்க மாட்டா" என கோவிகோவி அழத்தொடங்கிவிட்டார்."பறக்கிறதில இருந்து ஊருறது வரை எது எண்டாலும் இரக்கமே இல்லாம கொன்று கறி வச்சு தின்போம்,ஆனா உந்தளவுக்கு மனோதிடம் சுட்டுப்போனாலும் வராது அலிபாய்" என்ற படி சீனர்கள் சப்பை மூக்கை சிந்த மண்டபமே இழவு வீடுபோலாகிவிட்டது.சற்று நேரம் அலிபாய் எதுவும் பேசவில்லை.இருந்தால்ப்போல அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் அருகே நின்ற ஈரானிய விஞ்ஞானியிடம் "தற்க்கொலைத்தாக்குதல் நடத்த "தில்" இருக்குது,றொக்கெட்ட கிளப்பி போய் இடிக்க பயமோ?" என்று வம்பிழுக்க "டேய்,நாங்கள் ஜிகாத் எண்டா செய்வம்,கல்லால அடிப்பம்,ஆனா கல்லில போய் எல்லாம் இடிக்கமாட்டம்"என்று அவர் திரும்ப கூச்சலிட அலிபாய் மீள கத்தி அடக்கும் படி ஆயிற்று.மீளவும் மண்டபம் அமைதி ஆயிற்று.விஞ்ஞானிகள் ஆளாளுக்கு பார்த்தபடி இருந்தர்கள்.திடீரென இந்திய விஞ்ஞானி ராம் முகத்தில் ஒரு விசமப்புன்னகையோடு கையை உயர்த்தியபடி எழுந்தான்."அலிபாய்,உலகத்திலேயே தியாகமனப்பான்மை கூடியவர்கள் ஈழத்தமிழர்கள்,இலக்குகளை நோக்கி, கொஞ்சம் கூட பதறாமல்ச்சென்று அழித்த உயிராயுதக்காரர்களின் பிறப்பிடம் இவர்கள்,எனவே உலகத்தைக்காப்பதற்க்கான இந்தப்பணிக்கு அவர்களை விட்டால் பொருத்தமானவர் கிடையாது என்பதே என் கருத்தாகும்.ஜெய் ஹிந்"என்று சொல்லி அமர எல்லோர் பார்வைகளும் "மலரவனை" நோக்கின.

-வளருவம்.