"ஏன் சிங்கப்பூரை விட்டுட்டு வந்தனி?" தொண்ணூற்று ஒன்பது தரம் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்த கேள்வியை சற்று முன்னர் தான் ஒரு நண்பன் நூறாக்கிவிட்டிருந்தான்.கேள்வி ஒன்றாக இருந்தாலும் ஒரேபதிலை சொல்ல என்மனம் இடங்கொடாததால் நூறுவிதமாக பதில் சொல்லி மிகவும் நொந்துபோய்விட்டேன்."வாழுறதுக்காக வேலை செய்யலாம்,ஆனா வாழ்க்கையே வேலை ஆகிடக்கூடது இல்லையா?" என்று நான் எதேச்சையா யாருக்கோ சொன்னது நூறு பதில்களிலும் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று.நேற்று இதே பதிலைத்தான் ஆங்கிலத்தில் கஸ்டப்பட்டு மொழிமாற்றி அதே கேள்வியை கேட்ட வெள்ளையின அழகிய நண்பி ஒருத்திக்கு சொல்லிவிட்டு வந்தேன்.சாங்கி தளத்திலிருந்து இருந்து விமானச்சக்கரங்கள் விடுபடும் பொழுதுகளில் சிங்கபுரியை தாக்கி ஒரு கட்டுரை வரையத்தொடங்க வேண்டும் என்று நினைத்தபடி செயல்பட விமானத்தில் சூழல் அமையவில்லை.அதாகப்பட்டது அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து சிங்கபுரியில் ஆசிரியராக பணியாற்றும் பிரித்தானிய பாட்டனாரை கொண்ட,மலேசியதமிழ் பெண்ணை மனைவியாகவுடைய "பிலிப்" என்கிற பேர்வழி அந்த சூழல் இல்லாது போனமைக்கு மூலகாரணமாயிருக்கலாம். நெடும் பயணம் ஒன்றில் அருகேயுள்ள ஆங்கிலத்திலிருந்து அந்தியப்பட்டுபோயிருக்கும் அப்பாவி சக பயணியை கலவரப்படுத்தாது ஆறுதலாய்,வார்த்தைகளை பிரித்து பேசும் கலையில் கைதேர்ந்திருப்பது சீனருக்கே ஆசிரியராக இருந்த பிலிப்புக்கு பெரிய விடயமாயும் இருந்திருக்காது.
"சிங்கபுரி" நெருப்பை எரிக்கும் நகரம்.அந்தக்காலத்தில சிங்கப்பூர் என்ற பெயர் வர காரணமாக இருந்த அதே சிங்கத்தை பிடிச்சுக்கொண்டுவந்து இப்ப சிங்கப்பூரில விட்டா ஓடிப்போய் "ஏசி" றூமுக்குள்ள போய் பதுங்கிவிடும் அளவுக்கு வெப்பம்.மரத்தின் வளர்ச்சிக்கு கூட சுதந்திரம் கொடுக்காமல் கத்தரிபோட்டு அடக்கி வளர்க்கும் நிர்வாக பூமி.நிலமெல்லாம் கொங்கிறீட்டு ஊற்றி அதன் மேல் நடக்கும் மேன் மக்கள் வாழ்கிற நாடு.ஆளையாள் பார்க்காமல்,ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் ஐ போட்டும்,ஐ போனும் கரங்களில் தாங்கி செவிகளில் ஹெட்போனை ஓட்டி மக்கள் புகையிரதங்களில் போகின்ற அழகை காண ஆயிரம் கண்கள் வேணும்.யாராவது ஒருத்தன் இந்திய சாயலில் அருகே உட்கார்ந்தால் ஒடுங்கியும் வெள்ளைக்காரர்களை காணும் போது நிமிர்ந்து வெளித்தள்ளியும் உட்காரும் சப்பட்டை இன பெண்களை காணும் போதெல்லாம் ஒரு கண்ணாடியை கொடுத்து "மூஞ்சியை ஒருக்கா பார்க்கும் படி" சொல்ல தோண்றும்.ஆறு நாள் வேலை,ஏழாவது நாளும் வேலை என்பது கட்டுமானதுறையில் வேலை பார்க்கும் அடியார்கள் நியதி.சிங்கபுரி வளரத்தொடங்கிய காலங்களில் காய்கறிக்கடை வைத்திருந்தவன்,கஞ்சா வித்துக்கொண்டிருந்தவன் எல்லாம் கட்டுமானதுறைக்குள் கால்பதித்தன் காரணமாக இன்று பல ஆயிரம் அரைக்கிறுக்கு முதலாளிமாரை சந்திக்கவேண்டியிருப்பதால் அடிமட்ட வாய்த்தர்க்கங்களுக்கு குறைவேதுமில்லை.
"படிச்சாத்தான் பெரிய ஆளா வரலாம்" என்ற வழமையான யாழ்ப்பாணத்து போதனை வழி ஒழுகி வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.ஆண்டு ஐந்து ஸ்கொர்லர்சிப்பில் ஆரம்பித்து,சாதாரணதரம்,உயர்தரம் என என் வாழ்க்கையின் இளமைப்பராயம் முழுக்க இலக்குகள் நிர்ணயித்து அதை நோக்கி விரட்டிய சமுதாயத்தின் கட்டளையை ஏற்று ஓடி முடித்த போது 18 வயதுகள் ஓடிவிட்டிருந்தன.இது தான் உனக்கு பெறுபேறு உனக்கு படிப்பதற்கு தரக்கூடியது இதைத்தான் என்று முற்றிலும் விருப்பமில்லாத துறை ஒன்றுள் என்னை இலங்கை கல்விவிதானம் திணித்த போது கல்வி மேலிருந்த ஆவல் முழுமையாக சிதறிப்போனது.இளவயதில் எனக்குள் ஆயிரமாயிரம் வண்ணக்கனவுகள் இருந்தன.பாடல்களில் வரிகளில்லாமல் வரும் இசைத்தட பகுதிகளை மட்டும் உச்சஸ்தாயியில் ஒலிக்கவிட்டு மனதுள் அவற்றோடு காட்சிகளை கோர்த்துக்கொண்டிருப்பேன்.எனக்குள் ஒரு விஞ்ஞானியை உருவகித்து உருவாக்கிய உந்துகணைகளும்,ஈர்க்கு குச்சி விமானங்களும் வீட்டின் கொல்லைப்புறவேலிக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டன.அதீத அளவில் தகவல்களை புகுத்தி வினாக்கள் கேட்டு திறமையை அளவிடும் பல்கலை கல்வி முறை எனக்குள் உருவக்கிய அழுத்தத்தில் இருந்து விடுபட கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினேன்.கனவுகளை காட்சிப்படுத்தும் வாய்ப்பு கூட அமைந்த அரும் நண்பர்களால் சிறிதளவில் சாத்தியமாகி வளாகமட்டத்துள் இயக்குனர் என்ற அளவில் போய் நின்றது.கனவுகளை முழுமைப்படுத்த முனைந்த போது அசிங்களத்தின் கோரம் மிருகத்தனமாக தாக்கியது.வெறுத்துப்போய் நாட்டைவிட்டு சுயநலத்தோடு வெளியேறி லண்டன் மாநகரில் வசித்த பொழுதுகளில் போர்களத்தில் விழுந்த எதிரிகள் தொகையை இணையத்தில் எண்ணும் போது உருவாகும் களிப்பு மட்டுமே வாழ்க்கையை கவலையின்றி ஓட்ட போதுமானதாக இருந்தது.இளமை குலுங்கும் லண்டன் மாநகரில் தேடி வந்து பேச்சு கொடுக்கும் இளம் பெண்களோடு கடலை போடுவதில் கூட கவனம் ஆரம்பத்தில் செல்லவில்லை.எல்லாம் முடிந்தது என்று மே17 சொல்லியபோது இரவுகளில் தூக்கம் போனது.வெறும் பார்வையாளனாக இருந்த எனக்குள்ளேயே இவ்வளவு வலி என்றால் அந்த சத்தியவேள்வியில் ஆகுதியாகி எரிந்தவர்களுக்கு முடிவு எவ்வளவு வலியை கொடுக்கும் என சிந்திக்க பலவீனம் மிகுந்தது.தூக்கம் வர உடல் களைப்படையவேண்டும் என முடிவெடுத்து உடற்பயிற்சிக்கூடத்தில் உடம்பை வருத்த தொடங்கினேன்.நாட்களின் ஓட்டத்தில் அதுவே வெறியாகியது.ஆறு பை,எட்டு பை,ஐடியல் பாடி,நடனம் என என்சிந்தனை முழுக்க உடல் பற்றியதாகவே இருந்த பொழுதுகளில் எதிர்ப்பாலர் மீது நாட்டம் வந்தது.பரபரப்பாக பேசப்படவேண்டும் என்பதற்காகவே அழகி ஒருத்தியை விரட்டதொடங்கினேன்.எதிலும் திருப்தியடையாத,பிறரை விட முதன்மையாக இருக்கவேண்டும் என நினைக்கிற சுபாவம் என்னை சும்மா இருக்கவிடவில்லை.அடுத்த கட்டத்துக்கு திட்டமிட தொடங்கினேன்.
நாளும் கோளும் கூடிய பொழுது ஒன்றில் "நடவடிக்கை சிங்கபுரியை" தொடங்கினேன்.அலியப்பா என்கிற வசந்தன்,குடிகாரன் என்கிற சௌந்தர் ஆகிய இருவரும் அந்நேரம் சிங்கபுரியில் உறுதியாக நிலைகொண்டிருந்தார்கள்.மத்திய கிழக்கின் வெம்மை தாங்க முடியாமல் இருவரும் சிங்கபுரிக்கு தப்பி ஓடிவந்து இளைப்பாறிவிட்டு 7ஜி+ மீள் கட்டுமானத்துக்கு அழைப்பு விட்டார்கள்."எவ்வளவு நாளைக்குத்தான் தும்படிப்பது?,சொந்தக்காரன்களுக்கு ஒரு காட்டு காட்டோணும்" எண்டு நினைத்த ஜெயசுதனும் கூட்டு சேர வரலாற்று சிறப்பு மிகுந்த அந்த தரையிறக்கம் நடைபெற்றே விட்டது.அலியப்பாவை நம்பி அந்தாட்டிக்காவில் கூட குடியேறலாம்.பனிக்கரடியை போட்டுத்தள்ளி கறிவைத்தாவது சோறு போடுவான்.அலியப்பா குடிகாரனை இழுத்துக்கொண்டு ஆற்றங்கரையில் அழகாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து அழைக்க பக்கத்து வீட்டுக்கு போவது போல நானும் ஜெயசுதனும் போய்விட்டோம்.சாங்கி விமான தளத்தில் விடிகாலையில் இறங்கிய போது அதிர்ச்சி காத்திருந்தது.நம்மை வரவேற்க எவருமே இருக்கவில்லை.இருவரும் நம் வருகையை கொண்டாட இரவிரவாய் தண்ணீர் குடித்து காலையில் மட்டையாகிப்போயிருந்தார்கள்.தொடக்கமே இவ்வாறு ரணகளமாக போனதாலோ என்னவோ இறுதிவரை அட்டகாசத்துக்கு குறைவிருக்கவில்லை. எல்லையில்லாமல் நீளும் வேலை மணித்தியாலங்கள் உடலை பலவீனப்படுத்திகிழமையில் கிடைக்கிற ஒரு நாள் விடுமுறையை கூட அனுபவிக்க விடாமல் படுத்த படுக்கையாக்கி விடுகின்றன.மதியத்தை தாண்டிய பொழுதுகள் வரை அன்றைய தூக்கம் நீளும்.மறுநாள் எழுந்து வேலைக்கு ஓடும் போது எப்போது அடுத்த ஞாயிறு வரும் என மனம் ஏங்கும்.இரும்பை தூக்கி வளர்த்திருந்தாலும் என்றாலும் சூரியனுக்கு எதிராக மிகவும் பலவீனமாகி விடுவது என் "பாடி".ஹெல்மெட்டும் கனத்த காலணிகளுமாக நாள் முழுக்க வெயிலில் நின்றால் தாங்கமுடியா கண்வலியும்,தலையிடியும் இரவில் இலவச இணைப்பாக தவறாமல் கிடைக்கும்.ஆரம்பத்தில் வேலையின் நுட்பங்களை கற்று தேற வேண்டும் என இருந்த ஆர்வம் நாள் செல்ல செல்ல இல்லாமல் போனதற்கு தினமும் தவறாமல் இரவில் வந்த தலைவலி காரணமாயிருக்கலாம்.வாரத்தின் ஒரே ஒரு விடுமுறை நாளும் நீண்ட தூக்கத்தில் கழிக்க வேண்டி நிர்ப்பந்தம் வந்த போது சிங்கபுரி மேல் ஆத்திரம் வந்தது.சிங்கபுரி பொருளாதாரத்தில் சிறிலங்காவின் சரிவை பயன்படுத்தி அதிஸ்ட லாபம் அடித்திருக்கிறது.தனிநபர் வருமானம் மேற்குலகத்தோடு ஒப்பிடும் படி இருக்கிறது.ஆனாலும் பண்பாட்டு,பழக்க வழக்க விழுமியங்களில் வளர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்.சப்பை மூக்கு மங்கோலியர்களுக்கு தென்னாசியர் மேல் இருக்கும் இளக்காரத்துக்கான காரணம் தோலின் நிறத்தையன்றி வேறு எதுவுமாக இருக்க முடியாது.என்னைப்பொறுத்தவரை மங்கோலிய இனம் ஒரு வேகமான செம்மறி கூட்டம்.ஒரு கோட்டை வரைந்து காட்டினால் அதே கோட்டை இரண்டு மடங்கு வேகத்தோடு போடுவார்கள்.ஆறாவது அறிவின் தொழிற்பாட்டில் புராதன தென்னாசியருக்கு கிட்ட கூட நிற்க மாட்டார்கள்.குழைந்து சேர் சேர் என வணக்கம் போடும் இந்திய,இலங்கை வெளிநாட்டவர்கள் மத்தியில் கொஞ்சம் கூட மதிக்காது திராவிட திமிரோடு பேசும் என்போண்றவர்கள் சப்பை மூக்கன்களுக்கு மிக அந்நியமாக தெரிந்திருப்பார்கள்.

கம்பசை விட்டு வெளியேறிய பிறகு தூய்மையான நண்பர்கள் பலர் ஒரே இடத்தில் ஒன்று சேர்வது வாய்க்கவில்லை.சிங்கபுரியில் அது மீண்டும் நடந்தது.களைத்து வேலையால் வந்து இரவு உணவுக்காக சமைக்கும் போது நடக்கும் அரட்டையில் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.நடுஇரவு தாண்டி நீளும் அரட்டைகளில் கம்பசை போலவன்றி வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய கருக்களே அநேகம் இருக்கும்.கிழமையில் ஒரு தடவையாவது காபி ஷொப் எனப்படுகிற திறந்தவெளி உணவு+தண்ணி கடைகளில் விடிய விடிய பக்கா பிளானுகள் போடுவோம்.7 மாதமும் சிங்கபுரி,டகோட்டா,18 இல்லம் எப்போதும் களையாகதான் இருந்தது.முதலில் என் விருப்பத்திற்குரிய மாமாவும் மாமியும் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து சென்றார்கள்,சில நாட்களில் ஜெயசுதனின் அக்கா குடும்பம் வந்து சென்றது,பின்னர் ஜோன் கொன்சால் தரையிறங்கியவுடன் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.இடையே நீண்டகாலமாக உறங்கியிருந்த் தன்மான சிங்கத்தை தினேசும் அடிவருடிகளும் தட்டியெழுப்பிவிட சிங்கபுரியிலும் 7ஜி+ பிக்சர்ஸ் குறும்படம் உருவாக்கியது.இறுதியாக எனது மச்சான்காரன் செந்தூரன் வந்த பொழுதுகளிலும் வீடு கலகப்பாக தான் இருந்தது.நான் வந்த பின்னும் அலியப்பா குடும்பம் அங்கே போயிருப்பதாக அறிந்தேன்.7ஜி+ சிங்கபுரியில் இருக்கும் வரை உயிரூட்டமாக அந்த இல்லம் இருக்கும்.வேலை பார்த்த இடத்தில் இருந்த சேப்டி ஆபீசர் பழனியப்பன்,சிரிப்பு அங்கிள் அலுவா,அக்கோ,முள்ளுதலை முதலாளி அகான்,கவர்ச்சிக்கிழவி திருமதி அகான், கணக்கியலாளரான மஞ்சள் அழகி மிஸிங், செமகட்டை லிடியா,போர்மன் சாஜகான், சின்ன மாமன் அன்வர், வால்டர்,முருகன் ஆர்.டி.ஒ,சாரா,சிமுசு அன்டனி என மனதில் நிற்கும் முகங்கள் ஏராளம்.எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்நாளில் மறக்க முடியாத "அனுபவத்தை" தந்த தயந்தனையும் மறக்க கூடாது.

விமானம் ஹீத்ரோ தளத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.காலைப்பொழுதில் லண்டன் நகரம் அழகாக இருந்தது.வழமை போல குறுக்கே வெட்டியோடும் மேகங்கள் இன்று இல்லை.நானும் எனது விண்டோஸ் 7 போணை எடுத்து சுட தொடங்கினேன்.தரையிறங்கி டெர்மினலை நோக்கி விமானம் நகர்ந்த பொழுதில் பிலிப் ஒரு விடயத்தை கேட்கலாமா என்று தொடங்கினார்.கடந்த ஒரு வருட கதை முழுவதையும் நீண்ட பயணத்தில் ஒப்புவித்து இருந்தேன்.தலையை ஆட்டியபடி கேள்வியை எதிர்கொள்ள தயாரானேன்."இளைஞன் ஒருவன் நீண்ட நெடும் பயணங்களை மேற்கொள்வதால் மன முதிர்வு அடைகிறான்.உன் பயணங்கள் தொடர வாழ்த்துகிறேன்.உன் பயணங்களின் முடிவில் எந்த தேசத்தில் ஓய்வடைய வேண்டும் என்று விரும்புகிறாய் என்று அறியலாமா?"சில கணங்கள் யோசித்து விட்டு பில்டப்பா பதிலை சொல்ல தொடங்கினேன்.
"நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள்.உலகிலேயே பழமையான இனம் என்னுடையது என்று ஆழமாக நம்புகிறேன்.எமக்கு என்று ஒரு தேசம் வேண்டும்.அவ்வாறு உருவாகும் பட்சத்தில் அதனை உயர்த்த உயிரைக்கொடுத்து வேலை செய்யலாம்.அது கிடைக்கும் வரை இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் குறை பிடித்து மறு நாட்டுக்கு ஓடுவது தொடரும் என்றே நினைக்கிறேன்"

பிலிப் வழமையான வெள்ளைக்கார மட்டிவாய்ச்சிரிப்பை உதிர்த்தபடி பொதிகளை தூக்கவாரம்பித்தார்.விமான பணிப்பெண்கள் வெளியேற்ற பாதைகளில் நின்று புன்னகைத்துக்கொண்டிருந்தார்கள்.