தற்போதைய நிலவரம்-09


கட்டுப்பெத்தையில் பெரிய சாமி ஐங்கா நடத்திய ஆசிரமத்தில் 3 சின்னச்சாமியார்கள் இருந்தார்கள்.அறிவகம்,12B போண்ர பேர்வழிகளெல்லாம் கிட்ட நெருங்கவே அஞ்சுமளவுக்கு சக்தி மிக்க சாமியார்களாகவும் அவர்கள் விளங்கினார்கள்.நீலப்படம் பார்க்காமலும் மஞ்சள் புத்தகம் வாசிக்காமலும் படிப்பே கண்ணென பெரிய சாமியாரால் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட அம்மூன்று சாமியார்களில் இளையவரும் சிறியவருமானவரே குட்டிச்சாமியார் என அழைக்கப்படும் பரணி ஆவார்.தவ வலிமையால் கல்வியில் கடும் சித்திகளை பெற்ற குட்டிச்சாமியார் இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கென பயணமாகிறார்.இலங்கையில் பெண்களை நேர் நோக்காது,அவர்களை தாயை,சகோதரியைப்போல் பாவித்து வாழ்ந்த சாமியார் பிகினி அழகிகள் பூனை நடைபோடும் நாட்டில் சென்று தடுமாறுவாரா? மாட்டாரா? என்று நண்பர்கள் கடுமையாக விவாதித்து வருகின்றனர்.



கௌபாய் திருமணம் முடித்து மிகக்குறுகிய காலத்துள் அப்பா ஆகி சாதனை படைத்தது யாவரும் அறிந்ததே.கௌபாய் தனது திருமணத்தின் முன்பு மட்டத்தை சேர்ந்த அநேகருக்கும் தனித்தனியாக அழைப்பு எடுத்து வரவேற்றிருந்தார்.முகநூலில் அழைப்பிதழை போட்டுவிட்டு பெயரை tag பண்ணும் இந்த உலகத்தில் கௌபாய் போண்றவர்கள் வித்தியாசமானவர்கள் தான் என்று பலரும் அந்நேரம் பேசிக்கொண்டார்கள்.அத்தருணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி பலரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது.கௌபாய் அத்தருணத்தில் இங்கிலாந்திலிருந்த  கனாக்காலம் நிருபருக்கு ஸ்கைப்பில் அழைப்பை எடுத்து திருமண விடயத்தை சொல்லியிருக்கிறார்."கல்யாணத்தின் டென்மார்க்கில் செட்டில் ஆகப்போகிறேன்" என்று கௌபாய் சொல்ல தன்னை எல்லாம் தெரிந்த ஆள் என காட்ட நினைத்த நிருபரும் "டென்மார் கடுமையான நிற வெறி பிடிச்ச நாடு,கவனமா இருங்கோ கௌபாய்" என்று செப்பியிருக்கிறார்.கௌபாய் என்ன லேசுப்பட்ட ஆளா?.ஒரே பதிலில் நிருபரை தூக்கியடித்திருக்கிறார். அவர் சொல்ல பதிலை இன்றுவரை சந்திப்பவர்களிடமெல்லாம் சொல்லித்திரிகிறாராம் நிருபர்.கௌபாய் அப்படி என்னதான் சொல்லியிருப்பார்?

"ஓ அப்படியா? நல்லகாலம்,நான் வெள்ளையெண்டதால தப்பிட்டன்"



சிந்தா இலங்கையில் வகை வகையாக வாகனங்களில் திரிகிறார்.கூட யாராவது ஏறுங்கடா என்று கேட்டால் அக்கம்பக்கத்தில் இருபவர்கள் எல்லாம் பாய்ந்து ஓடுகிறார்கள்.அவர்களில் பயத்திலும் நியாயம் இருக்கிறது.ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு நாய்களையும் ஒரு வயோதிகரையும் இடித்துத்தள்ளியிருக்கிறார்.இவ்வளவு நடந்த பின்னரும் விடயம் தெரியாத ஒரு பூச்சி புதுசா வந்து சிக்க சிந்தா சில நாட்களுக்கு முன்னர் வானில் கிளம்பியிருக்கிறார்.அன்று சிக்கியது பருத்த வீதியோர பாலை மரம் ஒன்று.வழமை போல  சிந்தா தப்பித்து விட கூட வந்தவன் கட்டுகளுடன் உலாவுகின்றானாம்."இப்போதெல்லாம் கனவில் எமன் வராமல் சிந்தா வாகனத்துடன் வந்து ஏறச்சொல்லிக்கேட்பது போல வருகிறது" ஒரு அன்பர் பார்ட்டியில் சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு உதிர்த்தாராம்.அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை வலிகள் மறைந்திருக்கின்றனவோ?



A Study in Sunlight






பேக்கரி ஒழுங்கைக்குள் நுழையும் போது இடதுபக்கமாக இருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தால் 221B என இலக்கமிடப்பட்ட மதகுதான் எனக்கும் ஷெர்லக் ஹோம்ஸிற்கும் பகல் வீடு.அடித்து கொளுத்தும் யாழ்ப்பாண வெயிலில் கூட அந்த இடம் குளு குளுப்பாய் இருக்கும்.தலைக்கு மேல் இலங்கை மின்சாரசபையின் மர அழிப்பையும் மீறி வியாபித்திருக்கும் ஆலமரம் குளுமைக்கு ஒரு காரணம் என்றால் பிரதான வீதியின் மறுபுறம் இருக்கும் ரியூசன் கொட்டிலில் படிக்க வந்து போகும் இளம் சிட்டுக்கள் அதற்கு இன்னொரு காரணம்.காலை ஆகாரத்தை முடித்தபின் முழு பற்றரி சார்ஜ் ஏற்றிய கலக்சி S3 யோடு இங்கே வரும் நான் "பற்றரி Low" என்று அது கத்தி கதறி அழுது தானாக நிற்கும் போதுதான் வீட்டுக்கு கிளம்ப தயாராகுவேன்.ஹோம்ஸ் அப்படியல்ல.ஒன்றுக்கு மேற்பட்ட பற்றரிகளை வைத்திருக்கும் அவர் ஒன்று முடிய இன்னொறை மாற்றிவிடுவார்.ஐந்துக்கு மேற்பட்ட பெண்களோடு சற்றேனும் ரசனைக்குறைவில்லாமல் ஒரே நேரத்தில் சட் பண்ணும் திறமையுள்ள அவர் அதே நேரம் நான் கேட்கும் கேள்விகளுக்கும் நீண்ட விபரமான விளக்கங்கள் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகிறார்.நான் இங்கே வரமுதல் அவர் இங்கே தனியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்.அடிக்கடி அவரிடம் இளம் பெடியன்களும் அரிதான சமயங்களில் முதிர்ந்த ஆண்களும் வந்து போவதை கண்டிருக்கிறேன்.அவர்கள் கொண்டுவருபவை அநேகமாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் தான்.பெண்கள் சம்பந்தபட்ட விடயங்களில் ஆழ்ந்த அறிவை கொண்டுள்ள அவர் ஒரு பெண்ணை காதலித்திருந்த போதிலும் முடிவில் அவள் லண்டன் வாசி ஒருவனை திருமணம் முடித்து போனதால் புத்தி பேதலித்து இருப்பதாக ஊரார் அப்போது பேசிக்கொள்வதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு,ஆடிக்காற்றில் ஆலமரம் போரோசையோடு இரைந்து கொண்டிருந்த நாளிலே எனது ஒருதலை காதலை இருதலை ஆக்குவது தொடர்பாக அறிவுரை கேட்க அவரிடம் வந்ததிலிருந்து எங்கள் நட்பு ஆரம்பித்தது. அன்றிலிருந்து ஒருநாள் விடாமல் இங்கே வருகிறேன்.ஷெர்லக் ஒரு முரண்பாடுகளின் மூட்டையாய் இருக்கிறார். உதாரணத்துக்கு "ஐஸ்கிரீம் உருவானது எப்படி?" என்ற வரலாற்றைக்கூட விரல் நுனியின் வைத்திருக்கும் அவருக்கு "றியோ" ஐஸ்கிறீம் கடை எங்கே இருக்கிறது என்ற விபரமே தெரியாதிருந்தது.



சில நபர்களை ஒரு வரியில் எழுதிவிட முடியும்.அரிதான சிலரை கட்டுரையாக அடக்கிவிட முடியும்.ஷெர்லக் போண்ற ஆளுமைகளை விளக்க கீழ்வருவது போண்ற வேறுபட்ட வழிகள் தேவைப்படுகின்றன.


1) இலக்கிய அறிவு- பூச்சியம்.திருவள்ளுவர் குறித்த பேச்சு எழுந்த போது "அவர் உங்களது சொந்தக்காரரா?" என்று கேட்குமளவுக்கு உள்ளது.

2) விஞ்ஞானம்- மிக குதர்க்கமாக சிந்திக்கிறார்.நியூட்டனின் விதியே பிழை என்கிறார்.தலையில் ஆப்பிள் விழுவது ஈர்ப்பு ஆகும் என்றால் தலையில் கல் விழுவது கூர்ப்புக்கு வழிவகுக்குமா? என்று மொக்கைத்தனமாக வாதிடுகிறார்.

3)வானியல்- பூச்சியத்தை விட மோசமானது.யாழ்ப்பாணத்தில் பயங்கரமாக வெயிலடித்துக்கொண்டிருந்த நாள் ஒன்றில் தனது போனை பார்த்து "இன்று இரவு கடும் பனி பொழிவு ஏற்படும்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். திடுக்கிட்ட நான் போனை வாங்கி பார்த்த போது லொகேசனாக "கனடா" தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

4)அரசியல் அறிவு-கேவலமானது.மாண்பு மிகு ஜனாதிபதி சிரித்தபடி நின்ற வடக்கின் வசந்தம் விளம்பர பலகையை பார்த்து "படத்தின்ர பெயர் நல்லாத்தான் இருக்கு.ஆனால் ஹீரோதான் காமெடியன் போல இருக்கிறான்" என்றார்.

5)சினிமா அறிவு- பிரமிக்கத்தக்கது.நடிகைகளின் பிறந்த திகதி முதல் அவர்களின் பள்ளிக்கால காதல்கள் வரை அறிந்து வைத்திருக்கிறார்.

6)வெடிப்பொருட்கள் பற்றிய அறிவு- அறவே இல்லை எனலாம்.கடைக்காரர் மிதிவெடியை சாப்பாட்டு தட்டில் வைத்த போது "மிதித்தால் வெடிக்கும் என்றால் சாப்பிட கடிக்கும் போது வெடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று சண்டைக்கு போகும் அளவுக்கு மோசமானது.

7)பெண்கள் பற்றிய அறிவு- அளவில்லாதது.ஒரு பெண்ணை பார்த்துமே அவளை எப்படி அணுகவேண்டும் என்றும் அவள் எப்படிப்பட்ட ஆணுக்கு கிடைப்பாள் என்று சொல்லிவிடுகிறார்.கூந்தலை மட்டும் வைத்து பெண்ணின் வயதை அவரால் சொல்லிவிட முடியும்.

8)விலங்குகள் பற்றிய அறிவு- கச்சிதமானது.நாய்கள் பற்றி அளவுக்கு அதிகமாக தெரியும்.கோபக்கார கடி நாய்கள் கூட அவரிடம் வாலாட்டிக்கொண்டு குழைந்து வருகின்றன.எனது செல்லப்பிராணியான "TOBY" என்னைவிட அவரிடம் மிகவும் பணிவாக நடந்துகொள்கிறது.

9)கைத்தொலைபேசி பற்றிய அறிவு- அதிசயிக்கத்தக்கது.வித்தியாசமான அப்ளிகேசன்களையெல்லாம் பாவிக்கிறார்.ஒரு தடவை எனது கையை கைத்தொலைபேசியால் ஸ்கான் பண்ணிவிட்டு "சுட்டு விரல் எலும்பில் சிறிய வெடிப்பு இருக்கிறது" என்றார்.அதிர்ந்தே போய்விட்டேன்.

10) தற்பாதுகாப்புக்கலை அறிவு - தப்பி ஓடுவதே தற்பாதுகாப்பின் அடிப்படை என்ற சொல்லை தாரகமந்திரமாக கொண்டவர்."வெற்றிகரமான ஓட்டம் என்பது பிரடியில் குதிக்கால் பட பறப்பதே ஆகும்" என அடிக்கடி சொல்லிக்கொள்வார்.

11) மதுபானங்கள் பற்றிய அறிவு - விசித்திரமானது.பியர் என்பது சாராய வகைகளை பருகும் போது கலக்குவதற்கென உருவாக்கப்பட்டது என ஆழமாக நம்புகிறார்.பலர் மறுத்துரைத்த போது மேற்சொன்ன கருத்தை மாற்ற மறுக்கிறார்.எவ்வளவு குடித்தாலும் அவருக்கு போதை ஏறுவதில்லை.



உழைக்கவிரும்பாத இளைஞர்களும்,வெளிநாட்டுப்பணத்தில் சௌகரியமான வாழ்க்கை வாழும் குடும்பஸ்தர்களும் நிரம்பிய இந்த தேசத்திலே அநேக பிரச்சினைகளுக்கு பாலியல் வறட்சித்தனமே காரணமாக இருக்கிறது.பருவ வயதுக்கு வரும் இளைய சமுதாய உறுப்பினர்களின் உணர்வுகள் கலாச்சாரம் என்ற போர்வையில் மிலேச்சத்தனமாக நசுக்கப்படுகின்றன."முகநூலில்  இளம் பெண்ணொருத்தி ஒரு படத்தை போட்டு நூறு லைக் வாங்க 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இங்கு போதுமாக இருக்கிறது"  என்று ஹோம்ஸ் அடிக்கடி சொல்லி சிரித்துக்கொள்வார்.உண்மைதான். இங்கிருக்கும் அநேக இளையவர்கள் சாதிக்கும் வேகமும் விவேகமும் ததும்பி வழியும் வயதுகளை எதிர்ப்பாலின ஈர்ப்பினால் அலைக்கழிக்கப்படுவதால் வீணடித்துவிடுகின்றனர்.



அன்றைய பொழுது வழமைக்கு மாறாக அமைதியாய் இருந்தது.தூரத்தே இருளாக கவிந்திருந்த மழை மேகங்கள் நீடித்த கோடையின் முடிவு நெருங்கி விட்டதை இயம்பிக்கொண்டிருந்தன.மதியம் நான் ஏதும் சாப்பிடவில்லை.நேற்று சாப்பிட்ட கொத்து ரொட்டி வயிற்றை முறுக்கி வன்முறை செய்வதால் உண்ணும் விருப்பு ஏற்படவில்லை. ஹோம்ஸ் உணவுப்பிரியர். வேளை தவறாமல் பேக்கரியோடு சேர்ந்திருந்த உணவகத்தில் மிதமான அளவில் சாப்பிட்டுவிடுவார். அன்று ஷெர்லக் ஹோம்ஸ் மதிய உணவை முடித்துக்கொண்டு திரும்பிய சற்றைக்கெல்லாம் ஒரு உந்துருளி வாகனத்தில் வந்த நேர்த்தியான ஆடைகள் அணிந்த மனிதன் வெதுப்பக வாசலில் நின்று கடைக்காரரிடம் வினவிக்கொண்டிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியடைந்தேன். அவரை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். முகவரியையே அல்லது தனிப்பட்ட நபரையோ விசாரிப்பதை அவரது தோரணையில் இருந்து என்னால் கணிக்க முடிந்தது.சில கணங்களின் பின்னர் அவர் கடைக்காரர் சுட்டிக்காட்டிய திசையில் இருந்த எங்களை நோக்கி நேராக நடந்து வர ஆரம்பித்தார். "Angry Bird" விளையாடிக்கொண்டிருந்த ஹோம்ஸும் இதனை கவனித்திருக்க வேண்டும்.


"அங்கே வந்து கொண்டிருக்கும் மனிதர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவருக்கு இரண்டு மகள்கள்.இளைய பெண் மட்டுமே கூட இருக்கிறாள்.அவருக்கு சமீப நாட்களாக பெரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக அது இளைய பெண் சம்பந்தமானது தான்.அவருக்கு சலரோகம் உள்ளது. உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.மனைவியோடு சண்டை பிடித்த போது கறி அகப்பையால் அடி வாங்கியதில் நெற்றியில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவரது மனைவிக்கு பயந்து சமையல் வேலைகளை எல்லாம் செய்கிறார். என்னிடம் வர அவர் விரும்பாத போதிலும் பிரச்சினையின் தீவிரம் இங்கே இழுத்துக்கொண்டு வந்திருக்கிறது"


ஷெர்லக் ஹோம்ஸ் சொல்லிக்கொண்டு போக நான் உறைந்து போயிருந்தேன்.அவர் இப்போது ஹோம்ஸ் உடன் பேசத்தொடங்கியிருந்தார்.


"எனது மகளை மர்ம மனிதன் ஒருவன் பின் தொடர்கிறான்.சில வாரங்களாக போனில் அழைப்பெடுத்து தொந்தரவு செய்தவன் நேற்று இரவு வீட்டுக்கே வந்து சென்றிருக்கிறான்"


ஷெர்லக் ஹோம்ஸ் பதிலேதும் கூறவில்லை.அந்த முதிர்ந்த மனிதனின் கையில் இருந்த நோக்கியா 3310 ஐ கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.


"நீங்கள் வீட்டுக்கு செல்லலாம்.அந்த நபர் யாரென்று நாளை சொல்கிறேன்"ஹோம்சின் வார்த்தைகளை தீர்க்கமாக நம்பியது போல தலையசைத்த அவர் தளர்நடையோடு கிளம்பிப்போனார்.




"வாட்சன் நாமிருவரும் இப்போது பெரியவரை பின் தொடரப்போகிறோம்"


எனது பதிலுக்கு காத்திராமல் ஹோம்சின் கருப்பு பல்சர் புரவியின் கனைப்புக்கொப்பான இயந்திர ஒலிபோடு கிளம்பி விட்டிருந்தது.பின்னால் "அடுத்தது என்ன நடக்கப்போகிறது?" என்ற திகைப்போடு நான் தொற்றிக்கொண்டேன்.பெரியவர் புகுந்த வீட்டை அவதானித்த ஹோம்ஸ் உந்துருளியை அருகேயிருந்த ஒழுங்கைக்குள் நிறுத்தினார்.வேட்டை நாய் ஒன்றின் வெறியும் மோப்ப நாயின் ஆற்றலும் அவர் செய்கைகளில் தெரிந்தன.வீட்டு பின் பக்க வேலியில் தெரிந்த இடைவெளியை கண்டதும் குதூகலத்தோடு தன்னை உள் நுழைந்துக்கொண்டார். பலவகை மரங்களால் நிரம்பியிருந்த போதிலும் அந்த வளவு சருகுகள் இலைகள் இன்றி துப்பரவாக இருந்தது. தினசரி கூட்டி துப்பவரவாக்கப்படுவதாய் இருக்க வேண்டும்.இம் முதிர்ந்த இம்மனிதனோ அவரது மனைவியோ தினமும் சுத்தமாக்குவது என்பது இயலாத விடயமென்ற போதிலும் ஹோம்ஸ் சொன்னபடி இளைய மகள் இருக்கும் பட்சத்தில் அவள் இங்கே வந்து பெருக்க வாய்பிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் இப்போது ஈரமான வாழை பாத்திகளுள் நின்றபடி எதையோ கண்டு பிடித்த மகிழ்சியில் சத்தம் வராமல் சிரித்துக்கொண்டிருந்தார்.

அங்கே ஒரு வளர்ந்த மனிதனின் காலணி அடையாளங்கள் தென்பட்டன. சற்று இடைவெளியில் ஒரு நாயின் கால்தடங்களும் இருந்தன. இத் தடங்களுக்கு மேலாக செருப்பு அணிந்த ஒருவர் நடந்திருப்பதையும் ஷெர்லகிடம் காண்பிக்க முயன்ற போதும் அவர் அதில் அக்கறை கொள்ளாதவராக காணப்பட்டார். அவருக்கு இபோது மனித தடங்களை விட நாயின் தடங்களை தொடர்வதில் ஆர்வம் மிகுந்திருந்தது.வீட்டிலிருப்பவர்கள் தங்களது வளவில் அந்நியர்கள் நுழைந்திருப்பதை உணராவண்ணம் கவனமாக அசைவுகளை மேற்கொண்ட அதே நேரம் தடயங்களை விழிப்பாக தேடுகிற அவரது ஆற்றல் எனக்குள் பெரு வியப்பை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு மணி நேரமாக நீடித்த தேடுதலின் முடிவில் ஹோம்ஸ் சலிப்புற்றவராக காணப்பட்டார். மெலிதான விசிலில் சமிக்கை கொடுத்துவிட்டு வேலி இடைவெளியூடு வெளியேறியவரை பின் தொடர்ந்தேன். அவர் அடுத்த சில கணங்களில் காலடி வைக்கப்போகும் இடத்தில் ஏதோவொரு மிருகத்தின் வாந்தி போண்ற அருவருப்பான பொருள் இருப்பதை கண்டு கொண்ட நான் எச்சரிக்க வாயெடுக்க முதல் ஹோம்ஸ் குனிந்து குச்சியால் அதனை கிளறவாரம்பித்தார்.


அன்று தான் நானும் ஷெர்லக் ஹோம்ஸும் பேசிக்கொண்ட இறுதி நாள்.என் பக்கம் தப்பு இருந்தாலும் கூடவிருந்த நண்பன் என்றும் பார்க்காமல் என்னை காட்டுத்தனமாய் தாக்கியது அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. கால ஓட்டத்தில் நான் இங்கிலாந்துக்கு வந்துவிட்டேன்.நான் வேலை செய்த பப்புக்கு அருகே தான் ஷெர்லக் ஹோம்ஸ் மியூசியம் இருந்தது. Arthur Conan Doyle எழுதிய புத்தகங்களை எனது ஆங்கில அறிவை அதிகரித்துக்கொள்ளும் நோக்கோடு படிக்கத்தொடங்கிய நான் புழுதி படிந்த வெயிலடிக்கும் யாழ் நகர ஒழுங்கைகளில் அவர் செய்திருந்த துப்பறியும் சாகசங்கள் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் விபரிக்கப்பட்டவற்றுக்கு எவ்வகையிலும் குறைவில்லாதிருப்பதை கண்டு கொண்டேன். சேரலாதனாகிய அவரை ஷெர்லக் ஹோம்ஸ் ஆகவும் வாகீசனாகிய எனது பெயரை வாட்சனாகவும் உருவகித்து எழுத ஆரம்பித்த இந்த கதையை அவரின் உதவியின்றி என்னால் முடிக்க இயலாதிருக்கிறது. அந்த பெரியவரின் மகளை பின் தொடர்ந்தது நானே தான் என்பதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?.என்பது உள்பட இருபது வினாக்களை அவருக்கு எழுதி இமெயிலில் அனுப்பிவிட்டு காத்திருந்தேன். பதில் அனுப்பாத அளவுக்கு இன்னும் கோபமாகவே இருப்பார் என்று நான் நினைத்திருந்த போதிலும் இன்று இன்பாக்ஸ் இல் "நண்பன் வாகீசன் நலமா?" என்ற தலைப்பிடப்பட்டு விழுந்திருந்த அவரது பதில் என்னை மனமகிழ்வு கொள்ள வைத்து விட்டது.

வணக்கம் நண்பரே!

சம்பவங்கள் நடந்து இரண்டு வருடங்கள் கழிந்து விட்டிருந்த போதிலும் வெகு சிரமத்தோடு நினைவகங்களிலிருந்து இயலுமானவரை மீட்க முயன்றிருக்கிறேன்.சம்பவ தினத்தன்று அந்த பெரியவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரது கையில் இருந்த தொலைபேசியின் "space key" அதிகமாக தேய்ந்திருப்பதை கவனித்தேன். தினமும் குறுந்தகவல் அதிகளவில் அனுப்பினாலேயே அப்படி ஆகும்.ஆகையால் அவரது மகள் அவர் அறியாவண்ணம் அந்த ஆடவனோடு தொடர்பு கொள்ள அக்கைப்பேசியை பாவிக்கிறாள் என்ற முடிவுக்கு வந்தேன்.சில சமயங்களில் உள்வந்த அழைப்புக்களை பெரியவர் எடுத்துவிட"அநாமதேயமாய் அழைப்புக்கள் வருகின்றன" என அவள் சமாளித்திருக்கக் கூடும். மழை சமீபத்தில் பெய்திராத போதும் பெரியவரின் செருப்புகளில் சேறு ஒட்டிக்கொண்டிருந்தது. அத்தோடு இரவில் மர்ம மனிதன் வந்து சென்றிருப்பதை காலடி தடங்களை வைத்தே அவர் சொல்கிறார் எனவும் ஊகித்துக்கொண்டேன்.வளவுக்கு நேற்று நீர் இறைக்கப்பட்டிருந்தாலே இவையிரண்டும் சாத்தியம்.நாம் அங்கே போன போது காலணி தடங்களோடு நாய் ஒன்றின் தடங்களும் இருந்தன. அது வந்து போன மர்ம மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவ்வாறான சீரான இடைவெளியில் பின் தொடர வாய்ப்பு இருக்கிறது.நீ செருப்பு தடங்களை காண்பித்து என்னை குழப்ப முயன்றாய்.அது பெரியவருடையவை. வளவுக்கு அந்நிய மனிதன் உலாவிய தடங்களை கண்டு குழப்பமாகி அங்குமிங்கும் நடந்து தேடியதால் ஏற்பட்டது.வந்த நாயின் தடங்கள் ஊர் நாயின் பாதங்களை விட பெரிதாக இருந்தன. அது ஒரு ஜெர்மன் செப்பேட் வகை நாய் என என்னால் கணிக்க முடிந்தது.கிட்டிய பிரதேசத்தில் உள்ள அவ்வகை நாய் உனது "TOBY" மட்டும் தான்.இறுதியாக சிக்கிய தடயம் முக்கியமானது. அது கிடைத்திராவிட்டால் வழக்கு மேலும் கடினமாகியிருக்கும்.நிலத்தின் இருந்த வாந்தியில் ஒரு "lunch sheet" இருந்தது.சம்பவம் நடந்த தினம் வெள்ளிக்கிழமை ஆதலால் அசைவ உணவு விரும்பியான நீ கொத்து ரொட்டி வாங்கி சென்றிருப்பாய் என்று எனக்கு தெரியும். டொபிக்கு மீதியை கொடுத்த போது அது ஆர்வக்கோளாறில் "lunch sheet" ஐயும் சேர்த்து விழுங்கி விட்டது.சில மணி நேரத்தின் பின்னர் நிலவொளியின் காதலியை சந்திக்க நீ வந்த போது உன்னை தொடர்ந்து வந்த டொபி செரிமானமாகாததை வாந்தியாய் எடுத்துவிட்டது.


அந்த பெரியவர் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்த போது அவர் தொடர்பாக பலவிபரங்களை சொன்ன போது நீ திடுக்கிட்டிருப்பாய். நீ காதலித்த பெண்ணின் அக்காதான் என் முன்னாள் காதலி "ஐரீன்" என்பதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. தங்கை உனக்கு தனது குடும்ப விபரங்களைசொல்லியிருந்தது போல் ஐரீனும் காதலியாய் இருந்த நாட்களில் எனக்கு சொல்லியிருந்தாள். அன்று நான் உன்னை கடுமையாக தாக்கி ஊரைக்கூட்டி விடயத்தை பகிரங்கமாக்கியது உனது நன்மைக்காகத்தான். அதானாலேயே தகப்பன்காரன் உனக்கு மகளை அவசர அவசரமாக மணமுடித்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இல்லாவிட்டால் தகப்பன் காட்டிய வெளிநாட்டு ஆடவனை மணமுடித்து உனது காதலியும் விமானம் ஏறியிருப்பாள். நீயும் என்னைப்போல இன்று வரை மரத்தடியிலேயே இருந்து கொண்டிருப்பாய்.அங்கே உனக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.மிக்க மகிழ்ச்சி.அடுத்த முறை இங்கே வரும் பொழுது 221B Baker street ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து சில நினைவுப்பொருட்களை இந்த நண்பனுக்காக வாங்கி வருவாய் என எதிர்பார்க்கிறேன்


இப்படிக்குஅன்பு நண்பன்

சேரலாதன்.

25/10/2013


கலாச்சார தூண்!



யாழ்ப்பாண கலாச்சாரம் என்கிற தூணை விழவிடாது காக்கிற அத்திவாரம் போண்றவர் தான்  கமலரூபன் என்கிற அப்பாசென்று சொன்னால் அது மிகையாகாது.ஏனென்றால் நாமெல்லாம் வயதுக்கோளாறில் கண்டதையும் கிறுக்கிகொண்டிருந்த போது அவர் "யாழ்ப்பாணமும் பெண்களும்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிய பெருமைக்குரியவர்.நாம் "காதலா? காமமா? " என்று விவாதம் நடத்தும் பொழுதுகளில் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" என்று அறச்சீற்றம் காட்டியவர்.அப்படிப்பட்ட மதிப்புக்குரியவர் யாழ்ப்பாண கலாச்சாரம் தொடர்பில் விட்ட சமீபத்திய கருத்து புரட்சிகரமானது.

"உண்மையா யாழ்ப்பாண கலாச்சாரம் அழிகிறது என்று கவலைப்பட வேண்டியவர்கள் 1980- 1990 இடைப்பட்ட தசாப்தத்தில் பிறந்த நாங்களே ஒழிய மற்றவர்கள் அல்லர்"

மேலோட்டமா பார்க்கும் போது புரியாவிட்டாலும் ஆழமாக நோக்கும் போது நிலாவரை கிணறு போல ஆழமில்லாத அரிய கருத்து இது.இந்த தசாப்தத்தில் யாழ்ப்பாணத்தில் நாம் பிறந்திருந்த போது போர் தொடங்கியது.நாமெல்லாம் வளர்ந்து இளமைப்பிராயம் கழித்து முதிர்வடைந்த போது போர் முடிந்துவிட்டது.இடையில் இடம்பெயர்வுகளையும் அழிவுகளையும் கண்டபடி வளர்ந்த எம் வாழ்கை வித்தியாசமானது.எமக்கு முந்திய தலைமுறையோ சிறுவயதில் இந்திய சினிமாவில் திழைத்திருந்தது.வாலிபம் வரமுதலே திருமணம் என்ற பெயரில் தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்ததோடு திருப்தி அடையாமல் சின்னவீடுகளையும் பேணிவந்தது.பெல் பொட்டம் ஜீன்ஸ்,கண்வரை வழியும் தலை முடி அலங்காரம் என உலாவிய அந்த காலகட்டத்தவர்கள் போர்க்காலத்தில் குடும்பஸ்தர்களாகிவிட்டவர்.எமக்கு பின்னைய சதாப்தத்தில் பிறந்தவர்கள் சிறுவயதில் போரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வளர்ந்து வாலிபர்களாக முதல் போர் ஓய்ந்துவிட்டது.அவர்களும் பிறகு நன்றாக வாழ்ந்துவிட்டார்கள்.கட்டுப்பாடு,கலாச்சாரம்,ஒழுக்கம்,கண்ணியம் என்றிருந்த போர்க்கால ஒழுங்குகளால் புடம் போடப்பட்டது நாம்தான்.லௌகீக வாழ்வை அனுபவிக்காது கட்டுப்பெட்டியாக வளர்ந்ததும் நாம் தான்.

ஆகையால் ஒரு கிழடோ முதிர் குடும்பஸ்தரோ,முளைச்சு மூன்று இலை விடாத கலாச்சாரம் பேணும் பெடிசுகளோ நமக்கு முன்னால் நின்று "யாழ்ப்பாண கலாச்சாரம் கெட்டுப்போச்சு" என்றூ புலம்பினாலோ சத்தம் போட்டாலோ இந்த நியாயத்தை கூறி புரிய வையுங்கள்.அடங்காவிட்டால் தட்டி பிழிந்து அடக்குங்கள்.அதேவேளை அப்பாசின் இந்த அரிய கருத்தை பாராட்டி அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் கலாச்சார தூண் என்ற பட்டத்தை வழங்குவதில் கனாக்காலம் பெருமை கொள்கிறது.

கம்ல்ஸ் தூண் என்றால் கலாச்சாரத்தின் கூரை யார்? "கலாச்சாரத்தின் அத்திவாரம்" யார்? .நீண்ட அலசலுக்கு பின் கலாச்சாரத்தின் கூரையாக கெமிக்கல் அலியாகிய சசிவர்ணன் தெரிவுக்குழுவால் அறிவிக்கப்பட்டார்.அந்நாளில் வன்னி வள நாட்டின் கலாச்சாரத்தை பாவாடை ஜீன்ஸ் அணிந்தும் சைவ கலாச்சாரத்தை நெற்றியில் திருநீற்று குறி அணிந்தும் பேணிய அலிபாய் இன்று பிரித்தானிய கலாச்சாரத்தை  நைக்கி காலணியும் கெல்வின் கெவின் உள்ளாடையும் அணிந்து கட்டிக்காத்துவருகிறார்.குடும்பஸ்தர் ஆனபோதும் பல்வகை கலாச்சாரங்களை யும் கட்டி காப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிற்குறிப்பு- "கலாச்சார அத்திவாரம்" ஆக தெரிவானது ஒரு பெண்.அவரது பெயரை இங்கே போட்டாலே கொந்தளித்து வழக்கு போடுமளவுக்கு கட்டுக்கோப்பானவர்.எங்கே உங்கள் உய்த்தறியும் ஆற்றலுக்கு தீனி போட்டு கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?

தற்போதைய நிலவரம்-08




இங்கிலாந்தின் மிகப்பெரும் அரசியல் வாதியும் பிரபல நர்சரி ஆசிரியருமான கமல்ஸ் யாழ்நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.இலங்கையை விட்டு இனி இம்மியளவும் அசையமாட்டேன் என இவர் அடிக்கடி அவிழ்த்து விழும் அறிக்கையை கேட்பவர்கள் "இவனல்லவா மண்பற்றுக்காரன்" என்று மயிர் கூச்செறிந்து போகிறார்களாம். இரண்டாயிரத்து பதினெட்டு வரை பிரித்தானிய விசாவை அடித்து பொக்கற்றுக்குள் பத்திரமாக வைத்திருக்கும் விடயம் அறிந்தவர்கள் நமட்டுச்சிரிப்போடு அறிக்கையை கேட்டு செல்வதுவும் குறிப்பிடத்தக்கது.இதே நேரம் யாழ் போதனா வைத்தியசாலையில் கமல்சின் மூக்கை பிளந்த வைத்தியர்கள் உள்ளிருந்து பெரிய ஒரு கல்லை கடந்த வாரம் கிண்டி எடுத்தனர்.கல் எப்படி உள்ளே போனது என்பது தொடர்பில் குழப்பமுற்ற வைத்தியர்கள் பலப்பல சாத்தியங்களை தெரிவித்துள்ளனர்.எது எப்படியோ அறுவைச்சிகிச்சையில் பின்னர் "அதெண்டாலும் சரிதான்.இதெண்டாலும் சரி தான்" என்று அரைவாசி வாயாலும் மிகுதி அரைவாசி மூக்காலும் கமல்ஸ் பேசும் பாணி மாறாதிருக்க "கமல்ஸ் ரசிகர்கள்" பிரார்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




இலங்கை மின்சார சபையின் யாழ்பாண மின்பிறப்பாக்கி தற்போது அதி நவீன ஹொண்டா சிவிக் காரில் உலாவி வருகிறாராம்.எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அதிகமாக கவலைப்படும் அவர் காரை மின்சாரத்தின் ஓடச்செய்வதற்கு மாற்றீடுகள் உண்டா என்றும் சிந்தித்து வருகிறார்."இந்த வருடம் முடிய முதல் மாடர்ன் பிகரா மடக்குவேன்" என்று சபதமெடுத்து நல்லூர் தேர்முட்டியிலும் முட்டுசந்து மறைப்புகளிலும் வெறியோடு காத்திருக்கும் இவர் இந்த முறையும் தோல்வியே தழுவுவார் என்று நண்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்."ஒழுங்கைகளிலும் ,கோயில்களிலும் பிகர் பிடித்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.பஸ்களிலும் ரெயில் பயணங்களிலும் போறவன் வாறவன் எல்லாம் சிக்க வைக்கிறான்.வச்சிருக்கிற ஹொண்டா சிவிக்கை ஓட்டுற மாதிரி ஓட்டினா பிகர் தானா பிக்கப் ஆகும்" என்று இவர் தொடர்பில் கருத்து தெரிவித்த  இன்னொரு மின்சார பொறியியலாளர் கனாக்காலம் நிருபரிடம் அங்கலாய்த்துக்கொண்டார்.மின்சாரத்தோடயே வீம்பா விளையாடுறவருக்கு சம்சாரம் பிடிக்கிறது ஒரு பிரச்சினையா இருக்கக்கூடாது பாருங்கோ!




மட்டத்தின் நண்ப ,நண்பிகளுக்கு திருமணம் என்றாலே வாயார,மனதார வாழ்த்தி குதூகலிக்கும் நண்பர்கள் "றெமோ" வின் திருமணம் விடயத்தில் மட்டும் அனல் பறக்கும் ஆத்திரத்தோடு இருக்கிறார்களாம்.ஹிட்லரின் நாட்டில் பணி புரிந்து வரும் "றெமோ" நீல கண்களும் வெளிறிய சருமமும் உள்ள ஆரிய அழகியைத்தான் கரம் பிடிப்பார் என அவதானிகள் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளிவிட்டு வந்த போதிலும் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு உள்ளூர் பெண் ஒருவரை யாழ்ப்பாணத்துக்கு வந்து கரம் பிடித்து கூட்டி சென்றிருக்கிறார்.சில முக்கிய நபர்களைத் தவிர ஏனைய மட்டத்து நண்பர்களுக்கு "றெமோ" பெப்பே காட்டி கண்ணில் மண்ணை தூவி மூன்று முடிச்சை போட்ட விதம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்க்கியுள்ளது.அன்று காதால் புகை வருமளவுக்கு காட்டுக்குத்து குத்தியவர் இன்று நண்பர்கள் காதில் பூவை வைத்து விட்டு கலியாணம் கட்டியதொன்றும் பெரிய விடயம் இல்லைத்தானே!




கட்டப்படும் கட்டடங்களையும் நீண்டுகொண்டே போகிற வீதிகளையும் பார்த்தால் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைகிறது என்று சின்னப்பிள்ளை கூட சொல்லிவிடும்.சும்மா இருந்தவன் கூட வேலியை வெட்டி வீசிவிட்டு மதில் கட்டி பெயின்ற் அடிக்கிறான்.குழி கக்கூஸ் போதாதென்று கொமெட் கட்டுகிறார்கள்.போகிற போக்கைப்பார்த்தால் இன்னும் பத்து வருடங்களில் யாழ்ப்பாணம் சிங்கபுரி போல கொங்கிறீட் கூடு ஆகும் அபாயமுண்டு.நிற்க,விடயத்துக்கு வருகிறேன்.பல்கி பெருகும் கட்டுமான தொழிலில் மட்டத்தின் நண்பர்கள் பலரும் குதித்திருக்கிறார்கள்.எல்லோருக்கும் சுள்ளான் "ராக் தீபன்" தான் முன்னோடி.கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் சுள்ளான்.ஐந்தாறு கட்டுமானங்களை நிர்வகிக்கும் அதே சமயம் அப்பாவும் ஆகியிருக்கிறார்.ஒரே பந்தில் இரண்டு "சிக்ஸர்" அடிக்க யாராலும் முடியாது என்று எவன்டா சொன்னது?.



சிங்கபுரியில் மிகப்பெரும் திட்ட நிர்வாகியாக இருக்கும் சிரிப்பு ரவுடி உச்ச சம்பளத்தை எட்டிய பூரிப்பில் வறுத்த தவளை கறியை சாப்பிட்டதுமில்லாமல் முகநூலில் "முதன் முதலாக தவளை சாப்பிடுகிறேன்" என்றும் நிலைக்குறிப்பிட்டுமிருக்கிறார்.யாரோ ஒரு குறுக்கால போனவன் "மலிவான விளம்பரத்துக்காக இயக்கத்துக்கு முருக்கம் செத்தலால் அடித்ததாக புளுகியது போல இன்னொரு புளுகு" என கருத்து எழுதிவிட வெகுண்ட சிரிப்பு தவளை கறி தின்னும் படத்தை பிடித்து கீழே போட்டிருக்கிறார்.அந்த படம் அங்கே போய் இங்கே போய் கடைசியாக கனாக்காலம் நிருபரிடம் சிக்கிவிட்டது.உசுப்பேத்தினா சிரிப்பு ரவுடியை கிணத்துக்க குதிக்கவும் வைக்கலாம் என்று அந்த "குறுக்கால போன" நண்பர் சிரிப்புடன் கருத்து தெரிவித்தார்.





கதையின் நாயகன் டானியல் பரபரப்போடு அந்த முப்பரிமாண உரையாடல்ப் பொறி முன்பாக காத்திருந்தான்.இன்னும் 438 வினாடிகள் கடந்ததும் ஐக்கிய தமிழ் ராட்சியத்தின் தலைவனான திராவிடா வந்து கேள்விகளை அடுக்க தொடங்கும்.பதில்களில் அதற்கு திருப்தியென்றால் பக்கவாட்டில் புலி பாய்கிற சின்னம் பதித்த கடவுச்சீட்டு கையில் கிடைக்கும்.பிடிக்காவிட்டால் முகத்தை திருப்பி விடும்.பிறகு.....நாசமாப்போன இங்கிலாந்துக்கு திரும்ப போக வேண்டியது தான்.அங்கு போய் காய்ஞ்ச பார்கருக்கும் நெய்ந்து போன உருளைக்கிழங்கு சிப்சுக்கும் நாய்படாப்பாடு பட வேண்டியிருக்கும்.ஹீத்ரோ விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்த அம்மா எம்மா செஸ்டனின் கவலை தேய்ந்த முகம் நினைவில் வந்தது."நீ அந்த நாட்டிலிருந்து அனுப்பும் ஒவ்வொரு சதத்துக்கும் இங்கே கட்டுக்கட்டாக பவுண்ட்ஸ் கிடைக்கும்.நம்பிக்கையோடு அனுப்புகிறேன்.கவிழ்த்துவிடாதே" விடைபெற்ற இறுதி கணத்திலும் திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தாள்.கிபி 2113,மாசி 23ம் திகதி பிரித்தானியா முழுக்க பனி படர்ந்த நாளொன்றில் டானியலோடு இன்னும் 499 பேர் கிளம்பியிருந்தார்கள்.வேல்ஸ் முருகனை நேர்துவிட்டு கிளம்பியபோதிலும் அதிஸ்டம் டானியல் பக்கம் இருக்கவில்லை.ஆள்க்கடத்தல் முகவர் நிறுவனத்தின் கடந்த நூற்றாண்டை சேர்ந்த அந்த ராட்சத விமானம் ஐதரா வை நெருங்கமுன்  நடுவானில் கண்ணில் எண்ணெய் ஊற்றி கண்காணித்துக்கொண்டிருந்த "கருடன்" வானூர்தியிடம் வசமாக மாட்டிக்கொண்டது. அகோரப்பசியில் இருக்கும் பெலிகன் பறவை முழு மீனை சாப்பிடுவதுபோல நடுவானில் கருடன் போயிங் 747 ஐ பெரும் சப்தத்தோடு முழுங்கியபோது "அக்ளி ஆஸ்கோல்" என்று தொடங்கி முருகனை கண்டபடி டானியல் திட்டியிருந்தான்.

பஞ்சம் தலைவிரித்தாடும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள இளைஞர்களின் குறிக்கோளெல்லாம் ஐ.த.ராவுக்கு போகவேண்டும் என்பது தான்.டானியல் பள்ளிக்கூடத்தில் ஐந்தாமாண்டு  படிக்கும் போதே முளைவிட்டிருந்த நெடுநாள் ஆசை அது.ஆசிரியர் வருங்காலத்தில் என்னவாகப்போகிறீர்கள் என்று வகுப்பில் வரிசையாக கேட்டு வந்த போது ஐதராவுக்கு போக போகிறேன் என்று சொல்லி சிரித்தவன் அவன்."நீ நினைத்த படியே நடக்கட்டும்.ஆனால் சர்வதேச தமிழ் மொழி பரீட்சையில் 10 இற்கு 9 எடுப்பது எந்த ஆங்கிலேயனாலும் முடியாதேப்பா" என்று அவர் சொன்னதைக்கேட்டும் கலங்காமல் தமிழ் வகுப்புக்கு போக தொடங்கியவன்.டானியல் பிறக்க சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரித்தானியா முழுக்க தமிழ் கலாச்சார மோகம் தலைவிரித்து ஆட தொடங்கி விட்டது.கடும் குளிரிலும் வேட்டி,சேலை கட்டி இளசுகள் அலைந்து கொண்டிருந்தார்கள்.தமிழ் பெண்கள் போல ஊதிப்பெருத்த அழகிய இடை வேண்டுமென்பதற்காக பிரித்தானிய மகளிர் கண்டதையும் மென்று கொண்டிருந்தார்கள்.ஆறே வாரத்தில் கருப்பழகு கிரீமுகள் சந்து பொந்தெல்லாம் விற்பனையாகிக்கொண்டிருந்தன.பள்ளிக்கூட பெடியள் தமிழ் சினிமா நாயகர்கள் பெயரில் ரசிகர் மன்றங்கள் திறந்து ஆளுக்காள் அடிபட்டுக்கொண்டிருந்தார்கள்.டானியலும் நண்பர்களும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக மனம் கவர்ந்த கவர்ச்சி நடிகை கும்காவுக்கு டூட்டிங் நிலக்கீழ் நிலையமருகே சிலை வைத்தார்கள்.தொப்பை வயிறும் குலைந்து விழும் கொங்கைகளுமாய் நின்ற கும்கா சிலையை கண்ணாலே கற்பழிப்பதற்கே தினம் தோறும் பெரிய கூட்டம் வந்து போனது.கும்கா,குடி,குட்டி என்று ஒரு பக்கம் அலைந்தாலும் தமிழ் படிப்பில் விடாப்பிடியாய் இருந்தான்.வெறியாய் தமிழ் படித்து முதல் தடவை பரீட்சை எழுதியபோது பத்துக்கு ஐந்து வந்தது.இரண்டாம் தடவை 5.5 மூன்றாம் தடவை 6.அதுக்கு பிறகு எத்தனை தடவை எழுதினான் என்று அவனுக்கே தெரியாது.ஆறை தாண்டி அரை இஞ்சி கூட நகரவில்லை.கிழட்டு தமிழிச்சியை எண்டாலும் இணையத்தில் மடக்கி ஐக்கிய தமிழ் ராட்சிய குடிமகனாகலாம் என்ற எண்ணத்திலும் சட்ட விதிகளை மாற்றி மண்ணை போட்டு விட்டார்கள்.அதன் பிறகு களவாகப்போய் கையை தூக்குவதை தவிர வேறு வழி டானியலுக்கு இருக்கவில்லை.

"ஐக்கிய தமிழ் ராட்சியம் வடக்கே இந்திய உபகண்டத்திலிருந்து ஈழத்தீவு வரை பரந்துள்ளது.உலகத்திலேயே பணக்கார நாடு.உலக மகா சண்டியன் நாடு.அதி புத்திசாலிகள் நிறைந்த தேசம்.உலகிலேயே கவர்ச்சிகரமான பெண்கள் வாழுகிற இடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.மூன்று தசாப்தங்களுக்கு முன்பு அன்ரோமீடா பால்வெளியில் இருந்து நீசிகள் படையெடுத்த போது உலகின் வல்லாதிக்கங்கள் எல்லாம் தகர்ந்து போக ஐதரா ராணுவம் நின்று போரிட்டது.உலகம் இறுதி கணங்களை எண்ணிக் கொண்டிருக்க நீசிகளின் பலவீனத்தை பிடித்துக்கொண்ட தமிழர்கள் திருப்பி தாக்க தொடங்கினார்கள்.வலிந்ததாக்குதல்,முற்றுகைச்சமர்,ஊடறுப்பு சமர் என்று காற்று மண்டலத்திலிருந்து சந்திரமண்டலம் தாண்டி பரந்த நெடும் போரில் ஏலியன்களை தோற்று ஓடத்தொடங்கிய போது தமிழ் ராஜ்சியத்தின் வலிமை வெளிப்பட்டது.இன்றும் கூட உலகை பாதுகாக்க பல ஒளியாண்டுகள் தாண்டிய தூரங்களிலெல்லாம் சமரிட்டுக்கொண்டிருக்கும் தேசம் அது.இப்படிப்பட்ட தேசத்தின் தலைவன் தான் "திராவிடா".அதற்கு ஏழு அறிவு.முக்காலமும் தெரியும்.உலகின் எல்லா மொழிகளும் தெரிந்திருந்தாலும் தமிழ்தான் பேசும்.நம்மையெல்லாம் பாடாய் படுத்தி எடுக்கும் சர்வதேச தமிழ் மொழி பரீட்சை முறையை கொண்டு வந்ததும் அது தான்"

தமிழாசிரியர் டொமினிக் கூப்பர் சொல்லிக்கொண்டு போன போது டானியல் குறுக்கிட்டிருந்தான்.

"ஒரு நாட்டின் தலைவரை தமிழ் இலக்கணப்படி "மேதகு" என்று சொல்வது தானே முறை?.ஏன் திராவிடாவை "அது" என்கிறீர்கள்?"

அன்று தான் திராவிடாவுக்கு உயிரே கிடையாது என்று டானியலுக்கு தெரிந்தது.ஒற்றுமையில்லாத தமிழர்கள் தமக்கென நாடு உருவான பின்பும் தலைமை கதிரைக்காக சண்டையிட்டு கொண்டிருந்தார்களாம்.வெறுத்துப்போன தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து திராவிடா என்கிற செயற்கை மூளையை உருவாக்கி அதை மக்கள் பிரதி நிதிகள் மூலமாக கட்டுப்படுத்தும் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.தினமும் ஆயிரக்கணக்கான பொறியியலாளர்களாலும்,விஞ்ஞானிகளாலும் மெருகேற்றப்பட்டபடியிருந்த செயற்கை மூளைக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் ஒரு கட்டத்தில் கிடைத்தது யாருக்கும் தெரியவில்லை.அயல் நாட்டோடு ஏற்பட்ட எல்லைத்தகராறில் சமாதானமாக போவதா? சண்டை பிடிப்பதா? என்று பிரதிநிதிகள் முரண்பட்டுக்கொண்டிருக்க திராவிடா பொறுமையிழந்து எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.ஒரே நாளில் அந்த அயல் நாட்டை அடித்து துவம்சம் செய்து வெற்றி வாகை சூடிய போது இளைஞர்கள் எல்லோரும் திராவிடாவின் ரசிகர்களாகிப்போனார்கள்.பிறகு இந்தியாவை எதிர்பாராமல் தாக்கி துண்டு துண்டாக பிரித்து தமிழ் நாட்டை கூட இணைத்து ஐக்கிய தமிழ் ராஜ்ஜியத்தை உருவாக்கி கொண்டது.உயிர் அல்லாத தன்னை தமிழ் இலக்கணப்படி "அது" என்றே அழைக்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவைக்கூட போட்டு வைத்திருக்கிறதாம்.

டானியல் தடுப்பு முகாமில் இருந்த கடந்த ஒரு மாதமும் தமிழர்கள் பாடாய் படுத்திவிட்டார்கள்.காலை ஆகாரத்தின் பின்னர் கிரகிப்பு கட்டில்களில் போய் படுக்க வேண்டியது தான்.கல்தோண்ற முன்னர் வந்த மூத்த குடி என்று தொடங்கி முதலில் விமானம் விட்டது,அணு சக்தியை அறிந்தது,விண்வெளிக்கு போனது எல்லாமே தமிழன் தான் என்று முடிப்பார்கள்.கேட்கச்சொன்னால் காதை பொத்தலாம்.வாசிக்க சொன்னால் கண்ணை மூடலாம்.நேரடியாக மூளை நரம்புகளுக்கு அனுப்பினால் என்ன செய்வது?.கண்ணை மூடிக்கொண்டு கிரகிக்க வேண்டியது தான்.குமரிக்கண்ட நகரங்களை கடலுக்கு வெளியே இழுத்து கொண்டு வந்து காட்சிக்கு வைத்தது,ராவணனை காட்டிக்கொடுத்த விபீசணனை காலம் கடந்து பயணித்து போய் போட்டு தள்ளியது,சந்திரனில் அவ்வை பாட்டிக்கு சிலை வைத்தது என "திராவிடாவின்" சாதனைகளை எல்லாம் காணொளியாக பார்க்கும் படி செய்வார்கள்.அதை விட தமிழ் உச்சரிப்பு பயிற்சி என்ற பெயரில் தட்டிப்பிழிவார்கள்.நாக்கு வீங்கி ஒரு நாள் பேச முடியாமல் கூட ஆனது.திரும்ப இங்கிலாந்துக்கு போவமா என்று கூட சில நேரம் யோசித்து இருக்கிறான்.அந்த நேரத்தில்த்தான் அனித்தாவின் அறிமுகம் கிடைத்தது.அனித்தா நான்கு தலைமுறைக்கு முன்னர் பிரித்தானியா வந்து கையைத்தூக்கிய தமிழனின் வழி வந்தவள்.இடையில் காப்பிலி,ஜெர்மன்,சோமாலிய இனங்கள் கலந்து அனித்தாவை விசித்திர உருவமாக மாற்றிவிட்டிருந்தது.அவளுக்கு நீல கண்களும் பொன்னிற கூந்தலும் இருந்தாலும் தோல் நிறத்தில் பழுப்பாய் இருந்தாள்.பருத்து இருந்த இடை மட்டும் அச்சு அசப்பில் கும்காவினது போல் இருந்தது.அனித்தாவோடு கடலை போட தொடங்கிய பிறகு டானியலுக்கு நாள் போனதே தெரியவில்லை.

கருவி முன் மெலிதாக வெட்டிய மின்னல் மறையமுதல் திராவிடா ஒளிப்பிழம்பாய் வந்து நின்றது.அதன் அடி கருவியில் இருக்க முடி வானை நோக்கி முடிவில்லாமல் சென்றது.முடியை தேடிப்பிடிச்சால்த்தான் உனக்கு வீசா என்று சொல்லப்போகுதோ என்று டானியல் பயந்தான்.திராவிடாவும் மனிதர்கள் போல மெல்லிய செருமலுடன் தான் ஆரம்பித்தது.

"ராஜராஜ சோழனுக்கு பிறகு வந்த தமிழர்களின் ஒப்பில்லா தலைவரின் தந்தையின் பெயர் என்ன?"

"திர்வேங்கட் வேலுப்பில்லை"

"தலைவர் இருக்கிறாரா? இல்லையா?"

டானியல் மௌனித்தான்.திராவிடா 30 வினாடிகளை காற்றில் ஒளிரவிட்டு குறைக்க தொடங்கியது.

"இருக்கிறார்"

"புதிய ஐக்கிய தமிழ் ராட்சியத்தின் குடிமகனுக்கு வாழ்த்துக்கள்" என்றபடி நீட்டிய இயந்திரகரங்களில் புத்தம் புதிய கடவுச்சீட்டு மின்னிக்கொண்டிருந்தது.




2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம்.இலங்கை பதிவுலகில் எமது மட்டட்தை சேர்ந்த மூன்று பதிவர்கள் கலக்கிக்கொண்டிருந்தார்கள்."புளொக்" எழுவதற்கு மிகப்பெரிய திறமை வேண்டும் என்ற எண்ணவோட்டத்தோடு இருந்த நான் அவர்களின் பதிவுகளை இங்கிலாந்தில் இருந்து ஒன்று விடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.எமது மட்டத்துக்கு "புளொக்" தொடங்க வேண்டும் என்ற சலசலப்பு அந்நேரம் தான் கிளர்ந்தது."மச்சான் தயவு செய்து தொடங்குங்கடா" என்று ஆளாளுக்கு மாறி மாறி மூன்று பேரையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.ஒருத்தனும் ஒழுங்கான பதிலை சொல்லுறான்கள் இல்லை. காத்திருந்து ஒருநாள் முகநூல் சட்டில் சிக்கனை தின்று வளர்ந்த பதிவரை பிடித்து "மச்சான் நீயாவது கெதியா தொடங்கடா" என்று கேட்டு வைத்தேன்.நெல்சன் மண்டேலா,காந்தி பற்றி எல்லாம் எழுதிக்கொண்டிருந்த அந்த பெரும் பதிவர் "தனிமனித தாக்குதலை நான் விரும்புவதில்லையாதலால் தொடங்க முடியாது" என்று பதில் போட்டு என் கடுப்பை கிளறி கனாக்காலத்தை தொடங்க வழிசமைத்தார்.

கடந்து போன நினைவுகளை மீட்ட தொடங்கப்படும் தளத்தில் காந்தீயமும்,சிவப்பு சித்தாந்தமும் பேச முடியுமா?.ஜூன் மாதன் 2009 ஆண்டு கனாக்காலம் தொடங்கியது.அன்று தொடங்க மறுத்த பதிவர்கள் எவரும் பதிவுலகில் உயிர்ப்புடன் இல்லை.தனிமனித பிரபலத்தை நோக்கமாக கொண்ட எந்த பதிவரும் நீடிக்க முடியாது.சுய திருப்திக்காகவும்,உள வெளிப்பாடாகவும் எழுதுபவர்களே பதிவுலகில் நிலைக்கிறார்கள்."மச்சான்! அடிக்கடி எழுதாட்டியும் மாதமொண்டு எண்டாலும் விடாமல் எழுதுறாய். அப்படியே தொடர்ந்து எழுது! நண்பனொருவன் சொன்ன வார்த்தைகள் இவை.தொடர்ந்து பத்து வருடம் எழுதுவதற்கு நண்பன் சொன்ன வார்த்தைகளே போதும்.

எச்சரிக்கை கடிதம்,மிரட்டல் கடிதம்,அனானி கடிதம் என்று பலதை கனாக்காலம் கண்டிருக்கிறது.விருப்பத்தோடு வாசிப்பவர்கள் அளவுக்கு கடுப்போடு வாசிப்பவர்களையும் கொண்ட தளம் இது.தளத்தில் பதிவுகளை இட்டு பங்களிப்பு நல்கிய பவானந்,இளம்செழியன்,சசிக்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.இத்தளம் தொடர்ந்து காத்திரமான படைப்புக்களை வழங்கி நீடிக்க உதவுமாறு "மட்டம் 2003" மாணவர்களிடம் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.




டொக்டர் பான் கீமூன் தனது முப்பது வருட சேர்விசில் இப்படி ஒரு மோசமான கேசை கண்டதேயில்லை.பழுதடைந்த தவளை சூப்பை வாயில் வைக்கும் போது வரும் அருவருப்பு உணர்வு "அதை" பார்க்கும் போதெல்லாம் வந்தது."கிழடு தட்டினவங்களுக்கு இப்படி இளம் பெண்களை இஞ்சினியர் என்ற காரணத்துக்காக மட்டும் கட்டிக்கொடுப்பதை தமிழ் சமுதாயம் நிறுத்தாதவரை இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்க இயலாது" என்று சொல்லியபடி பான்கிமூன் ஸ்ரெச்சரை தள்ளிக்கொண்டு வந்த பிலிப்பைன்காறனை பார்க்க அவன் "சேர்! அலமா! திஸ் வண் ஆ மெனி மெனி புறப்லம்" என்றபடி தலையை சொறிய ஆரம்பித்தான்.பான்கிமூன் ஒன்றும் ஏட்டை சப்பிதுப்பி உருவான சராசரி வைத்தியன் அல்லர்.தவழ்ந்து திரிந்த நாட்களிலேயே ஆறுமாதமும் நிரம்பியிராத அயல் வீட்டு பெண் மிங்காவின் மூக்கை கடித்து இழை போடவைத்தவர்.பத்தாவது வயதில் முத்தம் கொடுக்கும் போது மூக்கும் மூக்கும் இடித்துக்கொண்டால் என்னாவது என்ற ஐயம் எழுந்த போது மீளவும் மிங்காவின் உதட்டை கடித்து மாட்டுப்பட்டவர்.பிறகு 18வது வயதில் இனப்பெருக்கதொகுதி பற்றி படித்த போது கிளர்ந்தெழுந்த சந்தேகங்களை தீர்க்க மிங்காவை இழுத்துக்கொண்டு போய் 20 மாதங்களுக்குள், ஜெட்லீ புரூஸ்லீ எனும் இரண்டு ஆண் ட்ராகன்களுக்கு அப்பா ஆகிய மின்னல் வேகக்காரர்.



17/05/2029 11 PM டாக்டர் பான்கிமூன் மட்டுமல்ல சிங்கபுரியிலேயே மிகப்பிரபலமான மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையும் தனது ஐம்பது வருடகால வரலாற்றில் இவ்விதமான பிரச்சினையை கண்டதில்லை.பிணைந்திருந்த அந்த உடலங்கள் உள்ளாடைகளோடு இருந்தன.பெண் மயக்க நிலையில் இருந்தாள்.ஆண் கடுமையான வேதனையில் முனகிக்கொண்டிருந்தான்.முத்தமிட்டு கொண்டிருக்கும் போது பெண் நினைவிழந்துவிட  இருவரது வாய்களும் அப்படியே சிக்குண்டிருக்க வேண்டும்.கடவாய்த்தோலை இழுத்துப்பார்க்க அவள் பற்களிடையே ஆணின் கீழுதடு பொறியில் சிக்கிய எலி போல நசிந்து கிடந்தது.




"இது எப்படி நடந்தது என அறிய விரும்புகிறேன்.உன்னால் பேச முடியாதிருப்பதால் எழுத்து மூலமாய் தொடர்பாடலாம் சரிதானே?"

காகிதமும் பேனாவும் உதடுகள் பிணைந்திருந்தவன் எழுதுவதற்கு வாகாய் வைக்கப்பட்டன.

"எனது பெயர் சுதன்.நான் ஒரு புறஜெக்ட் மனேச்சர் வயது 45"

பான்கிமூன் காகிதத்தில் எழுதியிருந்தை பார்த்தவுடனேயே தன்னிலை மறந்து "சிறிலங்கன் தமிழன்" என்று உரக்க கத்திவிட்டார்.

"ஊர்முழுக்க மெனி மெனி சிரிலங்கன் தமிழ் Project Manager தான் .மேலே சொல்லவும்"

"இவ பேர் மாலினி.வயது 20.போன கிழமை ஊரிலை வச்சு கலியாணம் கட்டி கூட்டிக்கொண்டு வந்தனான்"

"அப்ப சிரிலங்காவில முத்தம் கொடுக்கேக்க இப்படி பிரச்சினை ஒண்டும் வரேலைதானே.சிங்கப்பூர் வெக்கை மாலினிக்கு ஒத்துக்கொள்ளாம "Heat Stroke" வந்திருக்கலாம்.இப்ப சரியாக்கிடுவன் கவலைப்படாதையும்"

பரபரத்தபடி ஏதோ ஒரு மருந்தை எடுக்கப்போன டொக்டரை கையை காட்டி தடுத்த P.M சுதன் மீள எழுதத்தொடங்கினான்.

"ஊரில ஒன்றும் முயற்சி செய்யேலை.வீடு முழுக்க ஒரே சனம்.அசௌகரியமா இருந்ததால பேசாம இருந்திட்டன்.இண்டைக்குத்தான் "Day off" போட்டிட்டு வந்து அலுவலை தொடங்கினனான்.என்னுடைய வீட்டுக்காறர் 45 வயசில கலியாணம் கட்டி வச்சதே பெரியவிசயம் டொக்டர்.அதுவும் இப்பிடி ஆகிட்டுது.நீங்கள் தான் என்னை வாழ வைக்கோணும்"

பதினெட்டு வயதில் குடும்பம் நடத்திய பான்கிமூனுக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.இலங்கைதமிழனாய் பிறக்கவைத்து சிவில் இஞ்சினியரிங் படிக்க வைத்து ,சிங்கப்பூரில் புறஜெக்ட் மனேச்சர் ஆக்காததற்காக எல்லாம் வல்ல குங்பூ புத்தருக்கு மனதுள்ளே நன்றி சொல்லிக்கொண்டார்.

"ஒழுங்கா நீங்கள் பல்லு மினுக்காட்டியும் வாய் நாற்றம் தாங்க முடியாமல் மயங்கியிருக்க வாய்ப்பு உண்டு மிஸ்ரர் சுதன்.ஆனா இவளைப்பார்த்தால் "கோமா" நிலைக்கு போன ஆள் மாதிரியல்லவா இருக்கு"

"சுதன்! உங்களது மனைவி தமிழ் தானா?"

"யூ திங் ஐ ஆம் ஸ்ருபிட் ஆ?,அவள பார்த்தால் சைனாக்காரி போலவா இருக்கு?"

கடுப்பாகி சுதன் எழுதியதை பார்த்ததும் பான்கிமூன் "க்ளுக்" என்று சிரிப்பு வந்தது."முகம் ஓகே.உடம்பு அப்படி இல்லையே" என வாய் வரை வந்த வார்த்தைகளை எச்சிலோடு சேர்த்து விழுங்கிக்கொண்டார்.

பான்கிமூன் இப்போது மாலினியை நெருக்கமாக ஆராய ஆரம்பித்தார்.சருமம் அத்துணை திருத்தமாய் இருந்தது.நாசிகள்,விழிகள்,புருவங்கள் எல்லாம் அளவு தப்பாமல் செதுக்கியது போலிருந்தன."36- 28 - 34 வருமோ? இந்த இனத்தில் இப்படி ஒரு வளைவு நெளிவுகள் இருக்க வாய்ப்பேயில்லையே?".கண்களாலேயே அளவெடுத்து பார்க்க பொறிதட்டியது.


அவசரமாய் x கதிர் உபகரண கூடத்திலிருந்து உருவிக்கொண்டு வந்த ASM -990 (Advance survey meter) கருவித்தலைப்பை வைத்து மாலினியை புரட்டிப்புரட்டி பான்கிமூன் பத்து நிமிடங்களாக தடவிக்கொண்டிருந்தார்.கச்சைக்குள் கருவியை விட்ட போது சுதன் "சீபாய்" என்று தொடங்கி கெட்ட வார்த்தைகளை எழுதி திட்டியதை கண்டும் காணாததுபோல் கருமமே கண்ணாக இருந்தார்.எல்லாம் இடமும் பார்த்தாகிவிட்டது.அந்த ஒரு இடத்தை தவிர.யோசித்துக்கொண்டிருக்க நேரமில்லை.கண நேரம் தான்.பான்கிமூன் உள்ளாடையை விலக்கிவிட்டு கருவியை விட்டார்.

"கீக் கீக் கீக் கீஈஈஈஈஈஈஈஈ"

கருவியின் அலாரம் அலற சுதன் பந்தி பந்தியாக எழுதி திட்டிக்கொண்டிருந்தான்.மீற்றரில் "பீற்றா" கதிர்கள் சிக்கியிருந்தன.



23/05/2029 அன்று சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்முரசு பத்திரிகை செய்தி:

இயந்திர பெண் விவகாரத்தில் சிங்கப்பூர் சிறப்பு போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூரில் வதியும் பொறியியலாளருக்கு பாதுகாப்பற்ற இலங்கை தயாரிப்பான இயந்திர பெண்ணை ஏமாற்றி திருமணம் முடித்து வைத்த தரகர் இலங்கை போலீசாரின் உதவியோடு கைது செய்யப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் மாப்பிள்ளைகளை திருமணம் செய்ய எந்தவொரு தமிழ் பெண்ணும் மறுக்கும் நிலை இலங்கையில் காணப்பட்ட போதும் சுதன் வீட்டார் பெருமளவிலான பணத்தை தரகு கூலியாக தருகிறோம் என ஆசை காட்டியதால் இந்த இயந்திர பெண்ணை வடிவமைத்து கட்டி வைத்ததாக தரகர் தெரிவித்தார்.30 ஆண்டுகால ஆயுட்காலமுள்ள அணு மின்கலம் இணைக்கப்பட்டிருந்த போதிலும் குளிரூட்டும் அமைப்பு வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெண்ணின் இயக்கம் சடுதியாக நின்றதே இந்த "குட்டு" அம்பலத்துக்கு வர காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது."மாலினியை" வடிவமைத்த மொறட்டுவை "மெக்கானிக்கல்" பீட மாணவர்களான "அலிபாய்" "கெமிக்கல் அலி" ஆகியோரையும் இலங்கை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இதே நேரம் இயந்திரமாலினியை இயக்க உபயோகிக்கப்பட்ட Tritium பற்றரி முறையாக கவசமிடப்படாமையால் கதிரியக்க தாக்கத்தால் சுதனின் ஆண்மைக்கு பங்கம் உண்டாகியிருக்கலாம் என்றும்அஞ்சப்படுகிறது.











"இஸ்ஸறா You all came தானே? Sir"



நள்ளிரவை தாண்டிய வேளைகளில் சொய்சாபுரம் உறங்கிக்கொண்டிருந்தது.கட்டாக்காலி தெருநாய்களோடு இரவின் மைந்தர்களான குடுக்காரர்கள் மட்டுமே விழிப்போடு இருந்தனர்.அந்த மயான அமைதியை குலைப்பது போல் வாகனங்களில் வந்து குதித்த காவல்த்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஒரு வீட்டை சுற்றிவளைத்து கதவை தட்ட உள்ளே இருந்தவர்களின் தலைவன் பின்வழியால் இருந்த மதிலை தாண்டி ஓடும்படி கட்டளையை பிறப்பித்துவிட்டு மான் காரத்தேயை பாவித்து பறக்கிறான்.சிதறி ஓடிய அடிப்பொடிகளில் ஒரு அதீத புத்திசாலி செருப்பை கழற்றி வைத்து விட்டு குழாய் வழியாக கட்டிட கூரையில் ஏறி பதுங்கி கொள்ள ஆட்டம் சூடு பிடிக்கிறது.துப்பறிவில் ஸ்கொட்லண்யார்ட்டுக்கே சவால்விடும் நுண்மதியுள்ள இலங்கை போலீசார் காரிருளிலும் அந்த கரிய "பாட்டா செருப்பை" கண்டு பிடித்து மேலே ஒருத்தன் பதுங்கியிருக்க வேண்டும் என உய்த்தறிந்து பிடித்துவிட்டார்கள்.பிறகென்ன பிடிபட்டவனை கைத்தொலைபேசியில் இருந்து ஏனையவர்களுக்கு அழைப்பு எடுக்கும் படி சொன்னார்கள்.ஒரு குறோட்டன் செடிக்கு பின்னாலிருந்து நோக்கியா 3310 கதற தொடங்கியது.ஆனால் பத்து அழைப்பு போயும் உள்ளே ஒளித்திருந்தவன் அசரவில்லை.கடுப்பான காவல் ஒன்று அவனை வெளியே இழுத்துப்போட்டுவிட்டு ரேடியோவில் "சேர்! ஒருத்தன காட்டுக்க இருந்து பிடிச்சிருக்கிறம்.ஓவர்" என்று விறைப்பாக சொல்லி சல்யூட் அடிக்க முதலாவதாக பிடிபட்டவனுக்கு வயிற்றை கலக்கியது.மேலதிக போலீஸ் அணிகள் களத்தில் இறங்க தாக்குப்பிடிக்க முடியாமல் ஒவ்வொருத்தராய் சரணடைந்துவிட்டார்கள்.போலீஸ் தலைமை அதிகாரி முரட்டு குரலில் கேட்டார் "கம்பஸ் பெடியள் என்று சொல்லுறியள்.அப்ப ஏன்ரா ஓடினீங்கள்?".குழுவின் தலைவனுக்கு இப்படியான கேள்விகள் புதிதல்ல.கடந்தகாலங்களில் இதை விட சிக்கலான கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்திருக்கிறான்.ஆனால் அன்று அவன் சொன்ன பதில் விசேடமானது & காலத்தால் அழியா புகழ் பெற்றது.

"இஸ்ஸறா You all came தானே? Sir"



விஞ்ஞானி கெமிக்கல் அலி குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து தெஹிவளைக்கு நகர்ந்த நேரம் அது.சிக்கலான கால கட்டம்.யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் தரைவழி துண்டிக்கப்பட்டிருந்ததால் மாதங்களுக்கு ஒருமுறையாவது கிடைக்கிற வீட்டுச்சாப்பாடும் இல்லாமல் தவித்திருந்தோம்.எங்கள் நிலையுணர்ந்த விஞ்ஞானி "30 பெடியள வீட்டுக்கு கூப்பிட்டா சிக்கல் வருமோ?" என்று கொஞ்சம் கூட யாழ்ப்பாணத்தனமா யோசிக்காமல் அழைத்துவிட்டார்.பெரிய அணியா கிளம்பிப்போனோம்.வீடு அடையாளம் பிடிபடாததால் அழைப்பை சசிக்கு போடும் படியாயிற்று.

"டேய்! வாற வழியிலை River ஒண்டு Run பண்ணிக்கொண்டிருக்கும்.அத கடந்தா First ஆ வாற Two story building  ல Up story தான் என்ர வீடு".


எங்கள் மட்டத்தின் வௌவால் மனிதன் வசந்தன் பகல் முழுக்க தூங்கி இரவு வேளைகளில் தான் விடுதியை விட்டு வெளிக்கிடுவார்.இருளை போர்வையாக்கி சுற்று வட்டாரத்திலிருக்கும் தென்னை,வாழை மரங்களை மொட்டை அடித்து விடியமுன் மீண்டுவிடுவார்.சாகச வீரருக்கு நெடிந்து ஒரு வளர்ந்த தென்னை நிறைந்த இளநீர்க்குலைகளோடு சவால் விடுத்துக்கொண்டிருந்தது.பலமுறை தோல்வியை சந்தித்திருந்த போதிலும் இறுதியாக உச்சியை அடைந்து குலைகளை பறித்து வெற்றிக்களிப்பில் கீழிறங்கிய போது துன்பியல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.கால் சறுக்கி மரத்தோடு வழுக்கி விழுந்த அலியப்பாவின் நெஞ்சு  முழுக்க உராய்வுக்காயங்கள்.வைத்தியர் தந்த கருநீல நிற மருந்தை நெஞ்சுமுழுக்க பூசி திரிந்தவனை விசித்திரமாக பார்த்த சிங்களவர்களிடம் அலியப்பா சொன்னான்.

"I hugged தென்னமராக் tree மச்சான்"

சீனியர்களே இப்படி என்றால் அவர்களுக்கு வாய்த்த ஜூனியர்கள் லேசுப்பட்டவர்களாக இருப்பார்களா?.அவ்வகையில் பிரபலமானவர் "பண்ணாகம் தாசன்". றூமுக்குள் சோதனையிட வந்த போலீஸ்காறன் தாசனின் கட்டுப்பல் இருந்த நீர்க்குவளையை பார்த்து "குண்டா இருக்குமோ?" என ஐயப்பட செப்பியது தான் "சேர்! மகே Body parts எக்கக் தியன்னவா".கம்பியூட்டரை போடும்படி போலீஸ் பணித்தபோது பாழாய்ப்போன "பிளக்" அடம்பிடித்தது.வயரை ஆட்டியபடி பண்ணாகம் தாசன் "சேர்! கறண்ட் இன்னவத" என்று கேட்டு வைக்க அதிர்ச்சியடைந்த காவல்த்துறையினர் சற்றும் தாமதிக்காது "மகே அம்மே! அபி யெனவா" என்றபடி ஓடிப்போனார்கள்.

உட்கார்ந்து இருந்து சிந்திக்கும் போது சசியின் "நான் படிக்க வரேலை,வேலைத்திட்டத்துக்கு வந்ததனான்" சிரிப்பு ரவுடியின் "நாங்கள் இயக்கத்துக்கு அடிச்ச ஆட்கள்" கமல்சின் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" மற்றும் "எதெண்டாலும் சரிதான்" ஜேன்கொன்சாலின் "நான் சொல்ல மாட்டனே" சௌந்தரின் "எனக்கு ஒன்னுமே வெளங்கலடா" போண்ற பல பிரபலமான வாக்கியங்கள் நினைவிற்குள் வருகின்றன.ஆயினும் "இஸ்ஸறா You all came தானே? Sir" க்குள்ள புகழும் பிரபல்யமும் ஏனையவற்றுக்கு இல்லை.மும்மொழியையும் ஒரு வாக்கியத்தில் உள்ளடக்கி நிற்கும் "இஸ்ஸறா You all came தானே? Sir" ஆனது காலத்தால் அழியாததாகும்.அந்த மகுட வாக்கியத்தை உதிர்த்த பன்மொழிவித்தகர் "கமல்ஸ் aka கமலரூபன்" இன் புகழ் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் வாழும் நாள் வரை வாழும்.





எர்வின் ரோமல் The Desert Fox


நாசி ஜெர்மனி தளபதிகள் பற்றி எனக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது தற்செயலானது.2 ஆம் உலகப்போர் ஆவணப்படம் ஒன்றை பார்வையிட்டபோது தூண்டப்பட்ட ஆவல் நீடித்து சங்கிலிக்கோர்வையாக நூற்றுக்கும் குறையாத விபரணபடங்களை பார்ப்பதில் முடிந்தது.நவீன போரியலில் எத்தனையோ பிரசித்தமான தளபதிகள் வந்த போதிலும் ஜெர்மானிய இரண்டாம் உலகப்போர் தளபதிகளுக்கு ஒருவரும் ஒப்பாகமுடிவதில்லை.அதற்கான காரணங்கள் தெளிவானவை.மனித நாகரிகம் கடந்து வந்த யுத்தங்களிலேயே மிகப்பெரியதும் கொடூரமானதுமான இரண்டாம் உலகப்போரை நடத்திய இவர்கள் ஜெர்மனி தோற்றுப்போயிருந்த முதலாம் உலகப்போரில் இளநிலைத்தளபதிகளாக இருந்தவர்களிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள்.அதிகரித்த எதிரியின் ஆட்பலத்தால் மீண்டும் ஜெர்மனிக்கு தோல்வி நேராதிருக்க உயர் நுட்ப படைக்கல பிரயோகத்தோடு வித்தியாசமான முறையில் யுத்தம் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற நாசி தலைமைப்பீட சிந்தனைக்கு அமைவாக திட்டங்களை வகுத்தவர்கள்.அவ்வகையில் எரிக் வென் மன்ஸ்ரைன்,குடேரியன் ஆகிய நட்சத்திர தளபதிகள் கிழக்கு முனையில் ரஸ்யாவோடு போரிட்டுக்கொண்டிருக்கையில் தெற்கே தனியாக நின்று பிரித்தானியாவை நெருக்கிய எர்வின் ரோமல் தனித்துவமானவர்.

ஆபிரிக்காவையும் மத்திய கிழக்கையும் ஆதிக்கத்தில் கொண்டு வரும் பொருட்டு 1940,ஜூன் மாதம் ஆபிரிக்காவில் யுத்தத்தை தொடங்கிய முசோலினிக்கு அடி மேல் அடியாக விழுந்துகொண்டிருந்தது.பிரித்தானியர் கொலனி நாடுகளிடமிருந்து அணியணியாக ஆட்களை போருக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.பிரமாண்டமான ரோயல் நேவி படைகளுக்கு இடைவிடாது ஆயுதங்களை விநியோகித்துக்கொண்டு இருந்தது.நண்பனின் படைகள் படும் கஸ்டத்தை கண்டு பொறுக்க முடியாத ஹிட்லர் பிரான்சை துவம்சம் செய்து திரும்பியிருந்த எர்வின் ரோமலை உதவிக்கு போகும்படி பணித்தார்.அன்றிலிருந்து ஒரு தனிமனிதன் சிறு படையோடு ஒரு பேரரசையே ஆட்டம் காணவைத்த வரலாறு ஆபிரிக்க களமுனையில் ஆரம்பமானது.இரண்டாம் உலகப்போரின் ஆபிரிக்க களமுனை பிரித்தானியருக்கு வாழ்வா சாவா போராட்டம்.ஜெர்மனிக்கோ இரண்டாம் முக்கியத்துவமுள்ள முனை.பாபரோசா நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மில்லியன் ராணுவ வீரர்களுக்கே விநியோகம்,வான் ஆதரவு என்பன முக்கியமாக தரப்பட வேண்டும் என ஜெர்மன் தலைமைப்பீடம் நினைத்ததால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு போரிட வேண்டிய கட்டாயம் ரோமலுக்கு இருந்தது.

50 000 ஜெர்மானிய சிறப்பு படை வீரர்களும் நொந்து போன இத்தாலி வீரர்களுமாய் சேர்ந்து வட ஆபிரிக்காவில் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது என இறுமாந்திருந்த பிரிட்டிஸ்காரர்கள் அடுத்து நடந்தவை கண்டு அதிர்ந்து போனார்கள்.எதிரியின் முன்னரங்களை உடைத்து மிகவேகமாக முன்னேறுவது,திருப்பி தாக்க அவகாசம் தராது விரட்டுவது என ரோமலின் தாக்குதல்கள் எல்லாம் புதுவிதமாய் இருந்தன.ஜெர்மானிய டாங்கிகள் தான் ரோமலுக்கு வெற்றியை கொடுக்கின்றன என கருதி தடித்த கவசம் போர்த்திய மார்க் வகை டாங்கிகளை ஆயிரக்கணக்கில் தருவித்தார்கள்.மிகுந்த உயர் வேகத்தில் குண்டுகளை சுடும் 88 mm விமான எதிரிப்பு பீரங்கிகளை "U" வடிவில் தரையில் குழிவெட்டி நிலைப்படுத்தி விட்டு இலகு ரக தாங்கிகளால் போக்கு காட்டி அந்த பிரிட்டிஸ் கவசங்களை உள்ளிழுத்து முழுமையாக அழித்தொழித்தார் எர்வின் ரோமல்.தந்திரமிக்க ரோமலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய தளபதிகள் அவரை "Desert Fox" என்று அழைக்கத்தொடங்கினார்கள்.உயர் வேக விமான எதிர்ப்பு குண்டுகளின் கவசங்களை துளையிடும் திறன் குறித்து எவரும் அந்நாட்களில் சிந்தித்திருக்கவில்லை.

பாலைவன கவசபோர்களின் போது எழும் புழுதி நகரும் அணிகளில் கனதியை சொல்லி விடும்.இன்னொரு முறை ரோமலின் திட்டப்படி முன்வரிசையில் டாங்கிகளும் பின்னால் மரக்கிளைகளை கயிறு கட்டி இழுத்து வந்த நூற்றுக்கணக்கான டரக்குகளுமாய் சென்ற போலித்தாக்குதல் அணி எழுப்பிய புழுதியின் கனதியை கண்ட பிரித்தானியர் பிரதான எதிர்த்தாகுதலை அதை நோக்கி தொடுத்தார்கள்.அதே நேரம் சற்றும் எதிர்பாராமல் வேறொரு முனையில் தொடுக்கப்பட்ட கவச தாக்குதல் பிரித்தானியருக்கு பேரழிவை உண்டாக்கியது.ரோமல் Tobruk நகரை காத்துநின்ற 33 000 நேச படைகளை சிறைப்பிடித்த போது  ஹிட்லர் "Field Marshal" பதவி உயர்வு வழங்கினார்.எதிரியை முன்னரங்கு அமைத்து ஓய்வடைய விடக்கூடாது என்பதில் ரோமல் எப்போதும் குறியாக இருப்பார்.தன்னிடம் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் தாக்குதல் நடத்துவார்.இதனால் பிரித்தானியரால் சிறிதளவேனும் எதிரியின் நகர்வுகளை கணிக்க முடியாமல் வரிசையாக தோல்விகளை தழுவினார்கள்."சூரிய மறையாத சாம்ராஜ்யத்தின் படைகள் ஜெர்மனியின் உபகளமுனையில் இவ்வளவு அடி வாங்குவது எவ்வளவு அவமானம்?" என பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுந்தது.அதிருப்தியாளர்களுக்கு வின்ஸ்டன் சேர்ச்சில் அமைதியாக பதிலளித்தார் "We have a very daring and skillful opponent against us, and, may I say across the havoc of war, a great General".

மிக நேர்த்தியாக சீருடை அணிந்து சவரம் செய்த முகத்தோடு முன்னரங்கில் உலாவரும் எர்வின் ரோமலை பார்த்ததுமே வீரர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொள்ளும்."வரலாறு முக்கியம்" என்று அந்த நாளிலேயே நினைத்தாரோ என்னவோ கையடக்க லைக்கா கமெரா மூலம் அடிக்கடி களக்காட்சிகளை சுட்டுக்கொண்டு இருப்பார்.வெற்றி மேல் வெற்றி குவித்து முன்னேறி 1942,June 21 இல் "El Alamein" என்ற இடத்தில் முன்னரங்கை அமைத்து விட்டு எகிப்தை முழுமையாக கைப்பற்றுவதன் மூலம் சுயஸ் கால்வாயை ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் இறுதி நடவடிக்கையை மேற்க்கொள்ள தேவையான விநியோகங்களை அனுப்பும் படி தலைமைப்பீடத்துக்கு அனுப்பிய கோரிக்கை சிக்கலடைந்து கொண்டிருந்த கிழக்கு போர்முனையினை காரணமாக முக்கியத்துவமற்றதாக நிராகரிக்கப்பட்டது.

மறு பக்கத்தில் சேர்ச்சில் "Bernard Montgomeryஎன்ற புதிய தளபதியை நியமித்திருந்தார்.தடையில்லா ஆள்,ஆயுத விநியோகத்தை பெற்ற மொண்டகமூரி முதல் தடவை சண்டையை தொடக்கி ரோமலிடம் அடி வாங்கினார்.ஆயினும் ரோமல் பாதிக்கப்பட்ட உடல் நிலை காரணமாய் தாயகம் திரும்பியிருந்த போது தொடங்கிய இரண்டாம் "El Alamein"
யுத்தத்தில் அதிஸ்டம் மொண்டகமூரி பக்கம் இருந்தது.ரோமல் இரு தினங்களின் பின்னர் மீள வந்த போதும் நிலவரம் கை மீறி விட்டது.இதே நேரம் ரஸ்யாவை வென்ற பின்னர் பிரிட்டிஸ் கூட்டணியை பார்த்துக்கொள்ளலாம் என கருதிய ஹிட்லரும் முசோலினியும் ஆபிரிக்க களமுனையை மூடிவிட முடிவு செய்தார்கள்.மிகப்பெரியதாய் உருவெடுத்திருந்த ஆபிரிக்க நேச கூட்டுப்படைகளோடு மோத விடாமல் ரோமலை கட்டாய சுகவீன விடுமுறையில் ஹிட்லர் அனுப்பி வைத்தார்.ஜெர்மன் மக்கள் மனதில் போர்க்கள நாயகனாக வீற்றிருந்த எர்வின் ரோமல் கொல்லப்படுவதன் /சிறைப்படுவதன் மூலம் போர் எழுச்சி குறைவதை ஹிட்லர் விரும்பவில்லை எனச்சொல்லப்படுகிறது.இவ்வாறு ஒரு தனி மனிதனின் ஆற்றலால் ஜெர்மனியின் கைக்கு அருகே வந்த வெற்றி அடுத்து வந்த சில மாதங்களில் 200,000 அச்சு படைகளின் சரணடைவோடு கை நழுவிப்போனதுமில்லாமல் மேற்கு களமுனையை எதிர்கொள்ள மூலகாரணமாயும் அமைந்தது.


ERWIN ROMMEL-சில சுவாரசியமான குறிப்புக்கள்

ஒரு தடவை ஜெர்மனி பத்திரிகை குழு ஒன்று ரோமலை பேட்டியெடுக்க ஆபிரிக்காவுக்கு சென்றிருந்தார்கள்.வீரர்கள் சுட்டிக்காட்டிய திசையில் ஒருவர் எண்ணெய் படிந்த ஆடைகளோடு டாங்கி ஒன்றின் கீழ் படுத்திருந்து பழுது பார்த்துக்கொண்டு இருந்தாராம்."தளபதி ரோமலிடம் பேட்டி எடுக்க வேண்டும்.எங்கே இருக்கிறார் எனச்சொல்ல முடியுமா? "என கேட்க "பேட்டியை ஆரம்பிக்கலமா?" என்றபடி வெளியே வந்தவரைக் கண்டு பத்திரிகையாளர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

ஆபிரிக்க களமுனையில் ஒரு சுற்றி வளைப்பு தாக்குதலை மேற்கொள்ள 150 மைல்கள் தூரம் டாங்கிகள் பயணிக்க வேண்டியிருந்தது.50 கள் செல்ல தேவையான எரிபொருளே கையிருப்பில் இருந்தது.மீது தூரம் பயணிப்பது எப்படி என்று இளநிலை தளபதிகள் கேட்க "தாக்க வரும் பிரிட்டிஸ் கவசங்களின் எரிபொருளை பயன்படுத்துங்கள்" என பதில் கிடைத்தது.

பிரான்ஸ் மீதான போரின் போது ரோமலின் கவசப்பிரிவு "Ghost Division" என அழைக்கப்பட்டது.அப்பிரிவு ஒரே நாளில் 320km முன்னேறிய சாதனை இன்று வரை உடைக்கப்படவில்லை.கட்டளைப்பீடம் அடிக்கடி விபரம் கேட்டு தொந்தரவு செய்ததால் தகவல் தொடர்பை துண்டித்துவிட்டு போரிட்டார்.உயர் அதிகாரிகள் இச்செயல் தொடர்பில் கோபித்த போதிலும் ஹிட்லர் "நீ எங்கே இருக்கிறாய் என அறியாது நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம்" என ரோமலிடம் சொன்னாராம்.

ஆபிரிக்க களமுனையில் பிரிட்டிஸ் கமாண்டோ அணியினர் ரோமலை கொல்வதற்கு முன்னரங்கத்திலிருந்து 200 மைல் பின்னாலிருந்த தலைமைப்பீடம் மீது தாக்கினார்கள்.அவர் அரிதான சந்தர்ப்பங்கள் தவிர எப்போதுமே முன்னரங்கு மிக சமீபமாகவே இருப்பது அவர்களுக்கு தெரியாது.

முதலாம் உலகப்போரில் கப்டன் தரநிலையில் இருந்த ரோமல் 3 தடவை காயப்பட்டார்.குண்டுகள் தீர்ந்த நிலையிலும் 3 பிரெஞ்சு வீரர்களை துப்பாக்கி கத்தியால் தாக்கியது, 9000 இத்தாலி வீரர்களை சிறைப்பிடித்த போரில் பங்கேற்றது போண்றவற்றிற்காக ஜெனரல்களுக்கு மட்டுமே வழங்கப்படும் உயரிய "Pour le Merite" விருது கிடைத்தது.தனது முதல் உலகப்போர் அனுபவக்களை கொண்டு எழுதிய "Infantry attacksஎன்ற புத்தகம் மிகப்பிரபலமானது.



1944,பிரான்ஸ் கரையோரமாக நேச நாடுகளின் கடல்வழி தரையிறக்கத்தை தடுக்கும் அட்லாண்டிக் சுவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த ரோமல் "ஜெர்மன் விமானப்படை பலவீனப்பட்டிருக்கும் நிலையில் பொதுவான இடத்தில் கவசப்பிரிவை நிறுத்தி தேவைக்கேற்ப கடற்கரைகளை நோக்கி நகர்த்துவது சாத்தியமற்றதால் அவை கடலுக்கு சமீபமாகவே நிறுத்தப்பட வேண்டும்" என்று சொன்னார்.அந்த யோசனையும் ஹிட்லரால் புறக்கணிக்கப்பட்டது.இறுதியில் தரையிறக்கம் நடந்த போது அவர் கணிப்பிட்டவாறே நேச விமானப்படை டாங்கிகளை முடக்கிப்போட்டன.தரையிறங்கிய படையினருக்கு எதிரான போரின் 40வது நாள்,17 July 1944 அன்று காரில் பயணித்துக்கொண்டிருந்த போது பிரித்தானிய விமானப்படை தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


3 நாட்கள் கழித்து 20,அன்று உலகையே அதிரவைத்த அந்த குண்டு வெடிப்பு சம்பவம் கிழக்கு போர்முனை கட்டளைப்பீடமான "Wolf's Lair" இல் நடந்தது.வரைபட மேசையின் கீழ் ஹிட்லருக்கு எதிரான அதிகாரிகளால் வைக்கப்பட்ட சூட்கேஸ் குண்டு வெடித்து சிதறி நான்கு உயிர்களை குடித்தது.ஹிட்லர் கால்சட்டை மட்டும் கிழிந்து போக காயங்கள் எதுவுமின்றி தப்பிக்கொண்டார்.திட்டத்துக்கு துணைபோன 4980 பேர் சுட்டும் தூக்கிலிட்டும் கொல்லப்பட்டார்கள்.பிரதான குற்றவாளிகள் ரோமலின் நெருங்கிய முதலாம் உலகப்போர் கால நண்பர்கள்.பீல்ட் மார்சல் ஒருவரின் ஆதரவு இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி ரோமலை சந்தித்து உதவி கேட்டிருந்தார்கள்."ஹிட்லரை கொல்வதில் உடன்பாடில்லாத போதும் அவர் செய்து கொண்டிருக்கும் குற்றங்களுக்காக நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும் என ரோமல் சொல்லியதாக" இருந்த எதிர்ப்பு குழுவின் பதிவுகள் சிக்க 14 October 1944  அன்று காயங்களிலிருந்து முழுமையாக மீளாமல் போராடிக்கொண்டிருந்தவரிடம் வந்தவர்கள் மரணிக்க இரண்டு தெரிவுகளை வழங்கினார்கள்.ஒன்று தரப்படும் சயனைட்டை உட்கொள்வது.இரண்டாவது ராணுவ நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு மரண தண்டனையை ஏற்பது.தரப்பட்ட பத்து நிமிட அவகாசத்தில் மனைவி ,மகனிடம் விடைபெற்ற அந்த ஒப்பற்ற வீரன் தனது கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடமொன்றில் சயனைட் வில்லையை மென்று மரணத்தை தழுவிக்கொண்டார்.

இன்று உலகில் உள்ள எந்த ராணுவத்திலும் எர்வின் ரோமல் பற்றி சொல்லாமல் போர்வீரர்களுக்கு கவச போரியல் பற்றி கற்பிக்க முடிவதில்லை.போரில் சிறைப்படும் கைதிகளை பராமரிக்கும் விதம் பற்றி சொல்லும் போதும் உதாரணமாக காட்டப்படுபவர்களில் ரோமல் நிச்சயம் இருப்பார்.அதைவிட நாசி ஜெர்மனியின் போர்க்குற்றங்களை மீறியும் பலரால் இன்றளவும் நினைவு கூரப்படுவதானது எர்வின் ரோமலுக்கு கிடைத்த "Generalfeldmarschallபதவியிலும் பெரிய கௌரவம் எனலாம்.



வழக்கிட்ட காரிகை-05


காவல்துறை நிலையத்தில் உம்சாண்டியின் சைக்கோ தந்தை கொடுத்த "கொலை மிரட்டல்" முறைப்பாட்டை ஏற்று என்னையும் அலியப்பாவையும் பிடித்து செல்லவென நான்கு போலீசார் காலை 7 மணிக்கெல்லாம் பல்கலை வாசலில் வந்திறங்கிவிட்டனர்.இடியே விழுந்தாலும் காதருகே கிளைமோர் வெடித்தாலும் காலை 8.30க்கு பின்னரே தூக்கம் கலையும் நானும் சன்ராவும் நடப்பதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தோம்.காவல்த்துறையை உள்ளே அனுப்ப முடியாது எனக்கூறித்தடுத்த பல்கலைக்கழக காவலர்கள் எம்மை பிடிக்கவென விடுதிக்குள் இறங்கினார்கள்.ஆனால் எமது அதிஸ்டம் அவர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.சில மாதங்களுக்கு முன் நடந்த உள்மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணை போயிருந்த அவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கடுப்பில் இருந்தார்கள்.தமது ஆதிக்க பகுதியான விடுதிக்குள் நுழைந்து இரு மாணவர்களை அழைத்துச்செல்வதை விரும்பாமல் விரட்டிவிட்டார்கள்.நடந்தது எதுவுமே அறியாமல் வெளியே வந்து விடயம் தெரிந்து அதிர்ந்து போனோம்.விரிவுரையாளர்களுக்கும் தகவல் தெரிந்திருந்தது.அரை விசரன் வணிகதுங்க கூப்பிட்டு கடிந்து கொண்டான்.மதிய வேளை அவசரமாய் 7ஜி குழுமம் கூடியது.மீள காவல்த்துறை வர முதல் நாமாகவே சென்று விடுவது நல்லது என முடிவானது.அடுத்த அரை மணிநேரத்தில் காவல் நிலையத்தில் நின்றோம்.



முறைப்பாடு ஒரு தாளின் இரண்டு பக்கங்களிலும் தமிழில் எழுதப்பட்டிருந்தது.தமிழே தெரியாத நிலைய பொறுப்பதிகாரி உள்ளீட்டை "பெண் மீதான துஸ்பிரயோகம் மற்றும் வீடு புகுந்து கொலை மிரட்டல்" என எழுதி கீழே ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.அருகே இருந்த பெண் பொலீஸுக்கு உம்சாண்டியின் தந்தை கையூட்டு கொடுத்திருக்க வேண்டும்.எங்களை பிடித்து உள்ளே போட வேண்டும் என அடிக்கடி பொறுப்பதிகாரிக்கு சொல்லிக்கொண்டு இருக்க உசாரான அலியப்பா அகலமான வாயை திறந்து புன்னகைத்தபடி வரிக்கொரு "சேர்" போட்டு குழைய தொடங்கினான்.அந்த புன்னகையில் மயங்கிய பொறுப்பதிகாரி முறைப்பாட்டை கையில் கொடுத்து மொழிமாற்றி சொல்லும் படி பணித்தார்.அதை தகப்பனார் சொல்லச்சொல்ல மகள் எழுதியிருக்க வேண்டும் என ஊகித்துக்கொண்டோம்.பலவிதமான குற்றச்சாட்டுக்கள் நிரம்பியிருந்த அவ்முறைப்பாட்டில் இறுதிப்பந்தி எம்மை அவசரகால சட்டத்தில் பிடித்து போடக்கூடியவகையில் வடிக்கப்பட்டிருந்தது."வட பகுதியை சேர்ந்த தீவிர நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறியப்படும் இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்" என்றிருந்த அந்த வரிகளை அலியப்பா தயங்கி தயங்கி மொழிமாற்றி சொல்லிவிட்டு பொறுப்பதிகாரியை பார்த்து "சேர்ர்ர்ர்ர்ர்ர்" என்று இழுத்தான்.எம்மவர்களின் தனிப்பட்ட விரோதத்துக்காக போட்டுக்கொடுக்கும் இயல்பை பலதடவை கண்டதாலோ என்னவோ பொறுப்பதிகாரி இறுதி வரிகளை படித்தவுடன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.ஜெயவர்த்தன பல்கலையில் பயின்றிருந்த அவர் நடந்திருக்கக் கூடியதை சரியாக ஊகித்திருப்பார் போலும்.நீண்ட பிரசங்கம் ஒன்றை நடத்தி "நான் என்றதால் தப்பித்தீர்கள்.வேறு யாராவது என்றால் இப்படி எழுதியிருப்பதைப்பார்த்தால் உள்ளே போட்டிருப்பார்கள்.கவனம்" என்று முடித்து செல்ல அனுமதித்தார்.


துள்ளிக்குதித்து ஓடி வந்த நாம் பிரச்சனைகள் ஓய்ந்தனவென்று முடிவெடுத்து என்று மீள கமெராவை தூக்கிக்கொண்டு நின்று போன படத்தை எடுக்க தொடங்கினோம்.ஒரு பக்கமாய் "புறஜெக்ட் ரிப்போட்" கொடுக்க வேண்டிய திகதி நெருங்கிக்கொண்டிருந்தது.இரவில் புரஜெக்ட் பகலில் படப்பிடிப்பு என்று தீயாக தூக்கம் மறந்து இயங்கிக்கொண்டிருந்தோம்.2007 மார்கழி மாதம் கிளைமோரில் சிக்கி வவுனியாவில் இருந்து ஓடிவந்தோம்.2008 ஜனவரியில் அலியப்பாவை தூக்கிக்கொண்டு போய் தெகிவளை குடுக்காரன்கள் பிரிச்சு மேய்ந்தார்கள்.என்னை தேடிக்கொண்டிருந்தார்கள்.இன்னொரு பூச்சி மட்டக்களப்பில் இருந்து எச்சரிக்கை கடிதம் வரும் ஆளணி அம்போடு மிரட்டிக்கொண்டிருந்தான்.2008 மார்ச்சில் கட்டுப்பெத்தை குடுகாரன்கள் அலியப்பாவும் சிரிப்பு ரவுடி,சௌந்தர் வெளியே சாப்பிட போகும் போது தட்டிப்பிழிந்து தக்காளி சட்னி வரவைத்து அனுப்பி வைத்தார்கள்.இது போதாது என்று கூடவிருந்த ரிஸ்மி வேறு கலவரம் செய்து எக்குத்தப்பாய் சிங்கள மாணவர்களிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்.இப்படி "சனியன் உங்கட ஹொஸ்டல் றூமுக்க படுத்திருக்குதோ மச்சான்?" என்று பிறர் கேட்கும் அளவுக்கு அடி அடியாய் வாங்கிக்கொண்டிருந்தோம்.நடப்பதை பார்த்து கலங்கிப்போன அச்சுதனும் வெறிக்குட்டியும் ஒரு நடுட இரவில் வீட்டுக்கு ஓடிப்போய் ஒரு மாதம் கழித்துத்தான் விடுதிக்குள் வந்தார்கள்.இப்படியான ஒரு நிலையில்த்தான் நாங்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தோம்.புரஜெக்ட் றிப்போட் எழுதிக்கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராமல் எனக்கு பல்கலை கழக விசாரணைக்கு அழைப்பு வந்தது.கமல்சுக்கும் வந்திருந்தது.கூடவே மங்கோலியனுக்கும்.



பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று பிரிவால் நடத்தப்பட்ட விசாரணை நடந்த ஒரு மணித்தியாங்களும் என் வாழ்நாளில் மிக அசிங்கமானவை.எனக்கு பேசவே சந்தர்ப்பம் தராது மலையாக குற்றச்சாட்டிக்களை அடுக்கிய சிங்கள விரிவுரையாளர்கள் ஆளாளுக்கு சிக்மண்ட் பிராய்ட்டை மிஞ்ச முயன்று கொண்டிருந்தார்கள்.நான் ஏன் அப்படி செய்தேன் என்பதற்கான உளவியல் காரணங்களை வாயெல்லாம் அசிங்கமாய் லிப்ஸ்டிக் குதப்பிய ஒரு பெண் சிங்களவிரிவுரையார் வரிசைப்படுத்தினார்.நான் மறுத்த போது ஒப்புக்கொண்டால் தண்டனை குறைவு என்று சொன்னாள்.எனக்கு சினிமாவில் பார்த்த விசாரணை காட்சிகள் தான் நினைவுக்குள் வந்தன."இதெல்லாம் ஒரு கம்பஸ்,இதெல்லாம் ஒரு டிகிரி" என்ற மனநிலையில்தான் விசாரணைக்கு வரும் போது இருந்தேன்.நீள்வட்டமாக மேசை போட்டு சுற்றியிருந்து மிரட்டிய மிருகங்களை பார்த்ததும் வெள்ளைக்கொடியை தூக்கி விட்டேன்.இறுதியில் "உனக்கு தண்டனை வழங்கப்படும்.அதை பிறகு சொல்கிறோம்" எனச்சொல்லி சில வாரங்களுக்கு என்னை உள நெருக்கடிக்குள் புதைத்தார்கள் அந்த கவுன்சிலிங் மேதைகள்.




முடிவில் புறஜெக்ட் கொடுக்க முடியாதபடி ஒரு மாதம் தடை கிடைத்தது.ஆயினும் பல்கலைச்சூழலிலும் வெளியேயும் தமிழ் மாணவர்கள் அப்போது எதிர்நோக்கிய மிகச்சிக்கலான நிலையை கருத்தில் கொள்ளுபடி இரக்க மனம் படைத்த விரிவுரையாளர்கள் கேட்டதையிட்டு அது பின்போடப்பட்டது.கமல்ஸும் நானும் விசாரணை விடயங்கள் பற்றி பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம்.என்னை முதல் குற்றவாளியாகவும் கமல்சை இரண்டாம் நிலை குற்றவாளியாகவும் கருதி இருக்கிறார்கள் என்று புரிந்தது.மங்கோலியன் எப்படி தப்பினானோதெரியவில்லை."எனக்கு தெரியாது.அவர்களை கேளுங்கள்" என்று விசாரணையில் சாதித்திருப்பான் போலும்.இறுதி வரை அவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.



2008,ஜூன் மாதம் கட்டுப்பெத்தையில் நடந்த கிளைமோர் வெடிப்பு பேரனர்தமும் பின் நிலவிய பயங்கர சூழலும் எங்களை வெள்ளவத்தை அறைகளுள் முடக்கிப்போட்டன.செப்ரெம்பரில் லண்டன் வந்த பின் நானும் கமல்சும் இவ்விடயம் தொடர்பில் அலசத்தொடங்கினோம்.என்னென்ன வழி முறைகள் ஆப்பு அடிப்பதுக்கு உண்டோ அவ்வழிமுறைகள் எல்லாவற்றையும் பரிந்துரைத்த கொழும்பு "டமில்" சகமட்ட பேர்வழிகள்,சைக்கோ ஜூனியர்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.Material department உதவி விரிவுரையாளராக இருந்த போது மங்கோவுக்கு உதவப்போய் சிக்குப்பட்ட சீனியர் ஒருவரிடமிருந்தும் பெறுமதியான தகவல்களை உருவினோம்.மங்கோவின் தந்தையுடன் கூடிக்குலாவி வழக்கிட உறுதுணையாக இருந்த வீணைகள்,வதையன்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.வேலைப்பழுவும் காலமும் அந்த அருவருப்பான நிகழ்வை மறக்கச்செய்திருந்தது.ஆயினும் சிங்கபுரிக்கு 2011 Januaryல் போன போது கேள்விப்பட்ட சிலவிடயங்கள் கோபத்தை கிளறி முதலாவது பாகத்தை எழுத தூண்டின.அதற்கு எதிர்வினையாக மங்கோ செய்த கீழ்தரமான செய்கைகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக இத்தொடரை ஐந்து பாகங்களாக எழுத தூண்டுகோலாக அமைந்தன.

{இத்தொடரின் நோக்கம் தனிநபர் தாக்குதலை நோக்கமாக கொண்டதல்ல.தனிநபர் தாக்குதலை தடுப்பதற்காக பல விடயங்களை தணிக்கை செய்து இருக்கிறேன்.உளப்பாதிப்பு கொண்ட பெண்களால் அப்பாவி ஆண்கள் சமுதாயத்தில் பல் பாதிப்புக்களை சந்திக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காகவே எழுதும்படி ஆனது}

பிற்குறிப்பு-காவல் நிலையத்திலிருந்து நானும் அலியப்பாவும் வெளியே வரும் போது அந்த பெண் பொலீஸ் அலியப்பாவிடம் வந்து தொலைபேசி இலக்கத்தை கேட்டுப்பெற்றுக்கொண்டாள்.காவல் நிலையத்திலிருந்து அழைக்காமல் பிரத்தியோக கைத்தொலைபேசி மூலமாக அடிக்கடி அழைத்து "மீள விசாரிக்க வரும்படி" சொல்லிக்கொண்டிருந்தாள்.7ஜி குழுமம் கூடி முடிவெடுத்து அலியப்பாவிடம் சொன்னது "மச்சான்! அவள் கூப்பிடுறது விசாரிக்க இல்லை.அவளுக்கு உன்னிலை ஒரு பிளானடா".பிறகென்ன வந்த ஒரு மாதத்துக்கும் அலியப்பா சிங்களத்தில் டூயட் பாடிக்கொண்டு திரிந்தான்.ஆயினும் இதுவும் ஒருவகையான பொறியாக இருக்கலாம் என கருதி இறுதி வரை சந்திக்க போகவில்லை.இவன் ஒரு வாய் வேட்டுப்பேர்வழி என முடிவெடுத்த அவள் தானாகவே தொடர்பை நிறுத்திக்கொண்டாள்.

-முற்றும்.