2007 ஆம் ஆண்டு.மொறட்டுவை கம்பஸ் விடுதியில் மாதக்கணக்கா உடம்பில் தண்ணி படாமல் வாழ்ந்து கொண்டிருந்த சிரிப்பு ரவுடி அடாத மழை பொழிந்தாலும் விடாமல் வெயில் அடித்தாலும் தினசரி பல்லு தீட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.பல்லு மினுக்குவதற்கு தேவையான சாதனங்களான தூரிகை,மற்றும் பற்பசை என்பனவற்றில் பிரிந்து போன ஒரு பழைய தூரிகையை சொந்தமாக வைத்திருந்ததும் அதற்க்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.பற்பசைக்கு எங்கே போவது என்று சிந்தித்த அவருக்கு அலியப்பாவின் அலமாரிக்குள் இருந்த புதிய சிக்னல் தீர்வை தந்தது.எதையும் அளந்து பிளான் பண்ணி செய்யும் அலியப்பாவுக்கு பற்பசை வழமைக்கு மாறான வேகத்தில் குறைந்து சென்றது வெகு விரைவிலேயே விளங்கிவிட்டது.


"யாரோ என்ர பேஸ்ர எடுக்கிறான்கள்.அவன் இண்டையோட அத நிப்பாட்டோணும்" என்று பொதுவா ஒரு எச்சரிக்கையை லொக்கரை திறந்து பார்த்து விட்டு விட்டான்.அலேர்ட் ஆன சிரிப்பு ரவுடி அந்த நாள் பேஸ்ட் இல்லாமல் பல்லை துலக்கினார்.ஆனால் ஆடிய காலும் பாடிய காலும் சும்மா இருக்காது என்பது போல் ஆட்டைய போட்ட கை பரபரத்து மறுநாள் மீளவும் எடுத்து பிதுக்கி விட்டார்.திறந்து பார்த்த அலியப்பா மீளவும் சத்தம் போட்டான்."எடுத்த இடத்திலேயே வைக்கிறன்.எப்பிடி பிடிக்கிறான்?"என்று பென்ரியம் 1 மூளையை போட்டு கசக்கிய சிரிப்பு ரவுடி இறுதியாக சேகரன் காலில் போய் விழுந்தார்."மச்சான்.நான் தான்டா அவன்ர பேஸ்ர ஆட்டைய போடுறனான்.அதே இடத்தில திரும்பி வைக்கிறன்டா.எப்படி கண்டு பிடிக்கிறான் எண்டு விளங்கேலையடா"

சேகரன் அலியப்பாவின் லொக்கரை திறந்து பார்த்தான்.பற்பசை படுத்து இருந்தது.அதன் வாய்ப்புறமாக ஒரு குவளை இருந்தது.வால்ப்பகுதிக்கு அருகே ஒரு நாணய குற்றி வைக்கப்பட்டிருந்தது.இரு பொருட்களையும் இணைக்கும் அச்சில் அது இருந்தது."இண்டைக்கு எடுத்துப்போட்டு இதே அச்சில வை.அலியப்பாவால ஒரு ஆணியும் பிடுங்க முடியாது" என்றுதனது புலனாய்வு அறிக்கையை சேகரன் முடித்துக்கொண்டார்.

அன்று வழமையை விட அதிகமாக பற்பசையை ஆட்டையை போட்டு வாய் நிறைய நுரை கிளம்ப பல்துலக்கிய சிரிப்பு ரவுடி பலவாரங்களுக்கு பின்னர் குளித்தும் இருந்தார்.லொக்கர் கதவை திறந்து பார்த்த அலியப்பா "பேஸ்ர இப்பவும் எடுக்கிறவன் ஒரு சொறி நாய்.ரோசமில்லாத ஜென்மம்.இதெல்லாம் கலியாணம் கட்டினா பக்கத்து வீட்டுக்காறன் மனுசிய தள்ளிட்டு போவான்" என கிழி கிழி என்று கிழிக்க தொடங்கினான்.

தங்கள் புலனாய்வு திறமைக்கு அப்பால் பட்ட விடயம் இது என்பதை உணர்ந்து கொண்ட சிரிப்பு ரவுடியும் சேகரனும் சில நாட்களின் பின் நடந்த ஒரு தண்ணி பார்ட்டியில் நிபந்தனையின்றி அலியப்பாவிடம் சரணடைந்து உண்மையை சொன்னார்கள்."எப்படி பிடிச்சனி மச்சான்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.


பதிலேதும் லொக்கர் அருகே அழைத்துப்போன அலியப்பா ஒரு புள்ளியை கூர்ந்து பார்க்க சொன்னான்.அதிர்ந்து போன சிரிப்பு ரவுடி அன்றே புதிய பற்பசை ஒன்றை சொந்தக்காசில் வாங்கிவிட்டார்.

"அங்கே தலை மயிர் ஒன்று லொக்கர் கதைவை திறக்கும் போது அறுபடும் வகையில் குறுக்காக ஒட்டப்பட்டிருந்தது"


"உடம்போட ஒட்டினதா ஒரு கழுசானை போட்டு மேலால உள்ளுடுப்ப போட்டா சூப்பர் மான் சாயல் அடிக்கும்.அதுக்காக சட்டைய கழட்டினா டார்சனை கொப்பி அடிக்கிறான் எண்டு சனம் சொல்லும்.சிக்ஸ்பக் உடம்பு இருந்தாலும் ஸ்பைடர் மேனைப்போல உடம்பை ஒட்டி உடுப்பு போடலாம்.இருக்கிற பேத்தை வண்டியோட அதயும் செய்ய ஏலாது.அப்ப என்ன கறுமத்த பண்ணலாம்?".பலத்த சிந்தனையோடு வேப்பமரத்துக்கு கீழ் இருந்த அச்சுதன் அயல்வீட்டு செல்லம்மா மதில்மேல் தன்ரபாட்டுக்கு இருந்து முட்டைக்கோதை கொறித்துக்கொண்டிருந்த அண்டங்காகத்தை  "சூய்"  என்று பெருங்குரலில் விரட்ட திடுக்கிட்டெழும்பி "நான் ஒரு சூமான் ஆவேன்"" ஆவேன் எண்டு கத்தியபடி வீட்டுக்குள் ஓடிச்சென்றான்.

அச்சுவுக்கு ஊரில எல்லாம் இருப்பதாகப்பட்டாலும் ஆசைக்கொரு சூப்பர் ஹீரோ இல்லாதது நெடுநாள் குறையாய் இருந்தது."பெட்டையளோட சேட்டைவிடுற காவாலியள்,ஆமிக்காறனுக்கு காமவலை விரிக்கும் பெண்கள்,கூரை பிரிச்சு பாயும் கள்ளன்கள் பயந்து ஒடுங்க பறந்து வந்து குதிச்சு அடிச்சு நெறுக்கும் ஒராள் யாழ்ப்பாணத்தில் இருந்தா எவ்வளவு  நல்லா இருக்கும்?" என பலதடவை யோசித்து இருந்தாலும் நடைமுறைக்கு சாத்தியம் குறைவானதாக கருதி விலக்கியிருந்தான்.பறந்து பாய,குதிக்க யாழ்ப்பாணத்தில் தவிர உயரமாக பனை மரத்தை தவிர எதுவும்  இல்லாதது மிகப்பெரும் பிரச்சினையாகப்பட்டது.அசம்பாவிதம் நடக்கிற இடத்துக்கு சைக்கிளிலோ பல்சரிலோ கிளம்பினால் போய்ச்சேரமுதல் ஐஞ்சாறு இடத்தில ஆமிக்காறன் மறிச்சு ஐடி கேட்டு முகமூடிய கழட்ட சொல்லிடுவான்.ஆமிக்காறனை சமாளிச்சாலும் போய்ச்சேர்ந்தாலும் கிறீஸ் பூதத்தின் ஒரு வகையாக இருக்குமோ என்ற அச்சத்தில் சூப்பர் ஹீரோவை சனம் கொலைவெறியோடு விரட்டவும் தயங்காது.
 இப்போது அறைக்குள் ஓடி வந்து கதவை தாளிட்டு கொண்ட அச்சுதன் பயம்,தயக்கம் நீக்கி களமிறங்கவேண்டிய தருணம் வந்துவிட்டதாக உணர்ந்தான்.கோயில் குளம் என்று திரியும் செல்லம்மா "சூ" எனக்கத்தியதால் "சூமான்" என்ற பெயர் தோண்றியது நல்லவொரு சகுனமாகப்பட்டது.இனி ஆடை வடிவமைக்கவேண்டியது தான் மிச்சம்.வாழைநாரில் அறுநாக்கொடியை கட்டி முன்னுக்கும் பின்னுக்குமாய் இரண்டு பழந்துணியை தொங்கவிட்டு பனையோலை கண்பட்டி ஒன்றை ஆள் அடையாளத்தை மறைக்க போட்டான்.கண்ணாடி முன்னால் நிற்க எதோ ஒன்று இடித்தது.நீட்டு சொக்ஸ் ஒன்றை போட்டு முழங்கால் வரை இழுத்து விட இடிப்பு அகன்றது.தேக்குமர கதவு கணக்காவிரிஞ்சிருந்த நெஞ்சில் "SU.M.N" என ஏழுதிய காகிதத்தை எச்சில் தடவி ஒட்ட இன்னும் ஒரு தொன் கம்பீரம் ஏறியது.யாழ்ப்பாணசனம் எமன் வெள்ளைநிறத்தில வந்தாலே "வீட்டுவாசல் நிக்காம உள்ளவந்து சாப்பிட்டு போமன் தம்பி" என்று கூப்பிடும் அளவுக்கு தாழ்வுமனச்சிக்கல் பிடிச்சதுகள்.சூப்பர் ஹீரோ கருப்பா இருந்தா செருப்பாலை அடிக்க வருங்கள்.வூடோ பவுடரை தண்ணியில் கரைச்சு உடம்பு முழுக்க பூசி கண்ணாடியை பார்த்து தனக்குத்தானே நாவுறு கழிச்சு முற்றத்தில் அச்சு குதித்து இறங்கிய போது மணி 00.00 ஆகிப்போயிருந்தது.
குதிச்சதால் கிளம்பிய புழுதியும் குதிக்கால் நோவும் அடங்க முதல் "உர்ர்ர்ர்" என்ற சத்தத்தோடு றோமி முன்னால் நிண்டது.றோமி அல்சேசன் அப்பாவுக்கு உள்ளூர் அம்மாவுக்கு பிறந்த முரட்டுப்பையன்.கனபேரை தொப்புளை சுத்தி ஊசிபோட வச்ச சிங்கம்.அச்சுவை கண்டால் வாலாட்டிக்கொண்டு வளையவருபவன் இன்று கடித்து குதற நெருங்கிறான் என்றால் எங்கோ பிழை இருக்கிறது."நாயள் மணத்த வச்சுத்தான் ஆள அறியுங்கள்,புறத்தோற்றம் பார்த்து மனுசர் மாதிரி பழகாதுகள்" என்று அப்பர் சொல்வது நினைவுக்கு வர உடம்பெல்லாம் பவுடர் பூசியிருந்தது உறைத்தது."பாலும்,மீன்குழம்பும்,புறயிலர் கோழியும் அவிச்ச முட்டையும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்.அல்சேசன் பேரினத்து கடிநாயே கொத்தோட கவ்வாம விடு" என்று பாடி முடிக்க முதல் இடுப்பில் இருந்த வாழைநார் அறுநாக்கொடி படீரென தெறித்தது.குனிந்து நோக்க றோமி வாயில் பழந்துணியோடு நின்றது.அடுத்த நொடி அச்சு முற்றத்து மாமர உச்சியில் நின்றான்.றோமி மரத்தடிக்கு மூத்திரம் அடித்து விட்டு மண்ணை விறாண்டி விறாண்டி வளைய வரதொடங்கியது. 
யாழ்ப்பாணத்தின் முதலாவது சூப்பர் ஹீரோவுக்கு அம்மணமாக மரக்கொப்பில் நாய்க்கு பயந்து ஒளியவேண்டிய நிலை ஏற்பட்டதையிட்டு அச்சுவுக்கு மிகவருத்தமாக இருந்தது.உடுப்பு இல்லாம ஊருக்க போகவும் ஏலாது.திரும்ப வீட்டுக்க போக நாயும் விடாது.சொக்சுக்குள்ள இருக்கிற கலக்சி S3 தான் ஒரே ஒரு நம்பிக்கை.பெடியளுக்கு அழைப்பை போட்டு ஒரு சாறத்தோட அவசரமா வரும்படி சொல்லலாம்.அவங்கள் வந்தாலும் கேற்றுக்கு வெளியாலதான் நிப்பாங்கள்.உள்ளவர றோமி விடாது.மதில் வரை நீண்டிருந்த கொப்பு நுனிவரை போய் எட்டிப்பார்க்க அஞ்சாறு அடிக்கு மேல் தாண்டினால்த்தான் வீதியில் விழலாம் என்று தோண்றியது.சோர்வோடு மரக்கொப்பில் கண்ணயர்ந்த அச்சு ஏதோ ஒன்று ஊர்வது போலிருக்க விழித்தான்
"ஐய்யோ பாம்பு" என்று கத்தியபடி மரக்கொப்புவழி ஓடி ஆறடிதூரத்தை காற்றில் தாண்டி வீதியில் வந்து விழுந்தவனை சந்திகாவலரணில் இருந்து கண்ட "கசூன் கமகே" துவக்கை லோட் பண்ணி வெடியொன்றை குத்து மதிப்பாக வைச்சான்.அச்சுவின் பின்புறமாக ரவை உரசிக்கொண்டு போனது.யாழ்ப்பாணத்தின் முதலாவது சூப்பர் ஹீரோ இப்பொழுது  பல்சரை விட வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.அடுத்த வேட்டிலிருந்து தப்ப வெறித்தனமாக குச்சொழுங்கை ஒன்றுள் திரும்பியபோது அது நடந்தது.திருவிழா வில்லுப்பாட்டுக்குப்போய் கால்நடையாக வீடு திரும்பிக்கொண்டிந்த சதாசிவத்தையும் மனுசிக்காறியையும் மகள் பிருந்தாவையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்த கள்ளனின் முதுகுப்புறமாக சூமானாகிய அச்சு பெருவேகத்தோடு இடிபட்டான்.காற்றில் பறந்து வேலிக்கரையோரமாக விழுந்த கள்ளன் அசைவின்றி கிடந்தான்.அச்சுவும் அதிர்ந்து போய் சில கணம் நின்றான்.சதாசிவம் தன் முன்னே உடம்பெல்லாம் வெளிர்பொடி பூசி அம்மணமாக நின்ற மனிதனின் நெஞ்சில் எழுதி இருந்ததை வாசித்தார்."சு.மா.ன்"
"சுடலை மாடா என்னை காப்பாத்த நீயே நேரில் வந்துட்டியா.உன் திரு விளையாடலுக்கு அளவே இல்லையாப்பா "
சதாசிவம் பக்திபரவசத்தில் மயக்கமாக மனுசிக்காறி தாங்கிபிடிக்க மகள் பிருந்தாவோ அச்சு ஓடி மறைந்த பாதை வழி பார்த்தபடி அடுத்த அரை மணித்துளிகளாக நின்றிருந்தாள்.
வவுனியாவில் நடந்த சம்பவம் மெலிதாக பல்கலைக்கழகத்துள்ளும் கசியத்தொடங்கியிருந்தது."அது எப்படி நீங்கள் போகிற இடத்தில் மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது?" என்று வேறு சிலர் நேரடியாக கேட்டு வேறு பீதியை கிளப்பினார்கள்.வடபகுதி அடையாள அட்டை வைத்திருப்பது மட்டுமே கைது செய்யப்பட போதுமானதாக இருந்த நாட்களில் மனநோயாளியான உம்சாந்தியின் தந்தை பல்கலைக்கழக கவுன்சிலரான வணிகதுங்கவிடம் வந்து முறைப்பாட்டை தாக்கல் செய்தான்.2007 சங்கமம் நூலில் இருந்த புகைப்படத்தை எடுத்து அரைவேக்காட்டு வணிகதுங்க பிரச்சினையை உருவாக்கும் பேர்வழிகளை காட்டும்படி கேட்டுக்கொள்ள உம்மாசாண்டி என்னையும் கமல்சையும் சுட்டி வழக்குக்கு பிள்ளையார் சுழியை போட்டு வைத்தாள்.விரிவுரை முடிந்து மதிய உணவுக்கு போவதற்கு தயாராகிக்கொண்டிருந்த ஒரு மதியம் வணிகதுங்கவிடம் இருந்து அழைப்பு வந்தது.

வெருளிக்கு நாகரிக உடை அணிவித்தது போல இருக்கும் வணிகதுங்க தன்னை ஒரு அறிவாளியாக காட்டுவதற்கு எடுக்கும் சிரத்தை விரிவுரை மாணவர்களுக்கு விளங்கவேண்டும் என எடுக்கும் கவனத்திலும் அதிகமாவே எப்போதும் இருப்பதாய் கருதி நான் அடிக்கடி கடுப்பாவதுண்டு.அவனது அறைக்குள் போனதும் "நீ ஒரு பெண்னை பின் தொடர்வதாகவும் பௌதீக ரீதியாக அவளை அணுக முயல்வதாகவும் எங்களுக்கு முறைப்பாடு வந்திருக்கிறது.அந்த பெண்ணைப்பார்த்தேன்.அழகான குணமான பெண்.ஆனால் நீ அவளை பிழையான விதத்தில் அணுகுகிறாய் என நினைக்கிறேன்" என்று பெரிய உளவியலாளர் பருப்பு போல கதைத்துக்கொண்டு போனான்.எனக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த உருவத்தை அழகு என்றதும் அதன் பின்னால் நான் செல்வதாக கூறியதும் படுபயங்கரமான கோபத்தை ஏற்படுத்தின.வணிகதுங்கவிடம் வாதிடத்தொடங்கினேன்.இலங்கை அரச பல்க்லைக்கழகங்களில் விரிவுரையாளர் சொல்வதை மறுத்து உரையாடுவது மிக அரிதானது.இருந்த போதிலும் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டதை பொறுக்கமுடியாமல் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை வைத்து போராடினேன்.வணிகதுங்க விடுவதாக இல்லை.இது பெரிய பிரச்சினையை உருவாக்கப்போக்றது.மேன் மேலும் அதை வளர்க்காமல் இருக்கவேண்டுமானால் அந்த பெண் பின்னால் செல்லாதே என்று கூறிவிட்டு போகும் படி சொல்லிவிட்டான்.


விடுதிக்கு வந்தவுடன் நண்பர்களுக்கு அழைப்பை போட்டேன்.எல்லோரும் ஒவ்வொரு திக்கில் நின்றார்கள்.அலியப்பா மோட்டார் சைக்கிளில் அடுத்த ஐந்தாம் நிமிடம் அறையில் நின்றான்.விசரியின் வீட்டு விலாசத்தை ஒரு தெரிந்த நண்பரிடம் இருந்து எடுத்தாகிவிட்டது."விட்டா நாளைக்கு பிள்ளைய நீ குடுத்திட்டாய் எண்டும் சொல்லுவாள் போல கிடக்கு" என்று வேறு அலியப்பா பீதியூட்டினான்.ஒரு வேளை வேற யாராவது பின்னால போய் ஏதாவது பண்ணிட்டு சிக்கலாகின உடன என்ர பெயர போட்டுகொடுத்திட்டு மாறிட்டானோ தெரியேலை.ஆனா புத்தகத்தில் என்ர படத்த தெளிவா காட்டியிருக்கிறாளே!.ஏதாவது பார்வை கோளாறு உள்ளவளா இருப்பாளே!.வகைவகையாக யோசித்துக்கொண்டிருக்கும் போதே அலியப்பாவின் பைக் சொய்சாபுரத்தையும் தாண்டி பறக்க தொடங்கிவிட்டிருந்தது.


பிளட்ஸ் வாசலில் நின்ற காப்போனிடம் விபரங்களை கொடுத்துவிட்டு உள்ளே போய் கதவை தட்டினோம்.
"நான் சுகந்தமாறன்.மொறட்டுவை யூனிவெர்சிட்டியிலிருந்து வந்திருக்கிறேன்.நான் உங்கள் மகளுக்கு பிரச்சினை கொடுத்ததாக முறைப்பாடு கொடுத்துள்ளீர்கள்.பெயர் மாறி கொடுத்துவிட்டீர்களொ தெரியவில்லை.அதை கேட்டறியவே வந்துள்ளேன்"
"எதுக்கும் கீழே போய் நில்லும்.நான் வருகிறேன்" சொல்லிவிட்டு கதவை அடிச்சு சாத்தியவன் உம்சாண்டியின் தந்தையாகயாக இருக்கவேண்டும் என்பதை ஊகித்துக்கொண்டு கீழிறங்கி வந்தோம்.


ஐந்தாவது நிமிடம் சிகெரெட்டை புகைத்தபடி ஒரு சிரிப்பு ரவுடிக்குரிய பாவனைகளோடு கீழே இறங்கி வந்தவன் ஆக்ரோசமாக கத்ததொடங்கினான்.
"நீங்கள் வவுனியாவில வெடியில அம்பிட்டது கேள்விப்பட்டவிடனயே திட்டத்தை போட்டுட்டன்டா! உன்ர வரலாறே எனக்கு தெரியும்.உன்ர குடும்பம் எங்க இருக்குது? என்ன செய்யுது என்றும் தெரியும்.சரியா ஆளுக்கு எதிராகத்தான் முறைப்பாட்டை கொடுத்து இருக்கிறேன்.அங்க வழக்க போட்ட உடன ஓடி வந்து கதவை தட்டி காலில் விழவச்சன் பார்த்தியோ.இனித்தான்ரா மிச்சம் இருக்கு" என்று சொல்லிவிட்டு வெறித்தனமாக மனநோயாளிபோல சிரிக்கத்தொடங்கினான்.அலியப்பா என்னை தடுத்துவிட்டு சமாதானம் போசத்தொடங்கினான்.எதையுமே அவன் காலில் விழுத்தாமல் என்னை ஒரு பாலியல் குற்றவாளி ரீதியில் அவன் பேசிக்கொண்டு போக நானும் வாய்த்தர்க்கத்தில் இறங்கிவிட்டேன்."இவனோடு பேசிப்பிரியோசனமில்லை வாடா போவம்" என்று பைக்கில் பாய்ந்து ஏறி ஓடித்தப்பும் வரை அவனது பேய்சிரிப்பும்  நிற்கவில்லை.

புதிய விடுதியில் இன்றைய இரவு சந்திப்பு பெரியதாக இருந்தது.மங்கோவைத்தவிர அனைவரும் நடந்ததை கேள்விப்பட்டு வந்திருந்தார்கள்.ரெக்ஸ்டைல் சிங்களபெட்டையள் விசயத்தை கேள்விப்பட்டுட்டு "சுகி மேல பாலியல் வழக்கா?,வாய்ப்பே இல்லை.பெண்ணா போனாலும் அவன் ஓடியிருப்பானே?" என்று சொன்னதை மீட்டி என்னை சிரிக்கவைக்க நண்பர்கள் முயன்று கொண்டிருந்தார்கள்.நெருங்கிய நண்பர்கள் ஆளுக்கொவ்வொரு விதமாய் மனதில் பட்டதை சொன்னார்கள்.சிப்லி "என்ன தான் இருந்தாலும் ஒரு பெட்டை இப்படி வழக்கை போட்டிருக்கெண்டா ஏதோ நடந்திருக்கு.உண்மைய சொல்லிடு மச்சான்" என்று வேறு கேட்டு கடுப்பேத்தினான்.என்மீது பிறர் அனுதாபம் காட்டுவதை விரும்பாத போதும் இவ்வளவு நண்பர்களும் ஆதரவாக இருக்கிறார்களே என்பதை நினைக்க ஆறுதலாக இருந்தது.விடிகாலையில் காவல்துறைவாகனம் ஒன்று "வீடு புகுந்து கொலை முயற்சிக்கு முயன்றனர்" என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் என்னையும் வசந்தனையும் கைது செய்ய கம்பஸ் வாசலில் வந்து நிற்கபோகிறது என்பதை அறிய வாய்ப்பில்லாத நான் அன்றிரவு நிம்மதியாக உறங்கிப்போனேன்.

(வழக்கு நீளும்.பாகம் 5 வெகு விரைவில்)

"அஒ அவ்னா"

வடக்கே எழுந்த சூரியன் தெற்கே மறைய பன்கா மரத்தில் இருந்து விழும் கனிகள் தரையை தொட எடுக்கும் நேரத்தைப்போல 4 மடங்கு காலம் எடுக்கும் என்பதை குத்துமதிப்பாக கணித்த "அஒ" உழுபொறியில் பூட்டியிருந்த எருதுக்கு ஒப்பான உடல்வலுக்கொண்ட பீனிக்ஸ் பறவைகளுக்கு தற்காலிக ஓய்வு தரும் பொருட்டு விடுதலை அளித்தார்.பிரகாசமான மேனி கொண்ட அப்பறவைகள் விண்ணில் ஏறி கொத்துக்கொத்தாய் மிதந்து வந்த பச்சை நிற மேகங்களுக்குள் மூக்கை நுழைத்து இரைதேடத்தொடங்கின."அஓ" 1400 சூரிய உதயங்களையும்  1399 அஸ்தமனங்களையும் பார்த்துவிட்டார்.இந்த அஸ்தமனம் பார்த்து 1401வது உதயம் வரமுதல் சொந்தங்கள் எல்லாம் வீட்டில் வாழ்த்துவதற்காக வரிசையில் நிற்பார்கள்."டைட்டன்" கிரகத்து குடும்பத்தலைவனுக்கு ஓய்வு பெறுவதற்கான வயது அது.உறவுகள் வாழ்த்தி பரிசுப்பொதிகள் தந்ததோடு நிற்காமல் அந்த ஒரு விடயத்தையும் மறக்காமல் கேட்பார்கள்."பொறுப்புக்கள் எல்லாம் முடிந்தனதானே?"

"அஓ" போண்ற சுறுசுறுப்பான பேர்வழியின் பொறுப்புக்கள் 1400 அஸ்தமனம் ஆகியும் அகலாதது அசாதாரமானது.ஆற்றல் குறைந்த குடும்பத்தலைவர்கள் கூட கால எல்லை நெருங்க முதல் அடுத்தவன் காலைப்பிடித்தாவது எல்லாவற்றையும் வெட்டிவிடுவார்கள்.ஏனென்றால் கடமையைகளை சரிவர நிறைவேற்றாதவனை சமுதாயத்தில் ஏறெடுத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.நான்கு பிள்ளைகளுக்கும் குன்றின் உச்சியில் மாளிகை போல தனித்தனி வீடு கட்டி,சாரல் முழுவதையும் திருத்தி விளைநிலங்கள் ஆக்கி, உழுவதற்க்கு வலிமையான பீனிக்ஸ் பறவைகளை வளர்த்து,நெடிய பயணம் செய்ய சொந்தமாக காற்றுப்படகுகள் வாங்கிப்போட்டும் பொறுப்புக்கள் முடியவில்லை என்பதை நினைக்கும் போது கடைசி மகள் "அவ்னா" மீது கோபம் கோபமாக வந்தது.

என்னதான் இருந்தாலும் கடைசி மகள்  மீது "அஓ" வுக்கு கொள்ளைப்பிரியம்.நல்ல பச்சை நிறம்.கூரிய நாசி.அகபோனிஸ் பறவையின் இறகைப்போல் நீண்ட கூந்தல்.சிரிக்கும் போது அம்மாவை அப்படியே நேரே பார்த்தது போலிருக்கும்.விளைநிலங்கள் எல்லாம் அமிலமழை பொழிந்து அழிந்த ஒரு உதயமன்று பிறந்தவளைப்பார்த்து "எல்லாத்தையும் முடிக்க வந்திருக்கிறாள்" என்று சொன்னதுக்காக பச்சைஉடம்பு எண்டும் பாராமல் மனைவிக்கு "பன்கா" மரமட்டையால் அடித்தவர் அவர்.அப்பா என்ன சொன்னாலும் பெரிய கண்களை விரித்து  முகமலர்வோடு ஏற்றுக்கொண்டவள் தனது 500வது உதயம் வந்த நாளில் திருமணப்பேச்சை எடுத்த போது மறுபேச்சு பேசி முகத்தை திருப்பிக்கொண்டாள்.
தொழில் நுட்பம் பூமியில் இருந்து 132 ஒளி நிமிடங்கள் தூரத்தில் இருந்த டைட்டன் கிரகமக்களையும் இணையத்தினுள் உள்வாங்கி சாதித்து இருந்த நாட்களில் யாழ்ப்பாணம் அரசடி வீதியில் வசித்து வந்த தினேஸ்சுக்கு செம கடுப்பாக இருந்தது."2040 ஆம் ஆண்டிலும் இந்த விசரியள் திருந்துறாளவை இல்லை" எண்டு அலுத்துக்கொண்டான்.ரியூசனுக்கு போய் விட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த அயல்வீட்டு பெட்டையை தாரை இயந்திரம் பூட்டப்பட்ட பறக்கும் பல்சரில் விரட்டும் போது அவள் "செருப்பாலை அடிப்பன் நாயே" எண்டு சொல்லி காறித்துப்பியதும் சந்தியில நிண்ட ஆமிக்காறனட்ட போய் "இஞ்சருங்கோ.இதுகள ஒருக்கா கவனியுங்கோ" எண்டு போட்டுக்குடுத்து லேசர் துவக்கு கட்டையால் அடிவாங்கி தந்ததும் மனதில் மீள மீள பிம்பங்களாய் அணிவகுத்தபடியிருந்தன."இந்த மனுசப்பெண்கள் சவகாசமே வேண்டாமப்பா" என்று அலுத்தபடி முகநூலை திறந்து டைட்டன் கிரக பிகர்களின் புறபைலுகளை நோண்டத்தொடங்கிய நாளில்த்தான் அவ்னா அவனிடம் சிக்கினாள்."அஓ அவ்னா" பழங்காலத்து கிழவியள் கணக்கா போர்த்துக்கட்டின ஆடைகளோடு இருந்த புறபைல் படத்த பார்த்ததும் "கட்டினா உங்களைப்போல குடும்பப்பாங்கா பிகரதான் கட்டோணும்"என்ற குறும்செய்தியை உள்ளடக்கி தினேஸ் அழைப்பை விட்டான்.132 நிமிடம் கழித்து அவ்னா அதை எடுத்துப்பார்த்தாள்.அவனது புறபைல் படத்தைப்பார்க்க மரங்களில் தாவி ஏறும் இகுனா மிருகத்தின் சாயல் நினைவுக்கு வந்து கன்னத்தில் குழி பெரிதாய் விழ சிரித்தாள்.நட்புவரிசையில் சேர்த்து அடுத்த 132வது நிமிடம்  "நான் இதை சொல்லியே ஆகணும்.நீங்கள் அவ்வளவு அழகு" என்று வந்த "சட்"டை பார்த்ததும் அவ்னாவுக்கு உடலெல்லாம் வியர்க்கத்தொடங்கிவிட்டது.அவளிடம் ஒரு ஆண்மகன் இதுவரை இப்படிச்சொன்னதே இல்லை.டைட்டனில் இருக்கும் எந்த ஆண்மகனும் திருமணத்துக்கு முன் பிற பெண்களை ஏறெடுத்துக்கூடபார்க்க மாட்டார்கள்."யாராவது பார்த்தால் என்ன ஆவது" என்ற பதற்றத்தில் இணையப்பொறியை மூடிவிட்டு ஓடிப்போய் படுக்க முயற்சி செய்தாள்.கனவிலும் தினேஸ் வந்து "நான் இதை சொல்லியே ஆகணும்" என்று அடம் பிடித்தான்.இந்த சம்பவம் நடந்து 3 உதயங்கள் கழிந்த நாளில் அப்பா திருமண பேச்சை தொடக்க அவள் மறுத்து பேசியது நடந்தது.


இப்போது பறவைகள் வேலைக்கு திரும்பிவிட்டிருந்தன.இது தான் இறுதி உழவு.அடுத்தமுறை சூரியன் வரும் போது மகன்களில் ஒருவன் விதைப்பிற்காக வருவான்.பீனிக்ஸ் பறவைகள் நன்றாக உண்டிருக்க வேண்டும்.வேகமாக உழுது முடித்து விட்டன."அஓ" அண்டநடப்புகள் தெரியாத ஆள் கிடையாது.ஓய்வுவேளைகளில் நேரம் போவதே தெரியாமல் வாசித்துக்கொண்டு இருப்பார்."அப்பா ஒரு மானிடனை விரும்புகிறேன்.அவர்ட பேர் தினேஸ்" எண்டு அவ்னா ஆரம்பித்தபோதே "பூமிக்கிரகத்தில் இருக்கும் மனித இனத்தில் பழமையானதும் தற்போதைய நாட்களில் கேவலமாய் வாழ்வதுமான தமிழ் இனத்தைச்சேர்ந்த யாரோ ஒரு காய்ஞ்சு போன ஆண் உயிரினத்தின் வேலைதான் இது" எண்டது அவருக்கு விளங்கிவிட்டது.மானிடர்களிடம் உள்ள அதிவேகமான கலங்களில் பயணித்தாலும் அவன் இங்கே வந்து சேர 90 உதயங்கள் எடுக்கும்.வந்தாலும் வன்மையான கரட்டீன் சருமம் கொண்ட டைட்டன் பெண்ணும் மானிடனும் குடும்பம் நடத்துவது சாத்தியமாகாது.ஆனால் இதையெல்லாம் அவ்னாவுக்கு விளங்கப்படுத்த முடியாது.எல்லாத்தையும் பொறுமையாக கேட்டிக்கொண்டிருந்துவிட்டு  "எனக்கு தினேஸ்தான் வேணும்" எண்டு கடைசியாக சொல்லுவாள்.


காலை விடிந்ததில் இருந்து தினேசுக்கு ஒரே புளுகமாய் இருந்தது.இப்பிடி ஒரு ஸ்ரக்சரோட கொப்பும் குலையுமா ஒரு பிகர் தானா வந்து சிக்கி இருக்கெண்டா நான் எவ்வளவு அழகன் எண்டு உள்ளுக்குள்ளே பூரித்துப்போய் கிடந்தான்.புறபைலில் இருந்த ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமாய் சூடாக்கின.அந்த நேரம் சிவபூசையில் கரடி போல "அவ்னா" ஒன்லைனுக்கு வந்து "சாப்பிடீங்களா?" என்று ஆரம்பித்து பதிலுக்கு காத்திராமல் தொடர்ச்சியாய் மொக்கைய போட்டது கடுப்பாக்கியது.அடுத்த 132 வது நிமிடம் டைட்டன் கிரகத்தில் அவ்னா ஓவென்று அழுதபடி தந்தையின் தோளில் சாய்ந்துகொண்டாள்.தினேஸ் அவளை "புளொக்" பண்ணிவிட்டிருந்தான்.
 அஓவுக்கு மனிதர்களை நினைக்க சிரிப்பு சிரிப்பாய் வந்தது.முற்றத்தில் நிற்கும் பன்கா மரத்திலிருந்து கனி ஒன்று நழுவி விழ ஆரம்பித்த பொழுதில்த்தான் அந்த கள்ள புறபைலை முகநூலில் திறந்து தினேசுக்கு றிக்வெஸ்ற் விட்டிருந்தார்.சந்தேகம் வராதபடி குட்டைப்பாவாடை அணிந்த மானிட இளம்பெண் ஒருத்தியின் படங்களை இணையத்தில் தரவிறக்கி வேறு போட்டிருந்தார்.பன்காபழம் இப்போது பாதித்தூரம் தாண்டி விட்டிருந்தது.அது தரையைத்தொடுவதற்கு பூமிக்கணக்கில் ஒரு நாள் தேவைப்படும்.அவ்னாவை யாராவது ஒரு பொறுப்பான டைட்டன் கையில் பிடித்துக்கொடுப்பதற்கு "அஓ"வுக்கு அதைவிட அதிக காலம் தேவைப்படாது.அலியப்பாவுக்கு ஒரு கெட்ட குணம் எவர் எதைப்பற்றிச்சொன்னாலும் அவனும் அதைப்பற்றி ஏதாவது சொல்லிவிடுவான்.உதாரணத்துக்கு நீங்கள் ஒரு விமானமோட்டியாக இருந்ததாகவும் கடும் காத்து அடிக்கிற நேரத்தில் தரையிறக்கிறது கஸ்டம் என்றும் சும்மா குத்து மதிப்பாக அலியப்பாவிடம் கதை அளக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவன் சற்றும் அசராமல்  "கடும் காத்தில இறக்கிறத விட ரிவேஸ் கியர்ல இறக்கிறது இன்னும் கஸ்டம்" எண்டு அடிச்சு உங்களை வாயை அடைத்துவிடுவான்.இந்த ஒரு வசனம் மட்டுமே அலியப்பா பற்றி தெரியாதவர்களுக்கு குத்துமதிப்பான அறிமுகம் ஒன்றை கொடுக்க போதுமானதாக இருக்கும்.இனி கதைக்கு வருகிறேன்.ஒரு நாள் பம்பலப்பிட்டியில் நண்பர்கள் இரவு உணவாக கொத்து ரொட்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.அதில் சில கொழும்பு பல்கலை நண்பர்களும் இருந்தனர்.அவர்கள் எதைக்கதைக்கத்தொடங்கினாலும் அலியப்பா அதைப்பற்றிக்கதைத்து வாயடைக்கவைத்துக்கொண்டு இருந்தான்.கதை அங்க போய் இங்க போய் கடைசியில் கொத்து ரொட்டிக்குள் வந்து நின்றது.கொத்து ரொட்டியைப்பற்றியும் அலியப்பா கதைக்கத்தொடங்கிவிட்டான்.ஒரு நண்பன் கொத்து ரொட்டிக்குள் இருந்த மிளகாய்த்துண்டுகளை ஒதுக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான்."ஊரில எங்கட வீட்ட ஒரு நாய் இருந்தது.சாப்பாட்டுக்க எத்தினை கறிவேப்பிலை இருந்தாலும் கண்டு பிடிச்சு ஒதுக்கி மிச்ச எல்லாத்தையும் சாப்பிடும்.ஆள் சாப்பிட்டு முடியேக்க கருவேப்பிலை குவியலா கிடக்கும்" என்று யாரோ சொன்னதை சாப்பாட்டில் குறியாய் இருந்த அலியப்பா கிரகித்த போதிலும் "நாய்" என்பதை மட்டும் தவறிவிட்டான். "உங்கட வீட்டில மட்டுமில்ல நம்ம வீட்டிலயும் ஒரு ஆள் இருந்தவர்.அது நான் தான்.ஒரு கருவேப்பிலை விடாம ஒதுக்குவன்".அலியப்பா சொல்லி முடிக்க "கொல்" என கிளம்பிய வெடிச்சிரிப்பு அடங்க சில நேரம் ஆனது.இன்றுவரை சாப்பாட்டில் பிடிக்காதபகுதியை விலத்திச்சாப்பிடும் நாய்களைக்கண்டால் அலியப்பாவின் கருவேப்பிலை கதை நினைவுக்கு வந்து சிரிப்பூட்டுகிறது.


2004 ஆம் ஆண்டு விடுதியில் முழுமையாக இருள்கலையாத பொழுதில் யாரோ குதித்த சத்தம் கேட்டு தூக்கம் கலைந்த எனக்கு தூக்கிவாரிப்போட்டது.எதிரே ஒரு உருவம் வாயில் போர்வையை கவ்வியபடி பயங்கரமாக நின்றிருந்தது.திடீரென்று அந்த உருவம் வாயை திறக்க போர்வை பிடி நழுவி நிலத்தில் விழ பயம் தெளிந்த நான் விழுந்து விழுந்து சிரிக்கத்தொடங்கினேன்.காலை வேளைகளில் என்ன எது செய்கிறேன் என்று தெரியாமல் பென்ரியம் 1 மூளையை சூடாக்குவதற்காக வாயில் சாரத்தை கவ்வியபடி சிரிப்பு ரவுடி நடந்து திரியும் காட்சியை கண்டு கழிப்புறுவதில் அலியப்பாவுக்கு அலாதிப்பிரியம்.சில நாட்களின் முன் சிங்கையில் பெட்சீட்டை கவ்வும் போது அலியப்பா எடுத்த போட்டோ உங்களுக்காக இதோ!

பெடியன்!அந்த பெடியன் ஆறு அடி உயரத்தில் இருந்தான்.இரும்பை உருக்கி வார்த்தது போண்ற உறுதியான உடம்பு அவனுக்கு இருந்தது.தமிழ் ஆட்களுக்கே உரித்தான பிதுங்கிய வண்டியும் எதிலும் தயங்கும் சுபாவமும் அவனிடம் தவறியிருந்தன.அநேக தமிழரை போலல்லாமல் ஆங்கிலத்தை பேச்சின் இடையே செருகி பெருமை கொள்வதை தவிர்த்தான்.உலகில் முதன் முதன் நாகரிகம் அடைந்த இனத்தின் வழிவந்தவன் என்ற பெருமிதம் அவனுள் ஊறிப்போய் இருந்தது.ஐக்கிய நாட்டு சபை வழக்கு வச்சு நிலத்தை பிரிக்க போறாங்கள் என்ற கதை அடிபட தொடங்கிய சில நாட்களில் அவன் ஊரில் நின்றான்.சனத்துக்கு பெடியன்ட நடை,உடை,பாவனை எல்லாம் பிடிச்சுப்போனாலும் ஒரு விடயம் மட்டும் உறுத்திக்கொண்டு இருந்தது."தலைமை ஆள் சிவப்பா எல்லோ இருக்க வேணும்.இவன் கறுவல் சரிவரான்" என்று கிழடுகள் புறுபுறுத்தார்கள்.அரவிந்தசாமி நிறத்தில இல்லாட்டியும் சிங்கள ஆமிக்காறன் அளவுக்காவது நிறமா இருந்திருந்தா நல்லா இருக்கும் என்று இளம் பெண்கள் அங்கலாய்த்துக்கொண்டார்கள்.பெடியன் லேசுபட்ட ஆளில்லை.எல்லாரையும் பேச்சால் அடக்கினான்.ஆட்சியை பிடிச்சால் ஆறு மாசத்துக்குள் தமிழ் பெண்களை எல்லாம் லேசரால் அடிச்சு வெளுப்பாக்கி வெளிநாட்டு மாப்பிளையைகளுக்கு கட்டிக்கொடுப்பேன் எண்டு அறிக்கையை விட பெட்டையள் எல்லாம் வாக்கு போடும் நாளுக்காக காத்திருக்க தொடங்கினார்கள்.வீட்டுக்கு ஒரு பிள்ளையை நாட்டுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் செலவை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றதும் பெடியள் பின்னால் அள்ளுப்பட தொடங்கினார்கள்.தோட்டவேலை செய்யாமல் எல்லோருக்கும் ரை கட்டும் அரசாங்க வேலை தரப்படும் எனச்சொல்லி நடுத்தரவயது ஆட்களை எல்லாம் மடக்கிவிட்டான்.இறுதியாக மிஞ்சியிருந்த கிழடுகள் மனதை வெல்ல பெடியன் பவ்வியமாக சொல்ல தொடங்கினான்."ஐயாமாரே! ஆச்சிமாரே! பபிள்கம்மை மென்றபடி பேரப்பிள்ளைக்கு தமிழ் தெரியாது என்று பெருமிதமாக பேசிக்கொள்ளும் எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது".அவன் 90% பெரும்பான்மை வாக்குகளை வென்றிருந்தான்.ஒட்டுமொத்த தமிழ்சனமும் பிரதேச,சாதி பாகுபாடின்றி அவனுக்கு வாக்களித்திருந்தார்கள்.இவ்வளவு இளம் வயதில் எவனுமே இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றதில்லை.பெடியன் பதவி ஏற்பு விழாவுக்கு கோட்டு சூட்டு போட்டு வருவான் என்று எல்லோரும் எதிர் பாத்திருக்க வேட்டி கட்டி வெறும்காலோடு வந்து கையெழுத்தை போட்டான்.அழகாய் வார்த்தைக்கொரு இங்கிலீஸ் சொல்லு கலந்து பேசுவான் என்று காத்திருக்க கடும் தமிழில் அனல் பறக்க பேச தொடங்கினான்.பேச்சு முடிந்ததும் விசய விளக்கமுள்ள சில பெரிசுகள் மனிசிமார் காதில் குனிந்து குசுகுசுக்க தொடங்கினார்கள். "எடியேய்! தானா போய் சனியனட்ட சிக்கிட்டம்.இது எங்கள உரிச்சு தமிழனாக்காம விடமாட்டுது பார்"பெடியன் கதிரையில் குந்தி ஒரு வருசம் ஆக முதல் கிழக்கே இருந்த இரணை மடு தண்ணீரை வடக்கு வரை கொண்டு வந்து விட்டிட்டு "எல்லாரும் தோட்டத்துக்கு போங்கடா" எண்டு கலைச்சு விட்டான்.வெளிநாட்டு காசில திண்டு உடம்பு வளர்த்து குனிய வளைய கஸ்டப்பட்ட ஆட்களை எல்லாம் பனம் மட்டையால் அடிச்சு வேலை செய்ய விட்டான்.வெள்ளைத்தோல்,வெளிநாட்டு மாப்பிளை என கனவு கண்டு கொண்டிருந்த பெட்டையளை வரிசை வரிசையாக தொழில் பேட்டைகளை திறந்து இழுத்துப்போட்டான்.நாடே விறைத்துப்போய் நின்றது.வழமையான தமிழ்க்குணம் மேலிட்டு எதிர்த்து சத்தம் போட்ட சிலரும் அடுத்த நாளே காணாமல் போனார்கள்.நாள் செல்ல செல்ல கரையோரம் முழுக்க கப்பல் துறைமுகங்களாலும் மீன்பிடிபடகுகளாலும் நிரம்பி வழிய தொடங்கியது.வளர்ச்சி என்பது தன்னிறைவுக்கு அடுத்த படியாக தானாக வருவது என்று சொல்லி ஆடம்பர சாமான்களுக்கு தடை போட்டான்.இந்திய சினிமாவையும் தடுத்து விட்டான்.சனம் இப்போது வெளிநாடுகளுக்கு தப்பி போய் அசைலம் அடிப்பமா என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.அப்படி போய் கைய தூக்கின ஆட்கள் எல்லாம் அடுத்த நாளே தனி விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.பேசி பேசி சனத்தை பேய்காட்டியது போல உலகநாடுகளையும் மயக்கி வைத்திருந்தான்.சனத்துக்கு இப்போது வேறு தெரிவு இருக்கவில்லை.காலகாலமாய் இரத்தத்தில் ஊறிப்போன சுயநல புத்தியை ஓரம்கட்டி வைத்துவிட்டு ஒத்துழைக்கத்தொடங்கினார்கள்.நாடு ராக்கெட் வேகத்தில் மேலே கிளம்ப தொடங்கியது.எங்கு எங்கெல்லாம் கத்தி வைக்கோணுமே அங்கெல்லாம் வைத்து தேவையல்லாத முறைகளையும்,பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் அந்த பெடியன் துடைத்தெறிந்தான்.இரு தசாப்தம் கடந்த போது அந்த தேசத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.அங்கே வாழும் மக்களின் மேம்பட்ட பண்புகளை பிற நாட்டவர்கள் வியந்து பார்த்தார்கள்.அழைப்பு விடப்பட்ட போதும் வரமறுத்து சுயலாபம் கருதி மேற்குலகில் வாழ்ந்த ஈனப்பிறவிகள் இப்போது "நாமும் தமிழர்தான்" எனச்சொல்லி உள்ளே வந்துகொண்டிருந்தார்கள்.இப்போது பெடியனுக்கு வயசாகி விட்டிருந்தது.முன்பு போல அல்லாமல் இப்போது நிதானமாக யோசித்து முடிவெடுக்க தொடங்கியிருந்தான்.மேகங்கள் கறுத்து பெரும் மழை தொடராக பொழிந்த நாளிலே தளபதிகளை அழைத்து "ஆயிரம் வருடங்கள் முன்பு நாங்கள் ஆண்ட நிலம் மீண்டும் எமக்கு வேண்டும்" எனச்சொன்னான்.ஆகாயம் வெளிக்க முதல் கடலிலும் தரையிலும் வானிலும் ஆண்டுகளாக போரியல் பயிற்சி பெற்றிருந்த அந்த தேசத்தின் மக்கள் பாயதொடங்கினார்கள்.மலரவன் கதையை சொல்லி முடித்து விட்டு அடுத்த போத்திலை திறந்து குவளையில் ஊற்ற ஆரம்பித்தான்.


"பெடியன் சண்டைய தொடக்கீட்டான்,வெற்றியா முடியுமெண்டோ?"


"சண்டை முடிவு எப்படியும் அமையலாம்.இயல்பு வாழ்க்கையை விட போராட்டத்தின் போது தான் இனம் அதிகம் வளரும்.அந்த வளர்ச்சிதான் அவனுக்கு முக்கியம்"


மாறனுக்கு இப்போது செம கடுப்பா இருந்தது."ஒரு பெடியன்ர கதைய சொல்லப்போறன்" எண்டு தொடங்கேக்கையே இவன நிறுத்தியிருக்கோணும்.கடைசியா காதால ரத்தம் வாராத குறையா தட்டிப்பிழிபட்டதுதான் மிச்சம்.

"நானும் இப்ப ஒரு பெடியன்ர கதைய சொல்லப்போறன்.நீ சொன்ன மாதிரி இது பன்ரசி கதை இல்லை.உண்மையா நடந்தது". உதவிக்கு பெப்சியை அழைக்காமல் "ராவா" அடுத்த பெக்கை உள்ளே இறக்கிவிட்டு மாறன் தொடங்கினான்."2008 ஆம் ஆண்டு ஆறு மாத இழுபறிக்கு பிறகு கடைசியா அம்மானுக்கு அசைலம் கிடைச்சது.அமுக்க வெடிப்பிரிவில அதிமுக்கிய விஞ்ஞானியா இருந்ததெண்டும்,அத யாரோ ஆமிக்கு போட்டுக்கொடுக்க அவன் அமத்திக்கொண்டு போய் அலற அலற அயன் பெட்டியால அழுத்தினதெண்டும் கேச அலங்கரிச்சு, அஞ்சாறு இடத்தில சூடு வச்சு வெள்ளைக்காறிக்கு அவிட்டு காட்ட அடுத்த கிழமை பிரிட்டிஸ் புத்தகம் வீட்டுக்கு வந்தது.இத கேள்விப்பட்ட அடுத்த கிழமை ஊரில படலை வாசல்ல நிண்ட ஆமிக்காறனுக்கு நூல் விட்டுக்கொண்டிருந்த மச்சாள்காறி பிருந்தா அம்மானுக்கு பேஸ்புக்கில றிக்குவெஸ்ற் விட்டாள்.ரண்டாம் நாள் "நான் உங்களை சினிசியரா லவ் பண்ணுறன் தெரியுமா?" என்று ஸ்கைப்பில வந்து மூக்கால கதைச்சு மடக்கி இந்தியாவிலை கழுத்த நீட்டி லண்டனுக்குள்ள வந்து ஒரு மாதத்துக்குள்ள கட்டை கவுண் போட்டு பிறிமாக்குக்கு ஷொப்பிங் போனாள். கிளைம் வீடு எடுக்க வசதியா வரிசையா மூண்டு பிள்ளை பெத்து,முதுகு நோ எண்டு சொல்லி கள்ள மெடிக்கல் செய்து கவுன்சிலட்ட காட்டி மாத காசும் எடுத்து வாழ்க்கையில "செட்டில்" ஆக 4 வருசம் எடுத்தது.பிறகு என்ன அம்மா பகவான் பஜனை,வெளிநாட்டு ரூர்,ஆட்டுக்கறி,நித்திரை,ஊர் வம்பு எண்டு ஒரே "ஹப்பி" யா போகுது மச்சான் அவனுக்கு.நீ கதையில் சொன்ன பெடியனுக்கு எவ்வளவு சிக்கல்?.அவனுக்கு யாராவது வெடி வைக்க வாய்ப்பிருக்கு.கூட இருக்கிறவனே காட்டிக்கொடுத்து ஆப்படிப்பான்.சண்டையில் தோத்தா தற்கொலை செய்யோணும்.செத்தாப்பிறகு சனம் திட்டி தீர்க்கும்.வண்டி வளர்த்த ஒருத்தன் வந்து "இவர் செய்தது எல்லாம் பிழை" எண்டு ஆய்வு எழுதுவான்.சண்டையில் வெண்டாடாலும் மற்ற இனத்தை அழிச்சது எண்டு போர்க்குற்ற விசாரணை நடக்கும்.இதெல்லாம் தேவையா?.இதுக்கு அம்மான மாதிரியே அந்த பெடியனும் லண்டன்ல அசைலம் அடிச்சு இருந்திருக்கலாம்.இப்ப மொக்கு வெள்ளைக்காறன பார் விடிய எழும்பி வேலைக்கு ஓடுறான்.ஆனா அதே நேரம் நம்ம சிங்கன் அம்மான் மனுசியோட படுத்து கிடப்பான்"

மலரவன் இந்த முறை பதிலேதும் சொல்லவில்லை.ஏளனச்சிரிப்போடு தனது போன் கலறிக்குள் சிறிது நேரம் நோண்டியவன் இறுதியாக அதை மாறனிடம் நீட்டினான்.

"கஸ்டப்படாம வாழ்ந்தா இப்பிடித்தான்.கொஞ்சம் இஸ்டப்பட்டா நாளைக்கு உதை நீயும் மடக்கலாம்.அம்மான போல இருக்கிறதிலும் பார்க்க அந்த பெடியன் போல வாழ்ந்து தலையில வெடி வாங்கி எண்டாலும் சாகலாம்".மலரவன் இந்த முறை கலவை இல்லாமல் குவளையை நிரப்ப தொடங்கினான். 


மலரவனின் புத்தம் புதிய சாம்சுங் கலக்சி S3 போனின் திரையில் துல்லியமாக ஒளிர்ந்த அந்த போட்டோவில் அம்மானின் மனுசி பிருந்தா சந்தி சிக்கன் கடை முதலாளி துசியின் இறுக்கமான அணைப்பில் கிறங்கிப்போய் இருந்தாள்.


பலாலி விமானத்தளத்தில் ஓடிக்கொண்டிருந்த அந்த அன்ரனோவ் விமானம் அரைப்பனையளவு உயரத்துக்கு எழும்பிவிட்டிருந்த போது தான் கைப்பிள்ளையின் 3310 இயந்திரங்களின் கூச்சலையும் மீறி பாடதொடங்கியது.அவசரமா எடுத்து காதில் பொருத்தினால் எதிர் முனையில் அரியாலை அப்பாஸ் கிசு கிசுத்தான்." மச்சான் 10 வருசமா தேடிக்கொண்டிருந்த அலிபாய் கிடைச்சுட்டான்டா!"....என்ன செய்யலாம் என்றூ சிறிது நேரம் பரபரத்த மூளையில் பொறி தட்டியது.அருகே இருந்து உதயன் பேப்பர் படிச்சுக்கொண்டிருந்த தாத்தா அயர்ந்த நேரம் ஒரு பேப்பரை களவா உருவி அழகா மடிச்சு ஒருத்தரும் காணாத நேரம் பேப்பர் வெடியாக்கி அடிக்க ... "இந்த விமானம் பயணிகள் பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக அவசரகால தரையிறக்கத்தை மேற்கொள்ள திரும்புகிறது" விமானி அறிவித்தார்.சனம் அல்லோலகல்லோலப்பட தொடங்கீட்டுதுகள்.பின்சீட்டில் இருந்து NGO இல வேலை செய்கிற சீனப்பெண்ணுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த தினேஸ் உள்ளுக்குள்ளேயே பிரதட்டை அடிக்க தொடங்கி விட்டிருந்தான். அன்ரனோவ் தரை தட்டி ஓய்ஞ்சவுடன கண்ண திறந்தா இரண்டு காலுக்கும் இடையால தலையை நீட்டியபடி ஒரு அல்சேசன் முறைச்சுக்கொண்டு நிண்டது.சடார் எண்டு அந்த மஞ்சள் ஐடிய உருவி நாயோடு நிண்ட ஆமி சேரிடம் "சேர் மம மொறட்டுவ விஸ்வ வித்தியாலா பறண ஸ்டுடன் எக்கக்" எண்டதும் வெளியே போக அனுமதி கிடைத்தது.படியால் இறங்கிக்கொண்டிருந்த போது " மம too பறண மொறா ஸ்டூடன்ற் எக்கக்.பட் ஐடி கார்ட் நா" எண்டு தினேஸ் சொல்ல "ஒயா சைனீஸ் கட்டிய வகே,பொறு கியன்ன எப்பா,கரியா" எண்டு ஆமிக்காறன் கத்துவது கேட்டது.
அரியாலைக்கு ஆட்டோ பிடிச்சு வர அப்பாஸ் வண்டி மேலே பிள்ளையை இருத்தியபடி கோயிலால் வந்துகொண்டிருந்தான்.இன்னும் ஒரு வயதை தாண்டியிராத அவனது குழந்தை புளுக்கொடியலை கடித்து மொறுக்கு மொறுக்கு என்று தின்பதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது."டேய்! ஒயா பேபி உன்னை மிஞ்சும் போல" என்று கலாய்க்க தொடங்கினேன். "எனக்கு ஓபி மெசெஜ் போட்டிருக்கிறான்.நாளைக்கு இரவு 12 மணிக்கு கொட கன்ரீனுக்கு கெமிக்கல் அலி வாறானாம்" என்று சொல்லி விட்டு அடுத்த துண்டு புளுக்கொடியலை வாய்க்குள் போட்டுக்கொண்டான்.இனி அது அரைத்து முடியுமட்டும் பேசமாட்டான்.
தெளிவான வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்ட தொடங்கியிருந்த நேரத்தில் அப்பாசுக்கு யாழ்ப்பாண மாதர்சங்கம் பெண்ணுரிமைகள் பற்றி பேசியதற்காக அன்பளிப்பாக கொடுத்து இருந்த "றேன்ஞ் ரோவர்" வாகனம் A-9 வீதியில் ஓட தொடங்கி விட்டிருந்தது.எனது சிந்தனைகள் பின்நோக்கி ஓடத்தொடங்கின.கெமிக்கல் அலி.எங்களுக்கெல்லாம் விஞ்ஞானத்தின் வரைவிலக்கணத்தை காட்டிய புலி.ராகிங் நேரத்தில் எல்லோரும் பயந்து நடுங்கித்திரிய " நான் இங்க வந்தது படிக்க இல்லை.அமைப்பு வேலைத்திட்டம் ஒன்றுக்காக" என்று அறிக்கை விட்ட சிங்கம்.இடம் வலமாக இரண்டு இரண்டு மடிப்பு வைத்த தொள தொள நீள கால்சட்டை போட்ட வில்லேஜ் விஞ்ஞானி.சிறு வயதில் இருந்து பெல்ட்டோடு வேலை செய்தவன்.முத்தையன் கட்டு குளம் நிரம்பி பாய அதில் சக்கரம் பூட்டி கறண்ட் எடுத்தவன்.வன்னிக்குளங்கள் எல்லாம் பெருகி நிரம்பிய ஜப்பான் மீன்களை எல்லாம் பிடித்து ரின்களில் அடைத்து ரின் மீனாக்கியவன்.மொறட்டுவை முடிந்து இங்கிலாந்துக்கு உயர் படிப்புக்கு போன இடத்தில் கோழி பொரிக்கும் கடையில் புது யுக்திகளை புகுத்தியவன்.பின்னர் பெற்றோல் செட்டில் எரிபொருளோடு வீம்பா விளையாடியவன்.திடீரெண்டு கலியாணம் செய்து கொண்டான்.அதுக்கு பிறகு கொஞ்ச நாளில தொடர்பே இல்லை.2012 ஆண்டு இறுதியில் கெமிக்கல் அலியை கண்டவ பெடியள் அவன் தங்களோடு ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடியதாகவும் தமிழில் "எப்படி மச்சான் இருக்கிறாய்?" எண்டு கேட்ட போது "வாட்?" என்று திருப்பி கேட்டதாகவும் கடுப்போடு சொன்னார்கள்.பிறகு நாங்கள் ஊருக்கு செட்டில் ஆக திரும்பி வந்து 10 வருடங்கள் ஓடிவிட்டிருந்தன.
விடிகாலை கொழும்பை அடைந்து லெட்ஜ்ஜில் தூங்கிவிட்டு கட்டுப்பெத்தைக்கு பின்னேரமாக போனோம்.அப்பாஸ் எல றொட்டி,மாலு பணிஸ்,பருப்பு,பாண் என கொட கன்ரீன் மூடும் வரை சாப்பிட்டுக்கொண்டே இருந்தான்.நேரம் ஆக தூக்கம் கண்ணை கட்டி சற்றே அயர்ந்த நேரத்தில்தான் அந்த பேய் சிரிப்பு கேட்டது.திடுக்கிட்டு எழும்பி பார்க்க ஜெயசுதன் வெறித்த பார்வையோடு குத்திட்ட தலை மயிரோடு சிரித்துக்கொண்டிருந்தான். "என்னோட சம்பளம் எவ்வளவு எண்டு தெரியுமா? "யூ நோ மை சலறி?" "சீபாய், அலாமா,யூ No டை றெடியா?" "டாப் PM இன் சிங்கப்பூர்,டாப் ஏனர் ஒப் வவுனியா தெரியுமா?" சம்பந்தம் இல்லாமல் புலம்பிக்கொண்டிருந்தவனின் சட்டையை பிடிச்சு உலுப்ப நான் நிஜ உலகத்துக்கு வந்தான். "டேய்! எங்கடா கெமிக்கல் அலி,அவனுக்காக நான் அன்ரனோவை இறக்கிட்டு ஓடி வாறன்,இவன் புழுக்கொடியலை விட்டிட்டு வந்திருக்கிறான்.சொல்லுடா?,எங்கடா எங்களோட விஞ்ஞானி?" "மச்சான்! கெமிக்கல் அலி வந்திருக்கிறான் எண்டு சொன்னாத்தான் நீங்கள் அவன போட்டுத்தாக்கலாம் எண்டு விழுந்தடிச்சு ஓடி வருவியள் எண்டு இந்த புறஜெக்ட் மனேச்சருக்கு தெரியாதா?.அவன் எங்க இருக்கிறான் எண்டே எனக்கு தெரியாது.நான் உங்களை வரச்சொன்னது ஒரு உதவி கேட்கிறதுக்காக.நீங்கள் எல்லாம் அப்பா ஆகிட்டியள்.எனக்கு இன்னும் கலியாணம் கூட ஆகலை.சம்பள தொகையை அடிக்கடி சொல்லி திரிஞ்சாலும் 40 வயசில ஒருத்தியும் கண்டுகிறாள் இல்லை.வீட்டுக்காறர் " பொறுத்தது தான் பொறுத்தாய் இன்னும் 5 வருசம் பொறுக்க மாட்டியா" எண்டு சொல்லிட்டுதுகள்."ஹெல்ப் பண்ணுங்கோடா! நானும் வாழணும்".கதறி அழத்தொடங்கிய ஓபியை சமாதானப்படுத்துவதற்குள் பொழுது விடிய தொடங்கிவிட்டது.
கட்டுப்பெத்தை வளாகம் வழமையை விட பரபரப்பாக தொடங்கியது.சில மாணவர்கள் வரவேற்பு தோரணங்களை கட்ட ஆரம்பித்தார்கள்.இன்னும் சிலர் பெரிய அளவிலான பதாதைகளை கட்ட தொடங்கினார்கள்.டாக்டர் ஜெயவர்த்தன,டொக்டர் நிலாந்தி,டாக்டர் பாஸ்கரன் போண்ற பெரும் தலைகள் கூட அந்தரப்பட்டு ஓடித்திரிந்தார்கள்.பல்கலை துணைவேந்தர் கூட பற்ற வைத்த ஈர்க்கு வாணம் போல அமளிப்பட்டது வரப்போவது யாரோ ஒரு பெரிய புள்ளி என்பதை உணர்த்தியது.கமல்ஸ் கிட்டவாகப்போய் பனரில் எழுதி இருந்ததை எழுத்துக்கூட்டி வாசிக்க தொடங்கினான்."இளம் மாணவர்களாகிய எமக்கு உரையாற்றி வழிகாட்ட வரும் இங்கிலாந்து விஞ்ஞானி ரொபேர்ட் பற்றிசனை அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்" கட்டுபெத்தை மைதானத்துள் தற்காலிக மேடை ஒன்று ரொபேர்ட் பற்றிசனுக்காக காத்திருந்தது,மைதானம் முழுக்க மாணவர்களால் நிரம்பி வழிந்தது.கட்டுப்பெத்தை குடுக்காறர் கூட குடு அடிக்காமல் நல்ல பிள்ளைகளாக உட்கார்ந்து இருந்தார்கள்.சரியாக 9 மணிக்கு விஞ்ஞானி பாண்ட் வாத்தியத்தோடு உள்ளே வந்து மேடையேறினார். "பிரிட்டிஸ்காறன் எண்டுறாங்கள் கறுப்பு தலைமயிரா கிடக்கு.கலரும் குறைவா கிடக்கு" கமல்ஸ் புறுபுறுக்க தொடங்கினான். "ஒரு வேளை விக்டோறியன் ஆளா இருக்கும்.அவங்களுக்கு தான் கறுப்பு மயிர்.ஆள் ஹொலிடே போய் ரான் பண்ணிட்டு வந்து இருப்பான்.அது தான் கலர் உப்பிடி இருக்கு" ஒரே போடாக போட்டு கமல்சை அடக்கினேன்.
விஞ்ஞானி பேச தொடங்கினார் "நான் பிறந்தது இங்கிலாந்தில். வளர்ந்தது இங்கிலாந்தில்.தாய் மொழி ஆங்கிலம்.படித்து ஆங்கிலத்தில்.நியூட்டனின் ஈர்ப்பு விதி பிழை என்று நிறுவி இருக்கிறேன்.தலையில் அப்பிள் விழுந்ததை வைத்து ஈர்ப்பை நிறுவியது தவறு என்கிறேன். ஏனென்றால் தலையில் தேங்காய் விழுந்திருந்தால் நிறுவ ஆளே இருந்திருக்க மாட்டார்.நாளை ஐன்ரீனும் பிழை என்று காட்டுவேன்.நான் சிறு வயதில் இருந்து பெல்ட்டோடு வேலை செய்தவன்.குளத்தால் பாய்ந்த நீரை மறித்து பக்கிங்காம் பலசுக்கு கறண்ட் குடுத்தவன்.தேம்ஸ் நதியின் இருக்கும் யப்பான் மீன்களை பிடித்து அடைத்து ரின் மீன் செய்தவன்.எண்ணெய் பாவிக்காமல் சிக்கன் பொரிக்கும் வழி கண்டு பிடித்தவன்.எனது வீட்டுக்கு செல்லும் வழியில் ஆறு ஓடிக்கொண்டு இருக்கும்.வாழ்ந்த வீடு Two storey பில்டிங்கில Up Storey ." "ரூ ஸ்ரோறி பில்டிங்கில அப் ஸ்ரோறி" இந்த வசனத்தை கேட்டதும் பொறி தட்டியது.கமல்சுக்கும் அதே பொறி தட்டியிருக்க வேண்டும்.முழுசிக்கொண்டு இருந்தான்.ஜெயசுதன் கம்பஸ் பெட்டையளை ஏக்கப்பார்வை பார்த்தபடியிருந்தான்.அவனுக்கு எந்தவொரு பொறியும் தட்டியிருக்க வாய்ப்பில்லை. "வாழ்வது முக்கியமில்லை.எப்படி வாழ்ந்தாலும் பில்டப்பா இருக்கணும் அது தான் முக்கியம்" என்று சொல்லி விஞ்ஞானி உரையை முடித்ததும் நானும் கமல்சும் ஒரே ஓட்டமாக் கம்பஸ் வாசலுக்கு ஓடி வந்தோம்.அவர் கட்டுப்பெத்தை றோட்டில் தரித்து நின்ற 18 அடி ஆடம்பர காரில் ஏற இவ்வழியாகத்தான் வரவேண்டும்.கமல்ஸ் புத்தம் புதிய 5 ரூபா குத்தி ஒன்றை நிலத்தில் போட்டு விட்டு ஒதுங்கி நின்றான்.விஞ்ஞானி கிட்ட வந்து 5 ரூபா குத்தியை கண்டதும் குனிந்து எடுத்தார்.சீரியசாக இருந்த அவரது முகம் குஸியாக மாறியது.இரண்டு எட்டில் அருகே இருந்த கொயின்ஸ் பூத்துக்கு போய் நாணயத்தை உள்ளே போட்டார்.ஏதோ ஒரு இலக்கத்துக்கு டயல் செய்து விட்டு மறு முனையில் ரிசீவ் பண்ண முதல் அலேக்காக கட் பண்ணினார்.வெளியே வந்து விழுந்த நாணயத்தை மீள எடுத்து கோட்டு பாக்கெட்டில் போட்டு நடந்து செல்ல எனக்கு தலை விறைக்க தொடங்கியது. ரூ ஸ்ரோறி பில்டிங்ல அப் ஸ்ரோறி,பெல்ட்,ரின் மீன்,குளம்,கறண்ட்,5 ரூபா குத்தி,மிஸ் கோல்......அப்ப... உது...... டேய்! மச்சான்! கெமி! கெமிக்கல் அலி! நில்லடா! எப்படி மச்சான் இருக்கிறா! ஆளே மாறிப்போயிட்டாய்!
நான் காருக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன்.

தற்போதைய நிலவரம்-06

வாழ்க்கை சக்கரம் உருண்டோடும் வேகத்தில் என்னவெல்லாமோ நடக்கிறது.தலை நிறைய முடியோடு வலம் வந்த நண்பர்களில் பாதிப்பேருக்கு அரை மொட்டை விழுந்து விட்டது.பயிற்றங்காய் பாடியோடு வலம் வந்த பலர் பானையளவு வயிறு வளர்த்து திண்டாடுகிறார்கள்.இருப்பினும் சில மாற்றங்கள் வாழ்க்கைக்கு புதுப்பொலிவு ஊட்டுபவையாகவும் மனமகிழ்ச்சியை ஊட்டுபவையாகவும் இருக்கின்றன.அந்த வரிசையில் இடம் வலமாக இரண்டு இரண்டுப்படி நாலு மடிப்பு வைத்த "காதலன்" ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மொறட்டுவைக்கு 2004 ஆம் ஆண்டில் வந்த கெமிக்கல் சசி டெனிமுக்கு மாறி லண்டனுக்கு வந்து லோகிப்புக்கு இறங்கி கடைசியாக இல்லற வாழ்க்கைக்குள்ளும் குதிக்க தயாராகி விட்டார்.மட்டத்தின் சில பேர்வழிகளைப்போலல்லாது எல்லோருக்கும் அழைப்பு விடுத்து இன்முகத்தோடு தகவல் கூறி கல்யாணத்துக்கு தயாராகும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.பம்பலப்பிட்டி கோயிலில் உம்சாண்டியின் தம்பி செட் பண்ணிய ஆட்கள் மட்ட கைப்பொம்மை தலைவனை அடிக்க வர எல்லோரும் ஓடி ஒழிய தனிய நிண்டு அடிபட்ட போது வெளிப்பட்ட அந்த ஆண்சிங்கம் மீளவும் வேறு விதமாக தென்பட்டிருக்கிறது.விஞ்ஞான வாழ்க்கை போலவே இல்லற வாழ்விலும் சிறப்படைய வாழ்த்துவதில் கனாக்காலம் பெருமையடைகிறது.குதிரையில் ஏறி பிஸ்டலை இடுப்பில் செருகாமலே கௌபாயாக வலம் வந்தவர் மதுவர்ணன்.டென்மார்க் நாட்டு நங்கையோடு இல்லறத்தில் இணையவென விரைவில் கடல் கடக்க போகிறார்.மட்டத்தின் அனைத்து நண்பர்களுக்கும் அழைப்பெடுத்து உரையாடி தகவல் சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.ஆனி மாதம் இந்தியாவில் மூன்று முடிச்சை போடவிருக்கும் நண்பரை வாயார வாழ்த்துகிறோம்.பி-கு: இந்திய திருமணத்துக்கு தொப்புள் அழகன் புதுமண தம்பதியராய் போய் சிறப்பிக்க இருக்கிறாராம்."ஹனி மூன் போறதுமாச்சு,கௌபாய் கலியாணத்தில் கலக்கிறதுமாச்சு" என கல்லு ரண்டு மாங்காய் திட்டத்தோடு காத்திருக்கிறாராம்.எப்படியோ போற இடத்தில வண்டி மேல தேங்காய் விழாட்டி சரி.


இப்படி சிலர் பகிரங்கமாக திருமணம் செய்ய்தாலும் ஒளித்து மறைத்து செய்பவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.திருமணம்/பதிவு திருமணம் எனபது வாழ்க்கையில் ஒரு படி நிலை.அதை நண்பர்களுக்கு சொல்லாமல் மறைப்பது ஒரு வகையில் கோழைத்தனம்/தாழ்வு மனப்பான்மையில் வெளிப்பாடு என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

தற்போதைய நிலவரம்-05
ஏற்ற இறக்கம்,வளைவு நெழிவுகள் கொண்டது தான் வாழ்க்கை.வாழ்க்கை வட்டம் உருளும் போது வாளிகள் சண்டை பிடிப்பதுவும் சண்டை பிடித்தவர்கள் வாளிகளாவதும் சகஜமே என்பதை சிங்கையில் சில நாள் முன் நடைபெற்ற சம்பவம் கோடிட்டு காட்டி நிற்கிறது.பிரித்தானியாவில் இருந்து சிங்கைக்கு போன கௌதம் வாசுதேவ மேனன் நண்பர்களை சந்திக்க அழைப்பு விட்டிருக்கிறார்.நீண்ட நாள் சந்திக்காத நண்பனை மீள காணப்போகிறோம் என பலரும் குதூகலிக்க ஒருவர் மட்டும் கடுப்பாகிவிட்டாராம்.அந்த நபரை மேனன் முகநூலில் தடை செய்து வைத்திருந்தாராம்."போர் என்றால் போர் சமாதனம் என்றால் சமாதானம்,தடை போட்டு விட்டு பேச அழைப்பு விடுப்பது அவமானப்படுத்துவது போலத்தானே?" என்று சம்பந்தப்பட்டவர் குமுற கன்ராபிய தவிர மிச்ச எல்லாரும் மேனன் பக்கம் நின்று தாக்கி விட்டார்களாம்.எது எப்படியோ இந்த குமுறலிலும் நியாயம் இருக்கிறது என்று நடுநிலை வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.மொறா 2003 மட்ட தமிழ் மாணவர்களில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல் புரபசனல் கமெரா வைத்திருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இந்த கமெராவில் உள்ள விசேடம் என்னவென்றால் ஜூம் போட்டு தவளைய படம் எடுத்தால் கூட அழகாக காட்டும்.இதனால் வண்டியுள்ளோர்,பேஸ் கட், பர்சனாலிட்டி குறைவானோர் காட்டில் அடை மழை பொழிகிறது.வண்டியழகன் ரஜீந்திரதாஸ் கூட ஒரு புகைப்படத்தில் பிராட் பிட் போல தெரிவதாக முகநூல் அப்ளிகேசன் ஒன்று தெரிவித்திருப்பது ஒன்றே இந்த கமெராக்களில் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு.இது ஒரு புறமிருக்க கங்காரு நாட்டில் தனியா இருக்கும் பெண்மணி ஏரிக்கரைய படம் எடுத்து போட அவுஸ்திரேலிய உள்ளூர் கவுன்சில் சிறந்த படம் என்று பரிசு கொடுத்து விட்டதால் உற்சாகமாகி எந்நேரமும் கமெராவும் கையுமாக கொலைவெறியோடு அலைவதாக கேள்வி.இங்கிலாந்தில் மீள ஒன்று சேர தொடங்கியுள்ள ஏழு ஜி நண்பர்கள் கோடைக்கால வேளையில் எந்நேரமும் தண்ணீரில் மிதக்க திட்டமிடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.அடுத்த வருடங்களில் காளை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி அநேகருக்கு விழவுள்ளதால் இக்கோடையை இறுதிக்கோடையாக அறிவித்துள்ளனராம்.நாயகனும் வெறிகாரனும் "ராபட் பற்றிசன்" போல தலை மயிரை வளர்த்து மத்திய லண்டன் நகரில் உள்ள பப்புகளுக்கு வரும் வேற்றின பெண்களை மடக்க திட்டமிடுவதாகவும் புலனாய்வு நிலையம் தெரிவிக்கிறது."வெறிக்குட்டிக்கு வளர்த்தா வளரும் ஆனா நாயகன் ஆயிரம் வருசம் வளார்த்தாலும் தலைமயிர் வட்டமா திரும்பி தலைக்குள்ள போகுமே தவிர நீளமா வராது" என சிங்கையில் அதிஉயர் சம்பளம் வாங்கும் சிரிப்பு ரவுடி கருத்து வெளியிட்டுள்ளார்."தானா வளராட்டி தட்டி வளர வைப்பேன்" என அறிவித்துள்ள நாயகன் சீன பாம்பு எண்ணெய் வாங்கி தலையில் தடவியபடி திரிந்த காட்சியை பலரும் கண்டுள்ளார்கள்.புல்லட்டு பிளாக்கர் கடைசியாக் சொந்த நாட்டு பாசத்தை விடுத்து கங்காரு நாட்டுக்கு பாய்ந்துவிட்டாராம்.எவரையும் இன்முகத்தோடு வரவேற்கும் வீணை தம்பதிகள் புல்லட்டுக்கும் வயிரார கொட்டியிருக்கிறார்கள்.பழையபடி அவர்தனது எழுத்துப்பணியை தொடர வேண்டும் என கனாக்காலம் இப்பதிவு மூலமாக கேட்டுக்கொள்கிறது.இதே நேரம் ஐந்து கரத்தான் அப்பே லங்காவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு படித்த மனிதர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.சிங்கப்பூரின் லீக்குவான்யூ,இஸ்ரேலின் மோசேதயான் போல இலங்காபுரிக்கு ஐங்கரத்தான் ஆகவேண்டும் என்று ப்லரும் அவரை கேட்டுக்கொண்டதாகவும் அறிகிறோம்.ஹொஸ்டலில் சிறிஸ் என்ற பெயரிலை ஒரு றெமோ இருந்தான்.காலுக்க தண்ணி வச்சுக்கொண்டு கதிரை எரிய எரிய படிக்கிற ஆள்.பாட்டு எண்டா என்னெண்டு கேட்டால் " அர்த்தமுள்ள சொற்களால் கோர்க்கப்பட்ட சந்தத்தோடு வாத்தியங்களால் ஆன பிண்ணனி இசையோடு இணைக்கப்பட்ட வரிகள்" என்று வரைவிலக்கணம் சொன்ன அவர் இன்று லேடி காக்காவூக்கு காக்கா பிடிக்கிறாராம்,பியான்சு, ஸ்பிரிட்டனி பியர் போண்ற அழகிகள் உதடுகளில் இருந்து வரும் கிளர்சியூட்டும் பாட்டுக்களுக்கு அடிமையாகி முழு றெமோவாக ஆகிவிட்டதாக ஜெர்மனிய வானொலி தெரிவித்துள்ளது.
1939,புரட்டாதி.அடேல்ப் ஹிட்லருக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்து விட்டு பிரான்சும்,பிரிட்டனும் ஜெர்மனியோடு சொறிய தொடங்கியிருந்த காலம்.ஜெர்மனியின் "வேமாச்! இராணுவம் பெயரளவில் கொஞ்ச பேரை எல்லையில் நிறுத்தி விட்டு வடகிழக்கு பக்கமாக டென்மார்க்,நோர்வே என்று நாடுகளை வரிசையாக விழுங்கிக்கொண்டிருந்தது."எவ்வளவு அடிச்சாலும் நம்மை திருப்பியே அடிக்குதில்லையே.ரொம்ப நல்ல ஜெர்மனி" என்று புளகாங்கிதப்பட்டுப்பொயிருந்தனர் பிரெஞ்சு-பிரித்தானிய கூட்டுப்படைகள்.கூட்டணியின் மகிழ்சிக்கு காரணமாக இருந்தது 1928 ஆம் ஆண்டில் இருந்து இராணுவ வல்லுனர்கள் எல்லாம் றூம் போட்டு யோசித்து பார்த்து பார்த்து கட்டிய மஜினோட் எல்லைக்காவல் வேலி.நிலக்கீழ் விநியோக பாதைகளால் இணைக்கப்பட்ட சங்கிலித்தொடர் காவல் நிலைகளால் காக்கப்பட்ட மஜினோட் எல்லைக்கோட்டை கடக்க நினைப்பது என்பது ஜெர்மனி ராணுவத்தின் கூட்டுத்தற்கொலைக்கு ஒப்பானதாகும் என்ற கருத்தை ஜெர்மானியர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.உடைக்கவே முடியாத பிரான்சின் கவசத்தை உடைக்க,முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட அவமானத்தை திருப்பிக்கொடுக்க துடித்துக்கொண்டிருந்த ஹிட்லருக்கு ஒரு அசாத்திய திறமை கொண்ட தளபதி தேவைப்பட்டபோது கிடைத்தவர் தான் "கென்ஸ் குடேரியன்".

ஆள்,ஆயுத பலம் மிக்க ஒரு இராணுவத்தின் முன்னேற்றத்தை அதைவிட எண்ணிக்கையில் குறைவான இராணூவத்தைக்கொண்ட முறையாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரணால் தடுத்து நிறுத்த முடியும்.இப்படியான ஒரு தேக்கநிலைப்போர் முதலாம் உலக யுத்தத்தில் நீடித்தது.ஒரு தரப்பு முன்னேற முயல்வதுவும் மறுதரப்பு முறியடிப்பதுமாக தொடரும் இந்த யுத்தம் நாட்கள் செல்லச்செல்ல இழப்புக்களால் ஒருதரப்பு பலவீனமாகும் வரை நீளும்.முதலாம் உலகப்போரில் சமிக்கை படைப்பிரிவில் இருந்த குடேரியனுக்கு யுத்த இயந்திரம் ஒன்றின் பரிமாணங்கள் தொடர்பிலான தெளிவான பார்வை இருந்தது.சில மைல்களே,பலநூறு மைல்களோ போரிடும் முன்னரங்கு கொண்ட ஒரு ராணுவம் / படைப்பிரிவு அதைவிட ஆழமான,பரந்துபட்ட பின்புலத்தை கொண்டிருக்கும்.அப்பின்புலம் நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் விமானத்தளம் தொடக்கம் பல மைல்களுக்கு அப்பாலிருந்து சூட்டாதரவை தரும் பீரங்கி நிலைகள் வரை பரந்திருக்கும்.முதலாம் உலகப்போர் அணைகளுள் தரித்து நின்ற போது பிரித்தானிய படைகள் "மார்க்" வகை டாங்கிகள் மூலமாக உடைப்பை ஏற்படுத்தி அதனூடு தரைப்படைகளை புகுத்தும் யுக்தியை முதன் முதலில் கையாண்டு குறிப்பிட்ட சில வெற்றிகளை பெற்றிருந்தார்கள்.ஆனால் இம்முறை மூலம் எதிரணியை சில மைல்கள் தூரமே பின் தள்ள முடிவதுடன்,பதில் நடவடிக்கை எடுக்கப்படும் போது உட்புகுந்தவர்கள் துண்டிக்கப்படும் அபாயமும் இருந்தது.குடேறியன் இந்த யுக்தியை மெருகேற்றினார்.அசாத்தியம் என கருதப்பட்ட எல்லைக்கோடுகளில் உடைப்பை ஏற்படுத்தி எதிரிநாட்டுக்குள் ஆழமாக உட்புகுந்து முன்னரங்க படைகளை தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் சிந்தனையை நடைமுறைப்படுத்த நகர் திறன் கூடிய-இயந்திரமயமாக்கப்பட்ட இராணுவத்தை வடிவமைக்க வேண்டுமென சொன்னார்.அது சாத்தியப்பட யுத்த தாங்கிகள் எப்படியான வல்லமையை கொண்டிருக்க வேண்டும்,ஒவ்வொன்றும் கட்டளைப்பீடத்தோடு றேடியோ தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும்,ஒவ்வொரு தாங்கியோடும் சிறிய சுயாதீன முடிவுகள் எடுக்கவல்ல அணிகள் இருக்கவேண்டும்,நகர்வின் இடர்பாடுகளை களையும் துல்லியமான வான் வழி தாக்குதல் விமானங்கள் எப்படி தொழில்பட வேண்டும் என்று ஏராளமான போரியல் நுணுக்கங்களை உள்ளடக்கிய அவரது "Achtung – Panzer" என்ற நூல் 1937 இல் வெளிவந்தது.

மஜினோட் காப்பரண்களை கடக்க முடியாதபடியால் ஜேர்மானியர் வடக்கு பெல்ஜியம்/நெதர்லாந்து (ஹொலண்ட் பிராந்தியம்) ஊடாக நுழைந்து பாரிசை நோக்கி முன்னேறுவர் என கூட்டணியினர் கணக்கு போட்டிருந்தனர்.அப்படி நடக்கும் பட்சத்தில் தயாரக இருக்கும் தாக்குதல் படையினரை உள்ளே இறக்கி Meuse,Dijle ஆறுகளின் மறுகரையில் ஜெர்மானியரை முடக்கும் தருணத்துக்காக காத்திருந்தனர்.எதிர்பார்த்தபடியேதான் 10,மே,1940 அன்று தாக்குதல் தொடங்கியது.அடித்து தூள் கிளப்பலாம் என்று பெல்ஜியத்துக்குள் கூட்டுப்படைகள் பாய்ந்தார்கள் பிரதான களமுனை அவர்களுக்கு தென்கிழக்காக இருந்த ஆடன்ஸ் வனப்பகுதியில் திறக்கப்பட்டிருந்தை அறியாமல்.மலையும்,காடுகளுமாய் இருந்த அப்பகுதி கனரக ஆயுதங்கள் நகர்த்தப்பட கடினமானது என்பதால் கூட்டணியினர் பெரியளவில் படைகளை அங்கே நிறுத்தவில்லை.ஆறுகளுக்கு குறுக்காக பொறியியலாளர்கள் பாலங்களை கட்ட குடேறியனின் மின்னல் தாக்குதல் தொடங்கியது.அத்தாக்குதலின் முனை அளவில்லா வலிமையை கொண்டிருந்தது.அதனை மழுங்கடிக்க மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியையும் அது அழித்தொழித்தது.குறுக்கே வரும் எதிரணியின் பெரும் தடைகள் செறிவான,துல்லியமான விமான தாக்குதல் உதவியோடு அழிக்கப்பட்டது.அதன் பின் நீண்டு வந்த விநியோத்தை குறுக்கறுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை கவசப்படைகளால் தகர்க்கப்பட்டன.மூன்று நாட்கள் கழிந்த போது இந்த போரிடும் முனை உடைப்பை ஏற்படுத்திய இடத்திலிருந்து 70 கிலோமீற்றர்கள் தொலைவில் நின்றது.அங்கிருந்து குடேறியன் ராணுவம் கடற்கரைப்புறமாக திரும்பி நகர ஆரம்பித்ததும் பெல்ஜியத்துக்குள் பாய்ந்தடித்து ஓடிய கூட்டுப்படைகளுக்கு ஆப்பு விழுந்துவிட்டது என்பது விளங்க தொடங்கியது.வெகுவேகமாக ஓடிவந்து குடேறியனை தடுக்கப்பார்த்தார்கள்.கனமான, வேகம் குறைவான கூட்டுப்படைகளின் கவச வாகனங்கள் ஜெர்மானியர்களின் நவீன கவசங்களுக்கு இணையாக இல்லை.குடேறியனின் படைகளும் பெல்ஜியத்தினூடு முன்னேறிவந்த படைகளும் இருமுனைகளில் நெருங்க கூட்டணிப்படைகள் ட்ரங்கிட் துறைமுகத்தை நோக்கி ஓடத்தொடங்கின.

இப்போது ஆண்டுகணக்கில் கட்டிய மஜினோட் எல்லைக்கோடு தனித்துப்போய் நின்றது.அதனை உருவாக்கிய இராணுவவல்லுனர்களின் சிந்தனையை ஏளனத்துக்கு உரியதாக மாற்றிவிட்டிருந்தது குடேறியனின் ராணுவம்.சில நாட்களில் மஜினோட் எல்லைக்கோடு காப்பரண்கள் "ஒப்பரேசன் டைகர்" என்ற துடைத்தழிப்பு நடவடிக்கை மூலம் இலகுவாக ஜெர்மானிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.400 000 கூட்டுப்படைகள் ட்ரங்கிட் துறைமுகத்திலிருந்து தப்பியோட தொடங்கின.அழித்தொழிப்பு சமரை நிகழ்த்த விடாமல் ஹிட்லர் படைகளை துறைமுகத்திலிருந்து 10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நிறுத்திவைத்தார்.பிரித்தானியர்கள் "வைகிங்" என்ற ஜெர்மானிய இனத்திலிருந்து வந்தவர்களாதலால் அவர்களை அழிக்க ஹிட்லர் விரும்பவில்லை, அழித்தொழிப்பு சமரின் போது கணிசமான அளவு ஜெர்மானிய படைகளை இழக்க நேரிடும் - இழப்பில்லாத பிரான்ஸ்சின் மீதான வெற்றி அரசியலுக்கு தேவைப்பட்டதால் தப்பியோடிய படைகளை ஹிட்லர் தடுக்கவில்லை என பல காரணக்கள் சொல்லப்பட்டன.உலக யுத்தம் முடிந்தபின் "ஜெர்மனி போருக்கான ஆயத்தங்களை ஆண்டாண்டுகளாக செய்து வந்ததாகவும்,தமது தரப்பு ஆயத்தமின்றி இருந்ததாகவும்" கூட்டுப்படைகள் தமது தோல்விகளுக்கு விளக்கம் சொல்லி வரலாற்றை எழுதின.ஆனாலும் பிரித்தானியாவும்,பிரான்சும் யுத்தப்பிரகடனம் செய்த பிறகு தான் ஜெர்மனி தாக்கவாரம்பித்தது.கூட்டுப்படைகளிடம் இருந்ததை விட ஆள்,ஆயுத பலத்தில் ஜெர்மனி சிறியதாகவும் இருந்தது.ஆனால் தலைமைத்துவமும்,போரியல் யுக்திகளுமே வெற்றியை தீர்மானித்தன.

குடேறியன் தொடக்கிய மின்னல் யுத்தம் "Third reich" எல்லைகளை ஓராண்டுக்குள் ஐரோப்பா முழுவதுவும் விரிய வைத்தது.ரஸ்யா மீதான "operation barbarossa" தோல்வியடைந்தமைக்கு காலநிலை,ஆயிரக்கணக்கான மைல்களுக்கு நீண்ட விநியோக வழி என பல காரணமாய் இருந்தாலும் இறுதி வரை "blitzkrieg" வீரியமான தாக்குதல் முறையாகவே இருந்தது.ஆயினும் அது 1:10 என்ற மிகப்பெரும் எதிரணி விகிதத்தால் முடக்கப்பட்டது.

சூரியன் மறையாத சாம்ராஜ்யமான பிரித்தானியா கீழே இறங்குவதற்கும்,இந்தியா உள்பட்ட கீழைத்தேய நாடுகள் சுதந்திரமடையவும்,பிரான்சை வல்லரசு என்ற நிலையில் இருந்து சாதாரண நாடாக்குவதற்கும் குடேறியன் ஒரு பிரதான மறைமுக காரணியாக இருக்கிறார்.வல்லரசுகள் எல்லாம் சிதைந்து போயிருக்க சண்டையே பிடிக்கத்தெரியாத சப்பை அமெரிக்கா உலக சண்டியனாகியதற்கும் குடேறியனின் மின்னல் யுத்தமே காரணம்.பெட்டியடித்தல்,ஊடறுத்தல் என நாம் கேள்விப்பட்டவை எல்லாம் "Blitzkrieg" இனது வடிவங்கள் தான்.சிறிய ராணுவம் உலகையே பந்தாடிய விந்தையை சாத்தியப்படுத்திய ஹென்ஸ் குடேறியன் ஒரு நேர்மையான போராளி.யுத்த இறுதி நாட்களில் தோல்வியடைந்த ஒரு நடவடிக்கையை கையாண்ட விதம் குறித்து வாக்குவாதப்பட்டதால் ஹிட்லர் கட்டாய ஓய்வில் அனுப்பி வைத்தார்."Third reich" வீழ்ந்த பின்னர் அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்தார்.போர்குற்ற விசாரணைகளில் நேர்மையான ஒரு ராணுவ வீரராக கடமையை செய்ததாக கருதப்பட்டு விடுவிக்கப்பட்டார்.பல ராணுவங்களுக்கு ஆலோசகராக கடமையாற்றி 14.மே,1954 இல் காலமானார்.

முடிவில்லா இணைய தகவல் களஞ்சியத்தினை கூகிள் தேடுபொறி மூலம் சல்லடை போடுகையில் தென்பட்ட சில பைட்டுக்கள் கூட பெறாத அந்த விவகாரமான விளம்பரம் பார்த்தவுடன் கவனத்தை ஈர்த்தது.கார் விற்பவர்கள்,வீடு வாடகைக்கு விடுபவர்கள்,பிரத்தியோக ரியூசன் கொடுப்பவர்கள் என்றிருந்த சாதாரண விளம்பரங்களிலும் படம்வரைய நிர்வாண மாடல்கள் தேவை ,ஜிம் பயிற்றுனராக அழகான பெண் தேவை,ஹொலிடே கூட்டி செல்ல கட்டுடல் ஆண் தேவை என்றிருக்கும் வகையறாக்களே மலரவன் கவனத்தை அதிகம் ஈர்ப்பதுண்டு.ஆனாலும் இன்று புதிதாக வந்திருந்த "எனது மனைவியை இயற்கை வழிகளில் கர்ப்பமாக்க பரிபூரணமான ஆண்மகன் தேவை" என்ற அழைப்பு மொத்த கவனத்தையும் தன் பால் இழுத்து விட்டிருந்தது.உயிரணு வழங்கி ஒருவர் மூலம் செயற்கையாகயாக கருத்தரிப்பது புதிதான விடயமில்லை.இயற்கையான உறவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடும் முதிர்கன்னிகள் பற்றியும் மலரவன் கேள்விப்பட்டதுண்டு.இது தவிர லெஸ்பியன் தம்பதிகள் குழந்தை பெற மட்டும் சிறப்பான உயிரணுக்களை வழங்க கூடிய ஆண்களை நாடுவது வழமை.ஆனாலும் ஒரு இங்கிலாந்து வாழ் தென்னாசியன் தனது மனைவியோடு இயற்கை உறவு வைத்து குழந்தை பெற பிற ஆண்களுக்கு அழைப்பு விடுத்து விளம்பரம் போடுகிறான் என்றால் பின்னால் ஏதோவொரு மர்மம் இருப்பதாக உள்ளுணர்வு எச்சரித்தது.ஆயினும் இவ்வாறான விடயங்கள் குறுக்கிடும் போது உருவாகும் அதீத ஆர்வம் உந்தித்தள்ள மூளையின் கட்டளைக்கு காத்திராமல் விரல்கள் அந்த விளம்பரத்துக்கு பதிலெழுத தொடங்கிவிட்டிருந்தன.
திங்கள் கிழமை தொடங்கி வெள்ளி வரை அசுர வேகத்தில் நகரும் இயந்திர நாட்கள் முடிந்து ஓய்வாக படுக்கையில் சரிந்த போது மீள அந்த விளம்பரம் நினைவுக்கு வந்தது.இப்படியான வேலைகளுக்காகவே வைத்திருக்கும் மெயில் பெட்டியை திறந்து பார்க்க பதில் இருந்தது.


"உங்கள் விண்ணப்பம் கிடைத்தது.புகைப்படம் அனுப்ப முடியுமா?".


இரண்டு புகைப்படங்களை தரவேற்றம் செய்து அனுப்பி சில நிமிடங்களுக்குள்ளாகவே மீள இன் பாக்ஸ் மிளிர்ந்தது.


"நீங்கள் பொருத்தமானவராகா இருப்பீர்கள் என நினைக்கிறேன்.முடியுமானால் அலைபேசி இலக்கம்?".


அனுப்பியதும் ஒலிக்கதொடங்கிய கைத்தொலைபேசியை வெகு எச்சரிக்கை உணர்வோடும்,ஆப்பு குறித்த விழிப்புணர்வோடும் கழிவறைக்குள் ஒதுங்கி காதுகளில் பொருத்தியதும் எதிர்முனையில் பேசிய ஆண்குரலில் அதீத மென்மை இருந்தது.

"எனது பெயர் பவல் நாத்.இந்த விடயம் மிகவும் உணர்வு பூர்வமானது.நீங்களும் இதை விளையாட்டாக கருதவில்லை என்று நினைக்கிக்கிறேன்" என்று தொடங்கி நீண்ட அறிமுக பேச்சு முடியும் போது "அட இவன் ரொம்ப நல்லவன்" என்ற பிம்பத்தை கிட்டத்தட்ட எனக்குள் ஏற்படுத்தியிருந்தான்.

"பவல் நாத்! எனது பெயர் மலரவன்!,எனக்குள் இது தொடர்பில் சந்தேகங்கள் இருக்கின்றன.இந்த விடயத்தில் உடன்பட முன்னர் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன்.முதலாவதாக "நீங்கள் ஒரு குழந்தையை உருவாக்கும் ஆற்றல் அற்றவர் என்றால் டொக்டர் உங்களை விந்தணு வங்கி உதவியை நாடும்படி பரிந்துரைக்கவில்லையா?".

நல்ல கேள்வி என்று சொல்லிவிட்டு சிரித்துகொள்கையில் அவன் பதிலுக்காக கால அவகாசம் எடுத்துக்கொள்வது புரிந்தது.

"மலரவன்! நீங்கள் எல்லா விடயங்களும் அறிந்தவராக இருக்கிறீர்கள்,டொக்டர் அப்படி சொல்லிவிட்டு இன்னொரு விடயமும் சொன்னார்.செயற்கை முறையாக உருவாக்கப்படும் குழந்தையில் வெறும் பொம்மை போல இருக்குமேயன்றி அதில் உயிரோட்டம் இருக்காது.உணர்வுகள் நிரம்பிய குழந்தை நெருக்கமான பாலுறவில்தான் உருவாகும் என்பது உங்களுக்கு தெரியாதா?".

நெத்தியடியாக பதில் சொல்லிவிட்டதாக எண்ணியோ என்னவோ இந்த தடவை சிரிப்பை குறுகிய நேர அவகாசத்தில் முடித்துக்கொண்டான்.கலாச்சார பிண்னணியில் வளர்ந்த ஒரு தென்னாசியன் தனது மனைவி இன்னொருவனோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள அனுமதிப்பது அசாதாரணமானது என நான் தொடங்க அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தான்.

"அவள் என் மீது அளவில்லா அன்பை வைத்திருக்கிறாள்.உன்னோடு கூடுவதால் அதற்கு எந்த பங்கமும் வந்துவிடாது.குழந்தையை உருவாக்க என்னால் முடியாது.மாறாக அவளால் முடிகிற போது அதற்கேன் தடை போட வேண்டும்?.அவள் மீது கொண்டுள்ள அதீத காதல் இப்படியான முடிவுக்கு காரணமாய் இருந்திருக்கலாம் மலரவன்"

இவனோடு பேசிப்பிரியோசனமில்லை நேரே சந்திக்கலாம் என முடிவெடுத்து காலம்,இடம் குறித்து அழைப்பை அணைத்த பின் மாறன் நினைவுக்குள் வந்தான்.


"டேய்! பெரிய பருப்பு மாதிரி கனக்க கதைச்சுக்கொண்டு இருப்பாய் இவனை பற்றி சொல்லு பார்ப்பம்?"


"மச்சான்! இவன் நடிகர் கூலி இல்லாம நீலப்படம் எடுக்க வெளிக்கிட்டான் போல,இல்லாட்டி நீ மனிசியோட மினக்கெடேக்க அதை வீடியோவா எடுத்து பிளாக்மெயில் பண்ணி காசு பார்க்கிற ஆளாவும் இருக்கலாம்.மனுசியட்ட இருந்து விவாக ரத்து பெற வலுவான வீடியோ ஆதாரம் தேடுகிறவனாகவும் படுகிறான்"

"எப்ப பார்த்தாலும் வீடியோ,பலான படம் பற்றிய சிந்தனை தான், வித்தியாசமா ஏதாவது யோசித்து சொல்லடா"

"உன் மூலமா பிள்ளைய பெற வச்சிட்டு அதை காட்டி மாதம் மாதம் காசு கறக்கிற நீண்டகால திட்டமாகவும் இருக்கலாம்"

"பிறக்கப்போகிற பிள்ளைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதினாப்பிறகுதான் எல்லாமே ஆரம்பிக்கும் என சொல்லியிருக்கிறான்டா"

"இந்த வயசில அப்பா ஆகோணும் எண்டு ஆசை வாறது வழமை தான்.அதுக்காக இவ்வளவு கேவலமா போவாய் எண்டு நினைக்கேலை மச்சான்.அதுக்கு முதல்ல பிள்ள குடுக்கிறதுக்கும் ஒரு தில் வேணும் அது உன்னட்ட இருக்கா என்ன?"

கதையை நிப்பாட்டு வாற சனிக்கிழமை கனறிவோவ் DLR நிலையத்தில அவன் மனிசியோட என்னை சந்திக்க வாறான்.வீட்டுக்கு போய் தடல்புடலான விருந்துக்கு பிறகு வேலைய ஆரம்பிக்கலாம் எண்டு சொல்லி இருக்கிறான்.வீட்டுக்குள்ள போன உடன I.Phone G.P.S அடையாளப்படுத்தியை நிப்பாட்டுறன்.அந்த அப்ளிகேசன் எனக்கு Postcode ஐ e mail லஅனுப்பும்.என்ர இமெயில லொக் இன் பண்ணி அடிக்கடி Refresh பண்ணி பார்.வந்த உடன நீ கமல்ஸோட அந்த வீட்டுவாசலுக்கு கிட்டவா வந்து காருக்குள்ள இரு"

"பிறகு?"

"எனக்கு இந்த விசயம் உண்மையா எண்டு அறியோணும்.இல்லாட்டி தலையே வெடிச்சிடும் போல இருக்கு.பிரச்சினை எண்டா கதவை உடைச்சு உள்ள வா சரியோ?

"அப்ப பிரச்சினை இல்லாட்டி?"

"பேசாம கமல்ஸோட கதைச்சுக்கொண்டு இரு.நான் பிள்ளைய குடுத்துட்டு வாறன்."

மாறன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க மலரவன் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நடக்கவாரம்பித்தான்.(பாகம் இரண்டில் முற்றும்)