தற்போதைய நிலவரம் -10உடையாது என்று எல்லோருமே நினைத்த 7ஜி கும்பல் உடைந்துவிட்டது. கவிழாது என்று அடித்து கூறப்பட்ட டைட்டானிக்கே கவிழ்ந்த சம்பவத்தோடு ஒப்பிடும் போது இது ஒரு வெறும் விடயம் என்ற போதிலும் மட்டம் 2003 இனை பொறுத்தவரை இது குறிப்பிடத்தக்க கனமானது. பல்கலை நாட்களில் 7ஜி கும்பல் போட்ட அட்டகாசங்களும் அடிபாடுகளும் மட்டத்திலிருந்த சிலரை விலகிப்போக வைத்ததோடு பலரை பொறாமைப்படவும் வைத்திருந்தன. ஒவ்வொருத்தனும் எதோ ஒரு வகையில் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்க இவர்களால் மட்டும் எப்படி இப்படி ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்று கடுப்பான ஜூனியர் சீனியர் ஏராளம். 7ஜி கும்பலின் பலமும் அதுதான்.பலவீனமும் அது தான். பிரச்சினைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு யாராவது மூன்றாவது தரப்போடு வம்பிழுப்பது, மூன்றாவது நபர் கிடைக்காத பட்சத்தில் தண்ணியை போட்டோ போடாமாலோ தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது ,அரட்டையடிப்பது என இவர்களின் வண்டி நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் வம்பிழுக்க எவருமே சிக்காத நிலமை 7ஜி கும்பலுக்கு உருவானது. வேலைத்தள பிரச்சினைகளை நிர்வகிப்பதும் அனுபவத்தின் மூலம் இலகுவாகிவிட்டது. இந்த நிலையில்த்தான் கடிக்க எலும்பு கிடைக்காத நாய்க்குட்டி தன் காலையே பல்லுழைவு போக்க கடிப்பது போல தமக்குள்ளேயே கடிபட ஆரம்பித்தார்கள். புரஜெக்ட் மனேச்சர் பதவி தந்த குருட்டு தன்னம்பிக்கையில் ஆளாளுக்கு தம்மை தலைவராகவும் தத்துவஞானியாகவும் ஆலோசகராகவும் பிம்பத்தை தமக்குள் வளர்த்துக்கொண்டு வலம் வர ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பகைமை வளர்ந்த போதிலும் தண்ணியை போட்டுவிட்டு நட்பு பாராட்டினார்கள். அப்பகை தெரியாமல் இருக்க மூன்றாவது பிரச்சினையை அலசினார்கள். வேடிக்கையாக வம்பிழுப்பது போல பாசாங்கு செய்து கொண்டு வன்மம் நிறைந்த கண்களோடு போதை எனும் போர்வையுள் மறைந்திருந்து தாக்குவது வழமையானது. இந்த தாக்குதல் என்மீது அதிகமாக இருப்பதை புரிந்துகொள்ள பெரிதாக நுண்ணறிவு ஒன்றும் தேவைப்படவில்லை. பொறுமையிழந்த ஒருநாளில் தண்ணியை போட்டுவிட்டு வேடிக்கையாக வம்பிழுத்தல் என்ற போர்வையை நீக்க முயன்றபோது உள்ளுக்குள் பிராங்கென்ஸ்டைன் பூதமாக மறைந்திருந்த மிருகம் வெளிப்பட்டுவிட்டது.

இன்றையமாதம் 17ம்திகதி நடந்த நீண்ட நேர வாக்குவாதம், கைகலப்பின் பின்னர் நான் அந்த கும்பலை விட்டு வெளியேறி வந்தேன். எனக்கு இருப்பிடம் தர முன்வந்த சகமட்டத்து நண்பனிடம் "அவனை வீட்டுக்குள் விடாதே" என்று கேட்டுகொண்டார்கள். "உனக்கு எவன் இடம் தறானோ அவனுக்கு அடிப்போம்" என்று வேறு சிரிப்புபஞ்ச் டயலாக்குகளை எடுத்து விட்டார்கள். நான் வெளியே போகிறேன் என்பதைவிட நான் வெளியேறினால் பிறர் கேவலமாக நினைப்பார்களே என்ற நினைப்புத்தான் அதிகமாக அவர்களுக்கு இருந்தது.பிறருக்கு ஒரு காட்டு காட்ட வேண்டும் என்ற சிந்தனையையே அடிநாதமாக கொண்டவர்களிடம் வேறெப்படியான சிந்தனையை எதிர்பார்க்க முடியும்?.

இற்றைய திகதிக்கு இக்கும்பலில் எஞ்சியுள்ளவர்கள் பியர்கான்களோடு கூடியிருந்து நான் போனதற்கான காரணங்களை உருவகித்து அவைகுறித்து விவாதித்துக்கொண்டிருக்கக்கூடும். (இந்த வசனத்தை படித்த பின்னர் "எங்களுக்கு வேற வேலையில்லை உன்னைப்பற்றி கதைக்க?" என்று கடுப்பாகவும் கூடும்) உளவியலின் அடிப்படையே தெரியாத போதிலும் என் உளவியல் குறித்து அக்கு வேறி ஆணிவேறாக பிரித்து மேயவும் கூடும். அவை யாவும் தங்களுக்குள் இருக்கும் பூதத்தை மறைத்து அது என்னிடம் இருப்பதாக நிறுவி சுய மகிழ்ச்சி கொள்வதையே அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதையும் அவர்களோடே பத்து வருடமாக இருந்தவன் என்ற முறையில் மிகச்சரியாக ஊகிக்க முடியும்.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் இந்த கும்பலோடு 10 வருடமாக இருந்து மிஞ்சியது இரண்டு பேரோடான நட்பு மட்டும் தான்.எனது அனுமானம் மட்டும் சரியாக இருக்குமேயானால் இன்னும் இரண்டு வருடத்துக்கு மட்டுமே இந்த கும்பல் நீடிக்கும். அதற்க்குள் கலியாணம் கட்டி போறவன் போக எஞ்சியோர் மனநோய் முற்றி வெறி பிடித்தலைய இந்த கும்பல் அடுக்கி வைத்த சீட்டு கோபுரம் குலைவது போல் ஆகிவிடும். நாமெல்லாம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அரைப்பங்கை தாண்டி விட்டோம். வாழ்ந்து முடிக்கும் தருணத்தில் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் பெறுமதி என்பது சொந்த ஊரிலிருந்து எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் சீனனுக்கு கீழ் செய்த வேலையை கொண்டு மதிப்பிடப்படப் போவதில்லை. மாறாக அது நமது சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறோம் என்பதிலேயே தங்கியிருக்கும்.