T.அசுவத்தாமன்




சுப்பவைசர் அசுவத்தாமனை சிலர் காட்டேரி என்றும் வேறு பலர் சாமக்கோடாங்கி என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்த போதிலும் அநேகரை கேட்டால் கடுமையான நேர்மையான உழைப்பாளி என்றே சொல்லுவார்கள். சிங்கபுரியில் இரவு பகலாக 24 மணித்தியாலமும் வேலை நடக்கும் அந்த கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் இரண்டு சிப்டுகளில் மாறி வேலை செய்த போதிலும் அசுவத்தாமன் இரண்டு சிப்டுகளையும் தனி ஆளாக பார்த்துக்கொள்வான். காலை நேரத்தில் வலது கண்ணாலும் இரவு வேளையில் இடது கண்ணால் தூங்குவதாலேயே இப்படி முழுநாளும் வேலை செய்ய முடிகிறது என வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். புறஜெக்ட் மனேச்சராக பெயருக்கு நான் இருந்த போதிலும் அசுவத்தாமன்தான் சைட்டை தனியாளாக ஓட்டுகிறான் என்பது எல்லோருக்குமே தெரியும். எனது சம்பளத்தை விட அவனின் சம்பளம் பல மடங்கு அதிகம். இது குறித்து நான் சில சமயங்களில் வருத்தப்பட்ட போதிலும் அவனது திறமைக்கு சரியான சன்மானத்தை பெறுவதாக கருதி மனதை ஆறுதல்ப்படுத்தியிருக்கிறேன்.





அசுவத்தாமன் ஆறரை அடி உயரம் இருப்பான். அவன் நடக்கும் போது அரபுபுரவி போலிருக்கும். பரந்து விரிந்த மார்பும் ஒடுங்கிய வயிறுமாக அவன் தோற்றம் இதிகாசநாயகர்களை நினைவு படுத்தும். அவனது திமிறிய தசைகளையும் கூரிய நாசியையும் நேரிய புருவங்களையும் பார்க்கும் எந்தப்பெண்ணுமே தடுமாறித்தான் போவாள். அப்படித்தான் கருப்பு சரும தென்னாசியர்கள் என்றாலே இளக்காரத்தோடு பார்க்கும் ஒப்பிரேசன் மனேச்சர் "லிடியா இங்" க்கும் அசுவத்தாமனிடம் நிலைகுலைந்து போனாள். லிடியா திருமணமானவள். ஐந்து வயதில் பிள்ளை வேறு உண்டு. ஆனாலும் கட்டுக்குலையாத காரிகை அவள். சூழல் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம், போக்குவரத்து துறை போண்ற அரசாங்க நிர்வாக பிரிவுகள் பாயும் போதெல்லாம் சமாளிப்பது அவள் தான். எங்களைக்கண்டால் பொங்கியெழும் அரச அலுவலர்கள் லிடியாவை கண்டதும் வாயெல்லாம் பல்லாகி அடங்கி விடுகிறார்கள். 




நடப்பாண்டில் எமது நிறுவனம் 5 வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அவற்றில் பெரியது இந்த புறஜெக்ட் தான். 100 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள திட்டம் இது. 3 km நீளமான நிலத்தடி புவியீர்ப்பு கழிவுநீர்கற்றல் தொகுதியை 18 மாதங்களில் நிர்மாணித்தாக வேண்டும்.  அதிகமான பாறைகளை கொண்ட தரைப்பகுதியில் அதிகமான ஆழத்தில் மைக்ரோ டனல் இயந்திரத்தை இயக்குவது சிக்கலாக இருக்கும் என்று அநேக நிறுவனங்கள் பின்வாங்க எங்கள் முதலாளி மட்டும் விடாப்படியா நின்று டென்டர் போட்டு இந்த வேலையை கைப்பற்றினார். அவரது ஒரே நம்பிக்கை அசுவத்தாமன். அவன் கடந்த 20 வருடமாக செய்த வேலைத்திட்டம் எதிலும் துளையிடும் இயந்திரம் இடைநடுவே சிக்கியதாக வரலாறில்லை. இது வழமைக்கு மாறானது. சிங்கப்பூரில் இயந்திரம் சிக்காமல் முடிந்த புரஜெக்ட்களை விரல் விட்டு எண்ணலாம்.முதலாளி அனுமாசிய சக்திகளில் நம்பிக்கை கொண்டவர். பேய்க்கு படையல் வைத்து அடிக்கடி பீதியை கிளப்புவார். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் அவர் அசுவத்தாமனோடு உரையாடும் வேளையில் மட்டும் தனி மரியாதை தொனிப்பதை கண்டிருக்கிறேன்.




அசுவத்தாமனின் அல்லக்கை என்று கருதக்கூடிய ஒரு வேலையாள் இருக்கிறான். அவன் ஓரு தடவை போதையில் சொன்ன தகவல்கள் முதுகெலும்பை சில்லிட வைத்தன. Tuasல் வேலை செய்த போது துளையிட்டபடி சென்ற இயந்திரம் இடைநடுவே பழுதாகிவிட்டதாம். அசுவத்தாமன் நள்ளிரவில் தன்னை Manhole வாசலில் நிற்கச்செல்லிவிட்டு பிராணவாயுவே இல்லாத குழாய் வழியாக தவன்று சென்று இயந்திரத்தை சரி செய்து விட்டு திரும்பினானாம். இன்னொரு நாள் பாரம் தூக்கி பழுதாகிய போது வேலையாட்களை மதிய உணவுக்கு அனுப்பி விட்டு வெறும் கைகளால் பல தொன் நிறையுள்ள I-Beamகளை தூக்கி அடுக்கிக் கொண்டிருந்தானாம். விடிகாலையில் மழைநீர் தேங்கிய வெட்டப்பட்ட குழிகளில் இறங்கி அரையளவு நீரில் நின்று சூரிய வணக்கம் செய்வதுமுண்டாம். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு அசுவத்தாமனோடு மிகுந்த எச்சரிக்கையோடு பழக ஆரம்பித்தேன்.



சிங்கப்பூர் சீனர்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை கொண்ட லிடியா அசுவத்தாமனிடம் விழுந்ததன் பின்னணியில் சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. லிடியா சைட்டில் உலாப்போய்க்கொண்டிருந்த போது தற்காலிக மண்வீதி மழை ஈரத்தில் பொறிய வாகனம் பள்ளத்தில் சாய்ந்தது. வேகமாக ஓடிப்போன அசுவத்தாமன் வெறும் கரங்களால் பிரண்டு போயிருந்த லாண்ட் ரோவரை நிமிர்த்தி லிடியாவை தூக்கிக்கொண்டு வந்தான். அன்று தான் லிடியா அவனை வெகு அண்மையில் பார்த்திருக்க வேண்டும். அடுத்து கழிந்த நாழிகை முழுவதும் அடிக்கடி அசுவத்தாமனை பார்த்து புன்னகைப்பதும் நன்றி கூறுவதுமாக இருந்தாள். வெகு நேரத்திற்கு இது நீடிக்காது என்று நான் எண்ணியதற்கு மாறாக மறுநாள் இருவரும் ஒன்றாய் மதிய உணவுக்கு புறப்பட்டு போனார்கள். லிடியா அவனை "அஸ்வன்" என்று செல்லப்பேர் வேறு வைத்து அழைக்கத்தொடங்கியிருந்தாள். எனது மற்றும் நிறுவனத்திலிருக்கும் அநேகரின் வயிற்றெரிச்சலையும் மீறி வளர்ந்த இந்த காதல் லிடியா கர்ப்பமாவதில் போய் முடிந்தது.

"சுகன்! நான் இப்போ மூன்று மாசம். அஸ்வன் கருவை கலைக்கச்சொல்லி வற்புறுத்துகிறார். உங்களால் அவரோடு பேசி சமாதானப்படுத்த முடியுமா?"

பூட்டிய மீட்டிங் அறையில் லிடியா வெடிகுண்டை வீசினாள்.

"உங்களுக்கு திருமணமாகி விட்டதே லிடியா?"

"அதனாலென்ன விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். குழந்தை பிறந்தவுடன் அஸ்வனை மறுமணம் செய்வதாக இருக்கிறேன்."

"சரி உங்களுக்காக அவனோடு பேசுகிறேன்"





அழைத்து சில நிமிடங்களில் உடலை வில்லாக வளைத்து குனிந்தபடி தலை மேலே இடிக்காதவாறு  உள்ளே வந்தான் அசுவத்தாமன்.

""வரச்சொன்னீர்களாமே! என்ன விடயம்?" 

"நடிக்காதே! நீ செய்த ஈனச்செயல் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்"

"எது ஈனச்செயல்? நான் செய்தது ஒரு இரவு நேர வலிந்த தாக்குதல். Night raid என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நீதியை மீறி யுத்தம் செய்தவர்களை இரவில் தாக்குவது தவறாகாது. அப்படிப்பார்த்தால் உங்களது ஊரில் நடைபெற்ற ஒப்பறேசன் எல்லாளனும் போர்தர்மங்களை மீறிய தாக்குதல் தான்."

"நாம் கர்ப்பத்தைப்பற்றி பேசுகிறேன் நீ ஏன் தொடர்பே இல்லாமல் எல்லாளனை இழுக்கிறாய்?"

"ஓ கர்ப்பமா? அது அபிமன்யுவின் மனைவி உத்தாராவினுடையது. அப்பா இல்லாத அந்த குழந்தை பிறந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும்?. நான் அதன் வேதனையை போக்கியிருக்கிறேன். அதைப்பற்றி நீ யோசித்ததுண்டா?"

"குழப்புகிறாயே? . முதல்ல ஹெல்மெட்டை கழட்டு. ஒபிசுக்குள்ள எதுக்கு சேப்டி ஹெல்மெட்?"

அசுவத்தாமன் ஹெல்மெட்டை கழற்ற மேல்நெற்றியில் நீண்ட ஆழமான வடு தென்பட்டது. தலைமயிரை முன்னே இழுத்து வடுவை மறைக்க முயற்சித்தான்.

"இது கிருஸ்ணன் செய்த சதியால் உருவான வடு இது. 22ம் திகதி மார்கழி மாதம் கிறிஸ்துவுக்கு முன் 3067ம் ஆண்டு தொடங்கின சண்டை 18 நாளா நடந்து தை மாசம் 10 திகதி முடிந்தது.11 திகதி நான் பிரமாஸ்திரம் அடிச்சனான். அண்டைக்குத்தான் இந்த காயமும் வந்தது"

காயத்தை மறைத்த படி அசுவத்தாமன் சொல்லிக்கொண்டு போக எனக்கு உடம்பெல்லாம் உதறல் எடுக்க தொடங்கியது.

"இரவு நேர தாக்குதல், பிரம்மாஸ்திரம் , நெற்றியில் வடு இதெல்லாத்தையும் வச்சுப்பார்த்தால் நீ துரோணர் மாஸ்டர்ட மகன் அசுவத்தாமன் தானே? அடப்பாவி கிருஸ்ணர் உன்னை காட்டுக்கை அலையோணும் எண்டெல்லோ சாபம் போட்டவர். எப்படி நாட்டுக்கை வந்தனி?"

""காடு என்று சாபம் போட்ட பார்த்தன் எந்தக்காடு என்பதை வரையறுக்காம விட்டுட்டான். சிங்கப்பூரும் ஒரு கொங்கிறீட்டு காடு தானே?. அவன்ட சாபத்திலை இருக்கிற ஓட்டையை பயன்படுத்தி இங்கு வந்து விட்டேன்"

"வந்ததும் பத்தாமல் ஒரு வேற்றின குடும்ப பெண்ணை கர்ப்பமாக்கி விட்டாயே படுபாவி!"

நான் கோபத்தோடு கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பிக்க என்னை சற்றும் பொருட்படுத்தாத அசுவத்தாமன் மேசையில் இருந்த பேனை மூடியை எடுத்து விரலிடுக்கில் வைத்தபடி கண்களை மூடி மந்திரம் உச்சரிக்கலானான். சில நொடிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளியோடு கிளம்பிய அந்த பேனா அஸ்திரம் கூரையை பிளந்து கொண்டு லிடியா வயிற்றில் வளரும் கருவை நோக்கி பறக்கலானது.





பிற்குறிப்பு : பாரதப்போரின் முடிவில் கருவில் இருந்த குழந்தையை பிரம்மகணை தொடுத்து கொண்ற பாவத்துக்காக கண்ணனின் சாபத்துக்கு ஆளான அசுவத்தாமன் இன்று வரை காடுகளில் அலைந்து திரிகிறான். இதுவரை அவனை கண்டதாகவும் உரையாடியதாகவும் பல கதைகள் உண்டு. மரணத்தை தழுவ முடியாமல் யாருடைய அன்பையும் பெற முடியாமல்  சிரஞ்சீவியாக வாழும் அவன் கலியுக முடிவிலே மூப்படைவான் என்கிறது பாரதம்.









கோச்சடையானில் ரஜினி ஒரு வசனம் சொல்லுவார் "பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது". நண்பன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு கூட வந்த வஞ்சகன் தருணம் பார்த்து முதுகில் குத்தும் போது எந்த தீரனும் நிலை தடுமாறித்தான் போவான்.  எதிரி அடித்தால் உடனடியாக திருப்பியடிக்க முடியும். ஆனால் கூட இருந்தவன் குழி பறிக்கும் போது ஏற்படும் அதிர்ச்சியில் திருப்பித்தாக்க முடியாது. அநேகமானவர்கள் நெருக்கமாக இருந்தவர்கள் குழி பறித்த போது ஒதுங்கிச்செல்வதையே தேர்ந்தெடுப்பார்கள். விடயம் தெரிந்தவர்களின் பரிதாப விசாரிப்புகள், உறவுகளின் ஏளனங்கள் என கொடூரமான தருணங்கள் நிரம்பிய வலி அது.

உலகின் மூலைகளெல்லாம் அலைந்து திரியும் எங்களில் அநேகருக்கு ஒரு கனவுண்டு. தாய்நாட்டிற்கு போக வேண்டும், வெற்றிகரமாக ஒரு தொழில் முயற்சியை தொடங்கி வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும், தேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நியாயமான கனவு அது. அந்நிய நாட்டில் அரிதாக கிடைக்கும் ஒய்வு நேரங்களில் நண்பர்கள் கூடும் போது இது குறித்து அலசுவோம். வெற்றி வாய்ப்பு, தடைகள், தோல்வி ஏற்படின் எதிர்காலம் என பலவாறான உப தலைப்புகளில் எங்கள் விவாதம் நீளும். எங்கள் சோர்வையும் தயக்கத்தையும் போக்க வெற்றிகரமான உதாரணம் ஒன்று தேவைப்படும் போதெல்லாம் அவனது பெயர் வந்து போகும். வன்னி பெருநலப்பரப்பிலிருந்து மொறட்டுவைக்கு வந்த சுள்ளான் அவன். 2008 ஆம் ஆண்டு கம்பஸ் முடிந்து ஆளாளுக்கு ஒரு திக்காக பறந்த போது ஊரில் உறுதியாக நின்றவன். நாங்களெல்லாம் கலியாணம் பற்றி யோசிக்க முதலே அப்பா ஆகி சாதித்து காட்டியவன்.

தீபரூபன் ஊரில் கட்டிட ஒப்பந்தக்காரனாக ஆகிய போது நாங்களெல்லாம் வெள்ளைக்கார முதலாளிக்கும் ,சீன முதலாளிக்கும் கீழே வேலை செய்து கொண்டிருந்தோம். தொலைபேசியில் உரையாடும் போது "மச்சான்! வந்தா வெல்லலாம். நான் தேவையான உதவி எல்லாம் செய்து தாறன்" என்று நம்பிக்கையூட்டுவான். வார்த்தைகளால் மட்டும் நில்லாது சிலருக்கு உதவி செய்தும் காட்டியவன். ஆரம்பித்து ஒரு வருடத்திலேயே மோசடிக்காரனிடம் இரண்டு மில்லியன்களை இழந்தும் விடாப்பிடியாக நின்றான். சில நாட்களின் பின்னர் பெராதெனிய கம்பஸ் பெடியனோடு சேர்ந்து சில ஒப்பந்தங்களை பெற்று செய்து வருவதாக கேள்வியுற்றோம்."சுள்ளான் சுழியன் பெரிய அளவிய கலக்குவான் பார்" என்று நாங்கள் நம்பிக்கையோடு இருக்க அந்த கூட்டுச்சேர்ந்த பரதேசியும் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவனுக்கு ஆப்பு அடித்திருக்கிறது.

தீபரூபன் கடும் உழைப்பை கொட்டி கட்டுமானங்களை செய்து கொண்டிருக்க, வந்த கொடுப்பனவு பணத்தில் கார் வாங்கி ஓடியிருக்கிறான் அந்த ஆப்பு மன்னன். தீபரூபனின் பொறுமையை பலவீனமாக கருதி போலிக்கணக்குகள் காட்டி பெருமளவு லாபத்தை விழுங்கியிருக்கிறான். ஆட்டையை போட்டு பழகினவனுக்கு கையும் காலும் சும்மா இருக்காது. ஒரு கட்டத்தில் கொழுப்பெடுத்து மாகாண சபை ஒப்பந்தங்களில் லஞ்சம் வாங்கி பருத்திருக்கிறான். இதோடு நிறுத்தியிருக்கலாம் அவன். ஆசை யாரை விட்டது?. இறுதியாக வந்த 5 மில்லியன் ஒப்பந்த பணம் முழுவதையும் ஏப்பம் விட்டு கேட்கப்போன தீபரூபனிடம் "நீ செய்த வேலைக்கு சம்பளம் வேணுமெண்டா தாறன்" என்ற அருவருப்பாக பதிலளித்திருக்கிறான்.

சில கால அவகாசங்களை கொடுத்தும் அவன் திருந்தாத நிலையில் நிலையில் சுள்ளான் திருப்பி அடித்திருக்கிறார். இன்றைய திகதியில் அரச பணத்தை ஊழல் செய்தது, தொழில் பங்குதாரனை ஏமாற்றியது, வருமானத்திற்கு மிஞ்சிய சொத்து சேர்த்தது என பலமுனை ஆதாரங்களை மாகாண சபை அரசின் முன் வைத்தது ஆப்பு மன்னனின் தலையில் இடியாய் இறங்கியிருக்கிறது. நாய் நடுக்கடல்ல நின்றாலும் நக்கி குடிப்பதைப்பற்றியே சிந்திக்குமாம். அதே போல் அந்தப்பரதேசி கேவலமாய் இறங்கி தீபரூபனினதும் ,மனைவியினது முகநூல் கணக்குகளை கைப்பற்றி பின்வாங்கும்படி சிறுபிள்ளைத்தனமாக மிரட்டியிருக்கிறான். முகநூல் இல்லாவிட்டால் முகவரியே இல்லையென்று ஆகிவிடுமா?. புதிய கணக்கை திறந்து நண்பர்களோடு இணைந்து கொண்டிருக்கிறான் தீபரூபன்.


A conventional "Aapu"












ஆப்படிக்க வந்தவன் இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல சிக்கியிருக்கிறான். பிய்த்தெடுத்துக்கொண்டு ஓடுவது, அல்லது நின்று மாட்டுப்படுவது என்று இரண்டு தெரிவுகள் தான் அவனுக்கு இருக்கின்றன.
மோசடி செய்யப்பட்ட பணம் திருப்பி வரப்போவதில்லை என்ற போதிலும் இப்படியான புல்லுருவிகள் நாட்டை விட்டு அகற்றப்படுவது அல்லது முடக்கப்படுவது அவசியம். துடிப்புள்ள இளைஞர்களின் தொழில் முயற்சிகளில் கொள்ளையடிக்க நினைக்கும் பணப்பேய்களுக்க்கும், திருடர்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாய் அமைய வேண்டும். வெளிநாட்டுக்கு தப்பி ஓடாது தாய்நாட்டில் நின்று ஒரு பொறியியளாளன் நின்று சாதிக்க போராடுகிறான் என்றால் அது மிகப்பெரும் ஈகம். அதை கெடுக்க நினைக்கும் கொழுத்த எலிகள் தயவுதாட்சணியமின்றி விரட்டப்பட வேண்டும். இக்கட்டான தருணத்தில் மட்டம் 2003 நண்பர்களாகிய நாம் தீபரூபனுக்கு பக்கபலமாக நிற்போம்.





பலவருடங்களுக்கு முன்னர் வன்னி பெருநிலப்பரப்பில் வாழ்ந்து வந்த ஒரு விவசாயிடம் நல்லின பசுமாடு ஒன்று இருந்தது. இனச்சேர்க்கைக்குரிய காலம் வந்ததும் அவர் அதை பொருண்மிய நிறுவனத்தின் இனச்சேர்க்கையிடத்துக்கு அழைத்துச்சென்றார். பசு மாட்டையும் காளை மாட்டையும் அருகருகே கட்டியாகிவிட்டது. காளைமாடு பார்ப்பதற்கு அவ்வழவு அழகாக திமிறிக்கொண்டு நின்றது. விவசாயிக்கோ அளவில்லாத சந்தோசம். "சினைப்பட்டு இதே மாதிரி நாம்பன் கன்று போட்டால் பத்து ஏக்கர் உழலாம், பசுக்கன்று போட்டாலும் பத்து லீற்றர் கறக்கும்" என்று அவரது மனது கணக்கு போட்டபடியிருந்தது. நேரம் ஓட ஓட எதுவுமே நடக்கவில்லை. அந்த வாட்டசாட்டமான காளை அருகே போவதும் முகர்வதும் பின்வாங்குவதுமாய் இருந்தது. இதைப்பார்த்த விவசாயிக்கு காளையின் ஆண்மைத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அங்கே வேலை செய்த இளைஞனிடம் கேட்டே விட்டார். 

"தம்பி! உந்த நாம்பன் சேர்க்கைக்கு புதுசோ?"

"அண்ணே! மாட்டுக்கு நோக்கம் இருக்கு! ஆனா ஊக்கம் இல்லை!"

இக்கதை ஒரு செவிவழியாக கம்பசில் பரவி "ஊக்கமில்லாதவர்களை" எள்ளிநகையாட பயன்பட்டது. 

எமது மட்டத்தில் ஒரு நோக்கம் மிகுந்த "X-Man" ஒருவர் இருந்தார். ஆள் நடந்தால் தூரத்திலிருந்து பார்க்கும் போது கால்கள் எக்ஸ்வடிவில் இருக்கும். உடம்பில் அந்துசந்து இருக்காது. தொப்புள் தெப்ப குளம் போல இருக்கும். நண்பர்கள் அவருக்கு  அன்பாக வைத்த பெயர்களின் ஒன்று "கருப்பு நமீதா". எக்ஸ்மான் கிழமைக்கு ஒரு தடவை தான் குளிப்பார். செமஸ்டர் பரீட்சை வந்துவிட்டால் மாதக்கணக்கில் குளிக்க மாட்டார். கிட்ட போகும் போது கெட்ட வாடை வீசும். அனுபவப்பட்டவர்கள் அவ்வாடையை அழுகிய மீன் நாற்றத்திற்கும், இன்னும் சிலர் அதை குட்டை நாயின் மணத்திற்கும் வேறு பலர் பன்னித்தொழுவ வாடைக்கும் ஒப்பிடுவார்கள். முதல் வருடத்தின் இரண்டாம் செமஸ்டர் எக்ஸாம் நாட்களின் போது எங்கள் மட்டத்தின் "ஆடம்பர அழகி" நூலகத்திலிருந்து படித்துக்கொண்டிருந்தார். எக்ஸ்மானுக்கு அழகியில் பல நாட்களாகவே ஒரு "நோக்கம்".ஆனால் போதிய "ஊக்கம்" இல்லாததால் அருகில் நின்று பேசுவதற்கே தயங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் "நோக்கமிருக்கு ஆனா ஊக்கமில்லை" என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தோம்.


மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நாள் "ஆடம்பர அழகி" அருகே சென்று உட்கார்ந்து விட்டார். சந்தேகம் கேட்கிறேன் என்று சொல்லி ஓரிரண்டு மொக்கை கேள்விகளை தொடுத்தார். ஆடம்பர அழகிக்கோ எக்ஸ்மானில் இருந்து வீசிய நாற்றம் தாங்க முடியவில்லை. எவ்வளவு நேரத்துக்குத்தான் தாங்குவது?. ஒரு கட்டத்தில் கைக்குட்டையை எடுத்து மூக்கை மூடியபடி பதிலளிக்க ஆரம்பித்தார். ஊக்கத்தின் உச்சியில் இருந்த எக்ஸ்மானோ அழகி வெட்கத்தின் மிகுதியில் மூடிக்கொள்வதாக கணக்கு போட்டார். தான் பேசியதால் மகிழ்ச்சியடைந்து தானாக புன்னகைக்கும் உதடுகளை மறைக்கவும் கைக்குட்டையை அழகி பாவிக்கிறார் என எண்ணி புளகாங்கிதமடைந்தார். அத்தோடு நிறுத்தாமல் அன்று  இரவுதங்கிமிடத்துக்கு வந்தவர் நண்பர்களிடம் அவளை மடக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்.

நண்பர்கள் எக்ஸ்மேனின் ஊக்கத்தை வெளியே பாராட்டினாலும் உள்ளே கடுப்பில் இருந்தார்கள். நமக்கு மைனா சிக்காவிட்டாலும் அடுத்தவனுக்கு காக்கா கூட சிக்கக்கூடாது என்ற தெளிவான கொள்கையுடையவர்கள் அவர்கள். அவ்வழகிக்கு நெருக்கமான வாளிகள் மூலமாக விசாரித்தார்கள். அழகி அளித்த பதில் எக்ஸ்மேனை ஒரே நாளில் இசற்மான் ஆக்குமளவுக்கு இருந்தது.அப்படி என்ன தான் அவர் சொல்லியிருப்பார்?



" நான் ஒண்டும் அவரைக்கண்டு வெட்கப்படேலை. சரியான நாத்தமா இருந்தது. அதுதான் லேஞ்சியால பொத்தினான்"