.



கார்த்திகை மாத குளிருக்குள்ளும் வெறும் ரீசேர்ட்டோடு லண்டன் மாநகரின் கிழக்கே உள்ள இல்பேட் பிரதேச பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்த எனக்கு முன்னால் அரையில் இருந்து கால்சட்டை விழ விழ வந்து நின்றவனின் நோக்கம் வம்பிழுத்தல் வகையை சார்ந்தது என்பதை என் கற்பூர மூளை உடனேயே கனகச்சிதமாக கவ்விவிட்டது.கழுத்தில் இருந்த தடித்த உலோக சங்கிலியும் ஒட்ட வெட்டப்பட்டிருந்த தலை முடியும் அவன் தன்னை தானே ஒரு சண்டைக்காரனாக பிரகடனப்படுத்தியிருப்பதற்கான அடையாளங்களாக இருந்தாலும் அதற்கும் அப்பால்ப்பட்டு ஏதோவொரு மறைமுக காரணம் என் மீதான முரண்பாட்டுக்கு பின்னாலிருப்பதாகவும் உள்மனம் சொல்லியது சற்றே தூரத்தில் நின்று இவனை பார்ப்பதும் வெடுக்கென தலையை திருப்புவதுமாயிருந்த வடநாட்டுக்காரியை பார்த்ததும் சரியென்று ஆகியது.சண்டை பிடித்து கோபமாய் இருக்கும் பெண்நண்பியை மீள தன்பால் ஈர்க்கும் முகமாகவோ, முன் பின் தெரியாத ஒரு பிகரை வீரம் காட்டி மடக்கும் முகமாகவோ என்னை தட்டிப்பிழிய அவன் முடிவெடுத்து இருக்கலாம்.வயது ஏறியும் பூச்சிப்பிள்ளை கணக்கா இருக்கும் எனது மூஞ்சி அமைப்பும் அவனது எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கலாம்.



உருண்டோடிய சில நிமிடங்களுக்குள் அவன் "யோவ்! வை யூ லுங்கிங் அற் மீ மான்?" என்று வழமையான லண்டன் வம்பிழுப்பு வசனத்தை வெளிவிட்டபடி நெருங்க தொடங்கிவிட்டான்.நான் இப்போது என் முன்னால் நின்ற தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிந்து எடுத்தாக வேண்டும்.முதலாவதாக நிபந்தனையின்றி சரணடைவது."பிளட்! யு லுக் லைக் ஏ லயன் , லீவ் திஸ் வாங்கர் புறோ" என்று தன்மானத்தை விற்று வார்த்தைகளை விட்டு கைகுலுக்கி கொள்ளலாம்.விளைவாக அவன் இரக்கப்பட்டு துப்பிவிட்டோ,தள்ளி விழுத்தி விட்டோ செல்லக்கூடும்.அல்லது "அடிமை ஒன்று சிக்கிட்டான்டா" என்ற புளகாங்கிதத்தில் நாலு நாள் எழும்பாத அளவுக்கு கும்மி விட்டு செல்லவும் கூடும்.அடுத்த தெரிவு அரசியல் தீர்வு.யாரையாவது உதவிக்கு வரும் வரை சத்தமாக பேசி சமாளிப்பது.இந்த சத்தம் வீதியால் போகும் சனத்துக்கு தகராறு குறித்து தெரியப்படுத்தும்.அவர்களில் சிலரோ பலரோ சேர்ந்து வந்து ஏதாவது ஒரு தீர்வை தந்து விட்டு செல்ல வாய்ப்பிருக்கிறது.முரட்டு கிழக்கு ஐரோப்பியர்கள் வந்தால் இவனை பிரிச்சுமேய்வதுடன் என்னை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் செய்வார்கள்.மூன்றாவது வழி சடுதியான,வேகமான பின்வாங்கலை மேற்கொள்வது.பிரடியில் குதிக்கால் பட ஓடி அருகே உள்ள நிலக்கீழ் ரயிலில் ஏறி தப்பியோடுவது.அவனும் தன்னைபார்த்து இந்த ஓட்டம் ஓடுகிறானே என்ற பூரிப்பில், முஞ்சியை நீட்டியபடியிருக்கும் அந்த பிகருக்கு வீரம் காட்டிய திருப்தியில் ஒருகட்டத்துக்கு மேல் விரட்டுவதை நிறுத்திவிடுவான்.என் முன்னால் நின்ற மூன்று தெரிவுகளையும் கண நேரத்தில் விலக்கிவிட்டு எப்போதும் எனக்கு விருப்பமான இறுதி தெரிவான நான்காவதை அலச தொடங்கினேன்.


வெற்றிகரமான திருப்பியடிப்பு எப்போதும் மிகுந்த மன மகிழ்சியை தரவல்லது.திருப்பியடிக்கும் போது மெலிய,வலிய அடிகள் பலவோ சிலவோ கிடைக்க வாய்ப்பிருக்கிறது.எது எப்படியோ எனது 27 வயது வாழ்க்கையில் அடிச்சதை விட அடி வாங்கினது தான் கூட என்பது மறைக்கவோ மறுக்கவோ இயலாத விடயம்.நினைவு நிற்கிற வரை எனக்கு முதன் முதலாக காதைப்பொத்தி அறைந்தது என் பெரிய மாமாக்காரன்.நோஞ்சான் பிள்ளை என்று எல்லோரும் பத்திரமாக வளர்த்த என் மீது வீட்டுக்குள் துப்பியதுக்காக 5 வயதில் அடியை போட்டு தொடக்கி வைத்தவர் அவர்தான்.இது 1989 இல் ஊரைவிட்டு ஓட முதல் நடந்தது.பின்னர் இடம்பெயர்ந்து சிறுப்பிட்டியில் இருந்த போது அகப்பை காம்பு,பப்பா குழல்,பூவரசம் தடி என்று பல வகையறா அடிகளை வாங்க பழகியிருந்தேன்.ஒரு கையால் பிரடியில் பிடித்து முதுகு தெரியும் வரை அமத்தி வளைத்துவிட்டு மறுகையால் முதுகில் அம்மா போடுகிற அடிகள் விசேடமானவை.குவிந்த உள்ளங்கை முதுகில் இறங்கும் போது காற்றடைத்து எழுகிற "படார்" என்ற சத்தம் அயலில் இருப்பவர்களை பயமுறுத்தும்."சின்ன பெடியனை இப்பிடி மோட்டுத்தனமா அடிக்க கூடாது" என்று சொந்தக்கார சனம் அம்மாவோடு வாக்குவாதப்பட எந்தவிதவலியுமில்லாமல் நான் ஓடிக்கொண்டிப்பேன்.பிறகு புத்தூர் சோமஸ்கந்தாவில் 4ஆம் ஆண்டு படிச்ச நேரம் பக்கத்து வகுப்பு மொனிற்றரோடு கொழுவுப்பட்டுட்டன்.வீட்ட போகேக்க அவன் கூட்டமா வந்து என்னை பிடிச்சு கும்ம தொடங்கினான்.நான் எல்லா அடியையும் வாங்கிக்கொண்டு கைக்கு எட்டுப்பட்ட ஒருத்தன் கழுத்தை பிடித்து அமத்த தொடங்கினேன்.எனது நல்ல நேரத்துக்கு அந்த இடத்துக்கு வந்த பக்கத்து வீட்டு அரவிந்தன் அண்ணா எல்லாரையும் அடிச்சு கலைச்சு என்னை வீட்டை கூட்டிக்கொண்டு வந்தார்.அடுத்த நாள் நான் அமத்தினதால கோபி எண்ட பெடியனுக்கு கழுத்து வீங்கி விசயம் பள்ளிக்கூடத்துக்கு போய் அடிச்ச அவ்வளவு பேருக்கும் குண்டியில் அடி விழுந்ததாக அரவிந்தன் அண்ணா சொன்னதும் ஒரே புளுகமா இருந்தது.அவர் தவளைபாய்ச்சலில் காவியமாகி விதைத்த போது அடிவிழுந்த அன்று சொன்ன "அடிச்சா திருப்பி அடிக்க தெரியாதோடா,ஒருதனுக்கு அடிக்க எல்லாரும் ஓடுவாங்கள்" என்றது மீளவும் நினைவுக்கு வந்தது."என்ரை பிள்ளையை உந்த காடைக்கூட்டங்கள் கொன்று போடுவாங்கள்" என்று அம்மா பிடிவாதம் பிடிக்க கல்வியன்காடு தமிழ்கலவன் பாடசாலைக்கு அப்பா மாத்தி விட்டார்.முதல் நாளே எல்லாரும் என்னை ரவுண்டு கட்ட நான் மௌனமாக நின்றேன்."எனக்கு அடிப்பியா?,இவனுக்கு அடிப்பியா?,அவனுக்கு?" மதிய உணவு நேரம் கேள்விகள் எகிற தொடங்கின.நீண்ட நேரம் மௌமாக நின்ற என்னைப்பார்த்து மோகனதாஸ் என்ற பெடியன் சொன்னான் "பாவம்! படிக்கும்.ஆனா அடிக்க மாட்டுது போல".இனியும் ஊமைக்கோட்டான் போல இருக்கப்படாது என்று முடிவெடுத்து அடுத்த நாள் இடைவேளை நேரத்தில் ஊமல் கொட்டையில் உதைபந்து விளையாடும் போது கொழுவுப்பட்ட விமலேந்திரன் என்ற ஒரு வகுப்பு தாதாவை தட்டிப்பிழிந்து பள்ளிக்கூடத்துக்க அடிபட கூடிய ஆட்கள் என்ற வரிசையில் சேர்ந்து கொண்டேன்.1995,யாழ் இந்துவில் 6 ஆம் ஆண்டில் இணைந்த போது வாய்த்தர்க்கம், மட்டுபடுத்தப்பட்ட சண்டை என்று வருமே தவிர பெரிதாக அடிபாடு வராது.ராபியோடு ஒருக்கா மட்டுப்பட்ட சண்டை ஒன்று வந்ததாக ஞாபகம்.பிறகு 1996 இல் கரவெட்டியில இடம்பெயர்ந்து இருந்த நாட்களில் கோவில் திருவிழா கச்சேரியில் முன்னால் இருந்த மனநலம் குன்றிய ஒருத்தனுக்கு எனக்கு பின்னால் இருந்தவன் கச்சான் கோதை எறிய அவன் கடுப்பாகி எழுந்து என்னை சாத்து சாத்து என்று சாத்திவிட்டான்.எல்லாம் முடிய பின்வரிசையில் நின்ற கோபாலு மாமா கேட்டார் "இவ்வளவு கதைக்கிறாய்,ஒரு அடி எண்டாலும் திருப்பியடிக்க தெரியாதோ?".பிறகு துன்னாலை வயல்கரையலை வரேக்கை வயது கூடின இரண்டு பெடியள் வந்து காரணம் கேட்காமல் கும்மிவிட்டுபோனார்கள்.வன்னியில் இருக்கேக்க இதே பாணியில் இன்னொரு அடி எனக்கு விழுந்தது.இராமநாதபுரம் மகாவித்தியாலய காலைபிரார்த்தனையில் முன்னால் நின்ற ஒரு வகுப்பு குறைஞ்ச பெடியனுக்கு பின்னாலிருந்தவன் குறுனி கல்லால எறிய அவன் நான் தான் எறிஞ்சனான் என்று சண்டைக்கு வந்தான்.பள்ளிக்கூடத்தில இருந்த ஆளில்லாத கொட்டிலுக்குள்ள நடுவர்கள் "யாராவது வாத்திமார் வருகினமா?" என்று காவல்காக்க வெடித்த சமரில் முதலடி எனக்கு காதை பொத்தி வெழுந்தது.சங்கூதும் சத்தம் அடங்க முதல் அவன் போட வேண்டிய அடியை எல்லாம் போட்டு முடித்து விட்டான். ஒரு வகுப்பு குறைஞ்ச பெடியனே அடிச்சிட்டான் என்று பள்ளிக்கூடம் முழுக்க கதை பரவ வகுப்பில இருந்த தவ்வல்,தவக்கை எல்லாம் எனக்கு அடிப்பம் என்று அறிக்கை விட நிலவரம் மோசமாகி போனது.அப்ப தான் கராத்தே பழகுவம் எண்ட முடிவை எடுத்தன்.பிறகு ஜெயசிக்குறு விரட்ட ஓடியோடி திரிஞ்சதிலை கராத்தே கனவாக இருந்தாலும் வீட்டில் கதவுகளுக்கும்,வாழை மரங்களுக்கும் உதைகளை அவ்வப்போது கொடுக்க தவறியதில்லை.



வன்னியால் திரும்பி வந்த போது யாழ்ப்பாணம் மாறிப்போயிருந்தது.காக்கிசட்டைகளை காணும் போது இதயத்துடிப்பு எகிற தொடங்கும்.பயம் தெளிந்து சகஜமாக முதல் அருணோதயன்,ரஜீவ் போண்ற பூச்சி பிள்ளைகள் கூட எனக்கு அடிக்க,தலையில் குட்ட தொடங்கியிருந்தார்கள்.பின்னர் பிறவுண் வீதி மணி ரியூசனில் படித்த போது பெரியளவில் நண்பர் வட்டம் விரிந்தது.அம்பு வில்லு அடிபாடு,நெல்லிக்காயால் எறிபடுவது என சண்டை விளையாட்டுகள் விளையாடியதாலோ என்னவோ எங்களுக்குள் பெரிதாக மோதல் எதுவும் மூளவில்லை.ஆதிக்கத்தை வகுப்பறையில்,பாடசாலையில் நிலைநாட்ட தனித்தனி பேராக மோதிக்கொள்ளும் வழமை சாதரண தரம் முடிந்த நாட்களோடு இல்லாது போனது.உடல் வலு,சண்டை நுட்பம்,மனோபலம் போண்ற காரணிகள் கொண்டவர்களிடம் இருந்த வகுப்பறை,பாடசாலை ஆதிக்கம் இப்போது இவை எதுவுமில்லா பேர்வழிகளிடமும் செல்ல தொடங்கியது.தனியாக முடியாதவன் கூட்டத்தை சேர்க்க தொடங்கினான்.இப்போது தனிநபரை தாக்க கூட்டத்தை கூட்டி வர தொடங்கினார்கள்.எனக்கு ஆரம்பத்தில் அந்நியமாக இருந்த இவ்விடயம் பின்னாளில் தவிர்த்துக்கொள்ளப்பட முடியாதது ஆயிற்று.



2002 ஆமாண்டு இரவு பொழுதுகளில் பிறவுண் வீதியில் இருந்த எனது வீடு பட்டாசுகள் வீசி குழுத்தாக்குதலுக்கு உள்ளானது.எப்பிடியும் இரண்டாம் தரம் வருவாங்கள் எண்டு மதிலோடு காத்திருந்து வந்தவங்களை நோக்கி டோர்ச் அடிச்சு கத்தியை வீச கூட்டம் அலறியடித்து ஓடிப்போன விதம் எனக்குள் இருந்தா ஆக்ஸன் ஹீரோவை தட்டியெழுப்பி விட்டது.பிறகு முட்டை அஜித்தோடு கூட்டு வைத்து இரவிரவாக பெடியள் வீடுகள் மீது வெடி வீசி தாக்கிவிட்டு மறுநாள் வகுப்பறையில் கிளம்பும் பரபரப்பை அப்பாவியாக கேட்டுகொண்டு இருக்க தொடங்கினேன் .விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த இந்த நடவடிக்கைகளை தோசையின் வீட்டுக்கு வெடி போட போனதோடு நிறுத்தும்படி ஆயிற்று.அர்த்த சாமத்தில் மதிலருகே நாங்கள் வெடி போட போகவும் தோசையின் அப்பர் சிறுநீர் கழிக்க வரவும் சரியாக இருந்தது.பதறிப்போன அவர் "கள்ளன் கள்ளன்" என்று கத்த, பாலன் மூலவெடியை கொளுத்தி வீச ஊரெல்லாம் கலைக்க ஓடி வந்து யாழ் இந்து மைதானத்துள் ஒளித்து தப்பினோம்.பின்னாளில் ஆசைப்பட்ட படி கராத்தே,குங்பூ கலைகளை ஓரளவுக்கேனும் பழக வாய்ப்பு கிடைத்திருந்தாலும் பிரயோகிக்க தனிநபர் சண்டைகள் வாய்க்கவில்லை.கம்பசில் அமைந்தவை எல்லாமே குழுச்சண்டைகள் தான்.ஊருக்கு லீவில் போயிருந்த நேரம் ராஜா தியேட்டரில் மும்பை எக்பிரஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது யாழ்பாண ரவுடி கும்பலோடு சைக்கிள் மோதுப்பட நாள் முழுக்க சத்தம் கேட்கும் படி காதைப்பொத்தி அடி பரிசாக கிடைத்தது.அத்தோடுவிடாமல் அவர்கள் கட்டை,போத்திலோடு விரட்ட மான் கராத்தேயை பாவித்து ஓடி தப்பியிருந்தேன்.இங்கிலாந்து வந்த பின் நீண்ட நாள் அடிவாங்காத குறையை காப்பிலிகள் தீர்த்து வைத்தார்கள்.3 பேர் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அடித்து தூள்கிளப்பினார்கள்.தலையால் ரத்தம் சொட்ட சொட்ட முகநூலில் ஸ்ரேற்றஸ் போட்டுவிட்டு தான் படுத்தேன்.அடிக்கும் போது வலிக்கும் ஆனால் ஒரே நேரத்தில் பல அடி விழுந்தால் வலிக்காது.இது தான் குழுவிடம் அடிவாங்குவதற்கும் தனிநபரிடம் அடிவாங்குவதற்கும் வித்தியாசம் என்பதை அந்த சம்பவம் எனக்கு விளக்கியிருந்தது.




இப்போது அவன் எனக்கு சரியாக 3 அடி தூரத்திலிருந்து என்னை சண்டைக்கு வரும் படி அழைக்க தொடங்கியிருந்தான்.அவனது கரங்கள் ஒரு காப்பிலி "ராப்" காரனை போல சுழன்றவண்ணம் இருந்தன.எனக்கு மிக பிடித்தமான தெரிவிலக்கம் நான்கை நடைமுறைப்படுத்த நான் முடிவெடுத்திருப்பது அவனுக்கு தெரியாத வண்ணம் என் உடல் பாவனைகளை மாற்றிக்கொண்டேன்.அவன் 18 வயதிலும் குறைவானவனாக இருக்கும் பட்சத்தில் சிறைக்கு போக நேரிடும்,அவன் குழுக்காரனாக இருப்பானாகில் நாளை பலரை எதிர் கொள்ள நேரிடும்,அவன் எனது தாக்குதலை முறியடிக்கும் பட்சத்தில் பலத்த இழப்புக்களை சந்திக்க நேரிடும்.முன்நின்ற அனைத்து எதிர்மறை சிந்தனைகளையும் துரத்தி எழுந்து அரை வட்டமாக சுழன்று "செங் சொவா" நிலையில் வலது காலை வீச அவனது கழுத்துக்கு சற்று கீழே இறங்கிய உதை அவனை மல்லாக்க விழுத்தி சில கணங்களில் அசைவற்றவனாக ஆக்கிவிட்டிருந்தது.

தெரிவு 4 - "அவலத்தை தந்தவனுக்கு அதை திருப்பி கொடு"