"இஸ்ஸறா You all came தானே? Sir"நள்ளிரவை தாண்டிய வேளைகளில் சொய்சாபுரம் உறங்கிக்கொண்டிருந்தது.கட்டாக்காலி தெருநாய்களோடு இரவின் மைந்தர்களான குடுக்காரர்கள் மட்டுமே விழிப்போடு இருந்தனர்.அந்த மயான அமைதியை குலைப்பது போல் வாகனங்களில் வந்து குதித்த காவல்த்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஒரு வீட்டை சுற்றிவளைத்து கதவை தட்ட உள்ளே இருந்தவர்களின் தலைவன் பின்வழியால் இருந்த மதிலை தாண்டி ஓடும்படி கட்டளையை பிறப்பித்துவிட்டு மான் காரத்தேயை பாவித்து பறக்கிறான்.சிதறி ஓடிய அடிப்பொடிகளில் ஒரு அதீத புத்திசாலி செருப்பை கழற்றி வைத்து விட்டு குழாய் வழியாக கட்டிட கூரையில் ஏறி பதுங்கி கொள்ள ஆட்டம் சூடு பிடிக்கிறது.துப்பறிவில் ஸ்கொட்லண்யார்ட்டுக்கே சவால்விடும் நுண்மதியுள்ள இலங்கை போலீசார் காரிருளிலும் அந்த கரிய "பாட்டா செருப்பை" கண்டு பிடித்து மேலே ஒருத்தன் பதுங்கியிருக்க வேண்டும் என உய்த்தறிந்து பிடித்துவிட்டார்கள்.பிறகென்ன பிடிபட்டவனை கைத்தொலைபேசியில் இருந்து ஏனையவர்களுக்கு அழைப்பு எடுக்கும் படி சொன்னார்கள்.ஒரு குறோட்டன் செடிக்கு பின்னாலிருந்து நோக்கியா 3310 கதற தொடங்கியது.ஆனால் பத்து அழைப்பு போயும் உள்ளே ஒளித்திருந்தவன் அசரவில்லை.கடுப்பான காவல் ஒன்று அவனை வெளியே இழுத்துப்போட்டுவிட்டு ரேடியோவில் "சேர்! ஒருத்தன காட்டுக்க இருந்து பிடிச்சிருக்கிறம்.ஓவர்" என்று விறைப்பாக சொல்லி சல்யூட் அடிக்க முதலாவதாக பிடிபட்டவனுக்கு வயிற்றை கலக்கியது.மேலதிக போலீஸ் அணிகள் களத்தில் இறங்க தாக்குப்பிடிக்க முடியாமல் ஒவ்வொருத்தராய் சரணடைந்துவிட்டார்கள்.போலீஸ் தலைமை அதிகாரி முரட்டு குரலில் கேட்டார் "கம்பஸ் பெடியள் என்று சொல்லுறியள்.அப்ப ஏன்ரா ஓடினீங்கள்?".குழுவின் தலைவனுக்கு இப்படியான கேள்விகள் புதிதல்ல.கடந்தகாலங்களில் இதை விட சிக்கலான கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்திருக்கிறான்.ஆனால் அன்று அவன் சொன்ன பதில் விசேடமானது & காலத்தால் அழியா புகழ் பெற்றது.

"இஸ்ஸறா You all came தானே? Sir"விஞ்ஞானி கெமிக்கல் அலி குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து தெஹிவளைக்கு நகர்ந்த நேரம் அது.சிக்கலான கால கட்டம்.யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் தரைவழி துண்டிக்கப்பட்டிருந்ததால் மாதங்களுக்கு ஒருமுறையாவது கிடைக்கிற வீட்டுச்சாப்பாடும் இல்லாமல் தவித்திருந்தோம்.எங்கள் நிலையுணர்ந்த விஞ்ஞானி "30 பெடியள வீட்டுக்கு கூப்பிட்டா சிக்கல் வருமோ?" என்று கொஞ்சம் கூட யாழ்ப்பாணத்தனமா யோசிக்காமல் அழைத்துவிட்டார்.பெரிய அணியா கிளம்பிப்போனோம்.வீடு அடையாளம் பிடிபடாததால் அழைப்பை சசிக்கு போடும் படியாயிற்று.

"டேய்! வாற வழியிலை River ஒண்டு Run பண்ணிக்கொண்டிருக்கும்.அத கடந்தா First ஆ வாற Two story building  ல Up story தான் என்ர வீடு".


எங்கள் மட்டத்தின் வௌவால் மனிதன் வசந்தன் பகல் முழுக்க தூங்கி இரவு வேளைகளில் தான் விடுதியை விட்டு வெளிக்கிடுவார்.இருளை போர்வையாக்கி சுற்று வட்டாரத்திலிருக்கும் தென்னை,வாழை மரங்களை மொட்டை அடித்து விடியமுன் மீண்டுவிடுவார்.சாகச வீரருக்கு நெடிந்து ஒரு வளர்ந்த தென்னை நிறைந்த இளநீர்க்குலைகளோடு சவால் விடுத்துக்கொண்டிருந்தது.பலமுறை தோல்வியை சந்தித்திருந்த போதிலும் இறுதியாக உச்சியை அடைந்து குலைகளை பறித்து வெற்றிக்களிப்பில் கீழிறங்கிய போது துன்பியல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.கால் சறுக்கி மரத்தோடு வழுக்கி விழுந்த அலியப்பாவின் நெஞ்சு  முழுக்க உராய்வுக்காயங்கள்.வைத்தியர் தந்த கருநீல நிற மருந்தை நெஞ்சுமுழுக்க பூசி திரிந்தவனை விசித்திரமாக பார்த்த சிங்களவர்களிடம் அலியப்பா சொன்னான்.

"I hugged தென்னமராக் tree மச்சான்"

சீனியர்களே இப்படி என்றால் அவர்களுக்கு வாய்த்த ஜூனியர்கள் லேசுப்பட்டவர்களாக இருப்பார்களா?.அவ்வகையில் பிரபலமானவர் "பண்ணாகம் தாசன்". றூமுக்குள் சோதனையிட வந்த போலீஸ்காறன் தாசனின் கட்டுப்பல் இருந்த நீர்க்குவளையை பார்த்து "குண்டா இருக்குமோ?" என ஐயப்பட செப்பியது தான் "சேர்! மகே Body parts எக்கக் தியன்னவா".கம்பியூட்டரை போடும்படி போலீஸ் பணித்தபோது பாழாய்ப்போன "பிளக்" அடம்பிடித்தது.வயரை ஆட்டியபடி பண்ணாகம் தாசன் "சேர்! கறண்ட் இன்னவத" என்று கேட்டு வைக்க அதிர்ச்சியடைந்த காவல்த்துறையினர் சற்றும் தாமதிக்காது "மகே அம்மே! அபி யெனவா" என்றபடி ஓடிப்போனார்கள்.

உட்கார்ந்து இருந்து சிந்திக்கும் போது சசியின் "நான் படிக்க வரேலை,வேலைத்திட்டத்துக்கு வந்ததனான்" சிரிப்பு ரவுடியின் "நாங்கள் இயக்கத்துக்கு அடிச்ச ஆட்கள்" கமல்சின் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" மற்றும் "எதெண்டாலும் சரிதான்" ஜேன்கொன்சாலின் "நான் சொல்ல மாட்டனே" சௌந்தரின் "எனக்கு ஒன்னுமே வெளங்கலடா" போண்ற பல பிரபலமான வாக்கியங்கள் நினைவிற்குள் வருகின்றன.ஆயினும் "இஸ்ஸறா You all came தானே? Sir" க்குள்ள புகழும் பிரபல்யமும் ஏனையவற்றுக்கு இல்லை.மும்மொழியையும் ஒரு வாக்கியத்தில் உள்ளடக்கி நிற்கும் "இஸ்ஸறா You all came தானே? Sir" ஆனது காலத்தால் அழியாததாகும்.அந்த மகுட வாக்கியத்தை உதிர்த்த பன்மொழிவித்தகர் "கமல்ஸ் aka கமலரூபன்" இன் புகழ் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் வாழும் நாள் வரை வாழும்.

எர்வின் ரோமல் The Desert Fox


நாசி ஜெர்மனி தளபதிகள் பற்றி எனக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது தற்செயலானது.2 ஆம் உலகப்போர் ஆவணப்படம் ஒன்றை பார்வையிட்டபோது தூண்டப்பட்ட ஆவல் நீடித்து சங்கிலிக்கோர்வையாக நூற்றுக்கும் குறையாத விபரணபடங்களை பார்ப்பதில் முடிந்தது.நவீன போரியலில் எத்தனையோ பிரசித்தமான தளபதிகள் வந்த போதிலும் ஜெர்மானிய இரண்டாம் உலகப்போர் தளபதிகளுக்கு ஒருவரும் ஒப்பாகமுடிவதில்லை.அதற்கான காரணங்கள் தெளிவானவை.மனித நாகரிகம் கடந்து வந்த யுத்தங்களிலேயே மிகப்பெரியதும் கொடூரமானதுமான இரண்டாம் உலகப்போரை நடத்திய இவர்கள் ஜெர்மனி தோற்றுப்போயிருந்த முதலாம் உலகப்போரில் இளநிலைத்தளபதிகளாக இருந்தவர்களிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள்.அதிகரித்த எதிரியின் ஆட்பலத்தால் மீண்டும் ஜெர்மனிக்கு தோல்வி நேராதிருக்க உயர் நுட்ப படைக்கல பிரயோகத்தோடு வித்தியாசமான முறையில் யுத்தம் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற நாசி தலைமைப்பீட சிந்தனைக்கு அமைவாக திட்டங்களை வகுத்தவர்கள்.அவ்வகையில் எரிக் வென் மன்ஸ்ரைன்,குடேரியன் ஆகிய நட்சத்திர தளபதிகள் கிழக்கு முனையில் ரஸ்யாவோடு போரிட்டுக்கொண்டிருக்கையில் தெற்கே தனியாக நின்று பிரித்தானியாவை நெருக்கிய எர்வின் ரோமல் தனித்துவமானவர்.

ஆபிரிக்காவையும் மத்திய கிழக்கையும் ஆதிக்கத்தில் கொண்டு வரும் பொருட்டு 1940,ஜூன் மாதம் ஆபிரிக்காவில் யுத்தத்தை தொடங்கிய முசோலினிக்கு அடி மேல் அடியாக விழுந்துகொண்டிருந்தது.பிரித்தானியர் கொலனி நாடுகளிடமிருந்து அணியணியாக ஆட்களை போருக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.பிரமாண்டமான ரோயல் நேவி படைகளுக்கு இடைவிடாது ஆயுதங்களை விநியோகித்துக்கொண்டு இருந்தது.நண்பனின் படைகள் படும் கஸ்டத்தை கண்டு பொறுக்க முடியாத ஹிட்லர் பிரான்சை துவம்சம் செய்து திரும்பியிருந்த எர்வின் ரோமலை உதவிக்கு போகும்படி பணித்தார்.அன்றிலிருந்து ஒரு தனிமனிதன் சிறு படையோடு ஒரு பேரரசையே ஆட்டம் காணவைத்த வரலாறு ஆபிரிக்க களமுனையில் ஆரம்பமானது.இரண்டாம் உலகப்போரின் ஆபிரிக்க களமுனை பிரித்தானியருக்கு வாழ்வா சாவா போராட்டம்.ஜெர்மனிக்கோ இரண்டாம் முக்கியத்துவமுள்ள முனை.பாபரோசா நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மில்லியன் ராணுவ வீரர்களுக்கே விநியோகம்,வான் ஆதரவு என்பன முக்கியமாக தரப்பட வேண்டும் என ஜெர்மன் தலைமைப்பீடம் நினைத்ததால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு போரிட வேண்டிய கட்டாயம் ரோமலுக்கு இருந்தது.

50 000 ஜெர்மானிய சிறப்பு படை வீரர்களும் நொந்து போன இத்தாலி வீரர்களுமாய் சேர்ந்து வட ஆபிரிக்காவில் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது என இறுமாந்திருந்த பிரிட்டிஸ்காரர்கள் அடுத்து நடந்தவை கண்டு அதிர்ந்து போனார்கள்.எதிரியின் முன்னரங்களை உடைத்து மிகவேகமாக முன்னேறுவது,திருப்பி தாக்க அவகாசம் தராது விரட்டுவது என ரோமலின் தாக்குதல்கள் எல்லாம் புதுவிதமாய் இருந்தன.ஜெர்மானிய டாங்கிகள் தான் ரோமலுக்கு வெற்றியை கொடுக்கின்றன என கருதி தடித்த கவசம் போர்த்திய மார்க் வகை டாங்கிகளை ஆயிரக்கணக்கில் தருவித்தார்கள்.மிகுந்த உயர் வேகத்தில் குண்டுகளை சுடும் 88 mm விமான எதிரிப்பு பீரங்கிகளை "U" வடிவில் தரையில் குழிவெட்டி நிலைப்படுத்தி விட்டு இலகு ரக தாங்கிகளால் போக்கு காட்டி அந்த பிரிட்டிஸ் கவசங்களை உள்ளிழுத்து முழுமையாக அழித்தொழித்தார் எர்வின் ரோமல்.தந்திரமிக்க ரோமலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய தளபதிகள் அவரை "Desert Fox" என்று அழைக்கத்தொடங்கினார்கள்.உயர் வேக விமான எதிர்ப்பு குண்டுகளின் கவசங்களை துளையிடும் திறன் குறித்து எவரும் அந்நாட்களில் சிந்தித்திருக்கவில்லை.

பாலைவன கவசபோர்களின் போது எழும் புழுதி நகரும் அணிகளில் கனதியை சொல்லி விடும்.இன்னொரு முறை ரோமலின் திட்டப்படி முன்வரிசையில் டாங்கிகளும் பின்னால் மரக்கிளைகளை கயிறு கட்டி இழுத்து வந்த நூற்றுக்கணக்கான டரக்குகளுமாய் சென்ற போலித்தாக்குதல் அணி எழுப்பிய புழுதியின் கனதியை கண்ட பிரித்தானியர் பிரதான எதிர்த்தாகுதலை அதை நோக்கி தொடுத்தார்கள்.அதே நேரம் சற்றும் எதிர்பாராமல் வேறொரு முனையில் தொடுக்கப்பட்ட கவச தாக்குதல் பிரித்தானியருக்கு பேரழிவை உண்டாக்கியது.ரோமல் Tobruk நகரை காத்துநின்ற 33 000 நேச படைகளை சிறைப்பிடித்த போது  ஹிட்லர் "Field Marshal" பதவி உயர்வு வழங்கினார்.எதிரியை முன்னரங்கு அமைத்து ஓய்வடைய விடக்கூடாது என்பதில் ரோமல் எப்போதும் குறியாக இருப்பார்.தன்னிடம் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் தாக்குதல் நடத்துவார்.இதனால் பிரித்தானியரால் சிறிதளவேனும் எதிரியின் நகர்வுகளை கணிக்க முடியாமல் வரிசையாக தோல்விகளை தழுவினார்கள்."சூரிய மறையாத சாம்ராஜ்யத்தின் படைகள் ஜெர்மனியின் உபகளமுனையில் இவ்வளவு அடி வாங்குவது எவ்வளவு அவமானம்?" என பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுந்தது.அதிருப்தியாளர்களுக்கு வின்ஸ்டன் சேர்ச்சில் அமைதியாக பதிலளித்தார் "We have a very daring and skillful opponent against us, and, may I say across the havoc of war, a great General".

மிக நேர்த்தியாக சீருடை அணிந்து சவரம் செய்த முகத்தோடு முன்னரங்கில் உலாவரும் எர்வின் ரோமலை பார்த்ததுமே வீரர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொள்ளும்."வரலாறு முக்கியம்" என்று அந்த நாளிலேயே நினைத்தாரோ என்னவோ கையடக்க லைக்கா கமெரா மூலம் அடிக்கடி களக்காட்சிகளை சுட்டுக்கொண்டு இருப்பார்.வெற்றி மேல் வெற்றி குவித்து முன்னேறி 1942,June 21 இல் "El Alamein" என்ற இடத்தில் முன்னரங்கை அமைத்து விட்டு எகிப்தை முழுமையாக கைப்பற்றுவதன் மூலம் சுயஸ் கால்வாயை ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் இறுதி நடவடிக்கையை மேற்க்கொள்ள தேவையான விநியோகங்களை அனுப்பும் படி தலைமைப்பீடத்துக்கு அனுப்பிய கோரிக்கை சிக்கலடைந்து கொண்டிருந்த கிழக்கு போர்முனையினை காரணமாக முக்கியத்துவமற்றதாக நிராகரிக்கப்பட்டது.

மறு பக்கத்தில் சேர்ச்சில் "Bernard Montgomeryஎன்ற புதிய தளபதியை நியமித்திருந்தார்.தடையில்லா ஆள்,ஆயுத விநியோகத்தை பெற்ற மொண்டகமூரி முதல் தடவை சண்டையை தொடக்கி ரோமலிடம் அடி வாங்கினார்.ஆயினும் ரோமல் பாதிக்கப்பட்ட உடல் நிலை காரணமாய் தாயகம் திரும்பியிருந்த போது தொடங்கிய இரண்டாம் "El Alamein"
யுத்தத்தில் அதிஸ்டம் மொண்டகமூரி பக்கம் இருந்தது.ரோமல் இரு தினங்களின் பின்னர் மீள வந்த போதும் நிலவரம் கை மீறி விட்டது.இதே நேரம் ரஸ்யாவை வென்ற பின்னர் பிரிட்டிஸ் கூட்டணியை பார்த்துக்கொள்ளலாம் என கருதிய ஹிட்லரும் முசோலினியும் ஆபிரிக்க களமுனையை மூடிவிட முடிவு செய்தார்கள்.மிகப்பெரியதாய் உருவெடுத்திருந்த ஆபிரிக்க நேச கூட்டுப்படைகளோடு மோத விடாமல் ரோமலை கட்டாய சுகவீன விடுமுறையில் ஹிட்லர் அனுப்பி வைத்தார்.ஜெர்மன் மக்கள் மனதில் போர்க்கள நாயகனாக வீற்றிருந்த எர்வின் ரோமல் கொல்லப்படுவதன் /சிறைப்படுவதன் மூலம் போர் எழுச்சி குறைவதை ஹிட்லர் விரும்பவில்லை எனச்சொல்லப்படுகிறது.இவ்வாறு ஒரு தனி மனிதனின் ஆற்றலால் ஜெர்மனியின் கைக்கு அருகே வந்த வெற்றி அடுத்து வந்த சில மாதங்களில் 200,000 அச்சு படைகளின் சரணடைவோடு கை நழுவிப்போனதுமில்லாமல் மேற்கு களமுனையை எதிர்கொள்ள மூலகாரணமாயும் அமைந்தது.


ERWIN ROMMEL-சில சுவாரசியமான குறிப்புக்கள்

ஒரு தடவை ஜெர்மனி பத்திரிகை குழு ஒன்று ரோமலை பேட்டியெடுக்க ஆபிரிக்காவுக்கு சென்றிருந்தார்கள்.வீரர்கள் சுட்டிக்காட்டிய திசையில் ஒருவர் எண்ணெய் படிந்த ஆடைகளோடு டாங்கி ஒன்றின் கீழ் படுத்திருந்து பழுது பார்த்துக்கொண்டு இருந்தாராம்."தளபதி ரோமலிடம் பேட்டி எடுக்க வேண்டும்.எங்கே இருக்கிறார் எனச்சொல்ல முடியுமா? "என கேட்க "பேட்டியை ஆரம்பிக்கலமா?" என்றபடி வெளியே வந்தவரைக் கண்டு பத்திரிகையாளர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

ஆபிரிக்க களமுனையில் ஒரு சுற்றி வளைப்பு தாக்குதலை மேற்கொள்ள 150 மைல்கள் தூரம் டாங்கிகள் பயணிக்க வேண்டியிருந்தது.50 கள் செல்ல தேவையான எரிபொருளே கையிருப்பில் இருந்தது.மீது தூரம் பயணிப்பது எப்படி என்று இளநிலை தளபதிகள் கேட்க "தாக்க வரும் பிரிட்டிஸ் கவசங்களின் எரிபொருளை பயன்படுத்துங்கள்" என பதில் கிடைத்தது.

பிரான்ஸ் மீதான போரின் போது ரோமலின் கவசப்பிரிவு "Ghost Division" என அழைக்கப்பட்டது.அப்பிரிவு ஒரே நாளில் 320km முன்னேறிய சாதனை இன்று வரை உடைக்கப்படவில்லை.கட்டளைப்பீடம் அடிக்கடி விபரம் கேட்டு தொந்தரவு செய்ததால் தகவல் தொடர்பை துண்டித்துவிட்டு போரிட்டார்.உயர் அதிகாரிகள் இச்செயல் தொடர்பில் கோபித்த போதிலும் ஹிட்லர் "நீ எங்கே இருக்கிறாய் என அறியாது நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம்" என ரோமலிடம் சொன்னாராம்.

ஆபிரிக்க களமுனையில் பிரிட்டிஸ் கமாண்டோ அணியினர் ரோமலை கொல்வதற்கு முன்னரங்கத்திலிருந்து 200 மைல் பின்னாலிருந்த தலைமைப்பீடம் மீது தாக்கினார்கள்.அவர் அரிதான சந்தர்ப்பங்கள் தவிர எப்போதுமே முன்னரங்கு மிக சமீபமாகவே இருப்பது அவர்களுக்கு தெரியாது.

முதலாம் உலகப்போரில் கப்டன் தரநிலையில் இருந்த ரோமல் 3 தடவை காயப்பட்டார்.குண்டுகள் தீர்ந்த நிலையிலும் 3 பிரெஞ்சு வீரர்களை துப்பாக்கி கத்தியால் தாக்கியது, 9000 இத்தாலி வீரர்களை சிறைப்பிடித்த போரில் பங்கேற்றது போண்றவற்றிற்காக ஜெனரல்களுக்கு மட்டுமே வழங்கப்படும் உயரிய "Pour le Merite" விருது கிடைத்தது.தனது முதல் உலகப்போர் அனுபவக்களை கொண்டு எழுதிய "Infantry attacksஎன்ற புத்தகம் மிகப்பிரபலமானது.1944,பிரான்ஸ் கரையோரமாக நேச நாடுகளின் கடல்வழி தரையிறக்கத்தை தடுக்கும் அட்லாண்டிக் சுவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த ரோமல் "ஜெர்மன் விமானப்படை பலவீனப்பட்டிருக்கும் நிலையில் பொதுவான இடத்தில் கவசப்பிரிவை நிறுத்தி தேவைக்கேற்ப கடற்கரைகளை நோக்கி நகர்த்துவது சாத்தியமற்றதால் அவை கடலுக்கு சமீபமாகவே நிறுத்தப்பட வேண்டும்" என்று சொன்னார்.அந்த யோசனையும் ஹிட்லரால் புறக்கணிக்கப்பட்டது.இறுதியில் தரையிறக்கம் நடந்த போது அவர் கணிப்பிட்டவாறே நேச விமானப்படை டாங்கிகளை முடக்கிப்போட்டன.தரையிறங்கிய படையினருக்கு எதிரான போரின் 40வது நாள்,17 July 1944 அன்று காரில் பயணித்துக்கொண்டிருந்த போது பிரித்தானிய விமானப்படை தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


3 நாட்கள் கழித்து 20,அன்று உலகையே அதிரவைத்த அந்த குண்டு வெடிப்பு சம்பவம் கிழக்கு போர்முனை கட்டளைப்பீடமான "Wolf's Lair" இல் நடந்தது.வரைபட மேசையின் கீழ் ஹிட்லருக்கு எதிரான அதிகாரிகளால் வைக்கப்பட்ட சூட்கேஸ் குண்டு வெடித்து சிதறி நான்கு உயிர்களை குடித்தது.ஹிட்லர் கால்சட்டை மட்டும் கிழிந்து போக காயங்கள் எதுவுமின்றி தப்பிக்கொண்டார்.திட்டத்துக்கு துணைபோன 4980 பேர் சுட்டும் தூக்கிலிட்டும் கொல்லப்பட்டார்கள்.பிரதான குற்றவாளிகள் ரோமலின் நெருங்கிய முதலாம் உலகப்போர் கால நண்பர்கள்.பீல்ட் மார்சல் ஒருவரின் ஆதரவு இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி ரோமலை சந்தித்து உதவி கேட்டிருந்தார்கள்."ஹிட்லரை கொல்வதில் உடன்பாடில்லாத போதும் அவர் செய்து கொண்டிருக்கும் குற்றங்களுக்காக நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும் என ரோமல் சொல்லியதாக" இருந்த எதிர்ப்பு குழுவின் பதிவுகள் சிக்க 14 October 1944  அன்று காயங்களிலிருந்து முழுமையாக மீளாமல் போராடிக்கொண்டிருந்தவரிடம் வந்தவர்கள் மரணிக்க இரண்டு தெரிவுகளை வழங்கினார்கள்.ஒன்று தரப்படும் சயனைட்டை உட்கொள்வது.இரண்டாவது ராணுவ நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு மரண தண்டனையை ஏற்பது.தரப்பட்ட பத்து நிமிட அவகாசத்தில் மனைவி ,மகனிடம் விடைபெற்ற அந்த ஒப்பற்ற வீரன் தனது கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடமொன்றில் சயனைட் வில்லையை மென்று மரணத்தை தழுவிக்கொண்டார்.

இன்று உலகில் உள்ள எந்த ராணுவத்திலும் எர்வின் ரோமல் பற்றி சொல்லாமல் போர்வீரர்களுக்கு கவச போரியல் பற்றி கற்பிக்க முடிவதில்லை.போரில் சிறைப்படும் கைதிகளை பராமரிக்கும் விதம் பற்றி சொல்லும் போதும் உதாரணமாக காட்டப்படுபவர்களில் ரோமல் நிச்சயம் இருப்பார்.அதைவிட நாசி ஜெர்மனியின் போர்க்குற்றங்களை மீறியும் பலரால் இன்றளவும் நினைவு கூரப்படுவதானது எர்வின் ரோமலுக்கு கிடைத்த "Generalfeldmarschallபதவியிலும் பெரிய கௌரவம் எனலாம்.