வரிசையாக அடுக்கப்பட்டிருந்த இயந்திரங்களை பார்வையிட்டுக்கொண்டுவந்த மாறனிற்கு எதை தெரிவு செய்வது என்பது தொடர்பில் குழப்பம் மிகுதியாக இருந்தது.முடிவில்லா இன்பம் தருவதற்கென்றே விசேடமாக வடிவமைக்கப்பட்ட "சொப்னா", இடைவிடாமல் பேசும் இயல்புடைய "எலெக்ரோவா" கடின வேலைகள் செய்யவல்ல "இயந்திரிக்கா" என்றிருந்த எவையும் மனதில் ஒட்டவில்லை.நீண்ட நேரமாக விபரித்திருந்தும் எதையும் தெரிவு செய்யாதது தொடர்பில் விற்பனையாளர் சலிப்புற்றிருந்ததை அவர் முகத்தில் படர்ந்திருந்த ரேகைகள் காட்டின.

"நீங்கள் காட்டியவை எவையும் எனது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவை அல்ல"
"உங்கள் தேவை என்ன என்று சொல்ல முடியுமா?"
"எனக்கு அப்பழுக்கில்லா அன்பு வேண்டும்,அதை தரக்கூடிய வகை இருந்தால் காட்டுங்கள்"

பரந்து நீண்டிருந்த காட்சியறையின் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த இயந்திரப்பெண்ணை பார்த்தவுடனேயேஅவனுக்குப்பிடித்துப்போயிற்று.பெரிதான கண்கள், இழையோடும் புன்னகை சுமந்த உதடுகள்,கூரிய நாசி என மிக அழகாக இருந்தாள்.மெலிதென்று சொல்லும் அளவுக்கு சற்று மேலாக இருந்த அவளது உடலமைப்பு மிகக் கவர்ச்சியாக இருந்தது.வைத்த கண் வாங்காமல் இயந்திரப்பெண்ணை வெறிக்கத்தொடங்கிய மாறனை விற்பனையாளன் மெல்லிய செருமலொன்றின் மூலம் குலைத்து தொடர்ந்தான்.

"இது E-வோனா வகை.பெரிதாக பேசாது. நகைசுவை உணர்வும் குறைவு.ஆனால் மிகவும் கூர்மையான உணர்வுகள் கொண்டது.இதன் தொடுகை ஒவ்வொன்றிலும் உயிரோட்டம் நிறைந்திருக்கும்.ஆனால் இதை பெரிதாக ஒருவரும் வாங்க விரும்புவதில்லை.மிக மென்மையான இதன் உணர்வுகள் எளிதில் காயப்படக்கூடியவை.சிறிய தவறை நீங்கள் இழைத்தாலும் மீளநெருங்க முடியாத அளவுக்கு விலகிச்சென்றுவிடும்.போலியாகவேனும் அப்பழுக்கில்லா தூண்டல்களை காட்டும் பட்சத்தில் களங்கமில்லா அன்பு இவளிடமிருந்து கிடைக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.
மாறனுக்கு வயது 26 ஆகிவிட்டிருந்தது.அவன் கடந்து வந்த பாதை எங்கிலும் ஏமாற்றமும் விரக்தியும் நிரம்பிக்கிடந்தனவே தவிர குதூகலம் இருக்கவில்லை.சுயநலமாக இருப்பதாக சூழவுள்ள அநேகரை சாடிக்கொண்டு அந்நியப்பட்டு போயிருந்தான்.எனக்கு அப்பழுக்கில்லா அன்பு வேண்டும் வேற ஒண்டும் வேண்டாம் என்று அடிக்கடி சொல்வதனை நண்பர்கள் ஏளனம் செய்தும் அவன் நிறுத்துவதாய் இல்லை.கிறிஸ்துவுக்குப்பின் 2112 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டு அப்பழுக்கில்லா அன்புக்காக அலைவது சிறுபிள்ளைத்தனம் என்பது அவனுக்குத்தெரிந்திருந்தாலும் மனம் அசாத்தியத்தின் பின்னாலேயே ஓடியபடியிருந்தது.பேசாமல் தற்கொலை செய்து கொண்டு அகபோனிஸ் பறவையாக பிறப்போமா ? என்றெல்லாம் விசித்திர சிந்தைகள் அவனுள் அணிவகுத்திருந்த நாட்களிலொன்றில் அந்த நிறுவனம் பற்றி தெரிய வந்தது.மனித இனத்தின் ஆண் பெண் இருபாலரிடையேயும் அதிகரித்து வந்த விரிசலை அந்த நிறுவம் வியாபாரமாக்கி உயிருள்ள நம்பகரமில்லா வாழ்க்கைத்துணையிடமிருந்து காமத்தையும்,காதலையும் பெறுவதை விட உயிரற்ற நம்பிக்கையான இயந்திரங்களிடமிருந்து பெறுவது சிறப்பானது பரந்த அளவில் விளம்பரப்படுத்தியபடி இருந்தது.உயிரில்லா சடத்துடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது இயற்கைக்கு எதிரானது என இவ்விவகாரம் தொடர்பில் கருத்தினைக்கொண்டிருந்தாலும் அயல்வீட்டில் புதிதாய் குடிவந்து சூழவுள்ளோர் பொறாமைப்படும் படி குடும்பம் நடத்தியபடியிருந்த அலியப்பா நேற்று தண்ணிய போட்டுவிட்டு மனைவியுடன் வாக்குவாதப்பட்ட பொழுதுகளில் "கடுமையா வதைச்சியெண்டா வயர புடுங்கிப்போடுவன்" எண்டு கடுப்பில செப்ப அவள் சொப்பன சுந்தரியல்ல சொப்னா வகை ரோபோவே என்ற உண்மை தெரிந்ததும் மாறன் மனத்திலும் ஆசை முளைவிட்டு இன்று E-வோனாவை வாங்குமளவுக்கு கொண்டுவந்து விட்டது.
E-வோனா வந்த பிறகு வாழ்க்கையில் புது வசந்தம் பூத்திருப்பதாக மாறன் உணர்ந்தான்.மானிடப்பெண்களில் பல தசாப்தங்களுக்கு முன்னே இல்லாமல்ப்போன நாற்குணங்களும் அவளிடம் இருந்தன.எல்லா விடயங்களும் தெரிந்த அதிபுத்திசாலியாக இருந்தும் சிறிதளவும் கர்வம் அவளிடம் இருக்கவில்லை.அவளுக்குள் பொதிக்கப்பட்டிருந்த பல்லாயிரம் சிறப்பு தொழில்பாடுகளை ஒவ்வொன்றாய் மார்பகங்களுக்கு கீழேயிருந்த தொடுகைத்திரையில் வெட்டிப்பொழுதுகளில் துளாவி அறிவது மிகவும் சுவாரசியமாக இருந்தது.அவளால் மண்ணிறமும் கரிய கூந்தலும் கொண்ட திராவிடப்பெண் உருவம் தொடக்கம்,வெண்ணிற சருமத்தோடு பழுப்பு தலைமுடி கொண்ட கோசியன் பெண் வடிவம் வரை சிலநொடிகளுக்குள் உருமாற முடிந்தது.வீதியில் அழைத்துச்செல்லும் போது எதிர்ப்படும் அநேக ஆண்களும் அவன் மீது பொறாமைப்படும் தருணங்களில் அவள் எத்துணை அழகாக,திருத்தமாக,அவனோடு நெருக்கமாக இருக்கிறாள் என்பது புரிந்தது.கூடவே அதிலிருக்கிற ஆபத்தும் தெரிந்தது.E-வோனா மனிதப்பெண்ணைப்போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரம். ஆதலால் கற்காலத்தில் திடாகத்திரமான நல்ல வேட்டைக்காரனை நாடியது தொடக்கம் விவசாய யுகங்களில் திறமையான விளைச்சல்காரனை கைக்குள் போட விளைந்தது ஈறாக தற் பொழுதுகளில் செல்வாக்கு,பணம் என குறிவைத்து அலையும் மானுடப்பெண்களின் மேன்மையானதை தேர்தெடுக்கும் அடிப்படை இயல்பு அவளுள்ளும் பொதிந்திருக்க வாய்ப்பிருப்பதாக மனம் சொல்லி எச்சரிக்கை செய்தது.
சாளரங்களூடு நகரத்தின் விளிப்புகளுக்குப்பின்னால் சூரியன் மறையும் அழகை பார்த்தபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப்போயிருந்தான் மாறன்.இயந்திரப்பெண்ணைக்கூட நம்ப முடியாமலிருப்பதற்க்கு காரணமாவிருப்பது பெண்களின் இயல்பா? அல்லது ஆழமாக ஊறிப்போன சந்தேக மனநோயா?.பணியிடத்து நண்பி "தீபிகா" சமீப நாட்களாய் அடிக்கடி அவனிடம் மோகனமாய் புன்னகைத்தது அடிக்கடி நினைவில் வந்து போயிற்று.அவளிடம் இது குறித்து பேசியாக வேண்டும் என எண்ணிக்கொண்டான்.திடீரென தோள்களில் மலர்களின் மென்மையோடு விழுந்த கரங்கள் அவன் சிந்தனையை குலைத்தன.திரும்ப E-வோனா நின்றிருந்தாள்.அவள் முகத்தில் எப்போதும் ததும்பி வழியும் மென் புன்னகை தவறியிருந்தது.

"நான் ஒரு விடயம் உன்னிடம் கேட்க வேண்டும் அனுமதி தருவாயா?"
"நிச்சயமாக! உனக்கு இல்லாததா?"
"நான் அழகாக இருக்கிறேனா?"

உள்ளே சென்று திரும்பிய மாறன் கரங்களில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது.அது கோளப்பிளற்சி கொண்டது என்பது அவனுக்கு மட்டும் தெரியும்.

"நீ அழகா இல்லையா என்பதை நீயே பார்த்து அறிந்து கொள்"

அவளின் திருத்தமான உருவை கோளப்பிளற்சி ஆடி சிதைத்து அவலட்சணமாக்கியது.இவோனாவின் பார்வைப்புலன்கள் கிரகித்த ஆடிவிம்பம் மானுடப்பெண்களில் அழகு வரைவிலக்கணங்களாக அவளுள் தரவேற்றப்பட்டிருந்த மில்லியன்கணக்கான விமபங்களோடு ஒப்பிட்டு ஓடி அலசி அழகற்றதாக அடையாளப்படுத்தப்பட்டு ஆழ் நினைவகங்களில் முடிவாக பொதிந்து போனது.E-வோனா தலையை குனிந்து கொண்டாள்.அவள் விழிகளில் ஈரமான திரவம் கசிந்திருந்தது.
நடு இரவையும் தாண்டியும் வீடு திரும்பாதவனுக்காக கதவோரம் விழி பொருத்தி காத்திருந்தாள் E-வோனா.இது அசாதாரணமானது.அவன் பாதுகாப்பு குறித்தான அக்கறை மேலிட அவனது கைத்தொலைபேசியை சிஸ்டம் ஊடே தேடினாள்.அவனது கைப்பேசியின் இருப்பிடப்புள்ளி 2 கிலோமீற்றர் தூரத்திலிருந்த நகரத்தின் பிரபலமான இரவுவிடுதியொன்றுள் நிலைபெற்றிருந்தது.அவளது சக்தி வாய்ந்த அலைஉணரிகள் விடுதியின் பாதுகாப்பு கமெராக்கள் மொனிடரிங் அறைக்கு அனுப்புக்கொண்டிருந்த ஒளிப்பட அலைகளை உறிஞ்சி கிரகித்தன.ஒவ்வொரு கமெராவூடாக தேடியவள் கண்களில் மாறன் அகப்பட்டான்.மதுக்கிண்ணத்தோடு அருகே அரைகுறை ஆடையோடு நிற்பவள் அவனை அடுத்த நிலைக்கு தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள்.அவளது ஒளிப்படத்தை தேடுபொறிகளூடு தேட அவள் பெயர் தீபிகா என்று அகத்திரை சொல்லியது.அவள் ஆழ்மனத்தில் பொதிந்த சுயவிம்பத்தோடு தீபிகாவை ஒப்பிட்டதும் வந்த பதில் விரக்தி உணர்வை கிளப்பியது.
போதையின் உச்சத்தில் மாறன் தீபிகாவோடு விடுதியின் அறை ஒன்றுக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்ட பொழுதுகளில் E-வோனா உயரமான கட்டடத்திலிருந்து குதித்து தன்னைத்தானே நெறுங்கச்செய்து இறந்து போனாள்.

{யாவும் கற்பனையே.உயிருள்ள அல்லது இறந்த யாரையும் சம்பந்தப்படுத்துவன அல்ல.}