தற்போதைய நிலவரம் -10

இன்பத்தையும் துன்பத்தையும் பலவித அனுபவங்களையும் தந்த 2014 ஆம் ஆண்டு இன்னும் இரண்டே வாரங்களில் விடை பெறுகிறது. உலகமெல்லாம் பரந்து வாழும் எமது மட்டத்து நண்பர்களில் பிரித்தானியாவில் இருப்பவர்களே கூட்டிக்கழித்து பார்க்கும் போது இந்த வருடம் முழுவது கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கிறார்கள். சிங்கபுரி வாழ் பேர்வழிகளில் பலரும் திருமணவாழ்வில் இணைந்த போதிலும் அதிக பரபரப்பில்லாத முகநூலில் புகைப்படங்கள் தென்பட்ட நிகழ்வுகளாகவே அவை கடந்து சென்றன. இலங்கா புரியிலும் குறிப்பிடத்தக்க சில பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்திய ஆசிரியர் பீடம் முக்கியத்துவ அடிப்படையில் அவற்றை கீழே வரிசைப்படுத்தியுள்ளது.

1) ஆறுபை சேகர்

நாய் சேகர் என்று பிரபலமான அதிரடி நாயகன் இவர். கலியாணம் கட்டாதவன் கட்டுறதுக்கு அலைய, கட்டினவன் பிள்ளைக்கு அலைய இவர் மட்டும் மனத்தை சிதறவிடாமல் இரும்புகளை தூக்குவதும் டயட்டுமாக அலைந்து ஆறு பையை செதுக்கியிருக்கிறார். வேலை வேலை என்று பறக்கிற பிரித்தானியாவில் இருந்து கொண்டு உடம்பை இறுக்கமா பேணுவதற்க்கு ஒரு தனித்திறமை வேணும் பாருங்கோ!. ஆறு பை ஏழு பையாகி ஏழு எட்டாக வாழ்த்துகிறோம்.


2) சிங்கம் "ராகுல்"

 முதன் முதலாக மட்டத்தில் கலியாணம் கட்டியவர். முதன் முதலாக அப்பா ஆகியவர். இரண்டாவது குழந்தைக்கும் அப்பா ஆகி இருக்கிறார். மூத்த பிள்ளை விளையாட பொம்மை கேட்டதெண்டு இரண்டாவது குழந்தையை பெற்றேனாக்கும் என்று முகநூலில் நிலைக்குறிப்பு போட்டுவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறார் இந்த ஆண் சிங்கன்.3) அப்பா ஆனார் அலிபாய்.

பலர் முதல் குழந்தைக்கு அப்பா/அம்மா ஆகியுள்ள போதிலும் இங்கே அப்பா ஆகியிருப்பவர் ஒரு விஞ்ஞானி. முத்தையன் கட்டு நியூட்டன். வன்னியிலேயே ரின்மீன் செய்த அப்துல் கலாம். பெண் குழந்தை பரிசாக கிடைத்தது என்று முகநூலில் நிலைக்குறிப்பிட்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுள்ளார். பிரித்தானியாவில் அறிவு மிக்க தமிழ் சந்ததி உருவாக சசியின் சேவை மேலும் தமிழினத்துக்கு தேவை.


4) காரோட்டும் செழியம்.

யாழ்குடாநாட்டில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு வாகனம் செலுத்தும் படி கேட்க்கப்படுகிறார்கள். கண்ணாடி அணிந்த பொறியியலாளர் ஒருவர் கண் மண் தெரியாத வேகத்தில் கண்மூடித்தனமாக காரோட்டுவதால் இவ்வெச்சரிக்கை விடப்படுகிறது . வதையின் அலகான செழியம் முன்னர் வெறுங்காலில் வந்தது பின்னர் உந்துருளியின் வலம் வந்தது. இப்போது காரில் தேரோட்டம் போகிறது. சமீபத்தில் மன்னார் சென்ற செழியம் அடுத்தது எந்த மாவட்டத்தை குறி வைக்கப்போகிறதோ?.


5) முதலாளி அலியப்பா

கடந்த 8 மாதங்களாக பலவிதமாக முதலாளி ஆகுவதற்கு முயன்று வந்த அலியப்பா சில வாரங்கள் முன்னர் அதில் வெற்றியும் கண்டிருந்தார். ஆனால் கன்னி முயற்சியிலேயே நிலக்கீழ் உயர் அழுத்த வயரை அறுத்து மாட்டிக்கொண்டுள்ளார். எரிந்த குழிக்கு அருகே இருந்த படி சுப்பவைசரை காலணி வாங்கி வரும் படி அனுப்பியிருக்கிறார். அந்த அறிவாளியும் இரண்டு வலது கால் அணிகளை வாங்கி வந்திருக்கிறான். இப்படியான புத்திசாலிகளை வைத்திருந்து எப்படி வேலை செய்வது என்று கடுப்பான முதலாளி பழையபடி தொழிலாளி ஆகிவிட்டார். முதலாளி வாட்சப்பில் அனுப்பிய படங்கள் கீழே!

T.அசுவத்தாமன்
சுப்பவைசர் அசுவத்தாமனை சிலர் காட்டேரி என்றும் வேறு பலர் சாமக்கோடாங்கி என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்த போதிலும் அநேகரை கேட்டால் கடுமையான நேர்மையான உழைப்பாளி என்றே சொல்லுவார்கள். சிங்கபுரியில் இரவு பகலாக 24 மணித்தியாலமும் வேலை நடக்கும் அந்த கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் இரண்டு சிப்டுகளில் மாறி வேலை செய்த போதிலும் அசுவத்தாமன் இரண்டு சிப்டுகளையும் தனி ஆளாக பார்த்துக்கொள்வான். காலை நேரத்தில் வலது கண்ணாலும் இரவு வேளையில் இடது கண்ணால் தூங்குவதாலேயே இப்படி முழுநாளும் வேலை செய்ய முடிகிறது என வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். புறஜெக்ட் மனேச்சராக பெயருக்கு நான் இருந்த போதிலும் அசுவத்தாமன்தான் சைட்டை தனியாளாக ஓட்டுகிறான் என்பது எல்லோருக்குமே தெரியும். எனது சம்பளத்தை விட அவனின் சம்பளம் பல மடங்கு அதிகம். இது குறித்து நான் சில சமயங்களில் வருத்தப்பட்ட போதிலும் அவனது திறமைக்கு சரியான சன்மானத்தை பெறுவதாக கருதி மனதை ஆறுதல்ப்படுத்தியிருக்கிறேன்.

அசுவத்தாமன் ஆறரை அடி உயரம் இருப்பான். அவன் நடக்கும் போது அரபுபுரவி போலிருக்கும். பரந்து விரிந்த மார்பும் ஒடுங்கிய வயிறுமாக அவன் தோற்றம் இதிகாசநாயகர்களை நினைவு படுத்தும். அவனது திமிறிய தசைகளையும் கூரிய நாசியையும் நேரிய புருவங்களையும் பார்க்கும் எந்தப்பெண்ணுமே தடுமாறித்தான் போவாள். அப்படித்தான் கருப்பு சரும தென்னாசியர்கள் என்றாலே இளக்காரத்தோடு பார்க்கும் ஒப்பிரேசன் மனேச்சர் "லிடியா இங்" க்கும் அசுவத்தாமனிடம் நிலைகுலைந்து போனாள். லிடியா திருமணமானவள். ஐந்து வயதில் பிள்ளை வேறு உண்டு. ஆனாலும் கட்டுக்குலையாத காரிகை அவள். சூழல் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம், போக்குவரத்து துறை போண்ற அரசாங்க நிர்வாக பிரிவுகள் பாயும் போதெல்லாம் சமாளிப்பது அவள் தான். எங்களைக்கண்டால் பொங்கியெழும் அரச அலுவலர்கள் லிடியாவை கண்டதும் வாயெல்லாம் பல்லாகி அடங்கி விடுகிறார்கள். 
நடப்பாண்டில் எமது நிறுவனம் 5 வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அவற்றில் பெரியது இந்த புறஜெக்ட் தான். 100 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள திட்டம் இது. 3 km நீளமான நிலத்தடி புவியீர்ப்பு கழிவுநீர்கற்றல் தொகுதியை 18 மாதங்களில் நிர்மாணித்தாக வேண்டும்.  அதிகமான பாறைகளை கொண்ட தரைப்பகுதியில் அதிகமான ஆழத்தில் மைக்ரோ டனல் இயந்திரத்தை இயக்குவது சிக்கலாக இருக்கும் என்று அநேக நிறுவனங்கள் பின்வாங்க எங்கள் முதலாளி மட்டும் விடாப்படியா நின்று டென்டர் போட்டு இந்த வேலையை கைப்பற்றினார். அவரது ஒரே நம்பிக்கை அசுவத்தாமன். அவன் கடந்த 20 வருடமாக செய்த வேலைத்திட்டம் எதிலும் துளையிடும் இயந்திரம் இடைநடுவே சிக்கியதாக வரலாறில்லை. இது வழமைக்கு மாறானது. சிங்கப்பூரில் இயந்திரம் சிக்காமல் முடிந்த புரஜெக்ட்களை விரல் விட்டு எண்ணலாம்.முதலாளி அனுமாசிய சக்திகளில் நம்பிக்கை கொண்டவர். பேய்க்கு படையல் வைத்து அடிக்கடி பீதியை கிளப்புவார். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் அவர் அசுவத்தாமனோடு உரையாடும் வேளையில் மட்டும் தனி மரியாதை தொனிப்பதை கண்டிருக்கிறேன்.
அசுவத்தாமனின் அல்லக்கை என்று கருதக்கூடிய ஒரு வேலையாள் இருக்கிறான். அவன் ஓரு தடவை போதையில் சொன்ன தகவல்கள் முதுகெலும்பை சில்லிட வைத்தன. Tuasல் வேலை செய்த போது துளையிட்டபடி சென்ற இயந்திரம் இடைநடுவே பழுதாகிவிட்டதாம். அசுவத்தாமன் நள்ளிரவில் தன்னை Manhole வாசலில் நிற்கச்செல்லிவிட்டு பிராணவாயுவே இல்லாத குழாய் வழியாக தவன்று சென்று இயந்திரத்தை சரி செய்து விட்டு திரும்பினானாம். இன்னொரு நாள் பாரம் தூக்கி பழுதாகிய போது வேலையாட்களை மதிய உணவுக்கு அனுப்பி விட்டு வெறும் கைகளால் பல தொன் நிறையுள்ள I-Beamகளை தூக்கி அடுக்கிக் கொண்டிருந்தானாம். விடிகாலையில் மழைநீர் தேங்கிய வெட்டப்பட்ட குழிகளில் இறங்கி அரையளவு நீரில் நின்று சூரிய வணக்கம் செய்வதுமுண்டாம். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு அசுவத்தாமனோடு மிகுந்த எச்சரிக்கையோடு பழக ஆரம்பித்தேன்.சிங்கப்பூர் சீனர்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை கொண்ட லிடியா அசுவத்தாமனிடம் விழுந்ததன் பின்னணியில் சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. லிடியா சைட்டில் உலாப்போய்க்கொண்டிருந்த போது தற்காலிக மண்வீதி மழை ஈரத்தில் பொறிய வாகனம் பள்ளத்தில் சாய்ந்தது. வேகமாக ஓடிப்போன அசுவத்தாமன் வெறும் கரங்களால் பிரண்டு போயிருந்த லாண்ட் ரோவரை நிமிர்த்தி லிடியாவை தூக்கிக்கொண்டு வந்தான். அன்று தான் லிடியா அவனை வெகு அண்மையில் பார்த்திருக்க வேண்டும். அடுத்து கழிந்த நாழிகை முழுவதும் அடிக்கடி அசுவத்தாமனை பார்த்து புன்னகைப்பதும் நன்றி கூறுவதுமாக இருந்தாள். வெகு நேரத்திற்கு இது நீடிக்காது என்று நான் எண்ணியதற்கு மாறாக மறுநாள் இருவரும் ஒன்றாய் மதிய உணவுக்கு புறப்பட்டு போனார்கள். லிடியா அவனை "அஸ்வன்" என்று செல்லப்பேர் வேறு வைத்து அழைக்கத்தொடங்கியிருந்தாள். எனது மற்றும் நிறுவனத்திலிருக்கும் அநேகரின் வயிற்றெரிச்சலையும் மீறி வளர்ந்த இந்த காதல் லிடியா கர்ப்பமாவதில் போய் முடிந்தது.

"சுகன்! நான் இப்போ மூன்று மாசம். அஸ்வன் கருவை கலைக்கச்சொல்லி வற்புறுத்துகிறார். உங்களால் அவரோடு பேசி சமாதானப்படுத்த முடியுமா?"

பூட்டிய மீட்டிங் அறையில் லிடியா வெடிகுண்டை வீசினாள்.

"உங்களுக்கு திருமணமாகி விட்டதே லிடியா?"

"அதனாலென்ன விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். குழந்தை பிறந்தவுடன் அஸ்வனை மறுமணம் செய்வதாக இருக்கிறேன்."

"சரி உங்களுக்காக அவனோடு பேசுகிறேன்"

அழைத்து சில நிமிடங்களில் உடலை வில்லாக வளைத்து குனிந்தபடி தலை மேலே இடிக்காதவாறு  உள்ளே வந்தான் அசுவத்தாமன்.

""வரச்சொன்னீர்களாமே! என்ன விடயம்?" 

"நடிக்காதே! நீ செய்த ஈனச்செயல் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்"

"எது ஈனச்செயல்? நான் செய்தது ஒரு இரவு நேர வலிந்த தாக்குதல். Night raid என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நீதியை மீறி யுத்தம் செய்தவர்களை இரவில் தாக்குவது தவறாகாது. அப்படிப்பார்த்தால் உங்களது ஊரில் நடைபெற்ற ஒப்பறேசன் எல்லாளனும் போர்தர்மங்களை மீறிய தாக்குதல் தான்."

"நாம் கர்ப்பத்தைப்பற்றி பேசுகிறேன் நீ ஏன் தொடர்பே இல்லாமல் எல்லாளனை இழுக்கிறாய்?"

"ஓ கர்ப்பமா? அது அபிமன்யுவின் மனைவி உத்தாராவினுடையது. அப்பா இல்லாத அந்த குழந்தை பிறந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும்?. நான் அதன் வேதனையை போக்கியிருக்கிறேன். அதைப்பற்றி நீ யோசித்ததுண்டா?"

"குழப்புகிறாயே? . முதல்ல ஹெல்மெட்டை கழட்டு. ஒபிசுக்குள்ள எதுக்கு சேப்டி ஹெல்மெட்?"

அசுவத்தாமன் ஹெல்மெட்டை கழற்ற மேல்நெற்றியில் நீண்ட ஆழமான வடு தென்பட்டது. தலைமயிரை முன்னே இழுத்து வடுவை மறைக்க முயற்சித்தான்.

"இது கிருஸ்ணன் செய்த சதியால் உருவான வடு இது. 22ம் திகதி மார்கழி மாதம் கிறிஸ்துவுக்கு முன் 3067ம் ஆண்டு தொடங்கின சண்டை 18 நாளா நடந்து தை மாசம் 10 திகதி முடிந்தது.11 திகதி நான் பிரமாஸ்திரம் அடிச்சனான். அண்டைக்குத்தான் இந்த காயமும் வந்தது"

காயத்தை மறைத்த படி அசுவத்தாமன் சொல்லிக்கொண்டு போக எனக்கு உடம்பெல்லாம் உதறல் எடுக்க தொடங்கியது.

"இரவு நேர தாக்குதல், பிரம்மாஸ்திரம் , நெற்றியில் வடு இதெல்லாத்தையும் வச்சுப்பார்த்தால் நீ துரோணர் மாஸ்டர்ட மகன் அசுவத்தாமன் தானே? அடப்பாவி கிருஸ்ணர் உன்னை காட்டுக்கை அலையோணும் எண்டெல்லோ சாபம் போட்டவர். எப்படி நாட்டுக்கை வந்தனி?"

""காடு என்று சாபம் போட்ட பார்த்தன் எந்தக்காடு என்பதை வரையறுக்காம விட்டுட்டான். சிங்கப்பூரும் ஒரு கொங்கிறீட்டு காடு தானே?. அவன்ட சாபத்திலை இருக்கிற ஓட்டையை பயன்படுத்தி இங்கு வந்து விட்டேன்"

"வந்ததும் பத்தாமல் ஒரு வேற்றின குடும்ப பெண்ணை கர்ப்பமாக்கி விட்டாயே படுபாவி!"

நான் கோபத்தோடு கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பிக்க என்னை சற்றும் பொருட்படுத்தாத அசுவத்தாமன் மேசையில் இருந்த பேனை மூடியை எடுத்து விரலிடுக்கில் வைத்தபடி கண்களை மூடி மந்திரம் உச்சரிக்கலானான். சில நொடிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளியோடு கிளம்பிய அந்த பேனா அஸ்திரம் கூரையை பிளந்து கொண்டு லிடியா வயிற்றில் வளரும் கருவை நோக்கி பறக்கலானது.

பிற்குறிப்பு : பாரதப்போரின் முடிவில் கருவில் இருந்த குழந்தையை பிரம்மகணை தொடுத்து கொண்ற பாவத்துக்காக கண்ணனின் சாபத்துக்கு ஆளான அசுவத்தாமன் இன்று வரை காடுகளில் அலைந்து திரிகிறான். இதுவரை அவனை கண்டதாகவும் உரையாடியதாகவும் பல கதைகள் உண்டு. மரணத்தை தழுவ முடியாமல் யாருடைய அன்பையும் பெற முடியாமல்  சிரஞ்சீவியாக வாழும் அவன் கலியுக முடிவிலே மூப்படைவான் என்கிறது பாரதம்.

கோச்சடையானில் ரஜினி ஒரு வசனம் சொல்லுவார் "பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது". நண்பன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு கூட வந்த வஞ்சகன் தருணம் பார்த்து முதுகில் குத்தும் போது எந்த தீரனும் நிலை தடுமாறித்தான் போவான்.  எதிரி அடித்தால் உடனடியாக திருப்பியடிக்க முடியும். ஆனால் கூட இருந்தவன் குழி பறிக்கும் போது ஏற்படும் அதிர்ச்சியில் திருப்பித்தாக்க முடியாது. அநேகமானவர்கள் நெருக்கமாக இருந்தவர்கள் குழி பறித்த போது ஒதுங்கிச்செல்வதையே தேர்ந்தெடுப்பார்கள். விடயம் தெரிந்தவர்களின் பரிதாப விசாரிப்புகள், உறவுகளின் ஏளனங்கள் என கொடூரமான தருணங்கள் நிரம்பிய வலி அது.

உலகின் மூலைகளெல்லாம் அலைந்து திரியும் எங்களில் அநேகருக்கு ஒரு கனவுண்டு. தாய்நாட்டிற்கு போக வேண்டும், வெற்றிகரமாக ஒரு தொழில் முயற்சியை தொடங்கி வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும், தேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நியாயமான கனவு அது. அந்நிய நாட்டில் அரிதாக கிடைக்கும் ஒய்வு நேரங்களில் நண்பர்கள் கூடும் போது இது குறித்து அலசுவோம். வெற்றி வாய்ப்பு, தடைகள், தோல்வி ஏற்படின் எதிர்காலம் என பலவாறான உப தலைப்புகளில் எங்கள் விவாதம் நீளும். எங்கள் சோர்வையும் தயக்கத்தையும் போக்க வெற்றிகரமான உதாரணம் ஒன்று தேவைப்படும் போதெல்லாம் அவனது பெயர் வந்து போகும். வன்னி பெருநலப்பரப்பிலிருந்து மொறட்டுவைக்கு வந்த சுள்ளான் அவன். 2008 ஆம் ஆண்டு கம்பஸ் முடிந்து ஆளாளுக்கு ஒரு திக்காக பறந்த போது ஊரில் உறுதியாக நின்றவன். நாங்களெல்லாம் கலியாணம் பற்றி யோசிக்க முதலே அப்பா ஆகி சாதித்து காட்டியவன்.

தீபரூபன் ஊரில் கட்டிட ஒப்பந்தக்காரனாக ஆகிய போது நாங்களெல்லாம் வெள்ளைக்கார முதலாளிக்கும் ,சீன முதலாளிக்கும் கீழே வேலை செய்து கொண்டிருந்தோம். தொலைபேசியில் உரையாடும் போது "மச்சான்! வந்தா வெல்லலாம். நான் தேவையான உதவி எல்லாம் செய்து தாறன்" என்று நம்பிக்கையூட்டுவான். வார்த்தைகளால் மட்டும் நில்லாது சிலருக்கு உதவி செய்தும் காட்டியவன். ஆரம்பித்து ஒரு வருடத்திலேயே மோசடிக்காரனிடம் இரண்டு மில்லியன்களை இழந்தும் விடாப்பிடியாக நின்றான். சில நாட்களின் பின்னர் பெராதெனிய கம்பஸ் பெடியனோடு சேர்ந்து சில ஒப்பந்தங்களை பெற்று செய்து வருவதாக கேள்வியுற்றோம்."சுள்ளான் சுழியன் பெரிய அளவிய கலக்குவான் பார்" என்று நாங்கள் நம்பிக்கையோடு இருக்க அந்த கூட்டுச்சேர்ந்த பரதேசியும் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவனுக்கு ஆப்பு அடித்திருக்கிறது.

தீபரூபன் கடும் உழைப்பை கொட்டி கட்டுமானங்களை செய்து கொண்டிருக்க, வந்த கொடுப்பனவு பணத்தில் கார் வாங்கி ஓடியிருக்கிறான் அந்த ஆப்பு மன்னன். தீபரூபனின் பொறுமையை பலவீனமாக கருதி போலிக்கணக்குகள் காட்டி பெருமளவு லாபத்தை விழுங்கியிருக்கிறான். ஆட்டையை போட்டு பழகினவனுக்கு கையும் காலும் சும்மா இருக்காது. ஒரு கட்டத்தில் கொழுப்பெடுத்து மாகாண சபை ஒப்பந்தங்களில் லஞ்சம் வாங்கி பருத்திருக்கிறான். இதோடு நிறுத்தியிருக்கலாம் அவன். ஆசை யாரை விட்டது?. இறுதியாக வந்த 5 மில்லியன் ஒப்பந்த பணம் முழுவதையும் ஏப்பம் விட்டு கேட்கப்போன தீபரூபனிடம் "நீ செய்த வேலைக்கு சம்பளம் வேணுமெண்டா தாறன்" என்ற அருவருப்பாக பதிலளித்திருக்கிறான்.

சில கால அவகாசங்களை கொடுத்தும் அவன் திருந்தாத நிலையில் நிலையில் சுள்ளான் திருப்பி அடித்திருக்கிறார். இன்றைய திகதியில் அரச பணத்தை ஊழல் செய்தது, தொழில் பங்குதாரனை ஏமாற்றியது, வருமானத்திற்கு மிஞ்சிய சொத்து சேர்த்தது என பலமுனை ஆதாரங்களை மாகாண சபை அரசின் முன் வைத்தது ஆப்பு மன்னனின் தலையில் இடியாய் இறங்கியிருக்கிறது. நாய் நடுக்கடல்ல நின்றாலும் நக்கி குடிப்பதைப்பற்றியே சிந்திக்குமாம். அதே போல் அந்தப்பரதேசி கேவலமாய் இறங்கி தீபரூபனினதும் ,மனைவியினது முகநூல் கணக்குகளை கைப்பற்றி பின்வாங்கும்படி சிறுபிள்ளைத்தனமாக மிரட்டியிருக்கிறான். முகநூல் இல்லாவிட்டால் முகவரியே இல்லையென்று ஆகிவிடுமா?. புதிய கணக்கை திறந்து நண்பர்களோடு இணைந்து கொண்டிருக்கிறான் தீபரூபன்.


A conventional "Aapu"
ஆப்படிக்க வந்தவன் இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல சிக்கியிருக்கிறான். பிய்த்தெடுத்துக்கொண்டு ஓடுவது, அல்லது நின்று மாட்டுப்படுவது என்று இரண்டு தெரிவுகள் தான் அவனுக்கு இருக்கின்றன.
மோசடி செய்யப்பட்ட பணம் திருப்பி வரப்போவதில்லை என்ற போதிலும் இப்படியான புல்லுருவிகள் நாட்டை விட்டு அகற்றப்படுவது அல்லது முடக்கப்படுவது அவசியம். துடிப்புள்ள இளைஞர்களின் தொழில் முயற்சிகளில் கொள்ளையடிக்க நினைக்கும் பணப்பேய்களுக்க்கும், திருடர்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாய் அமைய வேண்டும். வெளிநாட்டுக்கு தப்பி ஓடாது தாய்நாட்டில் நின்று ஒரு பொறியியளாளன் நின்று சாதிக்க போராடுகிறான் என்றால் அது மிகப்பெரும் ஈகம். அதை கெடுக்க நினைக்கும் கொழுத்த எலிகள் தயவுதாட்சணியமின்றி விரட்டப்பட வேண்டும். இக்கட்டான தருணத்தில் மட்டம் 2003 நண்பர்களாகிய நாம் தீபரூபனுக்கு பக்கபலமாக நிற்போம்.

பலவருடங்களுக்கு முன்னர் வன்னி பெருநிலப்பரப்பில் வாழ்ந்து வந்த ஒரு விவசாயிடம் நல்லின பசுமாடு ஒன்று இருந்தது. இனச்சேர்க்கைக்குரிய காலம் வந்ததும் அவர் அதை பொருண்மிய நிறுவனத்தின் இனச்சேர்க்கையிடத்துக்கு அழைத்துச்சென்றார். பசு மாட்டையும் காளை மாட்டையும் அருகருகே கட்டியாகிவிட்டது. காளைமாடு பார்ப்பதற்கு அவ்வழவு அழகாக திமிறிக்கொண்டு நின்றது. விவசாயிக்கோ அளவில்லாத சந்தோசம். "சினைப்பட்டு இதே மாதிரி நாம்பன் கன்று போட்டால் பத்து ஏக்கர் உழலாம், பசுக்கன்று போட்டாலும் பத்து லீற்றர் கறக்கும்" என்று அவரது மனது கணக்கு போட்டபடியிருந்தது. நேரம் ஓட ஓட எதுவுமே நடக்கவில்லை. அந்த வாட்டசாட்டமான காளை அருகே போவதும் முகர்வதும் பின்வாங்குவதுமாய் இருந்தது. இதைப்பார்த்த விவசாயிக்கு காளையின் ஆண்மைத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அங்கே வேலை செய்த இளைஞனிடம் கேட்டே விட்டார். 

"தம்பி! உந்த நாம்பன் சேர்க்கைக்கு புதுசோ?"

"அண்ணே! மாட்டுக்கு நோக்கம் இருக்கு! ஆனா ஊக்கம் இல்லை!"

இக்கதை ஒரு செவிவழியாக கம்பசில் பரவி "ஊக்கமில்லாதவர்களை" எள்ளிநகையாட பயன்பட்டது. 

எமது மட்டத்தில் ஒரு நோக்கம் மிகுந்த "X-Man" ஒருவர் இருந்தார். ஆள் நடந்தால் தூரத்திலிருந்து பார்க்கும் போது கால்கள் எக்ஸ்வடிவில் இருக்கும். உடம்பில் அந்துசந்து இருக்காது. தொப்புள் தெப்ப குளம் போல இருக்கும். நண்பர்கள் அவருக்கு  அன்பாக வைத்த பெயர்களின் ஒன்று "கருப்பு நமீதா". எக்ஸ்மான் கிழமைக்கு ஒரு தடவை தான் குளிப்பார். செமஸ்டர் பரீட்சை வந்துவிட்டால் மாதக்கணக்கில் குளிக்க மாட்டார். கிட்ட போகும் போது கெட்ட வாடை வீசும். அனுபவப்பட்டவர்கள் அவ்வாடையை அழுகிய மீன் நாற்றத்திற்கும், இன்னும் சிலர் அதை குட்டை நாயின் மணத்திற்கும் வேறு பலர் பன்னித்தொழுவ வாடைக்கும் ஒப்பிடுவார்கள். முதல் வருடத்தின் இரண்டாம் செமஸ்டர் எக்ஸாம் நாட்களின் போது எங்கள் மட்டத்தின் "ஆடம்பர அழகி" நூலகத்திலிருந்து படித்துக்கொண்டிருந்தார். எக்ஸ்மானுக்கு அழகியில் பல நாட்களாகவே ஒரு "நோக்கம்".ஆனால் போதிய "ஊக்கம்" இல்லாததால் அருகில் நின்று பேசுவதற்கே தயங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் "நோக்கமிருக்கு ஆனா ஊக்கமில்லை" என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தோம்.


மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நாள் "ஆடம்பர அழகி" அருகே சென்று உட்கார்ந்து விட்டார். சந்தேகம் கேட்கிறேன் என்று சொல்லி ஓரிரண்டு மொக்கை கேள்விகளை தொடுத்தார். ஆடம்பர அழகிக்கோ எக்ஸ்மானில் இருந்து வீசிய நாற்றம் தாங்க முடியவில்லை. எவ்வளவு நேரத்துக்குத்தான் தாங்குவது?. ஒரு கட்டத்தில் கைக்குட்டையை எடுத்து மூக்கை மூடியபடி பதிலளிக்க ஆரம்பித்தார். ஊக்கத்தின் உச்சியில் இருந்த எக்ஸ்மானோ அழகி வெட்கத்தின் மிகுதியில் மூடிக்கொள்வதாக கணக்கு போட்டார். தான் பேசியதால் மகிழ்ச்சியடைந்து தானாக புன்னகைக்கும் உதடுகளை மறைக்கவும் கைக்குட்டையை அழகி பாவிக்கிறார் என எண்ணி புளகாங்கிதமடைந்தார். அத்தோடு நிறுத்தாமல் அன்று  இரவுதங்கிமிடத்துக்கு வந்தவர் நண்பர்களிடம் அவளை மடக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்.

நண்பர்கள் எக்ஸ்மேனின் ஊக்கத்தை வெளியே பாராட்டினாலும் உள்ளே கடுப்பில் இருந்தார்கள். நமக்கு மைனா சிக்காவிட்டாலும் அடுத்தவனுக்கு காக்கா கூட சிக்கக்கூடாது என்ற தெளிவான கொள்கையுடையவர்கள் அவர்கள். அவ்வழகிக்கு நெருக்கமான வாளிகள் மூலமாக விசாரித்தார்கள். அழகி அளித்த பதில் எக்ஸ்மேனை ஒரே நாளில் இசற்மான் ஆக்குமளவுக்கு இருந்தது.அப்படி என்ன தான் அவர் சொல்லியிருப்பார்?" நான் ஒண்டும் அவரைக்கண்டு வெட்கப்படேலை. சரியான நாத்தமா இருந்தது. அதுதான் லேஞ்சியால பொத்தினான்"

Mars Orbiter Missionஉலகத்துக்கே பிடிக்காத அடோல்ப் ஹிட்லரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். எவ்வளவுக்கு என்றால் அவர் படத்தை கணனி மேசைத்தளத்தில் போட்டு வைக்குமளவுக்கு பிடிக்கும். நூறு கோடி மனிதர்களுக்குள்ள தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்குள் இருந்தால் எப்படி இருக்கும்?. அது தான் ஹிட்லர். எதிரிகள் காலடி தொலைவுக்குள் வரும் வரை திருப்பி தாக்குவதை பற்றியே சிந்தித்த விடாக்கண்ட மனுசன் அவர். தோற்றாலும் வென்ற பெருமிதத்தை எதிரிக்கு தரக்கூடாது என்பதற்காக தன் உடலை எரித்தழிக்க உத்தரவிட்டு மாண்ட இரும்பு நெஞ்சன். ஹிட்லர் இல்லாவிட்டால் ஸ்டாலினும், வின்ஸ்டன் சேர்ச்சிலும் ,ரூஸ்வெல்ட்டும் யாரென்றே நமக்கு தெரிந்திருக்காது. அவ்வாறே ஜெர்மானியர்களுக்கு ஹிட்லர் வந்திராவிட்டால் தாங்கள் யாரென்றே தெரிந்திராது. அது தெரிந்த பின் அவர்கள் போட்ட தாண்டவத்தில் உலகமே மிரண்டு போனது. போரில் தோற்றாலும் ஹிட்லர் தட்டியெழுப்பிய பெருமித உணர்வு ஜெர்மானியருக்கு போகவில்லை. இன்றைய திகதியில் ஐரோப்பாவின் பெரும் பொருளாதாரம் அவர்களுடையது. அவர்களின் பொறியியல் தரம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. இத்தனைக்கும் ஜெர்மானியர்கள் ஐரோப்பாவின் ஆதியினம் அவ்வளவு தான்.

உலகத்திலேயே ஆதியினம் ஒன்று இருக்கிறது. உழுது பயிரிட்டு உழைத்து வாழும் முறையை முதன் முதல் பின்பற்றிய இனம். இவர்கள் ஜெர்மானியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த நாட்களில் வானளாவ கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோள்களின் இயக்கம் பற்றியெல்லாம் அறிந்திருந்தார்கள். கணிதத்தை உருவாகினார்கள். தொழில் முறை இராணுவங்களை உருவாக்கி போரிட்டார்கள். அரேபியர்களுக்கு கல்வி தந்தார்கள். சீனர்களுக்கு மதமும் தற்பாதுகாப்பு கலைகளும் கற்று தந்தார்கள். பல்லாயிரம் மைல்கள் கடலில் சென்று வியாபாரம் செய்தார்கள்.  ஐரோப்பாவின் மூத்த இனமே இவ்வளவு உயர்வாக இருக்கும் போது உலகின் மூத்த இனம் எங்கேயோ உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் காலம் நாம் விரும்பாததையும் எழுதி விடுகிறது. தகுதியில்லாதவர்களுக்கு பெருவாழ்வும் கொடுத்து தகுதியுள்ளவர்களை கேவலப்படுத்தி வீழ்த்திவிட்டு சென்று விடுகிறது. கைபர் கணவாயூடாக வந்த நாடோடிக்கூட்டத்தோடு எப்படி இந்த புராதன மக்கள் கூட்டம் கலந்தது?. காட்டுமிராண்டி மொகாலையர்களை எதிர்கொள்ள முடியாமல் ஏன் இப்படி பின்வாங்கியது?. எல்லாவற்றிற்கும் மேலாக கேவலமான கடற்கொள்ளை கூட்டமான பிரித்தானியர்களிடம் எப்படி நூறாண்டுக்கு மேலாக அடிமையாக இருந்தது?. காலம் விட்டுச்சென்ற சில கேள்விகளுக்கு எவராலும் தெளிவான பதிலை அளிக்க முடிவதில்லை.

எது எவ்வாறாயினும் வேறுபட்ட இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்களின் கலவையாகவுள்ள தற்போதைய பாரத நாட்டினுள்தான் உலகின் ஆதியினம் இருக்கிறது. வேறுவிதமாக சொல்வதானால் அவ்வினத்தின் சிறப்புக்களை ஏனையவர்கள் ஏதோ ஒரு வீதத்தில் தமக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அச்சிறப்புத்தன்மை ஒப்பிடமுடியாதது. அதை நுண்ணறிவு என்றோ, விசேடதகமை என்றோ குறிப்பிட முடியும்.  அத்தகமைதான் மங்கள்யான் கலத்தை செவ்வாய் வரை முதலாவது முயற்சியிலேயே எடுத்துச்சென்று பிசகின்றி ஈர்ப்பு பாதையில் சுற்ற விட்டிருக்கிறது என்றும் பெருமிதமாக கூறியே ஆகவேண்டும்.மொகாலய காட்டுமிராண்டிகளாலும் ஐரோப்பிய கொள்ளையர்களாலும் சூறையாடப்பட்டு நாசமாக்கப்பட்ட புராதன தேசம் தடுமாறி எழுந்து ஆறு தசாப்தங்களுள் தெளிவாக விண்வெளியில் சிக்ஸர் அடித்திருக்கிறது. ஹிட்லர் உருவாக்கிய தொழில் நுட்பத்தை பிடுங்கி அமெரிக்கர்களும் ரஸ்யர்களும் விண்வெளியில் காட்டிய "சாதனைகளை" போலல்லாது சுயமாக ஒரு காட்டு காட்டியிருக்கிறது இந்தியா.

பிரமாண்ட விண்வெளியில் 300 நாட்களாக 670 மில்லியன் கிலோமீற்றர்கள் தாண்டி பயணித்து பிசகின்றி இன்று செவ்வாயின் ஈர்ப்பு வலையத்தின் சிக்கியது மங்கள்யான். பொன் கொழித்த இந்தியா வறுமையில் உழழ மூல காரணமாக இருந்த பிரித்தானியர்கள் "பிச்சைக்கார தேசத்துக்கு இது தேவையா?" என்று இணையவெளியெங்கும் ஒப்பாரி வைக்க வெள்ளைக்காரர்கள் முகநூலில் "செவ்வாயில் மாடு மேய்க்க போகிறார்களா?" என்று கலாய்த்திருக்க தன் முயற்சியின் சற்றும் தளராத மங்கள்யான் விடாப்பிடியாய் பயணித்து போய்ச்சேர்ந்தான். மனித குலத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்போகும் விண்வெளி பயணங்களை ஒரு குடியேற்ற வல்லரசு விலை கொடுத்து வாங்கப்பட்ட பலதரப்பட்ட இனங்களின் மனித மூளையை வைத்து முன்னெடுப்பதைவிட பாரதம் போண்ற புராதன தேசம் முன்னெடுப்பது தான் அதிக பலனை தரவல்லதாக இருக்கும். 74 மில்லியன் அமெரிக்க டொலர்களில் செவ்வாயை எட்டிப்பிடித்த இஸ்ரோவுக்கு பெரு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் பட்சத்தில் மேலும் பல மகத்தான சாதனைகளை படைக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போதைய நிலவரம் -10உடையாது என்று எல்லோருமே நினைத்த 7ஜி கும்பல் உடைந்துவிட்டது. கவிழாது என்று அடித்து கூறப்பட்ட டைட்டானிக்கே கவிழ்ந்த சம்பவத்தோடு ஒப்பிடும் போது இது ஒரு வெறும் விடயம் என்ற போதிலும் மட்டம் 2003 இனை பொறுத்தவரை இது குறிப்பிடத்தக்க கனமானது. பல்கலை நாட்களில் 7ஜி கும்பல் போட்ட அட்டகாசங்களும் அடிபாடுகளும் மட்டத்திலிருந்த சிலரை விலகிப்போக வைத்ததோடு பலரை பொறாமைப்படவும் வைத்திருந்தன. ஒவ்வொருத்தனும் எதோ ஒரு வகையில் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்க இவர்களால் மட்டும் எப்படி இப்படி ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்று கடுப்பான ஜூனியர் சீனியர் ஏராளம். 7ஜி கும்பலின் பலமும் அதுதான்.பலவீனமும் அது தான். பிரச்சினைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு யாராவது மூன்றாவது தரப்போடு வம்பிழுப்பது, மூன்றாவது நபர் கிடைக்காத பட்சத்தில் தண்ணியை போட்டோ போடாமாலோ தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது ,அரட்டையடிப்பது என இவர்களின் வண்டி நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் வம்பிழுக்க எவருமே சிக்காத நிலமை 7ஜி கும்பலுக்கு உருவானது. வேலைத்தள பிரச்சினைகளை நிர்வகிப்பதும் அனுபவத்தின் மூலம் இலகுவாகிவிட்டது. இந்த நிலையில்த்தான் கடிக்க எலும்பு கிடைக்காத நாய்க்குட்டி தன் காலையே பல்லுழைவு போக்க கடிப்பது போல தமக்குள்ளேயே கடிபட ஆரம்பித்தார்கள். புரஜெக்ட் மனேச்சர் பதவி தந்த குருட்டு தன்னம்பிக்கையில் ஆளாளுக்கு தம்மை தலைவராகவும் தத்துவஞானியாகவும் ஆலோசகராகவும் பிம்பத்தை தமக்குள் வளர்த்துக்கொண்டு வலம் வர ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பகைமை வளர்ந்த போதிலும் தண்ணியை போட்டுவிட்டு நட்பு பாராட்டினார்கள். அப்பகை தெரியாமல் இருக்க மூன்றாவது பிரச்சினையை அலசினார்கள். வேடிக்கையாக வம்பிழுப்பது போல பாசாங்கு செய்து கொண்டு வன்மம் நிறைந்த கண்களோடு போதை எனும் போர்வையுள் மறைந்திருந்து தாக்குவது வழமையானது. இந்த தாக்குதல் என்மீது அதிகமாக இருப்பதை புரிந்துகொள்ள பெரிதாக நுண்ணறிவு ஒன்றும் தேவைப்படவில்லை. பொறுமையிழந்த ஒருநாளில் தண்ணியை போட்டுவிட்டு வேடிக்கையாக வம்பிழுத்தல் என்ற போர்வையை நீக்க முயன்றபோது உள்ளுக்குள் பிராங்கென்ஸ்டைன் பூதமாக மறைந்திருந்த மிருகம் வெளிப்பட்டுவிட்டது.

இன்றையமாதம் 17ம்திகதி நடந்த நீண்ட நேர வாக்குவாதம், கைகலப்பின் பின்னர் நான் அந்த கும்பலை விட்டு வெளியேறி வந்தேன். எனக்கு இருப்பிடம் தர முன்வந்த சகமட்டத்து நண்பனிடம் "அவனை வீட்டுக்குள் விடாதே" என்று கேட்டுகொண்டார்கள். "உனக்கு எவன் இடம் தறானோ அவனுக்கு அடிப்போம்" என்று வேறு சிரிப்புபஞ்ச் டயலாக்குகளை எடுத்து விட்டார்கள். நான் வெளியே போகிறேன் என்பதைவிட நான் வெளியேறினால் பிறர் கேவலமாக நினைப்பார்களே என்ற நினைப்புத்தான் அதிகமாக அவர்களுக்கு இருந்தது.பிறருக்கு ஒரு காட்டு காட்ட வேண்டும் என்ற சிந்தனையையே அடிநாதமாக கொண்டவர்களிடம் வேறெப்படியான சிந்தனையை எதிர்பார்க்க முடியும்?.

இற்றைய திகதிக்கு இக்கும்பலில் எஞ்சியுள்ளவர்கள் பியர்கான்களோடு கூடியிருந்து நான் போனதற்கான காரணங்களை உருவகித்து அவைகுறித்து விவாதித்துக்கொண்டிருக்கக்கூடும். (இந்த வசனத்தை படித்த பின்னர் "எங்களுக்கு வேற வேலையில்லை உன்னைப்பற்றி கதைக்க?" என்று கடுப்பாகவும் கூடும்) உளவியலின் அடிப்படையே தெரியாத போதிலும் என் உளவியல் குறித்து அக்கு வேறி ஆணிவேறாக பிரித்து மேயவும் கூடும். அவை யாவும் தங்களுக்குள் இருக்கும் பூதத்தை மறைத்து அது என்னிடம் இருப்பதாக நிறுவி சுய மகிழ்ச்சி கொள்வதையே அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதையும் அவர்களோடே பத்து வருடமாக இருந்தவன் என்ற முறையில் மிகச்சரியாக ஊகிக்க முடியும்.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் இந்த கும்பலோடு 10 வருடமாக இருந்து மிஞ்சியது இரண்டு பேரோடான நட்பு மட்டும் தான்.எனது அனுமானம் மட்டும் சரியாக இருக்குமேயானால் இன்னும் இரண்டு வருடத்துக்கு மட்டுமே இந்த கும்பல் நீடிக்கும். அதற்க்குள் கலியாணம் கட்டி போறவன் போக எஞ்சியோர் மனநோய் முற்றி வெறி பிடித்தலைய இந்த கும்பல் அடுக்கி வைத்த சீட்டு கோபுரம் குலைவது போல் ஆகிவிடும். நாமெல்லாம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அரைப்பங்கை தாண்டி விட்டோம். வாழ்ந்து முடிக்கும் தருணத்தில் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் பெறுமதி என்பது சொந்த ஊரிலிருந்து எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் சீனனுக்கு கீழ் செய்த வேலையை கொண்டு மதிப்பிடப்படப் போவதில்லை. மாறாக அது நமது சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறோம் என்பதிலேயே தங்கியிருக்கும்.

எதிர் கால கதைகள்

2028 ஆம் ஆண்டில் ஒரு நாள் சௌந்தரின் மகன் முற்றத்திலிருந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது அச்சுதனின் மகன் படு வேகமாக உள்ளே நுழைந்து அவனை வெளு வெளு என்று வெளுக்கத்தொடங்கினான். சௌந்தர் தனது பாரமான வண்டியை தூக்கியபடி ஓடி வந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற போதிலும் அவன் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.

சௌந்தரின் மகனே அடி வலியையும் மீறி " ஏன்டா இப்ப என்னை அடிக்கிறாய்? ,காரணத்தை சொல்லிட்டு அடியடா" என்று கத்திக்கொண்டிருந்தான்.

 பத்து நிமிடங்கள் கும்மிக்குதறிய பின் அமைதியான அச்சுவின் மகன்
"போன மாசம் என்னை பார்த்து தேவாங்கு என்று சொன்னதுக்குத்தான் இந்த அடி" என்றான்.

"போன மாசம் சொன்னதுக்கு இப்ப அடிக்கிறாய்? உனக்கென்ன விசரா?"

"நாயே! இன்றைக்குத்தான்டா தேவாங்க சூவில நேர பார்த்தனான்"

மேற்சொன்ன நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. சில நாட்களுக்கு முன் முகநூலில் அச்சுதன் என்மீது எதிர்பாராத காரசாரமான தாக்குதலை தொடுத்திருந்தான். அதற்கு காரணமாக இருந்தது நான் போட்ட "இவன் எதுக்கும்,அதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான் " என்றமைந்த பின்னூட்டம் .கடுப்பானால் திருப்பி திட்டுவது வழமை என்றாலும் நான் அந்த பின்னூட்டத்தை போட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தன.


(கடின வார்த்தைப்பிரயோகங்கள் மேலே உரு மறைப்பு செய்யப்பட்டுள்ளன)


2028 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டம் 2003 மாணவர்கள் 20 வருடங்களின் பின்னர் மீள் இணைப்பு நிகழ்வை கொண்டாடவென ஒன்று சேர்ந்திருந்தனர். தலைநகரிலிருந்த 5 நட்சத்திர விடுதி ஒன்றில் முதல்நாளிரவே வந்து ஒன்று கூடிய நண்பர்கள் இரவிரவாக தண்ணீரில் மிதந்துகொண்டிருக்க மறுபக்கம் அவர்களின் மனைவிமார்கள் ஒன்று கூடலில் என்ன ஆடை அணிவது என்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர். 

"என்ர அவருக்கு இன்னும் தலைமுழுக்க நல்ல கருப்பு முடி.அதால அதுக்கு மட்ச் பண்ணுற மாதிரி நான் கருப்பு சாறி கட்டப்போறன்" 
சொல்லிவிட்டு சுகாவின் மனைவி நெஞ்சை நிமிர்திக்கொண்டாள்.

"நான் வெள்ளைச்சாறி கட்டப்போறன்.அவருடை வெண்பஞ்சு போல அழகான நரைத்த முடிக்கு சும்மா அதிரும்".சிரிப்பு ரவுடியின் சம்சாரம் மின்சாரம் பாய்ந்தது போல உடலை உதறி நளினம் காட்டிக்கொண்டாள்.

"என்ர செல்லத்துக்கு சேல்ட் அண்ட் பெப்பர் தலை. கருப்பு வெள்ளை கலப்பில் கட்டினால் கலக்கும்" இது அப்பாசின் காதல் மனைவி.

சௌந்தரின் மனைவியோ முதுகில் ஆழமான பிளவு வைத்த பிளவுஸ் போட்டு சாறி கட்டுவேன் என்று பிடிவாதமாய் இருந்தாள். சௌந்தரின் பின்பக்கம் வெளித்த மொட்டைத்தலை ஞாபகத்தில் வர பெண்கள் "நல்ல கலாரசனை உங்களுக்கு" என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.

"லூசாடி உங்களுக்கு"

கலகப்பாக போய்க்கொண்டிருந்த சூழலில் காட்டெருமை கத்தியதுபோல் ஒரு சத்தம். அங்கே அலியப்பாவின் மனைவி ஆக்ரேசமாக நின்றிருந்தாள்.

"என்ர புருசனுக்கு தலையில் மயிரே இல்லை. உந்த மயிர் மட்சிங் பார்த்தா நான் அம்மணமாவெல்லோ வரோணும்?"சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும்.சட்டை மட்டுமில்லை. சிலசமயம் யட்டி கூட கிழிபட வாய்ப்பிருக்கிறது. கட்டிய கோவணம் களவு போன கதை கேள்விப்பட்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்னர் கட்டிய கோவணம் மட்டுமில்லை. அரை நாண் கயிறே தெறித்துப்போன சம்பவம் சிங்கபுரியில் நடந்தது. இப்போதெல்லாம் கேவலமான சம்பவம் ஒன்று நடந்தால் அதனை உடனடியாக ஆவணப்படுத்திவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தாமதிக்கும் ஒரிரு நாட்களுக்குள் ஒரு போத்தில் உற்சாகபானத்தோடு அந்த வரலாற்றை மாற்றி எழுதிவிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த கேவலம் நடந்ததே எனக்குத்தான் என்று மாற்றிவிடுகிறார்கள். பல வருடங்களாக புறஜெக்ட் மனேச்சராக இருப்பவர்களுக்கு தெரியாததை தெரிந்ததாக கதைப்பது, வரலாற்றை மாற்றி எழுதுவது எல்லாம் கைவந்த கலையாக இருப்பதால் அவர்கள் முன் நான் கையாலாகாதவனாகி விட்டேன்.

இந்த கதைக்கு அவசியப்படுகிற கிளைக்கதையை சொல்ல ஒரிரு மாதங்கள் பின்னே சென்றாக வேண்டும்.மலேசிய விமானம் காணாமல் போயிருந்த சமயம்.யாரோ ஒரு அமெரிக்க புத்திசாலி இணையத்தளம் விமானத்தை தீவிரவாதிகள் தரையிறக்கியிருக்கக்கூடிய சாத்தியமுள்ள இடங்கள் என்ற வரிசையில் பலாலி விமானத்தளத்தையும் சேர்த்து காமெடி பண்ணியிருந்தார்கள். "பலாலியில் போர் ஜெட்விமானமே இறக்க முடியாது. போயிங்கை எப்படி இறக்க முடியும்?" என்று ஒரு மொக்கையான கருத்தை வெளியிட்டுவிட்டு அருகேயிருந்த நண்பர்களின் பதிலுக்காக காத்திருந்தேன். வழமையாக இப்படிப்பட்ட "அதிமேதாவித்தனமான" உரையாடல்களை வளர்ப்பதில் ஆர்வமுடைய பேர்வழிகள் அமைதியாக இருக்க பதிலளித்த நண்பர் வாசிப்புப்பழக்கம் அறவே இல்லாதவர். புத்தகவாசிப்பு மட்டுமல்ல இணைய வாசிப்புப்பக்கம் கூட அண்டாதவர். அப்படிப்பட்ட அவர் "பிளேனை கடல்ல இறக்கிட்டு போட்டால கட்டி இழுத்திட்டு வரலாம்" என்ற பதிலோடு வீராப்பாக வீற்றிருந்தார்.

"கடல்ல இறக்க அது என்ன கடல் விமானமா?" நான் விடவில்லை.

"போடா பேயா! போயிங்ட Catalog புத்தகத்தை எடுத்து பார்.கடல்ல மிதக்கும் என்று தெளிவா எழுதி இருக்கு"

கில்மா புத்தகம் கூட வாசிக்கும் பழக்கம் இல்லாதவன் போயிங் கற்றலொக் வாசிக்கிற அளவுக்கு போயிட்டானா?. அல்லது இவன்ட கையில் கற்லொக் சிக்குற அளவுக்கு போயிங் கொம்பனி தரமிழந்து விட்டதா?என்று எனக்கு பல விதமான குழப்பம். இருந்தாலும் கமுக்கமாக இருந்து அவனை சில நாட்கள் தொடர்ந்து அவதானித்தேன். புதிதாக வந்து IT பெடியனொருவன் தனது வேலை பற்றி பெரிதாக பில்டப் குடுக்கப்போக குறுக்கிட்ட இவன் " எல்லாம் பூச்சியம் ,ஒன்றுக்க தான்.தேவையான Out put ஐ வரையறுத்திட்டு அதுக்கேற்ற மாதிரி கோடிங் எழுதினா சரி" என்று ஒரே போடாக போட்டு விட்டான். பாவம் IT அப்பாவி. இதுவரை நாமாக கேட்டாலும் இவனுக்கு முன்னால் தனது வேலை சம்மந்தமாக பேச மறுக்கிறான். இந்த அட்டகாசம் இதோடு நிற்கவில்லை. சில நாட்களின் பின்னர் ஒரு நண்பன் ஒருவன் சிங்கபுரியில் சிறிய சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொண்ட விடயத்தை குழுவாக ஆராய்ந்து கொண்டிருந்த போது "சிங்கப்பூர் சட்டத்தில் வெளிநாட்டு தனி நபருக்கான உரிமை என்ற பகுதியே கிடையாது" என்று குண்டை கொழுத்தி இவன் போட வாதம் சூடு பிடித்தது. இபிகோ 335 , 336 என்று பேசாத குறையாக விளக்கம் கொடுத்து "அட இவனுக்கு சட்டமும் தெரியுமா?" என்று எண்ண வைத்து விட்டான். அடுத்த நாள் இன்னொரு வாதம். இந்த முறை மருத்துவம். இதிலும் நம்ம ஆள் சத்திர சிகிச்சை நிபுணர் ரேஞ்சுக்கு அசத்தி விட்டான்.

மேலோட்டமாக பார்த்தால் சகலகலா வல்லவன் என்ற எண்ணம் ஏற்படுமளவுக்கு இருக்கும் அவனது பேச்சு. கூர்ந்து அவதானித்தால் எதுவுமே இருக்காது. உதாரணத்துக்கு நீங்கள் நியூசிலாந்து நல்லின கறவை மாடு பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது முதலாம் ஆண்டு படிக்கும் சிறு பிள்ளை குறுக்கிட்டு "பசு பால் தரும், பசுவிற்கு நான்கு கால் உண்டு, பசு புல் தின்னும், பசு கன்று ஈனும், பசுவின் சாணம் எருவாக பயன்படும்" என்று சொல்வது போலத்தான் பேச்சின் உள்ளீடு இருக்கும். இதன் பின்னணி குறித்து ஆராய வெளிக்கிட்ட போது தான் அவனுக்கு புதிதாக காதலி கிடைத்திருப்பது தெரியவந்தது. கோவேறு கழுதை குதிரையாகி கொம்பு வச்சு அலைவதன் மர்மம் விளங்கி விட்டது. அடுத்த வாரம் நானும் நண்பர்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தபடி அவன் வரும் நேரத்தில் இந்தியா செவ்வாயை நோக்கி அனுப்பிய மாங்கல்யான் பற்றி வலிந்து பேச்சை ஆரம்பித்தோம். வலை விரித்திருப்பது தெரியாமல் பயல் செருமலோடு கருத்து சொல்ல ஆரம்பித்தான்.

"எல்லாம் நீயூட்டன்ட தேர்ட் லோ தான்டா, செவ்வாய்க்கு கிட்ட போகேக்க தான் அடிபட சான்ஸ் இருக்கு"

"பெண் நண்பி கிடைத்தால் தன்னம்பிக்கை கூடும் என்பது இதைத்தானா?. அப்படி என்றால் எனக்கு நண்பியே தேவையில்லை.ஏனண்டா எனக்கு தேவையை விட அதிகமா தன்னம்பிக்கை இருக்கு.அவ்வ்வ்வ்வ்"

     ......................................................................................................

மறுபடி சட்டை கிழிந்த கதைக்கு வருகிறேன். 2011 ஆம் ஆண்டில் ஒரு நாள். நானும் நண்பர்களும் உண்வருந்திக்கொண்டிருந்த மேசைக்கு அருகே கவர்ச்சியான மலேசிய கட்டழகி . கூடவே ஒரு நாற்பது வயதுகளை தாண்டிய முதிர்ந்த பெண். கட்டழகி மார்பில் வரைந்திருந்த டாட்டூவில் பாதி வெளியே எட்டிப்பார்க்கும் படி உடை அணிந்திருந்தாள். மற்றவன் என்றால் பார்த்தமா ரசித்தமா என்று போயிருப்பான். எதையும் ஆராய்ந்து பார்க்கும் நமக்கு முழு டாட்டூ உருவம் என்னவாயிருக்கும் என்பதை அறிய வேண்டுமென்ற அவா ஏற்பட்டு விட்டது.ஒருவன் வண்ணாத்து பூச்சி என்றான். இன்னொருவன் நட்டுவக்காலி என்றான். இல்லையில்லை இரட்டை இலை என்றேன் நான். சந்தேகத்தை கேட்க நேரடியாக அவளிடமே கேட்பது என்று முடிவானது. கேட்பதற்கு நெஞ்சின் துணிவும், குளறாத நாவும் உள்ள ஒரு ஆண் மகன் வேண்டுமே?. நான் அடுத்த நொடி கட்டழகி மேசையருகே நின்றேன்.

"உங்களது டாட்டூ அருமை. என்ன வரைந்திருக்கிறீர்கள் அதில்?"

பல ஆங்கில தூசணங்களை கட்டுக்கட்டாக கட்டழகி வீசினார்.

" மிக்க நன்றி. இவ்வளவையுமா எழுதி வைத்திருக்கிறீர்கள்?"

பதிலைக்கேட்ட கட்டழகி காட்டேரியாக மாறிப்போனார். நான் ஒரே ஓட்டமாய் ஓடி வந்துவிட்டேன். நண்பர்கள் வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்கள். இப்போது எல்லோர் முகத்திலும் ஒரு ஏக்கம். அந்த டாட்டூவிலிருப்பதை அறியாமலே போய் விடுமா?.  இந்த நேரத்தில்தான் அது வரை அமைதியாகவிருந்த ஹீரோ அலியப்பா அறிமுகமாகிறார்.

"கட்டழகியை இவன் கடுப்பாக்கிட்டான். அதாலை கூடவிருக்கும் ஆன்ரிக்கு கண்ணி வைக்கப்போகிறேன். அவளிடம் கேட்டாலும் சொல்லுவாள் தானே?"

அடுத்த அரை மணித்தியாலங்கள் அலியப்பா அன்ரியை நோக்குவதும் ஆன்ரி திரும்பவும் நோக்குவதாய் கழிந்தது.

"எப்படியும் தலை ஆன்ரியை மடக்கிடும். ஆன்ரிட போன் நம்பரை வாங்கி கதையை போட்டு கட்டழகிட நம்பர வாங்கி அவளையும் கவிக்க போகுது"

சிரிப்பு ரவுடி தலையை உசுப்பேத்திக்கொண்டிந்த போது தான் மஞ்சள் நிற தலை மயிரோடு கொடூரமான வில்லன் போல ஒரு மலேசியாக்காரன் அதிரடியாக அறிமுகமானான்.

"டேய் என்ர மனுசியை பார்த்தது எவன்டா?"

இதற்குப் பிறகு நடந்ததை சொன்னால் சட்டை கிழிந்த கதை ஆபாசமாகிவிடும்.
          ...........................................................................................................................

மூன்று வருடங்களுக்குப்பிறகு அதே சிங்கபுரியில் அதே நண்பர்களோடு மீளவும் ஒரு ஆனந்தமான சனிக்கிழமை இரவு. தலைவர் அலியப்பா ஆரம்பித்தார்.

"இப்பெல்லாம் காய்ஞ்ச மாடு கம்பில விழுந்தது போல அலையுறாங்கள் பெடியள். கிழவி கிடைச்சாக்கூட காணும் என்று திரியுறாங்கள்"

"அப்பவே மலேசியா கிழவியை மடக்க முயற்சி செய்த நீ இதை சொல்லக்கூடாது"

நான் ஒரே போடாக போட்டு தலையை அமத்த முயற்சி செய்தேன்.

அலியப்பா அசரவில்லை. அமைதியாக சுற்றும் முற்றும் பார்த்தார். சபையில் அச்சம்பவம் பற்றியே அறிந்திராத புதியவர்கள் நான்கு பேர் இருந்தனர். நிபந்தனையற்ற ஆதரவு வழங்க சிரிப்பு ரவுடி இருந்தார். அதை விட மாங்கல்யான் புகழ் நண்பரும் பக்க பலமாக இருந்தார்.

"மலேசிய ஆன்ரிக்கு நூல் விட்டு அவளின்ர புருசனட்ட அடிவாங்க பார்த்தது நீ தான். என்ன கதையை மாத்துறியா?"

அதன் பிறகு நான் வைத்த வாதம் எதுவும் எடுபடவில்லை. சில தருணங்களில் குறுக்குக் கேள்விகள் கேட்டு அலியப்பாவை சற்று ஆட்டம் காண வைத்த பொழுதுகளில் எல்லாம் "மாங்கல்யான்" குதித்து என்னை தாக்க ஆரம்பித்தான். என் மீது என்ன கடுப்போ?.  தாக்குப்பிடிக்க முடியாமல் உறங்கச்சென்றுவிட்டேன். அது தான் நான் செய்த மிகப்பெரும் வரலாற்றுத்தவறு. இரவிரவாக ஒரு போத்திலோடு அந்த வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டார்கள்.

         .....................................................................................................

சிங்கபுரியில் ஒரு நாள் ஞாயிறுக்கிழமை. ஊரிலிருந்து புதிதாக வந்திருந்த ஒருவனோடு MRT இல் போய்கொண்டிருந்தேன். எனக்கு அருகே ஒரு 50 வயதை தாண்டிய பெண்மணி வந்து இடப்பக்கமாக அமர வலப்பக்கமாக இருந்தவன் முழங்கையால் விலாவில் இடித்து விட்டு காதில் கிசுகிசுத்தான்.

"மடக்குங்கோ! மடக்குங்கோ"

"எதை?"

"பக்கத்த இருக்கிற ஆன்ரியைத்தான்"

"கறுமம். இதையா?"

"சும்மா நடிக்காதையுங்கோ. ஆன்ரிமார் மேல உங்களுக்கு பிளான் எண்ட விசயம் ஊருக்கே தெரியும்"

அவ்வ்வ். சண்டையில் சட்டை கிழிந்தால் நியாயம். சண்டையே இல்லாமல் சட்டையை கிழித்து கழுசானை கழற்றினால் நான் என்ன செய்வேன்?


ஜிம் கதைகள்

ஜிம் கதைகளை ஆரம்பிக்க முதல் ஒரு ஜென்கதையை சொல்லிவிட்டு வருகிறேன்.ஜென்கதைக்கும் ஜிம்முக்கும் எந்த தொடர்பும் இல்லாத போதிலும் இந்த ஜென்கதையே ஜிம்மில் நடந்தது தான் என்பதால் சம்மந்தமுடையதாகிறது.  முன்னொரு காலத்தில் குன்றின் உச்சியில் இருந்த ஒரு குருவானவர் பலவீனமான உடல்வாகு உள்ளவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். அவரது வலுவூட்டல் நிலையத்துக்கு நடைபிணமாக வந்தவர்களெல்லாம் சில மாதங்களில் பயில்வான்களாக திரும்பிப்போனார்கள். குருவானவர் தன்னிடம் வந்த மாணவர்களுக்கு மரக்குற்றிகளாலும்,பாறைகளாலும் செய்யப்பட்ட பழுக்களை தூக்க வைத்து பயிற்சியளிப்பார்.நேரம் தவறாமல் நிறை உணவு அளிப்பார்.ஆனாலும் அவரிடம் இருந்த ஒரு மாணவன் மட்டும் எவ்வளவு பயிற்சி,உணவு அளித்த போதிலும் தேறாமலே இருந்தான்.அவனது உடல் நாளுக்கு நாள் மெலிந்து நடமாடும் எலும்புக்கூடு போல் ஆகிக்கொண்டிருந்தது. இதைக் கண்டு பரிதாபமடைந்த குரு தனது தவவலிமையால் அவனது உடலை ஹாலிவூட் நடிகர் ஆர்னல்ட் சுவாசினேக்கர் போல கட்டுமஸ்தாக மாற்றி வீடு செல்ல அனுப்பிவைத்தார்.

வீட்டுக்கு போனவனை பார்த்த பெற்றோர் கதவை திறக்க மறுத்தார்கள்.மகன் உருவில் அரக்கன் வந்திருப்பதாக கூச்சல் போட்டு ஊரைக்கூட்டினார்கள். பயந்து போன அவன்  ஒரே ஓட்டமாய் குருவிடம் வந்து சேர்ந்தான்.நடந்ததை கேட்ட குரு இந்த முறை அவனை வாரணம் ஆயிரம் சூரியா போல ஆறு பை உடம்போடு மாற்றிவிட்டு செல்லும் படி பணித்தார். அவனது புதிய தோற்றத்தை கண்ட பெற்றோர் அளவில்லா மகிழ்வுற்றார்கள். அவனது மனைவியும் தனது கணவனின் சுந்தர வடிவைக்கண்டு மிகைப்பெருமிதம் அடைந்தாள். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் அவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கின.அவனுக்கு பிற பெண்களோடு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த மனைவி எந்நேரமும் அவனை திட்டித்தீர்க்க தொடங்கினாள்.

ஒரு கட்டத்துக்குமேல் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியாத அவன் மீண்டும் குருவிடம் அவன் சென்றான். சுந்தர ரூபம் வேண்டாம் எனக்கு பழைய உடம்பே போதும் என்று இறைஞ்சத்தொடங்கினான். அவனை பழையபடி ஆக்கிய குருவானவர் சுற்றியிருந்த மாணவர்களிடம் முக்கியமான வாழ்க்கை தத்துவம் ஒன்றை இச்சம்பவத்தோடு தொடர்புபடுத்தி சொல்ல விரும்பி "இவனது கதை மூலம் நீங்கள் உணர்வது என்னவென்றால் இயற்கையாக கடவுள் அளித்த தோற்றமே மேலானது என்பதாகும்" என்று சொல்லிவிட்டு தியானத்தில் ஆழலானார். கடுப்பான மாணவர்கள் "அப்ப என்ன மயிருக்கு இதுகளை இவ்வளவு நாளா தூக்குறம்" என்றபடி கையிலிருந்த உடற்பயிற்சி நிறைகளை ஆசான் தலையில் போட்டுவிட்டு சென்று விட்டார்கள். தலையில் பலமாக அடிபட்ட ஆசான் சித்தசுவாதீனமுற்று பரிதாபமாக சிலகாலத்தின் பின்னர் இறந்து போனார்.


தகுதியில்லாத மாணவர்களை வைத்திருக்கும் ஆசானுக்கு அவல முடிவேயேற்படும் என்பதற்க்கு மேற்சொன்ன ஜென் கதை ஒரு நல்ல உதாரணமாகும்.இங்கே ஜென் குருவின் தலையில் கல்லை போட்ட அளவுக்கு இல்லாவிட்டாலும் கால் மீது வெயிட்டை போட்ட அளவுக்காவது ஜிம் மாணவர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். அடியேன் பத்து வருடமாக ஜிம்முக்கு போவதாக பலமாக அறிக்கை விட்டு திரிவதாலும், 6 பக் உள்ளதாக ஊரைப்பேய்க்காட்டி வைத்திருப்பதாலும் அடிக்கடி மாணவர்கள் வந்து குருவாக ஆட்கொண்டு அருளும்படி இறைஞ்சும் பாக்கியம் அமையப்பெற்றவன் ஆவேன் என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும். அப்படி இதுவரை தானா வந்து சிக்கிய மாணவர்கள் எண்ணிக்கை எப்படியும் இருபதை தாண்டும். சிலர் ஆறு பை வயிறு கேட்டு வந்து மாட்டினார்கள். இன்னும் சிலர் உருக்கு உடம்பு வேண்டுமென வந்து உருக்குலைந்தார்கள். ஆயினும் வண்டி குறைக்கும் வழி கேட்டு வந்து விளக்கில் விழுந்த வண்டாக சின்னாபின்னப்பட்டோர் தொகைதான் அதிகம்.


எனக்கு வாய்த்த ஜிம் மாணவர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். சிலர் கூச்சசுபாவம் மிக்கவர்கள். ஜிம்முக்கு வரும் முதல் நாளில் அங்கே அகன்ற தேக்கு மரம் போண்ற தோள்களோடும் அனகொண்டாவையொத்த திரண்ட புயங்களோடும் உலாவும் மாமல்லர்கள் தூக்கும் பிரமாண்ட நிறைகளை கண்டு அஞ்சி,தம்மால் சிறிய நிறைகளையே தூக்க முடிவதையிட்டு வெட்கி ஒதுங்க நினைப்பவர்கள். ஊக்கமும்,நோக்கமும் இவர்களுக்கு வரவைக்க குரு அதிகம் கஸ்டப்படவேண்டியிருக்கும். அடுத்த வகை இதற்கு எதிரானவர்கள். குருவானவர் 50 கிலோ அளவுள்ள நிறைகளை தூக்கி காட்டினால் 55 கிலோ போட்டு மூத்திரப்பை வெடிக்குமளவுக்கு முக்கி முதல்நாளே குருவை மிஞ்சிய சிஸ்யனாக முயல்பவர்கள். ஜிம்மில் அருகே ஊக்க மருந்துகளை சாப்பிட்டு தூணுக்குதவாத முருக்குப்போல் பெருத்திருக்கும் மாமல்லர்கள் வந்தால் குருவை ஒரம் கட்டி வைத்துவிட்டு கைபெருக்க,கால் பெருக்க மல்லர்களிடம் அறிவுரை கேட்க விளைபவர்களும் இவர்கள் தான்.


ஜிம்முக்கு போகிறேன்,ஆறு பை வயிறுக்கு முயற்சி செய்கிறேன்,டயட்டில இருக்கிறேன் என்று யாழ்ப்பாணத்திலிருக்கும் சாதாரண தரம் தாண்டாத பெடியங்களே கிளம்பியிருக்கும் காலம் இது.சினிமா அவ்வளவு தூரம் ஆறு பக் ஆசையை பெடியள் மனதில் ஊற்றிவிட்டது.ஆனால் நான் ஜிம்முக்கு போன காலத்தில் சூரியா கூட அரிந்தபலகை பாடியோடுதான் இருந்தார். பல்கலைக்கு வரும்போது செத்த பல்லி போல இருந்த நான் ஜிம்முக்கு போக ஆரம்பித்ததும் மெதுவாகவும் உறுதியாகவும் தேறி வருவதையும் கண்ட ஒரு நண்பன் என்னை அணுகினான். இது நடந்தது 2005 ஆம் ஆண்டில். நானாவது பரவாயில்லை பல்லிபோல இருந்தேன். அவன் நிலை மிகவும் கவலைக்கிடம். பெருத்த தலையும் சுருங்கிய உடம்புமாக ஏலியன் போல இருந்தான்.

"மச்சான் ஒரு பத்து கிலோ ஏத்தினா காணுமடா. என்ர முகவெட்டுக்கு நல்ல ஸ்மார்ட்டா இருப்பேன்"

சிரிப்பு வந்தாலும் எனக்கு அவனது தன்னம்பிக்கை பிடித்திருந்தது. இரண்டு பக்கமும் பத்து பத்து கிலோ நிறைகளை கொழுவிவிட்டு barbell ஐ அவனது தோளில் தூக்கிவைத்துவிட்டேன்.

"பத்து தரம் இருந்து எழும்பு.அதையே நான் நிப்பாட்ட சொல்லுற வரை செய்.முடிஞ்சாப்பிறகு "நிசாந்த" கடையில பால் போத்தில் ஒண்டு வாங்கி குடி.மூண்டு மாசத்தில முரட்டுத்தனமா இருப்பாய்"

நான் சொன்னதை நம்பி முக்கி முக்கி அவ்வளவும் செய்தான். "நிசாந்த" கடையில் ஒன்றுக்கு இரண்டு பால் போத்திலாக குடித்தான். அற்றைக்கு பிறகு அவனுக்கு மூன்று நாளா விடாமல் வயித்தால அடித்தது. என்னை தூசணத்தில் திட்டித்தீர்த்தபடி அவன் படுக்கைக்கும் கழிவறைக்குமாய் ஓடித்திரிந்து பட்ட அவலம் இன்றும் நினைவில் இருக்கிறது. எனது முதல்ச்சீடன் முதலும் இறுதியுமாய் ஜிம்முக்கு வந்தது அன்றுதான். அவன் இன்று வரை மழைக்கு ஒதுங்க கூட ஜிம்பக்கம் போவதில்லை. அதே நேரத்தில்த்தான் இன்னொரு நண்பன் கட்டுமஸ்தான ஆண்மகனாக ஆக வேண்டுமென்ற பேரவாவில் புரோட்டின் மாவை அளவுக்கதிகமாக உண்கொண்டு மருத்துவமனையில் படுத்த சம்பவமும் நடந்தது. இச்சம்பவங்களின் பிறகு பிறகு நான் மிகவும் அவதானமாக இருந்தேன். ஜிம் குருவாக இருப்பதற்க்கு சில காலம் இரும்பு நிறைகளை தூக்கியிருக்கிறோம் என்ற தகுதி மட்டும் போதாது. ஆழ்ந்த அறிவு வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன்.


பிறகு இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. கிழமையில் 5 நாட்கள் ஜிம்முக்கு போனதும் உண்டு.வாரணம் ஆயிரம் படம் வெளியாகிய நேரம் அது. சும்மா வீட்டில படுத்திருந்த ஓணான் எல்லாம் நாலைஞ்சு தண்டால் எடுத்துவிட்டு முகநூலில் போட்டோ போடுமளவுக்கு சிக்ஸ் பக் பனி பரவிப்போய் இருந்தது. மார்கழி மாத குளிரில் லண்டன் விறைத்துப்போய் இருக்க நானும் நண்பன் சேகரும் நான்கு மாதத்தின் பின்னர் ஆறு பக்கோடு முகநூலில் போட்டோ போடுவதாக சபதம் எடுத்துக்கொண்டோம்.நாட்கள் உருண்டன. அவித்த கோழியும் பழங்களும் தின்று வாழப்பழகி விட்டிருந்தோம். ஒரு கட்டத்தில் இனியும் சோறு சாப்பிடாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்த போது சேகர் சொன்னான்.

"மச்சான் என்ர வயித்தில படிக்கட்டு வாற அறிகுறியே தெரியேலை.உனக்கு கிட்டதட்ட வந்திட்டுது. நீ இனி போட்டோவை எடுத்து போடு"

தோழன் பேச்சை மீற முடியுமா?. முகநூலில் போட்டோ போட்டு அடுத்த நாள் தெருவில் எதிர்ப்பட்ட நண்பர்கள் சைக்கிள் ரயருக்கு காத்து பார்ப்பது போல வயிற்றை அழுத்திப் பார்த்தார்கள். சிலர் பகிரங்க இடங்களில் ரிசேர்ட்டை தூக்கி பார்த்து நெளியவைத்தார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் இன்னொரு நண்பர்கள் குழு நள்ளிரவில் வேலையால் வந்து கொண்டிருந்த என்னை வீதியில் வழிமறித்து சேர்ட்டை கழட்டி பார்த்து உறுதிப்படுத்திவிட்டு ஆதாரத்துக்கு போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு போனார்கள். இந்த பரபரப்பு ஓய முதல் தங்களை மாணவர்களாக சேர்க்கும் படி அழைப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டன. அழைத்த பேர்வழிகளில் குறிப்பிடத்தக்கவர் நண்பர் அலிபாய். நண்பரைப்பற்றி ஏற்கெனவே நன்கறிந்திருந்த படியால் பல நிபந்தனைகளை முன்னெச்சரிக்கையாக முன்வைத்தேன். "எதிர்த்து கதைக்கக்கூடாது, ஜிம்முக்கு நேரம் தவறக்கூடாது, நண்பன் தானே என்ற உரிமையில் தகாத வார்த்தையில் திட்டக்கூடாது, சோறு சாப்பிடக்கூடாது" என்று ஆரம்பித்து வரிசையாக  அடுக்கினேன். ஆனைக்கும் அடிபணியாத அலிபாய் கூட ஆறுபக் ஆசைக்காக அன்று அடிபணிந்து பேசியது ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் ஆச்சரியம் நீடிக்கவில்லை. அலிபாய் மூன்றாம் நாள் பாய்ந்துவிட்டார்.

" உன்ர உடம்பை விட என்ர நல்லாத்தானே இருக்கு. பிறகு எதுக்கு நீ சொல்லுறத நான் கேட்க வேணும்?".

நான் அசரவில்லை. எதிர்பார்த்ததுதான். மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுள்ள நான் அலிபாய் தொலைபேசியில் ஜிம் மாணவனாக தன்னை சேர்க்கும் படி அழைத்த போதே ஒலிப்பதிவு செய்திருந்தேன். அதை முகநூலில் பதிவேற்றி நாறடித்துவிட்டேன். கொலைவெறி கொண்ட அலிபாய் "என்னை கண்ட இடத்தில் அடிப்பேன்" என்று எச்சரிக்கை விட்டதோடில்லாமல் எனது வீட்டுக்கும் தாக்குதல் நடத்த வந்திருந்தார். தெய்வாதீனமாக வெளியே சென்றிருந்ததால் மயிரிழையில் உயிர்தப்பினேன். அலிபாய் போனாலும் சிலநாட்களுக்குள் எனக்கு அரை டசினுக்கும் குறையாத அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான நல்ல சீடர்கள் கிடைத்தார்கள்.

சிலமாதங்களுக்கு எல்லாம் நல்ல படியாய் போய்க்கொண்டிருந்தது. ஜிம்மில் அழகு பெண்களோடு கடலை வறுத்து கவர்ச்சி கன்னிகளை ஏக்கப்பார்வை பார்த்தபடி சீடர்களுக்கு நல்லாசானாய் வாழ்ந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அமைதியாய் இருந்த குளத்தில் நீர் யானை குதித்தது போல ஒரு சீடன் வந்தான். பரம சாதுவாய் தென்பட்ட அவன் உண்மையில் ஒரு படுபயங்கரவாதி என்பது அத்தருணத்தில் தெரியாது. ஜிம்மில் சேருவதற்கான பதிவுகளை எல்லாம் முடித்தபின் போதனையை ஆரம்பிக்கும் எண்ணத்தோடு ஒரு பயிற்சிபொறியருகே கூட்டிச்சென்றேன்.

"இதை செய்தால் நெஞ்சு வலுவாகும்"
"ஐயா! எனக்கு நெஞ்சு வலு தேவையில்லை"

ஒரே வயதுடையதாய் இருந்தாலும் "ஐயா" என்று விழிக்கிறானே! என்ன ஒரு பண்பு,பணிவு " எனக்குள் வியந்து கொண்டேன். அடுத்த பொறிக்கு நகர்ந்தேன்.

"இதில் பயிற்சி செய்தால் கரங்கள் பலமடையும்"
"ஐயா! எனக்கு அது தேவையில்லை"

ஆசானுக்கு அழகு பொறுமை.கடுப்பை அடக்கிக்கொண்டு நகர்ந்தேன்.எட்டு பொறிகள் தாண்டிவிட்டன. கடைசியாக கண்ணில் பட்டது "AB Crunch".

"இதில பயிற்சி செய்து பாருங்கோ. மூண்டு மாசத்தில் உங்கட வண்டி படிக்கட்டா மாறி இருக்கும்"

"ஐயா! எனக்கு படிக்கட்டும் வேண்டாம்.பணியாரமும் வேண்டாம்"

"அப்ப என்னதான் உங்களுக்கு வேணும்?"

"ஐயா! எனக்கு Fat burn  பண்ணோணும்"

"அதுக்கு உங்கள தலைகீழா கட்டி தொங்க விட்டிட்டு கீழ நெருப்பை கொளுத்துறதுதான் ஒரே வழி"

அந்த சீடன் சீற்றமடைந்து வெளியேறிப்போனான்.அத்தோடு நில்லாமல்
"இவன் நமது உடல்வாகிற்கேற்ற பயிற்சியை தராமல் தனது விருப்பை திணிக்கிறான்" என்று கருத்தையும் வெளியிட்டு பிறமாணவர்கள் மத்தியில் எனது செல்வாக்கை பெரிய அளவில் சரியவைத்தான்.அச்சீடன் ஐயா என்று விழிப்பதே ஒரு வகையான நக்கல்தான் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டபோது தலையில் அடித்து கொண்டேன்.

தசாப்தங்களை தாண்டியும் நீளும் எனது ஜிம் வாழ்க்கையில் இப்போதுதான் 5 வருட இடைவெளியுள்ள வயது மாணவர்களை சந்திக்க தொடங்கியுள்ளேன். புதிய தலைமுறையை சேர்ந்த அவர்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு இருக்கிறார்கள். நல்ல விடயம்தான். ஆனால் பல இடங்களில் அது தகுதிக்கு மீறியதாக இருக்கிறது. என்னை ஆட்டம் காணவைத்த பல மாணவர்களில் சிலரை மேலுள்ள பத்திகளில் விபரித்தேன். ஆனால் அவர்கள் இந்த புதிய தலைமுறை மாணவரின் கால்தூசிக்கு பெறமாட்டார்கள். சென்ற வாரம் சிங்கபுரியில் உடம்பை குறைக்க விரும்பிய ஒரு புதிய தலைமுறை மாணவனோடு ஜிம்முக்கு சென்றிருந்த போது துன்பியல் நிகழ்வு நடந்தது. வயதில் இளையவன் என்பதால் அவனுக்கு அதிக அக்கறை எடுத்து சொல்லித்தரவேண்டும் என்ற மனநிலையில் ஜிம்முக்குள் போகும் போது இருந்தேன். அவனை அரை மணித்தியாலம் Treadmill இல் ஓடவிட்ட பிறகு Lateral pull-down Machine அருகே கூட்டிச்சென்றேன்.

"டேய் இப்ப நான் செய்யுறத கவனமா பார்"

மூன்று தடவை இழுத்திருப்பேன்.

"பிழை,பிழை நிப்பாட்டுங்கோ,கழுத்து நேர நிக்கோணும்.முதுகை வேற வளைக்கிறியள்.பின்னால சாயக்கூடாது"

அதிர்ந்து போன நான் எழுந்துவிட்டேன்.

"டேய்! முன்ன பின்ன ஜிம்முக்கு போய் இருக்கிறியா?"

"இல்லை"

"நான் 10 வருசமா இந்த மிசின பாவிக்கிறன். எது சரி பிழை எண்டு எனக்கு தெரியும்"

"நீங்கள் பத்து வருசமா பிழையா செய்து இருக்கிறியள். மிசினில இருக்கிற விளக்கபடத்த பாருங்கோ "

"ஓ அப்ப நீ விளக்கப்படத்த பார்த்தே எல்லாத்தையும் செய். எல்லாம் தெரிஞ்ச உனக்கு எதுக்கு விளக்கம்"

பத்து நிமிடத்தில் எனது பத்துவருட ஜிம் அனுபவத்தை பல் இளிக்க வைத்துவிட்டானே படுபாவி என்று புறுபுறுத்தபடி வீட்டுக்கு வந்து முதல்ப்பந்தியிலுள்ள மொக்கை ஜென்கதையை எழுத ஆரம்பித்தேன். இனியும் இளைய பேர்வழிகளுக்கு ஆசானாக ஆசைப்பட்டால் பரமார்த்த குருவும் சீடர்களுமாய் மீன் பிடித்த கதை போல என்கதை ஆகிவிடும் அபாயம் இருப்பது புரிகிறது. ஓடி விளையாடி, சண்டை பிடித்து வெயிலிலும் புழுதியிலும் வளர்ந்த எங்கள் தலைமுறையை ஐபாட்டும் ,அங்றி போர்ட்டும் விளையாடி வளர்ந்த புதிய தலைமுறை மிஞ்ச முயல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எமது தலைமுறைக்கும் எம்மை பார்த்து புறுபுறுத்த பெரிசுகளுக்கும் இடையில் குறைந்தது 30 வருடங்களாவது வயது வித்தியாசம் இருந்தது. நமக்கு அவ்வளவு பெரிய இடைவெளி கிடைக்கவில்லை அவ்வளவுதான்.


மன்மதன்அந்த நண்பர் வெளிப்படையானவர் அல்ல.உள்ளொன்று வைத்து புறமொன்று செப்புபவர்.ஆனால் ஒரே ஒரு பலவீனம் அவரிடம் இருந்தது. தண்ணியைப்போட்டால் திறந்த புத்தகம் ஆகிவிடுவார்.உள்ளுள்ள அனைத்தையும் வெளியே துப்பிவிடுவார்.சிங்கபுரியில் சிலநாள் முன்பாக உள்ளே போனதண்ணி அவரை திறந்த புத்தகம் ஆக்கிய போது பல அரிய தகவல்கள் கிடைத்தன.

நண்பர்:  மச்சான்! சிங்கப்பூர் கொம்பனியளுக்கு A1,A2,A3,B1,B2 என தரப்படுத்தல்கள் இருக்கிறது போல பிகர்களுக்கும் தரப்படுத்தல் இருக்கு.

நிருபர்: ஓ! புதுசா இருக்கே இந்த விசயம்.

நண்பர்:  இந்தோ பிகரை வச்சிருந்த அது "கிறேட் 01. ஆக அடிமட்டம். பிலிப்பைன்ஸ் தரம் 02.மலேசியாக்காரியள வச்சிருக்கிறவன் தரம் 03க்க வருவான்.சிங்கபுரி பெண் என்றால் தரம் 04.ரஸ்ய,கிழக்கு ஐரோப்பிய பெண்மணிகள் 05.உச்ச கிறேடிங் அமெரிக்க,பிரித்தானிய,பிரெஞ்சு பெண்களை வச்சிருக்கிறவங்களுக்கு குடுக்கலாம்.அது தான் தரம் 06.

நிருபர்: அப்ப நீ இப்ப எந்த கிறேட்டில இருக்கிறாய்?

நண்பர்: கிறேட் 03 தாண்டிட்டன்.நாலுக்கை இப்பதான் வந்திருக்கிறன்.இந்த வருசத்துக்குள்ள தரம் 05 க்க வரோணும் என்றதுதான் என்ர நோக்கம்.

நிருபர்: ஊக்கமும் நோக்கமும் இருந்தா நீ தரம் ஆறுக்கே போகலாம் மச்சான்.
அப்ப நம்ம ஊர் பெட்டையள கட்டுறவனுக்கு என்ன தரம் குடுக்கலாம்?

நண்பர்: அவங்களுக்கு எல்லாம் பூச்சியத்துக்கு கூட லாயக்கில்லாதவங்கள்.அவங்கள் பற்றி கதைச்சா அடிச்ச மப்பு இறங்கிடும்.

நண்பர் தரம் ஆறையும் தாண்டி வளர கனாக்காலம் வாழ்த்துகிறது.நண்பரது முகவெட்டுக்கும்,முடிவெட்டுக்கும் அண்ணாந்து பார்த்தால் அமீர்கான் போலவே இருப்பார்.அவருக்கு இதெல்லாம் பெரிய விடயமாய் இருக்காது.


இந்த பதிவை முடிக்க முதல் ஜெர்மானிய மன்மதன் ஒருவரைப்பற்றியும் சொல்லியாகவேண்டும்.அவர் பிறந்தது யாழ்ப்பாணத்தின் குக்கிராமம் ஒன்றில்.சோடாப்புட்டி கண்ணாடியோடு பார்த்தால் செல்வராகவன் பட "சைக்கோ" நாயகன் போலவே இருப்பார்.நாடு திரும்பிய அவர் சமீபத்தில் நல்லூர் கோவிலில் பாரியார் குடும்பம் சகிதம் உலாவியிருக்கிறார். கூடப்படிச்ச பாசத்தில் நண்பர் ஒருவர் புன்னகையோடு ஓடிப்போய் "எப்ப மச்சான் வந்தனி?" என்று கேட்க "I just came from Germany" என்று பதில் வந்திருக்கிறது.ஆங்கிலம் பேசிட்டு திடீரென தமிழுக்கு மாற கஸ்டப்படுறான் போல என்று மனதை திடப்படுத்து பேச்சை தொடர்ந்த நண்பருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.மன்மதன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசியிருக்கிறார்.அதை கூடவந்த பாரியாரும் குடும்பத்தினரும் பெருமை பொங்க பார்த்துக்கொண்டு நின்ற விதம் வேறு நண்பரை கொலைவெறிகொள்ளச்செய்திருக்கிறது.
வான்கோழி மயில் போல ஆடினாலும் மயிலாக முடியுமா?.உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்று நண்பர் இன்று வரை புலம்பிக்கொண்டு திரிவதாக கேள்வி.உண்மைதான்.அற்பன் வெளிநாடு போய் வந்தால் அர்த்த ராத்திரியில் ஆங்கிலம் கதைப்பான்.