"அப்பாஸ் அண்ணை வாறார்,அப்பாஸ் அண்ணை வாறார்" எண்டு பலரும் பரபரத்திருக்க கட்டை கால்ச்சட்டையோடு படுவேகமாக சைக்கிளில் வந்து யாழ் இந்து மைதான மதிலருகே பெடியள் மத்தியில் இறங்கிய அந்த பேர்வழியை பார்க்கும் போது "கடும் சுறுசுறுப்பான ஆள் போல" என்ற எண்ணம் தோண்றுவதை தடுக்க முடியவில்லை.அது நடிகர் அப்பாஸ் மிக பிரபலமாக இருந்த நேரம்.அப்பாஸ் போலவே முகச்சாயலோடு இருப்பதாக அவனை உசுப்பேத்திவிட்ட நண்பர்கள் அப்பாஸ் என்ற பெயரையும் உவந்தளித்து உயரமான பப்பாவில் ஏற்றி விட்டிருந்தார்கள்.பெண்கள் மத்தியிலும் அப்பாஸ் வாறான் எண்டால் ஒரு சலசலப்பு கிளம்புமளவுக்கு அப்பெயர் பிரபலமாகி விட்டிருந்தது.இந்நிலவரமே மிகக்கொடும் சோம்பேறியான அவனை சுறுசுறுப்பானவனாக நடக்கும்படி தூண்டிக்கொண்டிருந்தது.இவ்வாறு பள்ளி நாட்களில் எனக்கு சீனியராக இருந்த அப்பாஸ் பல்கலையில் சகதோழனாக வந்து வாய்த்தார்.


அடக்கமிகு ஆண்மகன் -
{விரிவுரையாளர் அறைவரை நீண்ட சுகாவின் மறைப்பு கமெரா}

பல்கலை ஆரம்ப நாட்களில் அத்துக்கோறளை கிழவன் வீட்டில் கமலரூபன்,தினேஸ்,லெஸ்லி,கிரிவக்சன்,ரஜீந்திரதாஸ்,சசிக்குமார் ஆகியோருடன் ஒரு வருடங்களுக்கு மேலாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலரூபன் எனும் அருமையான நண்பன் எனக்கு அறிமுகமானது அங்கே தான்.அப்பாஸ் அடிக்கடி அவிழ்த்துவிடும் கதைகள் அநேகமாக பள்ளிநாட்களில் எவரோடாவது சண்டை பிடித்தது பற்றியோ,பிகருகளை விரட்டியது பற்றியுமே இருக்கும்.அவையனைத்தையும் உண்மையென நம்பியவர்கள் அப்பாசை எவருக்கும் அஞ்சாத முரட்டு காதல் நாயகனாகவே எண்ணியிருப்பார்கள்.காதலை பற்றி போட்டுத்தாக்கினால் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" என்ற பஞ்சு டயலாக்கை எடுத்துவிட்டு முகம் சிவக்க பாய்ச்சல் தொடுக்கும் அப்பாஸ் குறித்து அனைவரும் கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம் பின்னாட்களில் தலைகீழாய் மாறிப்போயின.எமதுமட்டம் வலிந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவைகள் ஏற்பட்ட போதெல்லாம் அப்பாஸ் சிலபல காரணங்களை சொல்லி பின்வாங்க "இவன் சிங்கமல்ல,சின்னஞ்சிறு பிள்ளை பூச்சியே" என பலரும் முடிவை மாற்றிக்கொண்டார்கள்.உருவத்தில் பரவலாக இருந்தாலும் உள்ளுக்குள் சிறிய குழந்தையின் மனமே இருந்தது.குரலில் முரட்டுத்தன்மை இருந்தாலும் உள்ளுக்குள் மலர் போண்ற மென்மை அவனுள் இருந்தது.நண்பர்கள் உடல்நலம் பாதிக்கப்படும் போது உதவ ஓடி வருபவர்களில் முதலாவதாக கட்டாயம் கமலரூபன் இருப்பான்.

முள்ளுக்குள் ஈரம் -இந்த முள்ளுத்தலைக்குள் இருக்கும் ஈரம் எக்கச்சக்கம்.

கண்ணை மூடிக்கொண்டு கமலரூபன் பற்றி யோசிக்கும் போது முதலாவதா நினைவுக்கு வாறது அவனோட வண்டியும் இடைவிடா நெடும் தூக்கமும் ஓயாமல் தின்பண்டங்களை அரைத்தபடியிருக்கும் வாயும் தான்.மூன்று நேர சாப்பாடு என்பதைத்தாண்டி பின்னேர சாப்பாடு,பின்னிரவுச்சாப்பாடு என பல புதிய உணவு நுட்பங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வேலிக்கதியால் போல இருந்த எனது பாடியை பழனிப்படிக்கட்டுகளாக்க வழிகாட்டியவன்.எவ்வளவு சண்டை வந்தாலும் ,வாக்குவாதம் வந்தாலும் கமலரூபன்,சேகரன்,ரியாஸ்,சுகந்தமாறன் கூட்டணிக்குள் பிளவு ஒரு போதும் எட்டிப்பாராது.சிங்கள பெடியளோட Project செய்தா பாதுகாப்பா பாஸ் பண்ணிடலாம் எண்டு எல்லா பெடியளும் எஸ்கேப் ஆகிவிட இனவெறி பொங்கி வழிந்த விரிவுரையாளர்கள் மத்தியிலும் தன்மானச்சிங்கங்களாய் நின்று Project செய்து காட்ட அச்சாணியாய் நின்றவன் கமலரூபன்.கமலரூபனை பற்றி எழுதலாம் என முடிவெடுத்து உட்கார்ந்த போது பாற்கடலை பெட்டைப்பூனை நக்கிக்குடிக்க வெளிக்கிட்ட கதையாக போகுது என்று எனக்கு சிறிது நேரத்திலேயே விளங்கிவிட்டது.எத்தனை சம்பவங்கள்? எத்தனை நினைவலைகள்? ஒவ்வொண்றும் கனமானவை.ஒன்றுக்கு முக்கியம் கொடுத்து இன்னொன்றை எழுதாமல் விட மனது இடம் கொடுக்கவில்லை.இதனால் பிரபலங்களில் சுயவிபரம் எழுதும் வழமையான பத்திரிகை பாணியில் அப்பாஸை அடக்கிவிட விளைகிறேன்.

பெயர்-கமலரூபன்.க

ஏனைய பெயர்கள்-அப்பாஸ்,கமல்ஸ்,அரசியல்வாதி

வயசு- பதினாறு

பால்- 100% ஆம்பிளை சிங்கம்.

நிறை- ஒரு தொன்

பிடித்த உணவு- உலர் ஒடியல் (இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு இன்றளவும் குடும்பத்தினரால் விநியோகிக்கப்படுவதாய் கேள்வி)

சாதனைகள்- பல கிலோ நிறையுடைய வண்டி இருந்தும் கால்பந்தாட்ட வீரனாய் திகழ்ந்தது.மனிதனின் அதிகபட்ச நாளொன்றுக்கான உணவு உள்ளெடுக்கும் அளவுக்கான பழைய சாதனைகளை முறியடித்தமை.

வாழ்நாள் கவலை- நீண்டகாலமாக கண்ணி வைத்து மாட்ட முயன்ற முயல் தப்பியோடியது.யாழ்ப்பாணமும் தமிழ்ப்பெண்களும் என்ற தலைப்பில் சங்கம புத்தகத்தில் போடவென எழுதிய ஆய்வுக்கட்டுரையை பெடியள் போட்டுத்தாக்கி தடுத்தமை.

வாங்கிய ஆப்புக்கள்- நிழல் போல இருந்த நண்பன் காரணமாக வில்லங்க வழக்குகளை சந்தித்தது.வளைந்து கொடுக்கும் நடைமுறையை கைக்கொண்டதன் காரணமாக காட்டி சிலரால் திட்டமிடப்பட்டு சுமத்தப்பட்ட அரசியல் வாதி என்ற பட்டத்தை தவிர்க்கமுடியாமல் போனமை.

சமீபத்திய சாதனை- வாயும் வயிறுமாய் இருப்பது போலிருந்த உடம்பை உருக்கு டேஞ்சர் படிக்கட்டு போல ஆக்கியது.லண்டனின் காப்பிலி மாணவனுக்கு ஆசிரியனாகியது.

பலவீனம்- அறணை தலை போன இடத்துக்கு வால் வர முதல் நடந்தது எல்லாம் மறந்து போடுமாம்.அப்பாஸ் ஒரு இரண்டு கால் அறணை.தொலைத்த தொலைபேசிகள்,மற்றும் இதர பொருட்கள் தொகை கணக்கிலடங்காது.

பலம்- பல மொழி வித்துவம்.முன்பு மும்மொழியில் கலக்கியவர் இப்போது முந்நூறுக்கு மேல் பேசுவதாக கேள்வி.ஏனடா நாங்கள் கதவ தட்ட ஓடினனி எண்டு காவல்துறை சொய்சாபுரத்தில் வைத்து கேட்க " இஸ்ஸரா They will come தானே?" என்று கேட்ட மும்மொழிக் கேள்வியை மரணப்படுக்கையில் நினைத்தாலும் சிரிப்பு வரும்.

நினைவில் நின்றவர்கள் பகுதி நீண்டகாலமாக எழுதப்படாமல் விடுபட்டுப்போனது.படுவேகமாக மங்கிவரும் நினைவுகளின் வீரியம் குறைய முதல் அவற்றை பதிவுகளாக்கிவிட வேண்டும் என்பதால் வேலைப்பழுவின் மத்தியிலும் எழுதுவதை தொடருகிறேன்.தனிமனித கூக்குரலாக ஒரு மட்டத்தின் புளொக் இருப்பதை நான் விரும்பவில்லை.எனவே நீங்களும் உங்கள் பங்களிப்பை தரும்படி மீளவும் அழைக்கிறேன்.

கடைசியா அப்பாசின் ரேட்மார்க் டயலாக் ஒண்டு-


"நீங்கள் பங்களிச்சாலும் பிரச்சினை இல்லை,பங்களிக்காட்டியும் பிரச்சினை இல்லை,குறைநினைக்கமாட்டன்.ஆனா பங்களிச்சா நல்லது"