A Study in Sunlight






பேக்கரி ஒழுங்கைக்குள் நுழையும் போது இடதுபக்கமாக இருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தால் 221B என இலக்கமிடப்பட்ட மதகுதான் எனக்கும் ஷெர்லக் ஹோம்ஸிற்கும் பகல் வீடு.அடித்து கொளுத்தும் யாழ்ப்பாண வெயிலில் கூட அந்த இடம் குளு குளுப்பாய் இருக்கும்.தலைக்கு மேல் இலங்கை மின்சாரசபையின் மர அழிப்பையும் மீறி வியாபித்திருக்கும் ஆலமரம் குளுமைக்கு ஒரு காரணம் என்றால் பிரதான வீதியின் மறுபுறம் இருக்கும் ரியூசன் கொட்டிலில் படிக்க வந்து போகும் இளம் சிட்டுக்கள் அதற்கு இன்னொரு காரணம்.காலை ஆகாரத்தை முடித்தபின் முழு பற்றரி சார்ஜ் ஏற்றிய கலக்சி S3 யோடு இங்கே வரும் நான் "பற்றரி Low" என்று அது கத்தி கதறி அழுது தானாக நிற்கும் போதுதான் வீட்டுக்கு கிளம்ப தயாராகுவேன்.ஹோம்ஸ் அப்படியல்ல.ஒன்றுக்கு மேற்பட்ட பற்றரிகளை வைத்திருக்கும் அவர் ஒன்று முடிய இன்னொறை மாற்றிவிடுவார்.ஐந்துக்கு மேற்பட்ட பெண்களோடு சற்றேனும் ரசனைக்குறைவில்லாமல் ஒரே நேரத்தில் சட் பண்ணும் திறமையுள்ள அவர் அதே நேரம் நான் கேட்கும் கேள்விகளுக்கும் நீண்ட விபரமான விளக்கங்கள் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகிறார்.நான் இங்கே வரமுதல் அவர் இங்கே தனியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்.அடிக்கடி அவரிடம் இளம் பெடியன்களும் அரிதான சமயங்களில் முதிர்ந்த ஆண்களும் வந்து போவதை கண்டிருக்கிறேன்.அவர்கள் கொண்டுவருபவை அநேகமாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் தான்.பெண்கள் சம்பந்தபட்ட விடயங்களில் ஆழ்ந்த அறிவை கொண்டுள்ள அவர் ஒரு பெண்ணை காதலித்திருந்த போதிலும் முடிவில் அவள் லண்டன் வாசி ஒருவனை திருமணம் முடித்து போனதால் புத்தி பேதலித்து இருப்பதாக ஊரார் அப்போது பேசிக்கொள்வதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு,ஆடிக்காற்றில் ஆலமரம் போரோசையோடு இரைந்து கொண்டிருந்த நாளிலே எனது ஒருதலை காதலை இருதலை ஆக்குவது தொடர்பாக அறிவுரை கேட்க அவரிடம் வந்ததிலிருந்து எங்கள் நட்பு ஆரம்பித்தது. அன்றிலிருந்து ஒருநாள் விடாமல் இங்கே வருகிறேன்.ஷெர்லக் ஒரு முரண்பாடுகளின் மூட்டையாய் இருக்கிறார். உதாரணத்துக்கு "ஐஸ்கிரீம் உருவானது எப்படி?" என்ற வரலாற்றைக்கூட விரல் நுனியின் வைத்திருக்கும் அவருக்கு "றியோ" ஐஸ்கிறீம் கடை எங்கே இருக்கிறது என்ற விபரமே தெரியாதிருந்தது.



சில நபர்களை ஒரு வரியில் எழுதிவிட முடியும்.அரிதான சிலரை கட்டுரையாக அடக்கிவிட முடியும்.ஷெர்லக் போண்ற ஆளுமைகளை விளக்க கீழ்வருவது போண்ற வேறுபட்ட வழிகள் தேவைப்படுகின்றன.


1) இலக்கிய அறிவு- பூச்சியம்.திருவள்ளுவர் குறித்த பேச்சு எழுந்த போது "அவர் உங்களது சொந்தக்காரரா?" என்று கேட்குமளவுக்கு உள்ளது.

2) விஞ்ஞானம்- மிக குதர்க்கமாக சிந்திக்கிறார்.நியூட்டனின் விதியே பிழை என்கிறார்.தலையில் ஆப்பிள் விழுவது ஈர்ப்பு ஆகும் என்றால் தலையில் கல் விழுவது கூர்ப்புக்கு வழிவகுக்குமா? என்று மொக்கைத்தனமாக வாதிடுகிறார்.

3)வானியல்- பூச்சியத்தை விட மோசமானது.யாழ்ப்பாணத்தில் பயங்கரமாக வெயிலடித்துக்கொண்டிருந்த நாள் ஒன்றில் தனது போனை பார்த்து "இன்று இரவு கடும் பனி பொழிவு ஏற்படும்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். திடுக்கிட்ட நான் போனை வாங்கி பார்த்த போது லொகேசனாக "கனடா" தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

4)அரசியல் அறிவு-கேவலமானது.மாண்பு மிகு ஜனாதிபதி சிரித்தபடி நின்ற வடக்கின் வசந்தம் விளம்பர பலகையை பார்த்து "படத்தின்ர பெயர் நல்லாத்தான் இருக்கு.ஆனால் ஹீரோதான் காமெடியன் போல இருக்கிறான்" என்றார்.

5)சினிமா அறிவு- பிரமிக்கத்தக்கது.நடிகைகளின் பிறந்த திகதி முதல் அவர்களின் பள்ளிக்கால காதல்கள் வரை அறிந்து வைத்திருக்கிறார்.

6)வெடிப்பொருட்கள் பற்றிய அறிவு- அறவே இல்லை எனலாம்.கடைக்காரர் மிதிவெடியை சாப்பாட்டு தட்டில் வைத்த போது "மிதித்தால் வெடிக்கும் என்றால் சாப்பிட கடிக்கும் போது வெடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று சண்டைக்கு போகும் அளவுக்கு மோசமானது.

7)பெண்கள் பற்றிய அறிவு- அளவில்லாதது.ஒரு பெண்ணை பார்த்துமே அவளை எப்படி அணுகவேண்டும் என்றும் அவள் எப்படிப்பட்ட ஆணுக்கு கிடைப்பாள் என்று சொல்லிவிடுகிறார்.கூந்தலை மட்டும் வைத்து பெண்ணின் வயதை அவரால் சொல்லிவிட முடியும்.

8)விலங்குகள் பற்றிய அறிவு- கச்சிதமானது.நாய்கள் பற்றி அளவுக்கு அதிகமாக தெரியும்.கோபக்கார கடி நாய்கள் கூட அவரிடம் வாலாட்டிக்கொண்டு குழைந்து வருகின்றன.எனது செல்லப்பிராணியான "TOBY" என்னைவிட அவரிடம் மிகவும் பணிவாக நடந்துகொள்கிறது.

9)கைத்தொலைபேசி பற்றிய அறிவு- அதிசயிக்கத்தக்கது.வித்தியாசமான அப்ளிகேசன்களையெல்லாம் பாவிக்கிறார்.ஒரு தடவை எனது கையை கைத்தொலைபேசியால் ஸ்கான் பண்ணிவிட்டு "சுட்டு விரல் எலும்பில் சிறிய வெடிப்பு இருக்கிறது" என்றார்.அதிர்ந்தே போய்விட்டேன்.

10) தற்பாதுகாப்புக்கலை அறிவு - தப்பி ஓடுவதே தற்பாதுகாப்பின் அடிப்படை என்ற சொல்லை தாரகமந்திரமாக கொண்டவர்."வெற்றிகரமான ஓட்டம் என்பது பிரடியில் குதிக்கால் பட பறப்பதே ஆகும்" என அடிக்கடி சொல்லிக்கொள்வார்.

11) மதுபானங்கள் பற்றிய அறிவு - விசித்திரமானது.பியர் என்பது சாராய வகைகளை பருகும் போது கலக்குவதற்கென உருவாக்கப்பட்டது என ஆழமாக நம்புகிறார்.பலர் மறுத்துரைத்த போது மேற்சொன்ன கருத்தை மாற்ற மறுக்கிறார்.எவ்வளவு குடித்தாலும் அவருக்கு போதை ஏறுவதில்லை.



உழைக்கவிரும்பாத இளைஞர்களும்,வெளிநாட்டுப்பணத்தில் சௌகரியமான வாழ்க்கை வாழும் குடும்பஸ்தர்களும் நிரம்பிய இந்த தேசத்திலே அநேக பிரச்சினைகளுக்கு பாலியல் வறட்சித்தனமே காரணமாக இருக்கிறது.பருவ வயதுக்கு வரும் இளைய சமுதாய உறுப்பினர்களின் உணர்வுகள் கலாச்சாரம் என்ற போர்வையில் மிலேச்சத்தனமாக நசுக்கப்படுகின்றன."முகநூலில்  இளம் பெண்ணொருத்தி ஒரு படத்தை போட்டு நூறு லைக் வாங்க 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இங்கு போதுமாக இருக்கிறது"  என்று ஹோம்ஸ் அடிக்கடி சொல்லி சிரித்துக்கொள்வார்.உண்மைதான். இங்கிருக்கும் அநேக இளையவர்கள் சாதிக்கும் வேகமும் விவேகமும் ததும்பி வழியும் வயதுகளை எதிர்ப்பாலின ஈர்ப்பினால் அலைக்கழிக்கப்படுவதால் வீணடித்துவிடுகின்றனர்.



அன்றைய பொழுது வழமைக்கு மாறாக அமைதியாய் இருந்தது.தூரத்தே இருளாக கவிந்திருந்த மழை மேகங்கள் நீடித்த கோடையின் முடிவு நெருங்கி விட்டதை இயம்பிக்கொண்டிருந்தன.மதியம் நான் ஏதும் சாப்பிடவில்லை.நேற்று சாப்பிட்ட கொத்து ரொட்டி வயிற்றை முறுக்கி வன்முறை செய்வதால் உண்ணும் விருப்பு ஏற்படவில்லை. ஹோம்ஸ் உணவுப்பிரியர். வேளை தவறாமல் பேக்கரியோடு சேர்ந்திருந்த உணவகத்தில் மிதமான அளவில் சாப்பிட்டுவிடுவார். அன்று ஷெர்லக் ஹோம்ஸ் மதிய உணவை முடித்துக்கொண்டு திரும்பிய சற்றைக்கெல்லாம் ஒரு உந்துருளி வாகனத்தில் வந்த நேர்த்தியான ஆடைகள் அணிந்த மனிதன் வெதுப்பக வாசலில் நின்று கடைக்காரரிடம் வினவிக்கொண்டிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியடைந்தேன். அவரை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். முகவரியையே அல்லது தனிப்பட்ட நபரையோ விசாரிப்பதை அவரது தோரணையில் இருந்து என்னால் கணிக்க முடிந்தது.சில கணங்களின் பின்னர் அவர் கடைக்காரர் சுட்டிக்காட்டிய திசையில் இருந்த எங்களை நோக்கி நேராக நடந்து வர ஆரம்பித்தார். "Angry Bird" விளையாடிக்கொண்டிருந்த ஹோம்ஸும் இதனை கவனித்திருக்க வேண்டும்.


"அங்கே வந்து கொண்டிருக்கும் மனிதர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவருக்கு இரண்டு மகள்கள்.இளைய பெண் மட்டுமே கூட இருக்கிறாள்.அவருக்கு சமீப நாட்களாக பெரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக அது இளைய பெண் சம்பந்தமானது தான்.அவருக்கு சலரோகம் உள்ளது. உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.மனைவியோடு சண்டை பிடித்த போது கறி அகப்பையால் அடி வாங்கியதில் நெற்றியில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவரது மனைவிக்கு பயந்து சமையல் வேலைகளை எல்லாம் செய்கிறார். என்னிடம் வர அவர் விரும்பாத போதிலும் பிரச்சினையின் தீவிரம் இங்கே இழுத்துக்கொண்டு வந்திருக்கிறது"


ஷெர்லக் ஹோம்ஸ் சொல்லிக்கொண்டு போக நான் உறைந்து போயிருந்தேன்.அவர் இப்போது ஹோம்ஸ் உடன் பேசத்தொடங்கியிருந்தார்.


"எனது மகளை மர்ம மனிதன் ஒருவன் பின் தொடர்கிறான்.சில வாரங்களாக போனில் அழைப்பெடுத்து தொந்தரவு செய்தவன் நேற்று இரவு வீட்டுக்கே வந்து சென்றிருக்கிறான்"


ஷெர்லக் ஹோம்ஸ் பதிலேதும் கூறவில்லை.அந்த முதிர்ந்த மனிதனின் கையில் இருந்த நோக்கியா 3310 ஐ கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.


"நீங்கள் வீட்டுக்கு செல்லலாம்.அந்த நபர் யாரென்று நாளை சொல்கிறேன்"ஹோம்சின் வார்த்தைகளை தீர்க்கமாக நம்பியது போல தலையசைத்த அவர் தளர்நடையோடு கிளம்பிப்போனார்.




"வாட்சன் நாமிருவரும் இப்போது பெரியவரை பின் தொடரப்போகிறோம்"


எனது பதிலுக்கு காத்திராமல் ஹோம்சின் கருப்பு பல்சர் புரவியின் கனைப்புக்கொப்பான இயந்திர ஒலிபோடு கிளம்பி விட்டிருந்தது.பின்னால் "அடுத்தது என்ன நடக்கப்போகிறது?" என்ற திகைப்போடு நான் தொற்றிக்கொண்டேன்.பெரியவர் புகுந்த வீட்டை அவதானித்த ஹோம்ஸ் உந்துருளியை அருகேயிருந்த ஒழுங்கைக்குள் நிறுத்தினார்.வேட்டை நாய் ஒன்றின் வெறியும் மோப்ப நாயின் ஆற்றலும் அவர் செய்கைகளில் தெரிந்தன.வீட்டு பின் பக்க வேலியில் தெரிந்த இடைவெளியை கண்டதும் குதூகலத்தோடு தன்னை உள் நுழைந்துக்கொண்டார். பலவகை மரங்களால் நிரம்பியிருந்த போதிலும் அந்த வளவு சருகுகள் இலைகள் இன்றி துப்பரவாக இருந்தது. தினசரி கூட்டி துப்பவரவாக்கப்படுவதாய் இருக்க வேண்டும்.இம் முதிர்ந்த இம்மனிதனோ அவரது மனைவியோ தினமும் சுத்தமாக்குவது என்பது இயலாத விடயமென்ற போதிலும் ஹோம்ஸ் சொன்னபடி இளைய மகள் இருக்கும் பட்சத்தில் அவள் இங்கே வந்து பெருக்க வாய்பிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் இப்போது ஈரமான வாழை பாத்திகளுள் நின்றபடி எதையோ கண்டு பிடித்த மகிழ்சியில் சத்தம் வராமல் சிரித்துக்கொண்டிருந்தார்.

அங்கே ஒரு வளர்ந்த மனிதனின் காலணி அடையாளங்கள் தென்பட்டன. சற்று இடைவெளியில் ஒரு நாயின் கால்தடங்களும் இருந்தன. இத் தடங்களுக்கு மேலாக செருப்பு அணிந்த ஒருவர் நடந்திருப்பதையும் ஷெர்லகிடம் காண்பிக்க முயன்ற போதும் அவர் அதில் அக்கறை கொள்ளாதவராக காணப்பட்டார். அவருக்கு இபோது மனித தடங்களை விட நாயின் தடங்களை தொடர்வதில் ஆர்வம் மிகுந்திருந்தது.வீட்டிலிருப்பவர்கள் தங்களது வளவில் அந்நியர்கள் நுழைந்திருப்பதை உணராவண்ணம் கவனமாக அசைவுகளை மேற்கொண்ட அதே நேரம் தடயங்களை விழிப்பாக தேடுகிற அவரது ஆற்றல் எனக்குள் பெரு வியப்பை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு மணி நேரமாக நீடித்த தேடுதலின் முடிவில் ஹோம்ஸ் சலிப்புற்றவராக காணப்பட்டார். மெலிதான விசிலில் சமிக்கை கொடுத்துவிட்டு வேலி இடைவெளியூடு வெளியேறியவரை பின் தொடர்ந்தேன். அவர் அடுத்த சில கணங்களில் காலடி வைக்கப்போகும் இடத்தில் ஏதோவொரு மிருகத்தின் வாந்தி போண்ற அருவருப்பான பொருள் இருப்பதை கண்டு கொண்ட நான் எச்சரிக்க வாயெடுக்க முதல் ஹோம்ஸ் குனிந்து குச்சியால் அதனை கிளறவாரம்பித்தார்.


அன்று தான் நானும் ஷெர்லக் ஹோம்ஸும் பேசிக்கொண்ட இறுதி நாள்.என் பக்கம் தப்பு இருந்தாலும் கூடவிருந்த நண்பன் என்றும் பார்க்காமல் என்னை காட்டுத்தனமாய் தாக்கியது அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. கால ஓட்டத்தில் நான் இங்கிலாந்துக்கு வந்துவிட்டேன்.நான் வேலை செய்த பப்புக்கு அருகே தான் ஷெர்லக் ஹோம்ஸ் மியூசியம் இருந்தது. Arthur Conan Doyle எழுதிய புத்தகங்களை எனது ஆங்கில அறிவை அதிகரித்துக்கொள்ளும் நோக்கோடு படிக்கத்தொடங்கிய நான் புழுதி படிந்த வெயிலடிக்கும் யாழ் நகர ஒழுங்கைகளில் அவர் செய்திருந்த துப்பறியும் சாகசங்கள் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் விபரிக்கப்பட்டவற்றுக்கு எவ்வகையிலும் குறைவில்லாதிருப்பதை கண்டு கொண்டேன். சேரலாதனாகிய அவரை ஷெர்லக் ஹோம்ஸ் ஆகவும் வாகீசனாகிய எனது பெயரை வாட்சனாகவும் உருவகித்து எழுத ஆரம்பித்த இந்த கதையை அவரின் உதவியின்றி என்னால் முடிக்க இயலாதிருக்கிறது. அந்த பெரியவரின் மகளை பின் தொடர்ந்தது நானே தான் என்பதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?.என்பது உள்பட இருபது வினாக்களை அவருக்கு எழுதி இமெயிலில் அனுப்பிவிட்டு காத்திருந்தேன். பதில் அனுப்பாத அளவுக்கு இன்னும் கோபமாகவே இருப்பார் என்று நான் நினைத்திருந்த போதிலும் இன்று இன்பாக்ஸ் இல் "நண்பன் வாகீசன் நலமா?" என்ற தலைப்பிடப்பட்டு விழுந்திருந்த அவரது பதில் என்னை மனமகிழ்வு கொள்ள வைத்து விட்டது.

வணக்கம் நண்பரே!

சம்பவங்கள் நடந்து இரண்டு வருடங்கள் கழிந்து விட்டிருந்த போதிலும் வெகு சிரமத்தோடு நினைவகங்களிலிருந்து இயலுமானவரை மீட்க முயன்றிருக்கிறேன்.சம்பவ தினத்தன்று அந்த பெரியவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரது கையில் இருந்த தொலைபேசியின் "space key" அதிகமாக தேய்ந்திருப்பதை கவனித்தேன். தினமும் குறுந்தகவல் அதிகளவில் அனுப்பினாலேயே அப்படி ஆகும்.ஆகையால் அவரது மகள் அவர் அறியாவண்ணம் அந்த ஆடவனோடு தொடர்பு கொள்ள அக்கைப்பேசியை பாவிக்கிறாள் என்ற முடிவுக்கு வந்தேன்.சில சமயங்களில் உள்வந்த அழைப்புக்களை பெரியவர் எடுத்துவிட"அநாமதேயமாய் அழைப்புக்கள் வருகின்றன" என அவள் சமாளித்திருக்கக் கூடும். மழை சமீபத்தில் பெய்திராத போதும் பெரியவரின் செருப்புகளில் சேறு ஒட்டிக்கொண்டிருந்தது. அத்தோடு இரவில் மர்ம மனிதன் வந்து சென்றிருப்பதை காலடி தடங்களை வைத்தே அவர் சொல்கிறார் எனவும் ஊகித்துக்கொண்டேன்.வளவுக்கு நேற்று நீர் இறைக்கப்பட்டிருந்தாலே இவையிரண்டும் சாத்தியம்.நாம் அங்கே போன போது காலணி தடங்களோடு நாய் ஒன்றின் தடங்களும் இருந்தன. அது வந்து போன மர்ம மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவ்வாறான சீரான இடைவெளியில் பின் தொடர வாய்ப்பு இருக்கிறது.நீ செருப்பு தடங்களை காண்பித்து என்னை குழப்ப முயன்றாய்.அது பெரியவருடையவை. வளவுக்கு அந்நிய மனிதன் உலாவிய தடங்களை கண்டு குழப்பமாகி அங்குமிங்கும் நடந்து தேடியதால் ஏற்பட்டது.வந்த நாயின் தடங்கள் ஊர் நாயின் பாதங்களை விட பெரிதாக இருந்தன. அது ஒரு ஜெர்மன் செப்பேட் வகை நாய் என என்னால் கணிக்க முடிந்தது.கிட்டிய பிரதேசத்தில் உள்ள அவ்வகை நாய் உனது "TOBY" மட்டும் தான்.இறுதியாக சிக்கிய தடயம் முக்கியமானது. அது கிடைத்திராவிட்டால் வழக்கு மேலும் கடினமாகியிருக்கும்.நிலத்தின் இருந்த வாந்தியில் ஒரு "lunch sheet" இருந்தது.சம்பவம் நடந்த தினம் வெள்ளிக்கிழமை ஆதலால் அசைவ உணவு விரும்பியான நீ கொத்து ரொட்டி வாங்கி சென்றிருப்பாய் என்று எனக்கு தெரியும். டொபிக்கு மீதியை கொடுத்த போது அது ஆர்வக்கோளாறில் "lunch sheet" ஐயும் சேர்த்து விழுங்கி விட்டது.சில மணி நேரத்தின் பின்னர் நிலவொளியின் காதலியை சந்திக்க நீ வந்த போது உன்னை தொடர்ந்து வந்த டொபி செரிமானமாகாததை வாந்தியாய் எடுத்துவிட்டது.


அந்த பெரியவர் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்த போது அவர் தொடர்பாக பலவிபரங்களை சொன்ன போது நீ திடுக்கிட்டிருப்பாய். நீ காதலித்த பெண்ணின் அக்காதான் என் முன்னாள் காதலி "ஐரீன்" என்பதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. தங்கை உனக்கு தனது குடும்ப விபரங்களைசொல்லியிருந்தது போல் ஐரீனும் காதலியாய் இருந்த நாட்களில் எனக்கு சொல்லியிருந்தாள். அன்று நான் உன்னை கடுமையாக தாக்கி ஊரைக்கூட்டி விடயத்தை பகிரங்கமாக்கியது உனது நன்மைக்காகத்தான். அதானாலேயே தகப்பன்காரன் உனக்கு மகளை அவசர அவசரமாக மணமுடித்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இல்லாவிட்டால் தகப்பன் காட்டிய வெளிநாட்டு ஆடவனை மணமுடித்து உனது காதலியும் விமானம் ஏறியிருப்பாள். நீயும் என்னைப்போல இன்று வரை மரத்தடியிலேயே இருந்து கொண்டிருப்பாய்.அங்கே உனக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.மிக்க மகிழ்ச்சி.அடுத்த முறை இங்கே வரும் பொழுது 221B Baker street ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து சில நினைவுப்பொருட்களை இந்த நண்பனுக்காக வாங்கி வருவாய் என எதிர்பார்க்கிறேன்


இப்படிக்குஅன்பு நண்பன்

சேரலாதன்.

25/10/2013


கலாச்சார தூண்!



யாழ்ப்பாண கலாச்சாரம் என்கிற தூணை விழவிடாது காக்கிற அத்திவாரம் போண்றவர் தான்  கமலரூபன் என்கிற அப்பாசென்று சொன்னால் அது மிகையாகாது.ஏனென்றால் நாமெல்லாம் வயதுக்கோளாறில் கண்டதையும் கிறுக்கிகொண்டிருந்த போது அவர் "யாழ்ப்பாணமும் பெண்களும்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிய பெருமைக்குரியவர்.நாம் "காதலா? காமமா? " என்று விவாதம் நடத்தும் பொழுதுகளில் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" என்று அறச்சீற்றம் காட்டியவர்.அப்படிப்பட்ட மதிப்புக்குரியவர் யாழ்ப்பாண கலாச்சாரம் தொடர்பில் விட்ட சமீபத்திய கருத்து புரட்சிகரமானது.

"உண்மையா யாழ்ப்பாண கலாச்சாரம் அழிகிறது என்று கவலைப்பட வேண்டியவர்கள் 1980- 1990 இடைப்பட்ட தசாப்தத்தில் பிறந்த நாங்களே ஒழிய மற்றவர்கள் அல்லர்"

மேலோட்டமா பார்க்கும் போது புரியாவிட்டாலும் ஆழமாக நோக்கும் போது நிலாவரை கிணறு போல ஆழமில்லாத அரிய கருத்து இது.இந்த தசாப்தத்தில் யாழ்ப்பாணத்தில் நாம் பிறந்திருந்த போது போர் தொடங்கியது.நாமெல்லாம் வளர்ந்து இளமைப்பிராயம் கழித்து முதிர்வடைந்த போது போர் முடிந்துவிட்டது.இடையில் இடம்பெயர்வுகளையும் அழிவுகளையும் கண்டபடி வளர்ந்த எம் வாழ்கை வித்தியாசமானது.எமக்கு முந்திய தலைமுறையோ சிறுவயதில் இந்திய சினிமாவில் திழைத்திருந்தது.வாலிபம் வரமுதலே திருமணம் என்ற பெயரில் தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்ததோடு திருப்தி அடையாமல் சின்னவீடுகளையும் பேணிவந்தது.பெல் பொட்டம் ஜீன்ஸ்,கண்வரை வழியும் தலை முடி அலங்காரம் என உலாவிய அந்த காலகட்டத்தவர்கள் போர்க்காலத்தில் குடும்பஸ்தர்களாகிவிட்டவர்.எமக்கு பின்னைய சதாப்தத்தில் பிறந்தவர்கள் சிறுவயதில் போரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வளர்ந்து வாலிபர்களாக முதல் போர் ஓய்ந்துவிட்டது.அவர்களும் பிறகு நன்றாக வாழ்ந்துவிட்டார்கள்.கட்டுப்பாடு,கலாச்சாரம்,ஒழுக்கம்,கண்ணியம் என்றிருந்த போர்க்கால ஒழுங்குகளால் புடம் போடப்பட்டது நாம்தான்.லௌகீக வாழ்வை அனுபவிக்காது கட்டுப்பெட்டியாக வளர்ந்ததும் நாம் தான்.

ஆகையால் ஒரு கிழடோ முதிர் குடும்பஸ்தரோ,முளைச்சு மூன்று இலை விடாத கலாச்சாரம் பேணும் பெடிசுகளோ நமக்கு முன்னால் நின்று "யாழ்ப்பாண கலாச்சாரம் கெட்டுப்போச்சு" என்றூ புலம்பினாலோ சத்தம் போட்டாலோ இந்த நியாயத்தை கூறி புரிய வையுங்கள்.அடங்காவிட்டால் தட்டி பிழிந்து அடக்குங்கள்.அதேவேளை அப்பாசின் இந்த அரிய கருத்தை பாராட்டி அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் கலாச்சார தூண் என்ற பட்டத்தை வழங்குவதில் கனாக்காலம் பெருமை கொள்கிறது.

கம்ல்ஸ் தூண் என்றால் கலாச்சாரத்தின் கூரை யார்? "கலாச்சாரத்தின் அத்திவாரம்" யார்? .நீண்ட அலசலுக்கு பின் கலாச்சாரத்தின் கூரையாக கெமிக்கல் அலியாகிய சசிவர்ணன் தெரிவுக்குழுவால் அறிவிக்கப்பட்டார்.அந்நாளில் வன்னி வள நாட்டின் கலாச்சாரத்தை பாவாடை ஜீன்ஸ் அணிந்தும் சைவ கலாச்சாரத்தை நெற்றியில் திருநீற்று குறி அணிந்தும் பேணிய அலிபாய் இன்று பிரித்தானிய கலாச்சாரத்தை  நைக்கி காலணியும் கெல்வின் கெவின் உள்ளாடையும் அணிந்து கட்டிக்காத்துவருகிறார்.குடும்பஸ்தர் ஆனபோதும் பல்வகை கலாச்சாரங்களை யும் கட்டி காப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிற்குறிப்பு- "கலாச்சார அத்திவாரம்" ஆக தெரிவானது ஒரு பெண்.அவரது பெயரை இங்கே போட்டாலே கொந்தளித்து வழக்கு போடுமளவுக்கு கட்டுக்கோப்பானவர்.எங்கே உங்கள் உய்த்தறியும் ஆற்றலுக்கு தீனி போட்டு கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?