ஜிம் கதைகள்

ஜிம் கதைகளை ஆரம்பிக்க முதல் ஒரு ஜென்கதையை சொல்லிவிட்டு வருகிறேன்.ஜென்கதைக்கும் ஜிம்முக்கும் எந்த தொடர்பும் இல்லாத போதிலும் இந்த ஜென்கதையே ஜிம்மில் நடந்தது தான் என்பதால் சம்மந்தமுடையதாகிறது.  முன்னொரு காலத்தில் குன்றின் உச்சியில் இருந்த ஒரு குருவானவர் பலவீனமான உடல்வாகு உள்ளவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். அவரது வலுவூட்டல் நிலையத்துக்கு நடைபிணமாக வந்தவர்களெல்லாம் சில மாதங்களில் பயில்வான்களாக திரும்பிப்போனார்கள். குருவானவர் தன்னிடம் வந்த மாணவர்களுக்கு மரக்குற்றிகளாலும்,பாறைகளாலும் செய்யப்பட்ட பழுக்களை தூக்க வைத்து பயிற்சியளிப்பார்.நேரம் தவறாமல் நிறை உணவு அளிப்பார்.ஆனாலும் அவரிடம் இருந்த ஒரு மாணவன் மட்டும் எவ்வளவு பயிற்சி,உணவு அளித்த போதிலும் தேறாமலே இருந்தான்.அவனது உடல் நாளுக்கு நாள் மெலிந்து நடமாடும் எலும்புக்கூடு போல் ஆகிக்கொண்டிருந்தது. இதைக் கண்டு பரிதாபமடைந்த குரு தனது தவவலிமையால் அவனது உடலை ஹாலிவூட் நடிகர் ஆர்னல்ட் சுவாசினேக்கர் போல கட்டுமஸ்தாக மாற்றி வீடு செல்ல அனுப்பிவைத்தார்.

வீட்டுக்கு போனவனை பார்த்த பெற்றோர் கதவை திறக்க மறுத்தார்கள்.மகன் உருவில் அரக்கன் வந்திருப்பதாக கூச்சல் போட்டு ஊரைக்கூட்டினார்கள். பயந்து போன அவன்  ஒரே ஓட்டமாய் குருவிடம் வந்து சேர்ந்தான்.நடந்ததை கேட்ட குரு இந்த முறை அவனை வாரணம் ஆயிரம் சூரியா போல ஆறு பை உடம்போடு மாற்றிவிட்டு செல்லும் படி பணித்தார். அவனது புதிய தோற்றத்தை கண்ட பெற்றோர் அளவில்லா மகிழ்வுற்றார்கள். அவனது மனைவியும் தனது கணவனின் சுந்தர வடிவைக்கண்டு மிகைப்பெருமிதம் அடைந்தாள். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் அவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கின.அவனுக்கு பிற பெண்களோடு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த மனைவி எந்நேரமும் அவனை திட்டித்தீர்க்க தொடங்கினாள்.

ஒரு கட்டத்துக்குமேல் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியாத அவன் மீண்டும் குருவிடம் அவன் சென்றான். சுந்தர ரூபம் வேண்டாம் எனக்கு பழைய உடம்பே போதும் என்று இறைஞ்சத்தொடங்கினான். அவனை பழையபடி ஆக்கிய குருவானவர் சுற்றியிருந்த மாணவர்களிடம் முக்கியமான வாழ்க்கை தத்துவம் ஒன்றை இச்சம்பவத்தோடு தொடர்புபடுத்தி சொல்ல விரும்பி "இவனது கதை மூலம் நீங்கள் உணர்வது என்னவென்றால் இயற்கையாக கடவுள் அளித்த தோற்றமே மேலானது என்பதாகும்" என்று சொல்லிவிட்டு தியானத்தில் ஆழலானார். கடுப்பான மாணவர்கள் "அப்ப என்ன மயிருக்கு இதுகளை இவ்வளவு நாளா தூக்குறம்" என்றபடி கையிலிருந்த உடற்பயிற்சி நிறைகளை ஆசான் தலையில் போட்டுவிட்டு சென்று விட்டார்கள். தலையில் பலமாக அடிபட்ட ஆசான் சித்தசுவாதீனமுற்று பரிதாபமாக சிலகாலத்தின் பின்னர் இறந்து போனார்.


தகுதியில்லாத மாணவர்களை வைத்திருக்கும் ஆசானுக்கு அவல முடிவேயேற்படும் என்பதற்க்கு மேற்சொன்ன ஜென் கதை ஒரு நல்ல உதாரணமாகும்.இங்கே ஜென் குருவின் தலையில் கல்லை போட்ட அளவுக்கு இல்லாவிட்டாலும் கால் மீது வெயிட்டை போட்ட அளவுக்காவது ஜிம் மாணவர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். அடியேன் பத்து வருடமாக ஜிம்முக்கு போவதாக பலமாக அறிக்கை விட்டு திரிவதாலும், 6 பக் உள்ளதாக ஊரைப்பேய்க்காட்டி வைத்திருப்பதாலும் அடிக்கடி மாணவர்கள் வந்து குருவாக ஆட்கொண்டு அருளும்படி இறைஞ்சும் பாக்கியம் அமையப்பெற்றவன் ஆவேன் என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும். அப்படி இதுவரை தானா வந்து சிக்கிய மாணவர்கள் எண்ணிக்கை எப்படியும் இருபதை தாண்டும். சிலர் ஆறு பை வயிறு கேட்டு வந்து மாட்டினார்கள். இன்னும் சிலர் உருக்கு உடம்பு வேண்டுமென வந்து உருக்குலைந்தார்கள். ஆயினும் வண்டி குறைக்கும் வழி கேட்டு வந்து விளக்கில் விழுந்த வண்டாக சின்னாபின்னப்பட்டோர் தொகைதான் அதிகம்.


எனக்கு வாய்த்த ஜிம் மாணவர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். சிலர் கூச்சசுபாவம் மிக்கவர்கள். ஜிம்முக்கு வரும் முதல் நாளில் அங்கே அகன்ற தேக்கு மரம் போண்ற தோள்களோடும் அனகொண்டாவையொத்த திரண்ட புயங்களோடும் உலாவும் மாமல்லர்கள் தூக்கும் பிரமாண்ட நிறைகளை கண்டு அஞ்சி,தம்மால் சிறிய நிறைகளையே தூக்க முடிவதையிட்டு வெட்கி ஒதுங்க நினைப்பவர்கள். ஊக்கமும்,நோக்கமும் இவர்களுக்கு வரவைக்க குரு அதிகம் கஸ்டப்படவேண்டியிருக்கும். அடுத்த வகை இதற்கு எதிரானவர்கள். குருவானவர் 50 கிலோ அளவுள்ள நிறைகளை தூக்கி காட்டினால் 55 கிலோ போட்டு மூத்திரப்பை வெடிக்குமளவுக்கு முக்கி முதல்நாளே குருவை மிஞ்சிய சிஸ்யனாக முயல்பவர்கள். ஜிம்மில் அருகே ஊக்க மருந்துகளை சாப்பிட்டு தூணுக்குதவாத முருக்குப்போல் பெருத்திருக்கும் மாமல்லர்கள் வந்தால் குருவை ஒரம் கட்டி வைத்துவிட்டு கைபெருக்க,கால் பெருக்க மல்லர்களிடம் அறிவுரை கேட்க விளைபவர்களும் இவர்கள் தான்.


ஜிம்முக்கு போகிறேன்,ஆறு பை வயிறுக்கு முயற்சி செய்கிறேன்,டயட்டில இருக்கிறேன் என்று யாழ்ப்பாணத்திலிருக்கும் சாதாரண தரம் தாண்டாத பெடியங்களே கிளம்பியிருக்கும் காலம் இது.சினிமா அவ்வளவு தூரம் ஆறு பக் ஆசையை பெடியள் மனதில் ஊற்றிவிட்டது.ஆனால் நான் ஜிம்முக்கு போன காலத்தில் சூரியா கூட அரிந்தபலகை பாடியோடுதான் இருந்தார். பல்கலைக்கு வரும்போது செத்த பல்லி போல இருந்த நான் ஜிம்முக்கு போக ஆரம்பித்ததும் மெதுவாகவும் உறுதியாகவும் தேறி வருவதையும் கண்ட ஒரு நண்பன் என்னை அணுகினான். இது நடந்தது 2005 ஆம் ஆண்டில். நானாவது பரவாயில்லை பல்லிபோல இருந்தேன். அவன் நிலை மிகவும் கவலைக்கிடம். பெருத்த தலையும் சுருங்கிய உடம்புமாக ஏலியன் போல இருந்தான்.

"மச்சான் ஒரு பத்து கிலோ ஏத்தினா காணுமடா. என்ர முகவெட்டுக்கு நல்ல ஸ்மார்ட்டா இருப்பேன்"

சிரிப்பு வந்தாலும் எனக்கு அவனது தன்னம்பிக்கை பிடித்திருந்தது. இரண்டு பக்கமும் பத்து பத்து கிலோ நிறைகளை கொழுவிவிட்டு barbell ஐ அவனது தோளில் தூக்கிவைத்துவிட்டேன்.

"பத்து தரம் இருந்து எழும்பு.அதையே நான் நிப்பாட்ட சொல்லுற வரை செய்.முடிஞ்சாப்பிறகு "நிசாந்த" கடையில பால் போத்தில் ஒண்டு வாங்கி குடி.மூண்டு மாசத்தில முரட்டுத்தனமா இருப்பாய்"

நான் சொன்னதை நம்பி முக்கி முக்கி அவ்வளவும் செய்தான். "நிசாந்த" கடையில் ஒன்றுக்கு இரண்டு பால் போத்திலாக குடித்தான். அற்றைக்கு பிறகு அவனுக்கு மூன்று நாளா விடாமல் வயித்தால அடித்தது. என்னை தூசணத்தில் திட்டித்தீர்த்தபடி அவன் படுக்கைக்கும் கழிவறைக்குமாய் ஓடித்திரிந்து பட்ட அவலம் இன்றும் நினைவில் இருக்கிறது. எனது முதல்ச்சீடன் முதலும் இறுதியுமாய் ஜிம்முக்கு வந்தது அன்றுதான். அவன் இன்று வரை மழைக்கு ஒதுங்க கூட ஜிம்பக்கம் போவதில்லை. அதே நேரத்தில்த்தான் இன்னொரு நண்பன் கட்டுமஸ்தான ஆண்மகனாக ஆக வேண்டுமென்ற பேரவாவில் புரோட்டின் மாவை அளவுக்கதிகமாக உண்கொண்டு மருத்துவமனையில் படுத்த சம்பவமும் நடந்தது. இச்சம்பவங்களின் பிறகு பிறகு நான் மிகவும் அவதானமாக இருந்தேன். ஜிம் குருவாக இருப்பதற்க்கு சில காலம் இரும்பு நிறைகளை தூக்கியிருக்கிறோம் என்ற தகுதி மட்டும் போதாது. ஆழ்ந்த அறிவு வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன்.


பிறகு இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. கிழமையில் 5 நாட்கள் ஜிம்முக்கு போனதும் உண்டு.வாரணம் ஆயிரம் படம் வெளியாகிய நேரம் அது. சும்மா வீட்டில படுத்திருந்த ஓணான் எல்லாம் நாலைஞ்சு தண்டால் எடுத்துவிட்டு முகநூலில் போட்டோ போடுமளவுக்கு சிக்ஸ் பக் பனி பரவிப்போய் இருந்தது. மார்கழி மாத குளிரில் லண்டன் விறைத்துப்போய் இருக்க நானும் நண்பன் சேகரும் நான்கு மாதத்தின் பின்னர் ஆறு பக்கோடு முகநூலில் போட்டோ போடுவதாக சபதம் எடுத்துக்கொண்டோம்.நாட்கள் உருண்டன. அவித்த கோழியும் பழங்களும் தின்று வாழப்பழகி விட்டிருந்தோம். ஒரு கட்டத்தில் இனியும் சோறு சாப்பிடாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்த போது சேகர் சொன்னான்.

"மச்சான் என்ர வயித்தில படிக்கட்டு வாற அறிகுறியே தெரியேலை.உனக்கு கிட்டதட்ட வந்திட்டுது. நீ இனி போட்டோவை எடுத்து போடு"

தோழன் பேச்சை மீற முடியுமா?. முகநூலில் போட்டோ போட்டு அடுத்த நாள் தெருவில் எதிர்ப்பட்ட நண்பர்கள் சைக்கிள் ரயருக்கு காத்து பார்ப்பது போல வயிற்றை அழுத்திப் பார்த்தார்கள். சிலர் பகிரங்க இடங்களில் ரிசேர்ட்டை தூக்கி பார்த்து நெளியவைத்தார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் இன்னொரு நண்பர்கள் குழு நள்ளிரவில் வேலையால் வந்து கொண்டிருந்த என்னை வீதியில் வழிமறித்து சேர்ட்டை கழட்டி பார்த்து உறுதிப்படுத்திவிட்டு ஆதாரத்துக்கு போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு போனார்கள். இந்த பரபரப்பு ஓய முதல் தங்களை மாணவர்களாக சேர்க்கும் படி அழைப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டன. அழைத்த பேர்வழிகளில் குறிப்பிடத்தக்கவர் நண்பர் அலிபாய். நண்பரைப்பற்றி ஏற்கெனவே நன்கறிந்திருந்த படியால் பல நிபந்தனைகளை முன்னெச்சரிக்கையாக முன்வைத்தேன். "எதிர்த்து கதைக்கக்கூடாது, ஜிம்முக்கு நேரம் தவறக்கூடாது, நண்பன் தானே என்ற உரிமையில் தகாத வார்த்தையில் திட்டக்கூடாது, சோறு சாப்பிடக்கூடாது" என்று ஆரம்பித்து வரிசையாக  அடுக்கினேன். ஆனைக்கும் அடிபணியாத அலிபாய் கூட ஆறுபக் ஆசைக்காக அன்று அடிபணிந்து பேசியது ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் ஆச்சரியம் நீடிக்கவில்லை. அலிபாய் மூன்றாம் நாள் பாய்ந்துவிட்டார்.

" உன்ர உடம்பை விட என்ர நல்லாத்தானே இருக்கு. பிறகு எதுக்கு நீ சொல்லுறத நான் கேட்க வேணும்?".

நான் அசரவில்லை. எதிர்பார்த்ததுதான். மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுள்ள நான் அலிபாய் தொலைபேசியில் ஜிம் மாணவனாக தன்னை சேர்க்கும் படி அழைத்த போதே ஒலிப்பதிவு செய்திருந்தேன். அதை முகநூலில் பதிவேற்றி நாறடித்துவிட்டேன். கொலைவெறி கொண்ட அலிபாய் "என்னை கண்ட இடத்தில் அடிப்பேன்" என்று எச்சரிக்கை விட்டதோடில்லாமல் எனது வீட்டுக்கும் தாக்குதல் நடத்த வந்திருந்தார். தெய்வாதீனமாக வெளியே சென்றிருந்ததால் மயிரிழையில் உயிர்தப்பினேன். அலிபாய் போனாலும் சிலநாட்களுக்குள் எனக்கு அரை டசினுக்கும் குறையாத அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான நல்ல சீடர்கள் கிடைத்தார்கள்.

சிலமாதங்களுக்கு எல்லாம் நல்ல படியாய் போய்க்கொண்டிருந்தது. ஜிம்மில் அழகு பெண்களோடு கடலை வறுத்து கவர்ச்சி கன்னிகளை ஏக்கப்பார்வை பார்த்தபடி சீடர்களுக்கு நல்லாசானாய் வாழ்ந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அமைதியாய் இருந்த குளத்தில் நீர் யானை குதித்தது போல ஒரு சீடன் வந்தான். பரம சாதுவாய் தென்பட்ட அவன் உண்மையில் ஒரு படுபயங்கரவாதி என்பது அத்தருணத்தில் தெரியாது. ஜிம்மில் சேருவதற்கான பதிவுகளை எல்லாம் முடித்தபின் போதனையை ஆரம்பிக்கும் எண்ணத்தோடு ஒரு பயிற்சிபொறியருகே கூட்டிச்சென்றேன்.

"இதை செய்தால் நெஞ்சு வலுவாகும்"
"ஐயா! எனக்கு நெஞ்சு வலு தேவையில்லை"

ஒரே வயதுடையதாய் இருந்தாலும் "ஐயா" என்று விழிக்கிறானே! என்ன ஒரு பண்பு,பணிவு " எனக்குள் வியந்து கொண்டேன். அடுத்த பொறிக்கு நகர்ந்தேன்.

"இதில் பயிற்சி செய்தால் கரங்கள் பலமடையும்"
"ஐயா! எனக்கு அது தேவையில்லை"

ஆசானுக்கு அழகு பொறுமை.கடுப்பை அடக்கிக்கொண்டு நகர்ந்தேன்.எட்டு பொறிகள் தாண்டிவிட்டன. கடைசியாக கண்ணில் பட்டது "AB Crunch".

"இதில பயிற்சி செய்து பாருங்கோ. மூண்டு மாசத்தில் உங்கட வண்டி படிக்கட்டா மாறி இருக்கும்"

"ஐயா! எனக்கு படிக்கட்டும் வேண்டாம்.பணியாரமும் வேண்டாம்"

"அப்ப என்னதான் உங்களுக்கு வேணும்?"

"ஐயா! எனக்கு Fat burn  பண்ணோணும்"

"அதுக்கு உங்கள தலைகீழா கட்டி தொங்க விட்டிட்டு கீழ நெருப்பை கொளுத்துறதுதான் ஒரே வழி"

அந்த சீடன் சீற்றமடைந்து வெளியேறிப்போனான்.அத்தோடு நில்லாமல்
"இவன் நமது உடல்வாகிற்கேற்ற பயிற்சியை தராமல் தனது விருப்பை திணிக்கிறான்" என்று கருத்தையும் வெளியிட்டு பிறமாணவர்கள் மத்தியில் எனது செல்வாக்கை பெரிய அளவில் சரியவைத்தான்.அச்சீடன் ஐயா என்று விழிப்பதே ஒரு வகையான நக்கல்தான் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டபோது தலையில் அடித்து கொண்டேன்.

தசாப்தங்களை தாண்டியும் நீளும் எனது ஜிம் வாழ்க்கையில் இப்போதுதான் 5 வருட இடைவெளியுள்ள வயது மாணவர்களை சந்திக்க தொடங்கியுள்ளேன். புதிய தலைமுறையை சேர்ந்த அவர்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு இருக்கிறார்கள். நல்ல விடயம்தான். ஆனால் பல இடங்களில் அது தகுதிக்கு மீறியதாக இருக்கிறது. என்னை ஆட்டம் காணவைத்த பல மாணவர்களில் சிலரை மேலுள்ள பத்திகளில் விபரித்தேன். ஆனால் அவர்கள் இந்த புதிய தலைமுறை மாணவரின் கால்தூசிக்கு பெறமாட்டார்கள். சென்ற வாரம் சிங்கபுரியில் உடம்பை குறைக்க விரும்பிய ஒரு புதிய தலைமுறை மாணவனோடு ஜிம்முக்கு சென்றிருந்த போது துன்பியல் நிகழ்வு நடந்தது. வயதில் இளையவன் என்பதால் அவனுக்கு அதிக அக்கறை எடுத்து சொல்லித்தரவேண்டும் என்ற மனநிலையில் ஜிம்முக்குள் போகும் போது இருந்தேன். அவனை அரை மணித்தியாலம் Treadmill இல் ஓடவிட்ட பிறகு Lateral pull-down Machine அருகே கூட்டிச்சென்றேன்.

"டேய் இப்ப நான் செய்யுறத கவனமா பார்"

மூன்று தடவை இழுத்திருப்பேன்.

"பிழை,பிழை நிப்பாட்டுங்கோ,கழுத்து நேர நிக்கோணும்.முதுகை வேற வளைக்கிறியள்.பின்னால சாயக்கூடாது"

அதிர்ந்து போன நான் எழுந்துவிட்டேன்.

"டேய்! முன்ன பின்ன ஜிம்முக்கு போய் இருக்கிறியா?"

"இல்லை"

"நான் 10 வருசமா இந்த மிசின பாவிக்கிறன். எது சரி பிழை எண்டு எனக்கு தெரியும்"

"நீங்கள் பத்து வருசமா பிழையா செய்து இருக்கிறியள். மிசினில இருக்கிற விளக்கபடத்த பாருங்கோ "

"ஓ அப்ப நீ விளக்கப்படத்த பார்த்தே எல்லாத்தையும் செய். எல்லாம் தெரிஞ்ச உனக்கு எதுக்கு விளக்கம்"

பத்து நிமிடத்தில் எனது பத்துவருட ஜிம் அனுபவத்தை பல் இளிக்க வைத்துவிட்டானே படுபாவி என்று புறுபுறுத்தபடி வீட்டுக்கு வந்து முதல்ப்பந்தியிலுள்ள மொக்கை ஜென்கதையை எழுத ஆரம்பித்தேன். இனியும் இளைய பேர்வழிகளுக்கு ஆசானாக ஆசைப்பட்டால் பரமார்த்த குருவும் சீடர்களுமாய் மீன் பிடித்த கதை போல என்கதை ஆகிவிடும் அபாயம் இருப்பது புரிகிறது. ஓடி விளையாடி, சண்டை பிடித்து வெயிலிலும் புழுதியிலும் வளர்ந்த எங்கள் தலைமுறையை ஐபாட்டும் ,அங்றி போர்ட்டும் விளையாடி வளர்ந்த புதிய தலைமுறை மிஞ்ச முயல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எமது தலைமுறைக்கும் எம்மை பார்த்து புறுபுறுத்த பெரிசுகளுக்கும் இடையில் குறைந்தது 30 வருடங்களாவது வயது வித்தியாசம் இருந்தது. நமக்கு அவ்வளவு பெரிய இடைவெளி கிடைக்கவில்லை அவ்வளவுதான்.