எதிர் கால கதைகள்

2028 ஆம் ஆண்டில் ஒரு நாள் சௌந்தரின் மகன் முற்றத்திலிருந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது அச்சுதனின் மகன் படு வேகமாக உள்ளே நுழைந்து அவனை வெளு வெளு என்று வெளுக்கத்தொடங்கினான். சௌந்தர் தனது பாரமான வண்டியை தூக்கியபடி ஓடி வந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற போதிலும் அவன் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.

சௌந்தரின் மகனே அடி வலியையும் மீறி " ஏன்டா இப்ப என்னை அடிக்கிறாய்? ,காரணத்தை சொல்லிட்டு அடியடா" என்று கத்திக்கொண்டிருந்தான்.

 பத்து நிமிடங்கள் கும்மிக்குதறிய பின் அமைதியான அச்சுவின் மகன்
"போன மாசம் என்னை பார்த்து தேவாங்கு என்று சொன்னதுக்குத்தான் இந்த அடி" என்றான்.

"போன மாசம் சொன்னதுக்கு இப்ப அடிக்கிறாய்? உனக்கென்ன விசரா?"

"நாயே! இன்றைக்குத்தான்டா தேவாங்க சூவில நேர பார்த்தனான்"

மேற்சொன்ன நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. சில நாட்களுக்கு முன் முகநூலில் அச்சுதன் என்மீது எதிர்பாராத காரசாரமான தாக்குதலை தொடுத்திருந்தான். அதற்கு காரணமாக இருந்தது நான் போட்ட "இவன் எதுக்கும்,அதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான் " என்றமைந்த பின்னூட்டம் .கடுப்பானால் திருப்பி திட்டுவது வழமை என்றாலும் நான் அந்த பின்னூட்டத்தை போட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தன.


(கடின வார்த்தைப்பிரயோகங்கள் மேலே உரு மறைப்பு செய்யப்பட்டுள்ளன)


2028 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டம் 2003 மாணவர்கள் 20 வருடங்களின் பின்னர் மீள் இணைப்பு நிகழ்வை கொண்டாடவென ஒன்று சேர்ந்திருந்தனர். தலைநகரிலிருந்த 5 நட்சத்திர விடுதி ஒன்றில் முதல்நாளிரவே வந்து ஒன்று கூடிய நண்பர்கள் இரவிரவாக தண்ணீரில் மிதந்துகொண்டிருக்க மறுபக்கம் அவர்களின் மனைவிமார்கள் ஒன்று கூடலில் என்ன ஆடை அணிவது என்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர். 

"என்ர அவருக்கு இன்னும் தலைமுழுக்க நல்ல கருப்பு முடி.அதால அதுக்கு மட்ச் பண்ணுற மாதிரி நான் கருப்பு சாறி கட்டப்போறன்" 
சொல்லிவிட்டு சுகாவின் மனைவி நெஞ்சை நிமிர்திக்கொண்டாள்.

"நான் வெள்ளைச்சாறி கட்டப்போறன்.அவருடை வெண்பஞ்சு போல அழகான நரைத்த முடிக்கு சும்மா அதிரும்".சிரிப்பு ரவுடியின் சம்சாரம் மின்சாரம் பாய்ந்தது போல உடலை உதறி நளினம் காட்டிக்கொண்டாள்.

"என்ர செல்லத்துக்கு சேல்ட் அண்ட் பெப்பர் தலை. கருப்பு வெள்ளை கலப்பில் கட்டினால் கலக்கும்" இது அப்பாசின் காதல் மனைவி.

சௌந்தரின் மனைவியோ முதுகில் ஆழமான பிளவு வைத்த பிளவுஸ் போட்டு சாறி கட்டுவேன் என்று பிடிவாதமாய் இருந்தாள். சௌந்தரின் பின்பக்கம் வெளித்த மொட்டைத்தலை ஞாபகத்தில் வர பெண்கள் "நல்ல கலாரசனை உங்களுக்கு" என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.

"லூசாடி உங்களுக்கு"

கலகப்பாக போய்க்கொண்டிருந்த சூழலில் காட்டெருமை கத்தியதுபோல் ஒரு சத்தம். அங்கே அலியப்பாவின் மனைவி ஆக்ரேசமாக நின்றிருந்தாள்.

"என்ர புருசனுக்கு தலையில் மயிரே இல்லை. உந்த மயிர் மட்சிங் பார்த்தா நான் அம்மணமாவெல்லோ வரோணும்?"