2007 ஆம் ஆண்டு.மொறட்டுவை கம்பஸ் விடுதியில் மாதக்கணக்கா உடம்பில் தண்ணி படாமல் வாழ்ந்து கொண்டிருந்த சிரிப்பு ரவுடி அடாத மழை பொழிந்தாலும் விடாமல் வெயில் அடித்தாலும் தினசரி பல்லு தீட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.பல்லு மினுக்குவதற்கு தேவையான சாதனங்களான தூரிகை,மற்றும் பற்பசை என்பனவற்றில் பிரிந்து போன ஒரு பழைய தூரிகையை சொந்தமாக வைத்திருந்ததும் அதற்க்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.பற்பசைக்கு எங்கே போவது என்று சிந்தித்த அவருக்கு அலியப்பாவின் அலமாரிக்குள் இருந்த புதிய சிக்னல் தீர்வை தந்தது.எதையும் அளந்து பிளான் பண்ணி செய்யும் அலியப்பாவுக்கு பற்பசை வழமைக்கு மாறான வேகத்தில் குறைந்து சென்றது வெகு விரைவிலேயே விளங்கிவிட்டது.


"யாரோ என்ர பேஸ்ர எடுக்கிறான்கள்.அவன் இண்டையோட அத நிப்பாட்டோணும்" என்று பொதுவா ஒரு எச்சரிக்கையை லொக்கரை திறந்து பார்த்து விட்டு விட்டான்.அலேர்ட் ஆன சிரிப்பு ரவுடி அந்த நாள் பேஸ்ட் இல்லாமல் பல்லை துலக்கினார்.ஆனால் ஆடிய காலும் பாடிய காலும் சும்மா இருக்காது என்பது போல் ஆட்டைய போட்ட கை பரபரத்து மறுநாள் மீளவும் எடுத்து பிதுக்கி விட்டார்.திறந்து பார்த்த அலியப்பா மீளவும் சத்தம் போட்டான்."எடுத்த இடத்திலேயே வைக்கிறன்.எப்பிடி பிடிக்கிறான்?"என்று பென்ரியம் 1 மூளையை போட்டு கசக்கிய சிரிப்பு ரவுடி இறுதியாக சேகரன் காலில் போய் விழுந்தார்."மச்சான்.நான் தான்டா அவன்ர பேஸ்ர ஆட்டைய போடுறனான்.அதே இடத்தில திரும்பி வைக்கிறன்டா.எப்படி கண்டு பிடிக்கிறான் எண்டு விளங்கேலையடா"

சேகரன் அலியப்பாவின் லொக்கரை திறந்து பார்த்தான்.பற்பசை படுத்து இருந்தது.அதன் வாய்ப்புறமாக ஒரு குவளை இருந்தது.வால்ப்பகுதிக்கு அருகே ஒரு நாணய குற்றி வைக்கப்பட்டிருந்தது.இரு பொருட்களையும் இணைக்கும் அச்சில் அது இருந்தது."இண்டைக்கு எடுத்துப்போட்டு இதே அச்சில வை.அலியப்பாவால ஒரு ஆணியும் பிடுங்க முடியாது" என்றுதனது புலனாய்வு அறிக்கையை சேகரன் முடித்துக்கொண்டார்.

அன்று வழமையை விட அதிகமாக பற்பசையை ஆட்டையை போட்டு வாய் நிறைய நுரை கிளம்ப பல்துலக்கிய சிரிப்பு ரவுடி பலவாரங்களுக்கு பின்னர் குளித்தும் இருந்தார்.லொக்கர் கதவை திறந்து பார்த்த அலியப்பா "பேஸ்ர இப்பவும் எடுக்கிறவன் ஒரு சொறி நாய்.ரோசமில்லாத ஜென்மம்.இதெல்லாம் கலியாணம் கட்டினா பக்கத்து வீட்டுக்காறன் மனுசிய தள்ளிட்டு போவான்" என கிழி கிழி என்று கிழிக்க தொடங்கினான்.

தங்கள் புலனாய்வு திறமைக்கு அப்பால் பட்ட விடயம் இது என்பதை உணர்ந்து கொண்ட சிரிப்பு ரவுடியும் சேகரனும் சில நாட்களின் பின் நடந்த ஒரு தண்ணி பார்ட்டியில் நிபந்தனையின்றி அலியப்பாவிடம் சரணடைந்து உண்மையை சொன்னார்கள்."எப்படி பிடிச்சனி மச்சான்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.


பதிலேதும் லொக்கர் அருகே அழைத்துப்போன அலியப்பா ஒரு புள்ளியை கூர்ந்து பார்க்க சொன்னான்.அதிர்ந்து போன சிரிப்பு ரவுடி அன்றே புதிய பற்பசை ஒன்றை சொந்தக்காசில் வாங்கிவிட்டார்.

"அங்கே தலை மயிர் ஒன்று லொக்கர் கதைவை திறக்கும் போது அறுபடும் வகையில் குறுக்காக ஒட்டப்பட்டிருந்தது"