"உடம்போட ஒட்டினதா ஒரு கழுசானை போட்டு மேலால உள்ளுடுப்ப போட்டா சூப்பர் மான் சாயல் அடிக்கும்.அதுக்காக சட்டைய கழட்டினா டார்சனை கொப்பி அடிக்கிறான் எண்டு சனம் சொல்லும்.சிக்ஸ்பக் உடம்பு இருந்தாலும் ஸ்பைடர் மேனைப்போல உடம்பை ஒட்டி உடுப்பு போடலாம்.இருக்கிற பேத்தை வண்டியோட அதயும் செய்ய ஏலாது.அப்ப என்ன கறுமத்த பண்ணலாம்?".பலத்த சிந்தனையோடு வேப்பமரத்துக்கு கீழ் இருந்த அச்சுதன் அயல்வீட்டு செல்லம்மா மதில்மேல் தன்ரபாட்டுக்கு இருந்து முட்டைக்கோதை கொறித்துக்கொண்டிருந்த அண்டங்காகத்தை  "சூய்"  என்று பெருங்குரலில் விரட்ட திடுக்கிட்டெழும்பி "நான் ஒரு சூமான் ஆவேன்"" ஆவேன் எண்டு கத்தியபடி வீட்டுக்குள் ஓடிச்சென்றான்.

அச்சுவுக்கு ஊரில எல்லாம் இருப்பதாகப்பட்டாலும் ஆசைக்கொரு சூப்பர் ஹீரோ இல்லாதது நெடுநாள் குறையாய் இருந்தது."பெட்டையளோட சேட்டைவிடுற காவாலியள்,ஆமிக்காறனுக்கு காமவலை விரிக்கும் பெண்கள்,கூரை பிரிச்சு பாயும் கள்ளன்கள் பயந்து ஒடுங்க பறந்து வந்து குதிச்சு அடிச்சு நெறுக்கும் ஒராள் யாழ்ப்பாணத்தில் இருந்தா எவ்வளவு  நல்லா இருக்கும்?" என பலதடவை யோசித்து இருந்தாலும் நடைமுறைக்கு சாத்தியம் குறைவானதாக கருதி விலக்கியிருந்தான்.பறந்து பாய,குதிக்க யாழ்ப்பாணத்தில் தவிர உயரமாக பனை மரத்தை தவிர எதுவும்  இல்லாதது மிகப்பெரும் பிரச்சினையாகப்பட்டது.அசம்பாவிதம் நடக்கிற இடத்துக்கு சைக்கிளிலோ பல்சரிலோ கிளம்பினால் போய்ச்சேரமுதல் ஐஞ்சாறு இடத்தில ஆமிக்காறன் மறிச்சு ஐடி கேட்டு முகமூடிய கழட்ட சொல்லிடுவான்.ஆமிக்காறனை சமாளிச்சாலும் போய்ச்சேர்ந்தாலும் கிறீஸ் பூதத்தின் ஒரு வகையாக இருக்குமோ என்ற அச்சத்தில் சூப்பர் ஹீரோவை சனம் கொலைவெறியோடு விரட்டவும் தயங்காது.
 இப்போது அறைக்குள் ஓடி வந்து கதவை தாளிட்டு கொண்ட அச்சுதன் பயம்,தயக்கம் நீக்கி களமிறங்கவேண்டிய தருணம் வந்துவிட்டதாக உணர்ந்தான்.கோயில் குளம் என்று திரியும் செல்லம்மா "சூ" எனக்கத்தியதால் "சூமான்" என்ற பெயர் தோண்றியது நல்லவொரு சகுனமாகப்பட்டது.இனி ஆடை வடிவமைக்கவேண்டியது தான் மிச்சம்.வாழைநாரில் அறுநாக்கொடியை கட்டி முன்னுக்கும் பின்னுக்குமாய் இரண்டு பழந்துணியை தொங்கவிட்டு பனையோலை கண்பட்டி ஒன்றை ஆள் அடையாளத்தை மறைக்க போட்டான்.கண்ணாடி முன்னால் நிற்க எதோ ஒன்று இடித்தது.நீட்டு சொக்ஸ் ஒன்றை போட்டு முழங்கால் வரை இழுத்து விட இடிப்பு அகன்றது.தேக்குமர கதவு கணக்காவிரிஞ்சிருந்த நெஞ்சில் "SU.M.N" என ஏழுதிய காகிதத்தை எச்சில் தடவி ஒட்ட இன்னும் ஒரு தொன் கம்பீரம் ஏறியது.யாழ்ப்பாணசனம் எமன் வெள்ளைநிறத்தில வந்தாலே "வீட்டுவாசல் நிக்காம உள்ளவந்து சாப்பிட்டு போமன் தம்பி" என்று கூப்பிடும் அளவுக்கு தாழ்வுமனச்சிக்கல் பிடிச்சதுகள்.சூப்பர் ஹீரோ கருப்பா இருந்தா செருப்பாலை அடிக்க வருங்கள்.வூடோ பவுடரை தண்ணியில் கரைச்சு உடம்பு முழுக்க பூசி கண்ணாடியை பார்த்து தனக்குத்தானே நாவுறு கழிச்சு முற்றத்தில் அச்சு குதித்து இறங்கிய போது மணி 00.00 ஆகிப்போயிருந்தது.
குதிச்சதால் கிளம்பிய புழுதியும் குதிக்கால் நோவும் அடங்க முதல் "உர்ர்ர்ர்" என்ற சத்தத்தோடு றோமி முன்னால் நிண்டது.றோமி அல்சேசன் அப்பாவுக்கு உள்ளூர் அம்மாவுக்கு பிறந்த முரட்டுப்பையன்.கனபேரை தொப்புளை சுத்தி ஊசிபோட வச்ச சிங்கம்.அச்சுவை கண்டால் வாலாட்டிக்கொண்டு வளையவருபவன் இன்று கடித்து குதற நெருங்கிறான் என்றால் எங்கோ பிழை இருக்கிறது."நாயள் மணத்த வச்சுத்தான் ஆள அறியுங்கள்,புறத்தோற்றம் பார்த்து மனுசர் மாதிரி பழகாதுகள்" என்று அப்பர் சொல்வது நினைவுக்கு வர உடம்பெல்லாம் பவுடர் பூசியிருந்தது உறைத்தது."பாலும்,மீன்குழம்பும்,புறயிலர் கோழியும் அவிச்ச முட்டையும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்.அல்சேசன் பேரினத்து கடிநாயே கொத்தோட கவ்வாம விடு" என்று பாடி முடிக்க முதல் இடுப்பில் இருந்த வாழைநார் அறுநாக்கொடி படீரென தெறித்தது.குனிந்து நோக்க றோமி வாயில் பழந்துணியோடு நின்றது.அடுத்த நொடி அச்சு முற்றத்து மாமர உச்சியில் நின்றான்.றோமி மரத்தடிக்கு மூத்திரம் அடித்து விட்டு மண்ணை விறாண்டி விறாண்டி வளைய வரதொடங்கியது. 
யாழ்ப்பாணத்தின் முதலாவது சூப்பர் ஹீரோவுக்கு அம்மணமாக மரக்கொப்பில் நாய்க்கு பயந்து ஒளியவேண்டிய நிலை ஏற்பட்டதையிட்டு அச்சுவுக்கு மிகவருத்தமாக இருந்தது.உடுப்பு இல்லாம ஊருக்க போகவும் ஏலாது.திரும்ப வீட்டுக்க போக நாயும் விடாது.சொக்சுக்குள்ள இருக்கிற கலக்சி S3 தான் ஒரே ஒரு நம்பிக்கை.பெடியளுக்கு அழைப்பை போட்டு ஒரு சாறத்தோட அவசரமா வரும்படி சொல்லலாம்.அவங்கள் வந்தாலும் கேற்றுக்கு வெளியாலதான் நிப்பாங்கள்.உள்ளவர றோமி விடாது.மதில் வரை நீண்டிருந்த கொப்பு நுனிவரை போய் எட்டிப்பார்க்க அஞ்சாறு அடிக்கு மேல் தாண்டினால்த்தான் வீதியில் விழலாம் என்று தோண்றியது.சோர்வோடு மரக்கொப்பில் கண்ணயர்ந்த அச்சு ஏதோ ஒன்று ஊர்வது போலிருக்க விழித்தான்
"ஐய்யோ பாம்பு" என்று கத்தியபடி மரக்கொப்புவழி ஓடி ஆறடிதூரத்தை காற்றில் தாண்டி வீதியில் வந்து விழுந்தவனை சந்திகாவலரணில் இருந்து கண்ட "கசூன் கமகே" துவக்கை லோட் பண்ணி வெடியொன்றை குத்து மதிப்பாக வைச்சான்.அச்சுவின் பின்புறமாக ரவை உரசிக்கொண்டு போனது.யாழ்ப்பாணத்தின் முதலாவது சூப்பர் ஹீரோ இப்பொழுது  பல்சரை விட வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.அடுத்த வேட்டிலிருந்து தப்ப வெறித்தனமாக குச்சொழுங்கை ஒன்றுள் திரும்பியபோது அது நடந்தது.திருவிழா வில்லுப்பாட்டுக்குப்போய் கால்நடையாக வீடு திரும்பிக்கொண்டிந்த சதாசிவத்தையும் மனுசிக்காறியையும் மகள் பிருந்தாவையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்த கள்ளனின் முதுகுப்புறமாக சூமானாகிய அச்சு பெருவேகத்தோடு இடிபட்டான்.காற்றில் பறந்து வேலிக்கரையோரமாக விழுந்த கள்ளன் அசைவின்றி கிடந்தான்.அச்சுவும் அதிர்ந்து போய் சில கணம் நின்றான்.சதாசிவம் தன் முன்னே உடம்பெல்லாம் வெளிர்பொடி பூசி அம்மணமாக நின்ற மனிதனின் நெஞ்சில் எழுதி இருந்ததை வாசித்தார்."சு.மா.ன்"
"சுடலை மாடா என்னை காப்பாத்த நீயே நேரில் வந்துட்டியா.உன் திரு விளையாடலுக்கு அளவே இல்லையாப்பா "
சதாசிவம் பக்திபரவசத்தில் மயக்கமாக மனுசிக்காறி தாங்கிபிடிக்க மகள் பிருந்தாவோ அச்சு ஓடி மறைந்த பாதை வழி பார்த்தபடி அடுத்த அரை மணித்துளிகளாக நின்றிருந்தாள்.

0 comments: