கிபி 3020 ஆம் ஆண்டு.பல்கிப்பெருகிய சனத்தொகை உச்சத்தைத்தொட்டு தனிநபர் நடமாட்டம் மட்டுப்படும் அளவுக்கு நிலவரம் மோசமாகிக்கொண்டிருந்தது.பிரத்தியோக வதிவிடங்கள்,வாகனங்கள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டு ஆளுயர கப்சியூல்களில் வாழ்வதற்க்கு மக்கள் பழக்கப்பட்டிருந்தார்கள்.அங்கு தரப்படும் மில்லிக்கிராம் அளவேயான குளிகைகள் தினசரி வாழ்க்கைக்கு தேவையான கலோரிகளை தருமாற்றல் பொருந்தியவையாயிருந்தன.பயணம் செய்யும் தேவை மட்டுப்படுத்தப்பட்டு தவிர்க்கமுடியாத பட்சத்தில் மட்டும் சக்தியூட்டப்பட்ட மனிதர்கள் தேவையான இடங்களுக்கு நகர்த்தப்பட்டார்கள்.பிள்ளைகளை பெறுவதற்கு அனுமதி பெற அரசாங்கத்திடம் விண்ணப்பித்துவிட்டு நீண்டகாலம் காத்திருக்கவேண்டிய நிலமை நீடித்திருந்தது.மீறியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள்.சமீப ஆண்டுகளாக அதிகரித்துவந்த சக்திக்கான தட்டுப்பாடு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் ஒன்றிலிருந்து கிடைக்கப்பெறும் தாது மூலமாக தணிந்திருந்தாலும் அது நிரந்தரமானதல்ல என எதிர்வு கூறப்பட்டது.உயிர் நிலவுகைக்கு ஒவ்வாததாக மாறிவிட்டிருந்த சூழலில் நீடித்து மனித இனம் தப்பிப்பிழைத்திருப்பதற்குரிய சூழலை நிலைப்படுத்தும் விதமாக இயங்கிக்கொண்டிருக்கும் இராட்சத இயந்திரங்கள் ஒவ்வொண்றுக்கும் மிக அதிகளவு சக்தி தேவைப்பட்டதாலும்,புதிய சக்திமுதல்களை தேடி விண்வெளியில் அலையும் பன்னாட்டு நிறுவனங்களும் எதிர்காலத்தில் கிடைக்கப்பெறக்கூடிய கனிமங்கள் தொடர்பில் அவநம்பிக்கையான அறிக்கைகளை வெளியிட்டதை தொடர்ந்தும் அவசரநிலை அநேக நாடுகளில் பிரகடனப்படுத்தப்பட்டது.சந்திரனின் ஆழமான உலர்மலைக்குகை ஒன்றுள் அமைந்திருந்த பிரமாண்டமான ஆய்வுக்கூடம் மலரவன் தலைமையில் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்தது.மக்கட்தொகையை குறைப்பதற்காக சர்வதேச தலைமையின் உத்தரவுக்கமைய செயற்படுத்தப்படும் இரகசியதிட்டம் ஒன்றுக்காக அனைவரும் உழைத்துக்கொண்டிருந்தார்கள்.சக்திபற்றாக்குறை ஏற்பட்டு மனித இனம் முழுமையாக அழிவதிலும் பார்க்க சனத்தொகையை குறைத்து உயிர்நிலவுகையை மேலும் சில ஆண்டுகளுக்கு உறுதிப்படுத்துவதே சரியானது என முடிவெடுத்து தலைமைப்பொறுப்பை ஏற்க மலரவன் நீண்ட மனப்போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியிருந்தது.இக்குறைப்பு உலகின் சகல இனங்களினதும் தற்போதைய எண்ணிக்கை வீதத்துக்கு ஏற்ப பகிரப்பட்டு பின்னர் ஒவ்வொரு இனங்களுள்ளும் பலவீனமான எச்சங்களை தோற்றுவித்த நபர்கள் குறிவைக்கப்பட்டார்கள்.சகலதும் முடிந்து,பூமியை நோக்கி பலநூறு ஒளியாண்டு வேகத்தில் பாய்ந்த கலம் தரையிறங்கியபோது காலம் 2011 எனக்காட்டியது.யாழ்ப்பாணம் ராஜவீதி நடுவில் பேரோசையுடன் 1/05/2011 ,11.15AM அளவில் மோதிய ஒளிப்பிளம்பைக்கண்டு மக்கள் பயந்து போயிருந்தார்கள்.பனையுரத்துக்கு எழுந்திருந்த தூசிப்படலம் அகன்ற பொழுதுகளில் மக்கள் வீட்டுப்படலைகளூடு நோட்டம் விட்ட போது தென்பட்ட உடலளவுக்கு ஒவ்வாத அசாதாரண தலையளவு கொண்ட மனிதன் அவர்கள் கவனத்தை ஈர்த்திருக்கவேண்டும்.அம்மனிதனின் மெலிந்த குறுகிய பலவீனமான தோற்றம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாத அவர்கள் அவனின் பிரகாசமான வெளிர் நிறம் குறித்து வியப்பாக தமக்கிடையில் பேசிக்கொண்டார்கள்.நீண்டு வளைந்த வீதியில் வேகமாக சென்ற அவன் முடக்கு ஒன்றில் தரித்து நின்ற போது எதிரே இருந்த வேலிப்பொட்டை அளவு எடுத்தபடியிருந்த கமலரூபன் எதிர்ப்பட்டான்.

"உனது பெயர் என்ன?"
"எனது நாம இஸ் கமலரூபன்"
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"யாப்பனே அண்ட் தமிழ்ப்பெண்கள் என்ற கெடிங்கில் ஆராட்சிக்கட்டுரை லியனவா"
"தமிழ்ப்பெண்களுக்கும் வேலிப்பொட்டுக்கும் என்ன சம்பந்தம்?"
"பெஸ்ற்,ஒயா யார் எண்டத ரெல்,தென் கேள்வி கியூவா"

அம்மனிதன் மணிக்கட்டை முகமருகே கொண்டு போக ஆயிரம் ஆண்டுகளை தாண்டிப்போன சமிக்கைகள் மலரவனின் ஆய்வுகூட திரையை உயிர்ப்பித்தன.

"மலரவன்! நான் காலவோடி T1000M1"
"T1000M1! இலக்கு இலக்கம் 1 அருகில் இருந்தும் ஏன் தாமதம்?"
"இலக்கு 99.99% ஒத்துப்போகிறது.ஆனால் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பேசுவது மட்டும் தரவுக்கு முரணாக உள்ளது"
"இலக்கு உறுதிப்படுத்தப்படுகிறது"

மலரவன் அழைப்பை துண்டித்த சில நொடிகளில் மக்கள்தொகை 20589113210000 ஆல் குறைக்கப்பட்டதாக அளவீடுகள் காட்டின.வீதியில் மயங்கி விழுந்திருந்த கமலரூபனை ஊர்ச்சனங்கள் தண்ணீர் தெளித்து எழும்ப வைத்தார்கள்.

"தம்பி! அந்த வடிவான வெள்ளைப்பெடியன் உம்மோட கன நேரமா கதைச்சுக்கொண்டு நிண்டவர்,எதும் சொன்னவரே?"

கதைபுடுங்கிய பெரிசுகளைப்பார்க்க எரிச்சலாய் வந்தது.பேசிக்கொண்டிருக்கும் போது அவன் கையில் வைத்திருந்த விசித்திர ஆயுதம் ஒன்றின் மூலம் அந்தரங்க பகுதியை நோக்கி ஒளிவெள்ளமாய் சுட்டது மங்கலாய் நினைவில் வந்தது.சூழ்ந்திருந்த சனத்தை நாலைந்து கெட்ட வார்த்தைகளால் விரட்டிவிட்டு அரியாலை நோக்கி தள்ளாடி நடக்கத்தொடங்கினான். தனக்கு பிறக்கப்போகிற 5 பிள்ளைகளும் இல்லாமல் செய்யப்பட்டது பற்றியோ,1000 வருடங்களின் பின் இருக்கவேண்டிய 20589113210000 சந்ததி அழிக்கப்படது பற்றியோ எதுவும் அறிந்திராதவனாக.

(வளரும்)

2 comments:

றூபன் said...

அபாரம் சுகந்தன். நான் உங்களின் ஆக்கங்கள் பலவற்றை வாசித்திருக்கிறேன். எல்லாமே அருமை. வாழ்த்துக்கள் சுகந்தன்.

செழியன் said...

அடப்பாவி!கமலரூபனின் 5 பிள்ளை கன்வை நாச்மாக்கிப் போட்டியேடா! கதையின்ர முதல் பாகம் அட்டகாசமாய் தொடங்கி இரண்டாம் பாகத்தில அநியாயமாய் முடிச்சிருக்கு!முந்தி சசி!இப்ப கமலரூபனா!(அது சரி!!இது கமலரூபனை கட்டப் போறவவுக்கு தெரியுமா??)