பெடியன்!அந்த பெடியன் ஆறு அடி உயரத்தில் இருந்தான்.இரும்பை உருக்கி வார்த்தது போண்ற உறுதியான உடம்பு அவனுக்கு இருந்தது.தமிழ் ஆட்களுக்கே உரித்தான பிதுங்கிய வண்டியும் எதிலும் தயங்கும் சுபாவமும் அவனிடம் தவறியிருந்தன.அநேக தமிழரை போலல்லாமல் ஆங்கிலத்தை பேச்சின் இடையே செருகி பெருமை கொள்வதை தவிர்த்தான்.உலகில் முதன் முதன் நாகரிகம் அடைந்த இனத்தின் வழிவந்தவன் என்ற பெருமிதம் அவனுள் ஊறிப்போய் இருந்தது.ஐக்கிய நாட்டு சபை வழக்கு வச்சு நிலத்தை பிரிக்க போறாங்கள் என்ற கதை அடிபட தொடங்கிய சில நாட்களில் அவன் ஊரில் நின்றான்.சனத்துக்கு பெடியன்ட நடை,உடை,பாவனை எல்லாம் பிடிச்சுப்போனாலும் ஒரு விடயம் மட்டும் உறுத்திக்கொண்டு இருந்தது."தலைமை ஆள் சிவப்பா எல்லோ இருக்க வேணும்.இவன் கறுவல் சரிவரான்" என்று கிழடுகள் புறுபுறுத்தார்கள்.அரவிந்தசாமி நிறத்தில இல்லாட்டியும் சிங்கள ஆமிக்காறன் அளவுக்காவது நிறமா இருந்திருந்தா நல்லா இருக்கும் என்று இளம் பெண்கள் அங்கலாய்த்துக்கொண்டார்கள்.பெடியன் லேசுபட்ட ஆளில்லை.எல்லாரையும் பேச்சால் அடக்கினான்.ஆட்சியை பிடிச்சால் ஆறு மாசத்துக்குள் தமிழ் பெண்களை எல்லாம் லேசரால் அடிச்சு வெளுப்பாக்கி வெளிநாட்டு மாப்பிளையைகளுக்கு கட்டிக்கொடுப்பேன் எண்டு அறிக்கையை விட பெட்டையள் எல்லாம் வாக்கு போடும் நாளுக்காக காத்திருக்க தொடங்கினார்கள்.வீட்டுக்கு ஒரு பிள்ளையை நாட்டுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் செலவை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றதும் பெடியள் பின்னால் அள்ளுப்பட தொடங்கினார்கள்.தோட்டவேலை செய்யாமல் எல்லோருக்கும் ரை கட்டும் அரசாங்க வேலை தரப்படும் எனச்சொல்லி நடுத்தரவயது ஆட்களை எல்லாம் மடக்கிவிட்டான்.இறுதியாக மிஞ்சியிருந்த கிழடுகள் மனதை வெல்ல பெடியன் பவ்வியமாக சொல்ல தொடங்கினான்."ஐயாமாரே! ஆச்சிமாரே! பபிள்கம்மை மென்றபடி பேரப்பிள்ளைக்கு தமிழ் தெரியாது என்று பெருமிதமாக பேசிக்கொள்ளும் எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது".அவன் 90% பெரும்பான்மை வாக்குகளை வென்றிருந்தான்.ஒட்டுமொத்த தமிழ்சனமும் பிரதேச,சாதி பாகுபாடின்றி அவனுக்கு வாக்களித்திருந்தார்கள்.இவ்வளவு இளம் வயதில் எவனுமே இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றதில்லை.பெடியன் பதவி ஏற்பு விழாவுக்கு கோட்டு சூட்டு போட்டு வருவான் என்று எல்லோரும் எதிர் பாத்திருக்க வேட்டி கட்டி வெறும்காலோடு வந்து கையெழுத்தை போட்டான்.அழகாய் வார்த்தைக்கொரு இங்கிலீஸ் சொல்லு கலந்து பேசுவான் என்று காத்திருக்க கடும் தமிழில் அனல் பறக்க பேச தொடங்கினான்.பேச்சு முடிந்ததும் விசய விளக்கமுள்ள சில பெரிசுகள் மனிசிமார் காதில் குனிந்து குசுகுசுக்க தொடங்கினார்கள். "எடியேய்! தானா போய் சனியனட்ட சிக்கிட்டம்.இது எங்கள உரிச்சு தமிழனாக்காம விடமாட்டுது பார்"பெடியன் கதிரையில் குந்தி ஒரு வருசம் ஆக முதல் கிழக்கே இருந்த இரணை மடு தண்ணீரை வடக்கு வரை கொண்டு வந்து விட்டிட்டு "எல்லாரும் தோட்டத்துக்கு போங்கடா" எண்டு கலைச்சு விட்டான்.வெளிநாட்டு காசில திண்டு உடம்பு வளர்த்து குனிய வளைய கஸ்டப்பட்ட ஆட்களை எல்லாம் பனம் மட்டையால் அடிச்சு வேலை செய்ய விட்டான்.வெள்ளைத்தோல்,வெளிநாட்டு மாப்பிளை என கனவு கண்டு கொண்டிருந்த பெட்டையளை வரிசை வரிசையாக தொழில் பேட்டைகளை திறந்து இழுத்துப்போட்டான்.நாடே விறைத்துப்போய் நின்றது.வழமையான தமிழ்க்குணம் மேலிட்டு எதிர்த்து சத்தம் போட்ட சிலரும் அடுத்த நாளே காணாமல் போனார்கள்.நாள் செல்ல செல்ல கரையோரம் முழுக்க கப்பல் துறைமுகங்களாலும் மீன்பிடிபடகுகளாலும் நிரம்பி வழிய தொடங்கியது.வளர்ச்சி என்பது தன்னிறைவுக்கு அடுத்த படியாக தானாக வருவது என்று சொல்லி ஆடம்பர சாமான்களுக்கு தடை போட்டான்.இந்திய சினிமாவையும் தடுத்து விட்டான்.சனம் இப்போது வெளிநாடுகளுக்கு தப்பி போய் அசைலம் அடிப்பமா என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.அப்படி போய் கைய தூக்கின ஆட்கள் எல்லாம் அடுத்த நாளே தனி விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.பேசி பேசி சனத்தை பேய்காட்டியது போல உலகநாடுகளையும் மயக்கி வைத்திருந்தான்.சனத்துக்கு இப்போது வேறு தெரிவு இருக்கவில்லை.காலகாலமாய் இரத்தத்தில் ஊறிப்போன சுயநல புத்தியை ஓரம்கட்டி வைத்துவிட்டு ஒத்துழைக்கத்தொடங்கினார்கள்.நாடு ராக்கெட் வேகத்தில் மேலே கிளம்ப தொடங்கியது.எங்கு எங்கெல்லாம் கத்தி வைக்கோணுமே அங்கெல்லாம் வைத்து தேவையல்லாத முறைகளையும்,பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் அந்த பெடியன் துடைத்தெறிந்தான்.இரு தசாப்தம் கடந்த போது அந்த தேசத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.அங்கே வாழும் மக்களின் மேம்பட்ட பண்புகளை பிற நாட்டவர்கள் வியந்து பார்த்தார்கள்.அழைப்பு விடப்பட்ட போதும் வரமறுத்து சுயலாபம் கருதி மேற்குலகில் வாழ்ந்த ஈனப்பிறவிகள் இப்போது "நாமும் தமிழர்தான்" எனச்சொல்லி உள்ளே வந்துகொண்டிருந்தார்கள்.இப்போது பெடியனுக்கு வயசாகி விட்டிருந்தது.முன்பு போல அல்லாமல் இப்போது நிதானமாக யோசித்து முடிவெடுக்க தொடங்கியிருந்தான்.மேகங்கள் கறுத்து பெரும் மழை தொடராக பொழிந்த நாளிலே தளபதிகளை அழைத்து "ஆயிரம் வருடங்கள் முன்பு நாங்கள் ஆண்ட நிலம் மீண்டும் எமக்கு வேண்டும்" எனச்சொன்னான்.ஆகாயம் வெளிக்க முதல் கடலிலும் தரையிலும் வானிலும் ஆண்டுகளாக போரியல் பயிற்சி பெற்றிருந்த அந்த தேசத்தின் மக்கள் பாயதொடங்கினார்கள்.மலரவன் கதையை சொல்லி முடித்து விட்டு அடுத்த போத்திலை திறந்து குவளையில் ஊற்ற ஆரம்பித்தான்.


"பெடியன் சண்டைய தொடக்கீட்டான்,வெற்றியா முடியுமெண்டோ?"


"சண்டை முடிவு எப்படியும் அமையலாம்.இயல்பு வாழ்க்கையை விட போராட்டத்தின் போது தான் இனம் அதிகம் வளரும்.அந்த வளர்ச்சிதான் அவனுக்கு முக்கியம்"


மாறனுக்கு இப்போது செம கடுப்பா இருந்தது."ஒரு பெடியன்ர கதைய சொல்லப்போறன்" எண்டு தொடங்கேக்கையே இவன நிறுத்தியிருக்கோணும்.கடைசியா காதால ரத்தம் வாராத குறையா தட்டிப்பிழிபட்டதுதான் மிச்சம்.

"நானும் இப்ப ஒரு பெடியன்ர கதைய சொல்லப்போறன்.நீ சொன்ன மாதிரி இது பன்ரசி கதை இல்லை.உண்மையா நடந்தது". உதவிக்கு பெப்சியை அழைக்காமல் "ராவா" அடுத்த பெக்கை உள்ளே இறக்கிவிட்டு மாறன் தொடங்கினான்."2008 ஆம் ஆண்டு ஆறு மாத இழுபறிக்கு பிறகு கடைசியா அம்மானுக்கு அசைலம் கிடைச்சது.அமுக்க வெடிப்பிரிவில அதிமுக்கிய விஞ்ஞானியா இருந்ததெண்டும்,அத யாரோ ஆமிக்கு போட்டுக்கொடுக்க அவன் அமத்திக்கொண்டு போய் அலற அலற அயன் பெட்டியால அழுத்தினதெண்டும் கேச அலங்கரிச்சு, அஞ்சாறு இடத்தில சூடு வச்சு வெள்ளைக்காறிக்கு அவிட்டு காட்ட அடுத்த கிழமை பிரிட்டிஸ் புத்தகம் வீட்டுக்கு வந்தது.இத கேள்விப்பட்ட அடுத்த கிழமை ஊரில படலை வாசல்ல நிண்ட ஆமிக்காறனுக்கு நூல் விட்டுக்கொண்டிருந்த மச்சாள்காறி பிருந்தா அம்மானுக்கு பேஸ்புக்கில றிக்குவெஸ்ற் விட்டாள்.ரண்டாம் நாள் "நான் உங்களை சினிசியரா லவ் பண்ணுறன் தெரியுமா?" என்று ஸ்கைப்பில வந்து மூக்கால கதைச்சு மடக்கி இந்தியாவிலை கழுத்த நீட்டி லண்டனுக்குள்ள வந்து ஒரு மாதத்துக்குள்ள கட்டை கவுண் போட்டு பிறிமாக்குக்கு ஷொப்பிங் போனாள். கிளைம் வீடு எடுக்க வசதியா வரிசையா மூண்டு பிள்ளை பெத்து,முதுகு நோ எண்டு சொல்லி கள்ள மெடிக்கல் செய்து கவுன்சிலட்ட காட்டி மாத காசும் எடுத்து வாழ்க்கையில "செட்டில்" ஆக 4 வருசம் எடுத்தது.பிறகு என்ன அம்மா பகவான் பஜனை,வெளிநாட்டு ரூர்,ஆட்டுக்கறி,நித்திரை,ஊர் வம்பு எண்டு ஒரே "ஹப்பி" யா போகுது மச்சான் அவனுக்கு.நீ கதையில் சொன்ன பெடியனுக்கு எவ்வளவு சிக்கல்?.அவனுக்கு யாராவது வெடி வைக்க வாய்ப்பிருக்கு.கூட இருக்கிறவனே காட்டிக்கொடுத்து ஆப்படிப்பான்.சண்டையில் தோத்தா தற்கொலை செய்யோணும்.செத்தாப்பிறகு சனம் திட்டி தீர்க்கும்.வண்டி வளர்த்த ஒருத்தன் வந்து "இவர் செய்தது எல்லாம் பிழை" எண்டு ஆய்வு எழுதுவான்.சண்டையில் வெண்டாடாலும் மற்ற இனத்தை அழிச்சது எண்டு போர்க்குற்ற விசாரணை நடக்கும்.இதெல்லாம் தேவையா?.இதுக்கு அம்மான மாதிரியே அந்த பெடியனும் லண்டன்ல அசைலம் அடிச்சு இருந்திருக்கலாம்.இப்ப மொக்கு வெள்ளைக்காறன பார் விடிய எழும்பி வேலைக்கு ஓடுறான்.ஆனா அதே நேரம் நம்ம சிங்கன் அம்மான் மனுசியோட படுத்து கிடப்பான்"

மலரவன் இந்த முறை பதிலேதும் சொல்லவில்லை.ஏளனச்சிரிப்போடு தனது போன் கலறிக்குள் சிறிது நேரம் நோண்டியவன் இறுதியாக அதை மாறனிடம் நீட்டினான்.

"கஸ்டப்படாம வாழ்ந்தா இப்பிடித்தான்.கொஞ்சம் இஸ்டப்பட்டா நாளைக்கு உதை நீயும் மடக்கலாம்.அம்மான போல இருக்கிறதிலும் பார்க்க அந்த பெடியன் போல வாழ்ந்து தலையில வெடி வாங்கி எண்டாலும் சாகலாம்".மலரவன் இந்த முறை கலவை இல்லாமல் குவளையை நிரப்ப தொடங்கினான். 


மலரவனின் புத்தம் புதிய சாம்சுங் கலக்சி S3 போனின் திரையில் துல்லியமாக ஒளிர்ந்த அந்த போட்டோவில் அம்மானின் மனுசி பிருந்தா சந்தி சிக்கன் கடை முதலாளி துசியின் இறுக்கமான அணைப்பில் கிறங்கிப்போய் இருந்தாள்.