தற்போதைய நிலவரம்-08
இங்கிலாந்தின் மிகப்பெரும் அரசியல் வாதியும் பிரபல நர்சரி ஆசிரியருமான கமல்ஸ் யாழ்நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.இலங்கையை விட்டு இனி இம்மியளவும் அசையமாட்டேன் என இவர் அடிக்கடி அவிழ்த்து விழும் அறிக்கையை கேட்பவர்கள் "இவனல்லவா மண்பற்றுக்காரன்" என்று மயிர் கூச்செறிந்து போகிறார்களாம். இரண்டாயிரத்து பதினெட்டு வரை பிரித்தானிய விசாவை அடித்து பொக்கற்றுக்குள் பத்திரமாக வைத்திருக்கும் விடயம் அறிந்தவர்கள் நமட்டுச்சிரிப்போடு அறிக்கையை கேட்டு செல்வதுவும் குறிப்பிடத்தக்கது.இதே நேரம் யாழ் போதனா வைத்தியசாலையில் கமல்சின் மூக்கை பிளந்த வைத்தியர்கள் உள்ளிருந்து பெரிய ஒரு கல்லை கடந்த வாரம் கிண்டி எடுத்தனர்.கல் எப்படி உள்ளே போனது என்பது தொடர்பில் குழப்பமுற்ற வைத்தியர்கள் பலப்பல சாத்தியங்களை தெரிவித்துள்ளனர்.எது எப்படியோ அறுவைச்சிகிச்சையில் பின்னர் "அதெண்டாலும் சரிதான்.இதெண்டாலும் சரி தான்" என்று அரைவாசி வாயாலும் மிகுதி அரைவாசி மூக்காலும் கமல்ஸ் பேசும் பாணி மாறாதிருக்க "கமல்ஸ் ரசிகர்கள்" பிரார்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை மின்சார சபையின் யாழ்பாண மின்பிறப்பாக்கி தற்போது அதி நவீன ஹொண்டா சிவிக் காரில் உலாவி வருகிறாராம்.எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அதிகமாக கவலைப்படும் அவர் காரை மின்சாரத்தின் ஓடச்செய்வதற்கு மாற்றீடுகள் உண்டா என்றும் சிந்தித்து வருகிறார்."இந்த வருடம் முடிய முதல் மாடர்ன் பிகரா மடக்குவேன்" என்று சபதமெடுத்து நல்லூர் தேர்முட்டியிலும் முட்டுசந்து மறைப்புகளிலும் வெறியோடு காத்திருக்கும் இவர் இந்த முறையும் தோல்வியே தழுவுவார் என்று நண்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்."ஒழுங்கைகளிலும் ,கோயில்களிலும் பிகர் பிடித்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.பஸ்களிலும் ரெயில் பயணங்களிலும் போறவன் வாறவன் எல்லாம் சிக்க வைக்கிறான்.வச்சிருக்கிற ஹொண்டா சிவிக்கை ஓட்டுற மாதிரி ஓட்டினா பிகர் தானா பிக்கப் ஆகும்" என்று இவர் தொடர்பில் கருத்து தெரிவித்த  இன்னொரு மின்சார பொறியியலாளர் கனாக்காலம் நிருபரிடம் அங்கலாய்த்துக்கொண்டார்.மின்சாரத்தோடயே வீம்பா விளையாடுறவருக்கு சம்சாரம் பிடிக்கிறது ஒரு பிரச்சினையா இருக்கக்கூடாது பாருங்கோ!
மட்டத்தின் நண்ப ,நண்பிகளுக்கு திருமணம் என்றாலே வாயார,மனதார வாழ்த்தி குதூகலிக்கும் நண்பர்கள் "றெமோ" வின் திருமணம் விடயத்தில் மட்டும் அனல் பறக்கும் ஆத்திரத்தோடு இருக்கிறார்களாம்.ஹிட்லரின் நாட்டில் பணி புரிந்து வரும் "றெமோ" நீல கண்களும் வெளிறிய சருமமும் உள்ள ஆரிய அழகியைத்தான் கரம் பிடிப்பார் என அவதானிகள் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளிவிட்டு வந்த போதிலும் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு உள்ளூர் பெண் ஒருவரை யாழ்ப்பாணத்துக்கு வந்து கரம் பிடித்து கூட்டி சென்றிருக்கிறார்.சில முக்கிய நபர்களைத் தவிர ஏனைய மட்டத்து நண்பர்களுக்கு "றெமோ" பெப்பே காட்டி கண்ணில் மண்ணை தூவி மூன்று முடிச்சை போட்ட விதம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்க்கியுள்ளது.அன்று காதால் புகை வருமளவுக்கு காட்டுக்குத்து குத்தியவர் இன்று நண்பர்கள் காதில் பூவை வைத்து விட்டு கலியாணம் கட்டியதொன்றும் பெரிய விடயம் இல்லைத்தானே!
கட்டப்படும் கட்டடங்களையும் நீண்டுகொண்டே போகிற வீதிகளையும் பார்த்தால் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைகிறது என்று சின்னப்பிள்ளை கூட சொல்லிவிடும்.சும்மா இருந்தவன் கூட வேலியை வெட்டி வீசிவிட்டு மதில் கட்டி பெயின்ற் அடிக்கிறான்.குழி கக்கூஸ் போதாதென்று கொமெட் கட்டுகிறார்கள்.போகிற போக்கைப்பார்த்தால் இன்னும் பத்து வருடங்களில் யாழ்ப்பாணம் சிங்கபுரி போல கொங்கிறீட் கூடு ஆகும் அபாயமுண்டு.நிற்க,விடயத்துக்கு வருகிறேன்.பல்கி பெருகும் கட்டுமான தொழிலில் மட்டத்தின் நண்பர்கள் பலரும் குதித்திருக்கிறார்கள்.எல்லோருக்கும் சுள்ளான் "ராக் தீபன்" தான் முன்னோடி.கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் சுள்ளான்.ஐந்தாறு கட்டுமானங்களை நிர்வகிக்கும் அதே சமயம் அப்பாவும் ஆகியிருக்கிறார்.ஒரே பந்தில் இரண்டு "சிக்ஸர்" அடிக்க யாராலும் முடியாது என்று எவன்டா சொன்னது?.சிங்கபுரியில் மிகப்பெரும் திட்ட நிர்வாகியாக இருக்கும் சிரிப்பு ரவுடி உச்ச சம்பளத்தை எட்டிய பூரிப்பில் வறுத்த தவளை கறியை சாப்பிட்டதுமில்லாமல் முகநூலில் "முதன் முதலாக தவளை சாப்பிடுகிறேன்" என்றும் நிலைக்குறிப்பிட்டுமிருக்கிறார்.யாரோ ஒரு குறுக்கால போனவன் "மலிவான விளம்பரத்துக்காக இயக்கத்துக்கு முருக்கம் செத்தலால் அடித்ததாக புளுகியது போல இன்னொரு புளுகு" என கருத்து எழுதிவிட வெகுண்ட சிரிப்பு தவளை கறி தின்னும் படத்தை பிடித்து கீழே போட்டிருக்கிறார்.அந்த படம் அங்கே போய் இங்கே போய் கடைசியாக கனாக்காலம் நிருபரிடம் சிக்கிவிட்டது.உசுப்பேத்தினா சிரிப்பு ரவுடியை கிணத்துக்க குதிக்கவும் வைக்கலாம் என்று அந்த "குறுக்கால போன" நண்பர் சிரிப்புடன் கருத்து தெரிவித்தார்.