சின்ன வயதில நரியும் திராட்சைப்பழமும் கதை கேள்விப்பட்டிருப்பீங்க தானே. அதப் போல தான் இது காதல் முயற்சியில் நொந்து நோலாகிப் போன இளைஞர்களைப் பற்றி.
என்னைப் பற்றி எழுதப் போனா அரிவரியில இருந்து எழுத வேண்டி வரும்.அதோட ஆட்டோகிராப் கதையை சுட்டிட்டன் என்று வீண் கொமன்ஸ் வேற வரும்( பில்டப் கொஞ்சம் அதிகமோ…….! இருந்தாலும் கண்டுக்காதீங்க பிளீஸ் ....). நண்பர்களைப் பற்றி எழுதலாம் எண்டால் “டேய்! இப்ப தாண்டா அம்மா அப்பா கல்யாணப்பேச்சை எடுத்திருக்கினம். நீ என்னடா எல்லாத்திற்கும் ஆப்படிக்கப் பார்க்கிறாய்……...!” என்று சீதனக்கனவுகளோடு காத்திருக்கும் நண்பர்களிடம் டோஸ் வாங்க வேண்டி வரும். எல்லாவற்றையும் யோசித்து பெயர்களைக் குறிப்பிடாமலேயே எழுதுகிறேன்.தொப்பி அளவெண்டால் நான் பொறுப்பில்லை.(அப்பாடா……தப்பித்தேன்)

கல்லூரி வாழ்க்கையைப் பொறுத்த வரை பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் வேறு வேறு பாடசாலை என்ற படியால் நெருங்கிப் பழக வாய்ப்புகள் குறைவு. கலவன் பாடசாலை, தனியார் ரியூட்டரிகளில் வாய்ப்பிருந்தும் எங்களூர் பெருசுகளிடம் மாட்டாமல் கதைக்க கூட வாய்ப்பில்லை.ஏதோ சைட் அடிக்கிறதோட சரி.எங்கையாவது சாதாரணமாய் கதைத்தாலே காதல் என்று கதை கட்டி ஊரையே கூட்டி விடுவர்.(இப்ப போன்,இன்ரனெற் வந்தாப் பிறகு எங்கட ஊர் பெருசுகளுக்கெல்லாம் கிலோ கணக்கில அல்வா தான்..). அதோட ஓ லெவல், ஏ லெவல் எண்டு எங்கட இளசுகளுக்கும் காதலிக்க நேரமில்லை.

கம்பஸ் போனாப்பிறகு தான் ஆண்கள், பெண்கள் பழக வாய்ப்பு அதிகம். மனதில் வேறு எண்ணஙகள் இல்லாமல் சக மாணவிகளிடம் நட்பாகப் பழக வாய்ப்புக்கிடைத்த இடமும் இது தான். இருந்தாலும் நல்ல சில காதல்களும் மலர்வதுண்டு.கம்பஸ் வாழ்க்கையைப் பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சமில்லை.எங்கட கம்பஸ் தமிழ்ப்பெடியள் காதலில சிக்காத ஒரு காரணம் தமிழ்ப்பெண்களின் எண்ணிக்கை வலு குறைவு. இருந்தாலும் முக்கிய காரணம் சீதன டிமாண்ட் குறையுமே என்பது தான்

ஜுனியர் பிள்ளைகளின் வருகையுடன் தான் கம்பஸ் களை கட்டும். அது வரை தேமே என்று அழுக்காகத் திரிந்தவர்களெல்லாம் டிப்டொப்பாக ட்ரிம் பண்ணிய மீசையுடன் ஜுனியர் பிள்ளைகளை நோக்கித் தங்கள் காதல் அம்புகளை வீசுவார்கள். லெக்சர் கட் அடித்து விட்டு முழு முயற்சியில் தோல்வி கண்டு தோல்வி நிச்சயம் எனக்கண்ட சிலர் “ஒண்டும் சரியில்லை மச்சான்: என்ர ரேஞ்சுக்கு உதெல்லாம் எந்த மூலைக்கு” என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். ஒரு சிலர் இந்த மூஞ்சிக்கு இது போதும் என்று முடிவு கட்டி “என்னவளே அடி என்னவளே”என்று பாடாத குறையாய் அவள் பின்னால் அலைவார்கள்.பொதுவாக தமிழ்ப்பெண்களும் யாராவது பின்னால் திரிந்தால் ஓகே சொல்லாமல் டிமாண்ட் பண்ணுவது வழக்கம்.sms,போஸ்டர்கள் என்று full try பண்ணி வெறுத்துப் போன சிலர் தாடி வைத்து அவளை மறக்கக் குடிக்கிறேன் என்று சொல்லி பார்ட்டிகளில் ரணகளப் படுத்துவார்கள்.இதைத் தவிர வேறு சிலர் இது காதல் இல்லை நட்பு எண்டு மற்றவர் காதில பூச்சுற்றுவார்கள்.திருமண அழைப்பிதழ் தந்தாப் பிறகு தான் விடயமே தெரிய வரும். ஒரு சிலர் மாத்திரம் விதிவிலக்கு.

கம்பஸில் பொதுவாக பெண்களுடன் அதிகம் பழகுவோரை அழைக்க “வாளி” எனும் பதத்தைப் பாவிப்பார்கள்.இதன் மூலம் பெண்களுடன் வெளிப்படையாகப்பழகப் பலரும் பின்னடிப்பதுண்டு. இதனால் சில நல்ல நட்புக்கள் சிதறடிக்கப்பட்டபோதும் உண்மையான காதல்களை இனங்காணக்கூடியதாய் இருந்தது.(எல்லாப்பெண்களுடனும் பழகி வாளி என்ற போர்வைக்குள் காதலைத் தெரியாமல் மறைத்த எமகாதகர்களும் உண்டு.)

இதைத் தவிர இன்னொரு கூட்டம் ”டயலொக் பக்கேஜ்”.முகம் தெரியாத காதல்(இது காதல் தானா என்பது கேள்விக்குரிய விடயம்.) ஒருவரை ஒருவர் தெரியாது.உண்மைப் பெயர்கள் பாவிக்காது 1000 நிமிடம் கதைத்து முடிக்கும் நோக்கத்துடன் உருவாகும் பொழுதுபோக்குக்காதல் இது. (பொதுவாக இது பில்டப்புக்காகவும் காதல் செய்ய துணிச்சல் இல்லாத ஆற்றாமையை வெளிக்காட்டாமலும் இருக்கச் செய்யும் முயற்சி என்பதே எனது கருத்து.)

கம்பஸ் வாழ்க்கையும் முடிந்து எல்லோரும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கம்பஸ் நினைவுகளை மறக்க முடியாது.
காதலில் வெற்றிக்கொடிநாட்டிய நண்பர்களுக்கும் சீதனக்கனவுகளோடு காத்திருக்கும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.!
காதலில் தோல்வி கண்டவர்கள் பொதுவாக மீண்டும் அதில் இறங்குவது குறைவு.(சூடு கண்ட பூனை……!) ‘எங்கிருந்தாலும் வாழ்க” என வாழ்த்துபவர் சிலர். தோற்றுப் போய் விட்டோம் என்ற எண்ணத்துடன் காலத்தைக் கழிப்பவர்கள் பலர். காதலில் தோல்வி கண்டவர்கள் எனது தலைப்பை மீண்டும் ஒருமுறை பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்களேன்……………………!

பின் குறிப்பு:இதை வாசிப்பவர்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள். எனது அப்பாவிற்கு இதைப்பற்றி எதுவும் சொல்லவேண்டாம்,…பிளீஸ்,,,,,!
(தெரிந்தால் “பெடியனை நம்பிக் கம்பசுக்கு அனுப்பினது பிழை” எண்டு பிரம்போட கலைச்சாலும் கலைப்பார்…)

2 comments:

Kudikaran said...

1000 நிமிடம் கதைத்து முடிக்கும் நோக்கத்துடன் உருவாகும் பொழுதுபோக்குக்காதல் இது. (பொதுவாக இது பில்டப்புக்காகவும் காதல் செய்ய துணிச்சல் இல்லாத ஆற்றாமையை வெளிக்காட்டாமலும் இருக்கச் செய்யும் முயற்சி என்பதே எனது கருத்து.)///
well said
Ana ithu yaraiyo thaakura maathiri kidaku
:)

செழியன் said...

கம்பஸில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பரவலாக இது காணப்படுகிறது. எங்களின் சமூக அமைப்பும் இதற்கு ஒரு காரணம்.
தொப்பி அளவாய் இருக்குப் போல