
இராச வீதியில் சைக்கிள் வேகமெடுக்க தம்பையாண்ணைக்கு உள்ளே படபடப்பு கூட தொடங்கியது.கொஞ்சக்காலத்துக்கு முதல் வீட்டு கடுவன் நாய் ஜிம்மிக்கு கதறக்கதற அறுவைச்சிகிச்சை செய்த காட்சி வேறு குறுக்கால் ஓடியது.வீட்டுக்கு திரும்பி போகேக்க ஜிம்மி வாலை ஆட்டிக்கொண்டு வந்து "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனச்சொல்வது போல ஏளனப்பார்ப்வை பார்க்குமோ? என்று வேறு சிந்தனை வந்தது.குழம்பமான எண்ண ஓட்டங்களால் சைக்கிளை வீதிவளைவில் திருப்பிய போது மணியை இயக்க மறந்து போக குறுக்கால காட்டுப்பண்டி கணக்கா வந்தவனில மோதும் தருணம் தம்பையர் சடுதியா ஹாண்டிலை திருப்பி வேலி பொட்டுக்க விட்டதும் தவறியது.
"சொறி சொறி ஐ ஆம் மிகவும் சொறி,இஸ்ஸரா யூ வந்தத ஐ ஆம் கவனிக்கலை" எண்டு சொல்லுக்கொண்டு போனவனை போனவனின் முகத்தை கவனித்ததும் தம்பருக்கு பொறி தட்டியது.
"தம்பி நீர் சிங்கத்தின்ர பெடியன் கமலரூபன் தானே?,இங்க என்ன செய்யுறீர்?".
"நான் லண்டன்ல MSc படிச்சிட்டு யாழ்ப்பாணமும் பெண்களும் என்ற தலைப்பில ஒரு கட்டுரை எழுதுவம் எண்டு வந்தனான்,அது தான் றோட்டுக்கரையா நின்று பெண்களை அவதானிக்கிறன்"
என்றபடி சடுதியாக நீளமான அளவு கோல் ஒன்றை எடுத்த அவன் சைக்கிள் போய் நின்ற வேலிப்பொட்டினை அளந்து குறித்துக்கொண்டான்.
"யாழ்ப்பாணப்பெண்களுக்கும் வேலிப்பொட்டுக்கும் என்ன சம்பந்தம்?" எண்டு வாயில வந்த கேள்வியை அடக்க தம்பையாண்ணை நிறையவே கஸ்டப்பட வேண்டி இருந்தது.
சிங்கம் தம்பரின்ர பழைய கூட்டாளி.சிங்கத்தின்ர அதே முகவெட்டு அப்படியே பெடியனுக்கு இருக்கிற படியா இலகுவா பிடிச்சிட்டார்.சுக துக்க விசாரணைகளில் தொடங்கிய விவாதம் வளர்ந்து தன்னையறியாமல் ஆஸ்பத்திரிக்கு ஒப்பிரேசன் செய்ய போற விசயத்தை சொல்வதில் நின்றது.
"சிங்கத்தார விட பெடியன் வலு கெட்டிக்காரனப்பா,நாக்கில கொழுக்கி போட்டு இழுக்கா குறையா கதை உருவிட்டான் பார்ரா" என எண்ணியபடி தம்பர் விறைச்சு போய் நிக்க கமலரூபன் தொண்டய செருமிய படி தொடங்கினான்.

"நீங்கள் இப்படி செய்யுறது ஆயிரம் வருசத்துக்கு பிறகு பலகோடி தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும்.இதால பத்தாவதா பிறக்கப்போற பிள்ளை இல்லாம போகும்,அந்த பிள்ளை 30 வருசத்திலை 3 பிள்ளைக்கு அப்பா ஆகுது எண்டு ஒரு பேச்சுக்கு வச்சுக்கொண்டா,அந்த மூண்டு பிள்ளையும் 60 வருசத்தில 9 பேருக்கு அப்பாக்கள் ஆகிடும் அப்ப 1000 வருச முடிவில இருக்க வேண்டிய 1x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3= 205891132100000
க்கு மேற்ப்பட்ட தமிழாட்கள் சந்ததி இல்லாம போக போகுது,சொந்த இனத்தை காட்டிக்கொடுக்கிறது எவ்வளவு கேவலமோ,அதை போலத்தான் இதுவும்,இது ஒரு தன்னினக்கொலை,அக்காட்ட விசயத்தை விளங்கப்படுத்தி, எவ்வளவு முடியுமோ அவ்வளவை பெறுங்கோ" எண்டு கமலரூபன் சொல்லி நிறுத்த முதல் தம்பையாண்ணை சைக்கிள் வீட்டை நோக்கி றெக்கை கட்டி பறக்க தொடங்கி விட்டது.
{வளரும்}
0 comments:
Post a Comment