மிலாமிளிக்கா!.மிதப்புக்காலணிகள் மீது மிருதுவான பாதம் வைத்து புரவி நடை போடும் ஐந்தடி உடம்புக்காரி.உயரம் மட்டும் மட்டுப்பட்டதே தவிர, கட்டுமீறிய அளவுகளாய் மீதம் எல்லாம் வாய்த்திருந்தன.முதல்சந்திப்பிலேயே காதல் சொன்ன காளைகளை எல்லாம் முரட்டுப்பார்வையாலேயே விரட்டிய அவளுக்கு அவன் வந்து முன்னால் நின்றபோது மூச்சே வரவில்லை.அவள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்த உதடுகளால் அவன் அழகாய் புன்னகைத்த போது பைத்தியமாகிப்போனாள்.கலாச்சாரம் கட்டுப்பாடு எல்லாம் மறந்து,உணர்ச்சி நிரம்பிய கணமொன்றில் சனநெருக்கடியான வீதியோரமாய் அவனோடு ஆழமாய் உதட்டு முத்தம் பரிமாறிக்கொண்டதை ஊரே பரபரப்பாய் கதைத்தது.விடயம் அறிந்தவர்கள் அவளை காணும் தருணங்களில் வீசும் விசித்திரப்பார்வைகள் அம்முத்தத்தை மீளவும் நினைவுக்குள் கொண்டுவந்து கிளர்ச்சியூட்டினவே தவிர அவமானத்தை தருபவையாக இருக்கவில்லை.அவள் அங்குலம் அங்குலமாய் உணர்வு ஊற்றி வளர்த்த காதல்ச்செடிக்கு ஒரு ஆண்டு வயது ஆகிய தருணங்களில்த்தான் அந்த அரிதான,உவப்பான வாய்ப்பு தேடி வந்தது.சிறுவயதிலிருந்து அவளின் கனவுகளினிருப்பிடமாகி இருக்கும் லண்டன்,சொகுசுக்காரில் வந்து இறங்கும் கணவனின் கோட்டுப்பைகளிலிருக்கும் பணத்தின் கனதி,நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வாழ்க்கை என கண் முன்னே நின்ற பிம்பங்களை சுருக்குப்பையில் போட்டுகட்டி உளத்தாரசின் ஒரு தட்டில் போட்டுவிட்டு மறுதட்டில் அவன் காதலை போட்டபோது ஈடாகவில்லை."என்னை மன்னிச்சிடுடா!, தற்கொலை செய்வம் எண்டு மிரட்டுற வீட்டுக்காரருக்கு முன்னால என்னால எதுவுமே செய்ய முடியேலை,உனக்கு என்னை விட நல்ல ஒருத்தி கிடைப்பா" என்று சில கண்ணீர்த்துளிகளை இலவச இணைப்பாக்கிச்சொல்லி முடித்து நிமிர்ந்த போது அவன் பலவீனமான நடையோடு போய்க்கொண்டிருந்தான்.



நாட்களின் ஓட்டத்தில் பழைய நினைவுகள் மழுங்கிப்போயிருந்தன.தொலைபேசியில் புதியகாதலை எதிர்கால வெளிநாட்டு கணவனோடு வளர்ப்பதொண்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. குறிக்கப்பட்ட மணநாள் நெருங்க பரபரப்பாகி அழகு சிகிச்சை நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தபோது தான் அந்த கொடூரமான ஒற்றைத்தலைவலி அவளைத்தாக்கியது.சகல மாத்திரை மருந்துகளுக்கும் அடங்காமல் கபாலத்தில் தொடர் சம்மட்டி அடிகளாய் பிறந்த வேதனையின் வீச்சம் தாங்க முடியாமல் இறுதியாய் டொக்டர் மலரவனிடம் வந்தாள்.மிளாமிளிக்காவை மல்லாக்க வைத்து ரொமோகிறபி ஸ்கானருள் செலுத்தி முப்பரிமாண படங்களை எடுத்துப்பார்த்த போது கபாலத்தின் வலது பக்கமாக மேலே கருப்பாக புள்ளியாய் எதோ ஒன்று தெரிந்தது.அசாதாரண வளர்ச்சி கொண்ட கலங்களால் உருவாகும் விம்பத்திலும் பார்க்க அது வேறுபட்டிருந்தது.ஆழ அலசி கூர்ந்து பார்க்க அப்புள்ளியூடு சென்ற எக்ஸ் கதிர்கள் எவையும் தெறித்து வரவேயில்லை என்பது விளங்கிற்று.சக்திக்கதிர்களை உறிஞ்சி தெறிக்கவிடாமல் வைத்திருக்கும் புள்ளி என்றால்......... மனித உடல்க்கலங்களுக்கு அப்படியான ஒரு இயல்பு இருப்பதேயில்லையே?....விலகலை உண்டாக்கும் கதிரியக்க உலோகங்கள் கூட எக்ஸ் கதிர்களை முழுமையாக சிறைப்பிடிப்பதில்லை......சாத்தியமான தகவுகளூடு பாய்ந்த எண்ணஓட்டம் ஒரு புள்ளியின் தரித்து நின்ற போது மலரவன் முகத்தின் வியர்வைத்துளிகள் ஏசி குளிர்மையையும் மீறி பூத்திருந்தன.



காஸ்மிக் கருந்துளைகள் பிரபஞ்சத்தின் பிரமாண்ட மர்மப்புள்ளிகள்.அளவிடமுடியா திணிவையும் மிகக்குறுகிய கன அளவையும் கொண்ட அவை அளவில்லா ஈர்ப்பு விசையால் ஒளியையும் தப்பவிடாமல் சிறைப்பிடிக்கும் வல்லமையுள்ளவை. சூழவுள்ள திணிவுகளை விழுங்கி விரிந்து செல்லும் இவற்றுள் திணிவழியும் வீதம் உள்ளிழுப்பதை விட அதிகமாயிருக்கும் என்பதால் வளர்ச்சி எக்காலத்திலும் கட்டுப்படாதென பௌதீக ஆசிரியர் அக்காலத்தில் சொன்னது நினைவில் வந்தது.இவற்றுக்கு மாறாக மிகச்சிறிய அளவிலான கருந்துளைகளும் உள்ளன.திணிவில் 5000 புரோட்டன்களுக்கு சமனானானதும் அளவில் புரோட்டனை விட 1000 மடங்கு சிறியதுமான திணிவு கருந்துளையாக தொழில்படுமென நவீன விஞ்ஞானம் சொல்கிறது.உடலியல் கூறுகளிலொன்று பிரிகையடைந்து மிகமிக சிறியதாகும் பட்சத்தில் அது பிறகலங்களை விழுங்கும் துளையாக மாறி வளர்ந்து கொண்டே செல்வதற்கான வாய்ப்பு பில்லியனில் ஒன்றேனும் இருப்பதாக மனம் சொல்லியது.




"செல்வி மிளாமிளிக்கா! உங்களுக்கு வந்திருப்பது பிரபஞ்ச மூலைமுடுக்குகளிலும் இல்லாத அரிதான நோய் ஒன்று.கபாலத்துள் இருந்த கல அணுக்களில் ஒன்று படுவேகமாக பிரிகையடைந்து கருந்துளையை உருவாக்கி இருக்கிறது.அது சூழவுள்ள கலங்களை விழுங்கி வளர்ச்சியடைந்து வருகிறது.கால ஓட்டத்தில் அது உம்மை மட்டுமல்ல உலகத்தையே விழுங்கவல்லதாகவும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.மலரவன் சொல்லிக்கொண்டு போன வார்த்தைகள் பிம்பங்களாக அணிவகுக்க, மிளாமிளிக்கா மிரளத்தொடங்கினாள்.




"நிறைகுறைதல்,கலச்சிதைவுக்கு காரணமான HCG ஓமோனின் ஒரு வடிவமே இச்சிக்கலுக்கு மூலமாக இருக்கும் என நினைக்கிறேன்.மனதை விட்டு நீக்க முடியாமல் இருக்கும் துன்பியல் நினைவு ஏதாவது நீண்ட நாளாய் இருக்கிறதா செல்வி மிளாமிளிக்கா?"

"அப்படி ஒன்றுமே இல்லை டொக்டர்"

"குற்ற உணர்வு?,யாருக்காவது தீங்கு அல்லது துரோகம் இழைத்ததாய் உணர்வு?,அதுவும் HCG சுரப்பை தூண்டும்"

"ம்ம்ம்.இல்லை.ஆனா கொஞ்சமா.அதை சரியாக்கேலும் எண்டு நினைக்கிறன்"

"முதல்ல அதை செய்யுங்கோ,கடவுள் உங்கள் பக்கம் நிற்பாராகட்டும்.
முக்கியமாக இதைப்பற்றி எவருக்கும் சொல்லி விடாதீர்கள்.உங்களால் தமக்கு ஆபத்து என நினைப்பவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்."



சில மாதங்களின் பின்பு குளிர்மையான மழை நாள் ஒன்றில் மலரவனை சந்திக்க யாரோ பூங்கொத்துக்களோடு காத்திருப்பதாய் உதவியாளர்கள் சொல்லிப்போனார்கள்.சென்று பார்த்த போது மலர்ந்த முகத்தோடு அவன் நின்றிருந்தான்."டொக்டர்,அவ சம்மதம் சொல்லிட்டா,வாற மாதம் கலியாணம்.நீங்க அவசியம் வந்தாகணும்,நான் இப்ப ட்ரக்ஸ் எல்லாம் விட்டு வேளா வேளைக்கு சாப்பிட்டு எப்பிடி மாறிட்டன் பாருங்கோ" வார்த்தைகளில் குழந்தையின் குதூகலம் தெரிந்தது.

அன்றிரவு மலரவன் வழமை போல ஆழமான சிந்தனைக்குள் தன்னை அமிழ்த்திக்கொண்டிருந்தார்.அவரால் நிச்சயம் அவன் திருமணத்தில் பங்கேற்க முடியாது.அது விரும்பத்தகா விளைவுகளை ஏற்படுத்தலாம்.அநேகமாக மிளாமிளிக்கா கழுத்தில் அணிந்திருக்கும் கனமான ஆபரணம் திருமணம் முடிந்த பின் பெட்டிக்குள் உறங்கச்சென்றதும் அந்த ஒற்றைத்தலைவலி அகன்றுவிடும். உதவி தேடி வந்தவளுக்கு புனைகதை சொல்லி குழப்பியது கிஞ்சித்தும் வருத்தத்தை தரவில்லை.காதல் துரோகத்தாலுண்டான வலிகள் நிரம்பிய பாதை வழி வந்தவன் அவ்வலி இன்னொருவனுக்கு கிடைப்பதை ஒருபோதும் விரும்பமாட்டான்.

0 comments: