ஜுராசிக் காலத்தின் செழிப்பு மிக்க பொழுதுகள் அவை.அகன்று விரிந்திருந்த கானகங்கள் எங்கும் கனமான உயிரிகள் நடமாடிக்கொண்டிருந்தன.ஒவ்வொரு மூச்சிலும் வளியில் இருந்த 40% ஒக்சிசனை தொன்கணக்கில் உறிஞ்சி உடல்சூட்டில் அனல் காற்றாக மாற்றி வெளியே அனுப்பிக்கொண்டிருந்த "செல்லாத்தா" என்றுமில்லாதவாறு இன்று மெலிதான சுவாசத்தோடு இடிந்து போய் விழுந்து கிடந்தது.அதன் கண்களில் இருந்து ஓடிய நீர்த்தாரைகள் தற்போதைய உலகின் குட்டி அருவி ஒன்றின் பரிமாணத்துக்கு ஒப்பிடக்கூடியதாய் இருந்தது."செல்லாத்தா" டைனோசரில் பச்சைத்தாவரம் மட்டும் உண்டு வாழ்கிற வகை.மிச்ச டைனோசர் சகவாசமே வேண்டாம் என்று தான் குடும்பத்தையும் இழுத்துக்கொண்டு இலங்கைத்தீவின் கட்டுப்பெத்தை கானகப்பக்கமா ஐஞ்சாறு மாசங்களுக்கு முன் குடி பெயர்ந்திருந்தது.செழிப்பான ஆற்றங்கரையெங்கும் பரவியிருந்த ஈரலிப்பான மரங்களும் பிற டைனோசர்களின் தொந்தரவில்லா சூழலும் அதற்கு நன்றாகவே பிடித்துப்போக சாப்பாடும் தூக்கமுமாக நாட்கள் கவிதையாக நகர்ந்து கொண்டிருந்தன.ஆனால் அந்த மகிழ்வுக்கெல்லாம் முடிவு வைப்பது போல நடந்து விட்டிருந்தது நேற்று நடந்த சம்பவம்.

செல்லாத்தாவின் ஒரே மகள் "றைனா".அவளைப்போலவே நீண்ட கழுத்து, மெழுகு பூசினால்ப்போல மென்பச்சை கரட்டீன் சருமம்,மொழு மொழு வயிறு, எடுப்பான பின்புறம்,வளைவுகள் நிறைந்த வால் என்று அம்சமா இருந்தாள். புருசன்காரன் "நல்லாம்பி" செல்லாத்தாவை விட உயரம் குறைவு என்றாலும் நல்ல கம்பீரம்."உங்கட மூஞ்சி அப்படியே இவளுக்கு வந்திருக்கு" எண்டு அடிக்கடி அவரிடம் செல்லாத்தா சொல்லிக்கொள்ளுவாள்."எங்களுக்கு வச்சது போல மொக்கையா பேர வைக்காம நவீனமா வைக்கோணும்" எண்டு நாள்கணக்கில் பிளான் பண்ணி வச்ச பேர் தான் "றைனா".எட்டாவது வயசில் அவள் வயதுக்கு வரும் மட்டும் எல்லாம் நல்லாத்தான் இருந்தது.அதுக்குப்பிறகு இளம்பெடியள் முதல்க்கொண்டு கிழவன்கள் வரை றைனாவ எங்க பார்த்தாலும் கலைக்கத்தொடங்கீட்டாங்கள்.நல்லாம்பி தெம்பா இருக்குமட்டும் வாலால வெளுத்து கழுத்தால அடிச்சு மகள் பின்னால வாறவங்கள கலைச்சுப்போடுவார்.ஆனா போனவருச தொடக்கத்தில் ஒரு வகை மாமிச உண்ணி ரெக்ஸ் டைனோசரோட பொருதேக்க கடி விழுந்து வலக்கால் இயங்காம போய் எல்லாம் சிக்கலாகிப்போட்டுது.அதுக்குப்பிறகு தான் பெருநிலத்துண்டில இருந்து தண்ணி வற்றின நேரமா இந்த தீவுக்கு இடம்பெயருற முடிவை அவசரமா எடுக்கும்படியானது.ஆனா இங்கயும் பிரச்சினை வந்திட்டுது.நேற்று "றைனா" ஆற்றில குளிச்சிட்டு வரேக்க இருட்டான கானக பகுதியில வச்சு ஒரு பெடியன் டைனோசர் வால கவ்விப்பிடிச்சு இழுத்திட்டுது. றைனா முதல்ல திடுக்கிட்டாலும் உதறி எறிஞ்சிட்டு பின்னங்கால் வால்ல பட ஓடி வந்திட்டுது.மகள் ஓடி வந்து மரஒளிவுக்கை போய் நடுங்கிக்கொண்டு இருந்த பார்த்து நல்லதம்பி கடுப்பாகி காடு முழுக்க உறுமிக்கொண்டு திரிஞ்சாலும் ஒருத்தரும் தட்டுப்படேலை.குழப்பத்தின் உச்சத்தில் இனிப்புச்செடியள வயிறு நிறைய திண்டுட்டு "சுகர் ரஸ்" ஆகி மல்லாக்க படுத்திருக்கேக்க மலரவன் நினைவு வந்தது.

காலங்கள் தாண்டி கணநேரத்தினுள் ஓடிய அவ் அப்பழுக்கில்லா உயிரியின் கூரிய எண்ண அலைகள் கட்டுப்பெத்தை கம்பஸ் வளாகத்தில் விரிவுரைக்கு மட்டம் போட்டுவிட்டு கல்மேசையில் குப்புற படுத்திருந்த மலரவனின் தூக்கத்தை குலைத்தன.கணநேரத்துள் உடம்பினுள் உறைந்திருந்த அனைத்து சக்தியையும் புள்ளியாய் குவித்தபோது உருவம் அரூபமாகி இறந்து போன மில்லியன் ஆண்டுகள் வழி பயணம் சென்று நல்லதம்பி காலடியில் நின்று உருவமாகியது.உடம்பில் அனலாய் கொதித்த காய்ச்சலுக்குள்ளும் றைனா கடுமையா வெட்கப்பட்ட தொடங்கியது."உனது உடலில் கடி விழுந்த இடத்தை பார்த்தாக வேண்டும்" என்ற மலரவன் கேட்டது றைனாவின் மென்பச்சை முகத்தில் சென்நிற நிழல்களை உருவாக்கி விட்டிருந்தது."ஒரு டைனோசர் பொண்ணு எத வேணும் எண்டாலும் காட்டுவா....ஆனா வாலை மட்டும் காட்ட மாட்டா,நீங்க ஒரு மனுசப்பொண்ணுட்ட இடுப்பை காட்டு எண்டு கேட்டா அவுத்து காட்டுவாவா?" றைனா கேட்காமல் கேட்பதாய் பட்டது.கமெராவை உருவி வாலை குறிவைத்து மின்னலாய் அழுத்தி உருப்பெருப்பித்த போது கடி காயம் கனதியாய் தெரிந்தது.பற்கள் பொதிந்திருந்த ஆழத்தில் கடித்த உயிரியின் வேட்கை புரிந்தது.


றைனாவின் அழகுக்கு இன்னும் அழகூட்டி இலைகுழைகளால் அலங்கரித்து ஆற்றங்கரையருகே நிறுத்தி விட்டு மறைத்திருந்து அவதானிக்கத்தொடங்கிய மலரவனை செல்லாத்தாவும் நல்லாம்பியும் குழப்பத்தின் ரேகைகள் முகத்தில் பரவ பின்னால் நின்று பார்த்தபடி நின்றன.நேரம் ஓட ஆற்றங்கரையோரம் புதர்கள் முறியும் ஓசை தோண்றி சமீபமாக வர, கட்புலனை கூர்மையாக்க பிரமாண்டமாய் ஒரு உருவம் றைனாவின் வாலை குறிவைத்து நெருங்குவது விளங்கியது.சிலகணங்கள் நிலையெடுத்த அது.......திடீரென்று வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக பாய்ந்து வாலில் பற்களை பதிக்க முன் மலரவன் கையில் இருந்த வலைத்துப்பாக்கி முழங்கி சிறைப்பிடித்தது.


கொழுப்பின் உறைவிடமாக இருந்த அப்பருத்த டைனோசரை ஏறங்க இறங்க பார்த்த எட்டுப்பட்டி டைனோசர்களுக்கும் நாட்டாமையான புறண்டோசரஸ் வழக்கமான கேள்விகளை கேட்டபின் "இவனை யுராசிக் காலத்திலிருந்து கண்காணா காலத்துக்கு நாடு கடத்துங்கள்" என்று மலரவனிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த செம்பில் நீண்டநேரமாக சப்பியபடியிருந்த மரச்சக்கைகளை துப்பியதும் பிறக்கப்போகும் காலங்களூடு பயணம் மீள தொடங்கியது.மலரவன் அருவமாக இழுத்துச்சென்ற உருவமான அந்த வெறி பிடித்த டைனோசர் உருச்சிறுத்து பல்லியாகி மரமேறி குரங்காகி வளர்ந்து நிமிர்ந்து ரோமங்கள் கொட்டுண்டு உருமாறி நிலைமாறி கூடச்சென்றது.சக்தியெல்லாம் திரட்டி காலப்பெருவெளியின் சூட்சும பாதையிலிருந்து 2008 ஆம் ஆண்டுப்புள்ளிக்கு அவ்வுருவை இழுத்து வீசி விட்டு கிட்ட நடந்து சென்று பார்த்த மலரவனுக்கு பல்லாயிரம் வோல்ற் மின்சாரம் மர்ம ஸ்தானத்தில் பாய்ந்த்து போல இருந்தது.அங்கே ரஜீந்திரதாஸ் குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்தான்.

0 comments: