02/06/2008

02/06/2008 இனை மட்டம் 2003 ஐ சேர்ந்த எவரும் இலகுவில் மறந்து விட்டிருக்கமுடியாது.அன்று எமது மட்டத்துக்குரிய மொறட்டுவை பல்க்லையின் இறுதி நாள் கடந்து போனது.அதை தொடர்ந்து வந்த 06/06/2008 அன்று பல்கலை அருகே எமது மட்டத்தை சேர்ந்த சகோதர மொழி மாணவன் Gamunu Ratnayake உட்பட 21 உயிர்களை காவு கொண்ட கொடூர கிளைமோர் குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் அப்பகுதிக்கு மீண்டும் செல்லும் அறவே வாய்ப்பு அற்றுப்போனது.
கெமுனு மிக அமைதியான நண்பன்.எல்லோரும் நன்றாக கதைப்பான்.இரவுப்பொழுதுகளில் விடுதியின் துணிகள் துவைக்கும் இடத்தில் அடிக்கடி அவனை காண நேரிடும்.ஆடைகள் கழுவிய படி அவனோடு உரையாடிய பொழுதுகள் நன்றாக நினைவில் இருக்கின்றன.திரைப்படங்கள் உருவாக்குவது தொடர்பிலான எனது ஆர்வம் குறித்து அவனுக்கு மிக நன்றாக தெரியும்."உனது படத்தில் எனக்கு ஒரு பாத்திரம் வேண்டும்" என்று ஒரு நாள் கேட்டு வைக்க "மச்சான்! ஒரு சிங்கள பெடியனே நம்ம பட்டத்தில நடிக்க விரும்பிறான்டா" என்று பெருமையாக பீற்றிக்கொண்டதும் மறக்கவில்லை.வெடித்து சிதறிய குண்டு அவன் முகத்தை சிதைத்துவிட்டிருந்ததாக பார்த்தவர்கள் சொல்ல கேட்டும், அவன் இறுதிநிகழ்வுக்கு கூட செல்ல இயலாத நிலவரம் குறித்து சிலாகித்தும் வருந்திய பொழுதுகள் கனமானவை.கடந்த மூன்றுவருடமாக மீளாத்துயிலில் உறங்குகின்ற அந்த நண்பனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

http://sundaytimes.lk/080608/News/news0017.html

யுத்தமில்லாத உலகமொன்றில் பிறவி எடுத்து மீள அந்த நண்பனை சந்தித்து பேசவேண்டும் என்பது தொடர்பிலான எண்ணங்கள் என்னுள் அணிவகுப்பதை என்னால் நிறுத்தமுடியவில்லை.இறந்த காலத்தினுள் போய் விருப்பமான நாட்களை மீள ஒரு முறை வாழ வேண்டும் என்ற அவா பல நாட்களாய் என்னுள் வியாபித்து இருக்கிறது.இது ஒரு வகையான மனநோயோ என்ற சந்தேகம் இருப்பினும்,அது எனக்கு பிடித்தமானதாக இருப்பதால் அது குறித்து அலட்டிக்கொள்லவில்லை.

இவ்வகையான எண்ணவோட்டம்தான் சில வாரங்கள் முன்பு ஒரு குறும் படத்தை உருவாக்குவதற்கானகருவை என்னுள் விதைத்தது.நேரமிருந்தால் ஒரு தடவை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

0 comments: