சின்ன வயதில நரியும் திராட்சைப்பழமும் கதை கேள்விப்பட்டிருப்பீங்க தானே. அதப் போல தான் இது காதல் முயற்சியில் நொந்து நோலாகிப் போன இளைஞர்களைப் பற்றி.
என்னைப் பற்றி எழுதப் போனா அரிவரியில இருந்து எழுத வேண்டி வரும்.அதோட ஆட்டோகிராப் கதையை சுட்டிட்டன் என்று வீண் கொமன்ஸ் வேற வரும்( பில்டப் கொஞ்சம் அதிகமோ…….! இருந்தாலும் கண்டுக்காதீங்க பிளீஸ் ....). நண்பர்களைப் பற்றி எழுதலாம் எண்டால் “டேய்! இப்ப தாண்டா அம்மா அப்பா கல்யாணப்பேச்சை எடுத்திருக்கினம். நீ என்னடா எல்லாத்திற்கும் ஆப்படிக்கப் பார்க்கிறாய்……...!” என்று சீதனக்கனவுகளோடு காத்திருக்கும் நண்பர்களிடம் டோஸ் வாங்க வேண்டி வரும். எல்லாவற்றையும் யோசித்து பெயர்களைக் குறிப்பிடாமலேயே எழுதுகிறேன்.தொப்பி அளவெண்டால் நான் பொறுப்பில்லை.(அப்பாடா……தப்பித்தேன்)

கல்லூரி வாழ்க்கையைப் பொறுத்த வரை பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் வேறு வேறு பாடசாலை என்ற படியால் நெருங்கிப் பழக வாய்ப்புகள் குறைவு. கலவன் பாடசாலை, தனியார் ரியூட்டரிகளில் வாய்ப்பிருந்தும் எங்களூர் பெருசுகளிடம் மாட்டாமல் கதைக்க கூட வாய்ப்பில்லை.ஏதோ சைட் அடிக்கிறதோட சரி.எங்கையாவது சாதாரணமாய் கதைத்தாலே காதல் என்று கதை கட்டி ஊரையே கூட்டி விடுவர்.(இப்ப போன்,இன்ரனெற் வந்தாப் பிறகு எங்கட ஊர் பெருசுகளுக்கெல்லாம் கிலோ கணக்கில அல்வா தான்..). அதோட ஓ லெவல், ஏ லெவல் எண்டு எங்கட இளசுகளுக்கும் காதலிக்க நேரமில்லை.

கம்பஸ் போனாப்பிறகு தான் ஆண்கள், பெண்கள் பழக வாய்ப்பு அதிகம். மனதில் வேறு எண்ணஙகள் இல்லாமல் சக மாணவிகளிடம் நட்பாகப் பழக வாய்ப்புக்கிடைத்த இடமும் இது தான். இருந்தாலும் நல்ல சில காதல்களும் மலர்வதுண்டு.கம்பஸ் வாழ்க்கையைப் பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சமில்லை.எங்கட கம்பஸ் தமிழ்ப்பெடியள் காதலில சிக்காத ஒரு காரணம் தமிழ்ப்பெண்களின் எண்ணிக்கை வலு குறைவு. இருந்தாலும் முக்கிய காரணம் சீதன டிமாண்ட் குறையுமே என்பது தான்

ஜுனியர் பிள்ளைகளின் வருகையுடன் தான் கம்பஸ் களை கட்டும். அது வரை தேமே என்று அழுக்காகத் திரிந்தவர்களெல்லாம் டிப்டொப்பாக ட்ரிம் பண்ணிய மீசையுடன் ஜுனியர் பிள்ளைகளை நோக்கித் தங்கள் காதல் அம்புகளை வீசுவார்கள். லெக்சர் கட் அடித்து விட்டு முழு முயற்சியில் தோல்வி கண்டு தோல்வி நிச்சயம் எனக்கண்ட சிலர் “ஒண்டும் சரியில்லை மச்சான்: என்ர ரேஞ்சுக்கு உதெல்லாம் எந்த மூலைக்கு” என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். ஒரு சிலர் இந்த மூஞ்சிக்கு இது போதும் என்று முடிவு கட்டி “என்னவளே அடி என்னவளே”என்று பாடாத குறையாய் அவள் பின்னால் அலைவார்கள்.பொதுவாக தமிழ்ப்பெண்களும் யாராவது பின்னால் திரிந்தால் ஓகே சொல்லாமல் டிமாண்ட் பண்ணுவது வழக்கம்.sms,போஸ்டர்கள் என்று full try பண்ணி வெறுத்துப் போன சிலர் தாடி வைத்து அவளை மறக்கக் குடிக்கிறேன் என்று சொல்லி பார்ட்டிகளில் ரணகளப் படுத்துவார்கள்.இதைத் தவிர வேறு சிலர் இது காதல் இல்லை நட்பு எண்டு மற்றவர் காதில பூச்சுற்றுவார்கள்.திருமண அழைப்பிதழ் தந்தாப் பிறகு தான் விடயமே தெரிய வரும். ஒரு சிலர் மாத்திரம் விதிவிலக்கு.

கம்பஸில் பொதுவாக பெண்களுடன் அதிகம் பழகுவோரை அழைக்க “வாளி” எனும் பதத்தைப் பாவிப்பார்கள்.இதன் மூலம் பெண்களுடன் வெளிப்படையாகப்பழகப் பலரும் பின்னடிப்பதுண்டு. இதனால் சில நல்ல நட்புக்கள் சிதறடிக்கப்பட்டபோதும் உண்மையான காதல்களை இனங்காணக்கூடியதாய் இருந்தது.(எல்லாப்பெண்களுடனும் பழகி வாளி என்ற போர்வைக்குள் காதலைத் தெரியாமல் மறைத்த எமகாதகர்களும் உண்டு.)

இதைத் தவிர இன்னொரு கூட்டம் ”டயலொக் பக்கேஜ்”.முகம் தெரியாத காதல்(இது காதல் தானா என்பது கேள்விக்குரிய விடயம்.) ஒருவரை ஒருவர் தெரியாது.உண்மைப் பெயர்கள் பாவிக்காது 1000 நிமிடம் கதைத்து முடிக்கும் நோக்கத்துடன் உருவாகும் பொழுதுபோக்குக்காதல் இது. (பொதுவாக இது பில்டப்புக்காகவும் காதல் செய்ய துணிச்சல் இல்லாத ஆற்றாமையை வெளிக்காட்டாமலும் இருக்கச் செய்யும் முயற்சி என்பதே எனது கருத்து.)

கம்பஸ் வாழ்க்கையும் முடிந்து எல்லோரும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கம்பஸ் நினைவுகளை மறக்க முடியாது.
காதலில் வெற்றிக்கொடிநாட்டிய நண்பர்களுக்கும் சீதனக்கனவுகளோடு காத்திருக்கும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.!
காதலில் தோல்வி கண்டவர்கள் பொதுவாக மீண்டும் அதில் இறங்குவது குறைவு.(சூடு கண்ட பூனை……!) ‘எங்கிருந்தாலும் வாழ்க” என வாழ்த்துபவர் சிலர். தோற்றுப் போய் விட்டோம் என்ற எண்ணத்துடன் காலத்தைக் கழிப்பவர்கள் பலர். காதலில் தோல்வி கண்டவர்கள் எனது தலைப்பை மீண்டும் ஒருமுறை பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்களேன்……………………!

பின் குறிப்பு:இதை வாசிப்பவர்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள். எனது அப்பாவிற்கு இதைப்பற்றி எதுவும் சொல்லவேண்டாம்,…பிளீஸ்,,,,,!
(தெரிந்தால் “பெடியனை நம்பிக் கம்பசுக்கு அனுப்பினது பிழை” எண்டு பிரம்போட கலைச்சாலும் கலைப்பார்…)

சாறத்த மடிச்சுக்கட்டிக்கொண்டு பழைய ரலி சைக்கிள்ல கௌபாய் கணக்கா பாஞ்சு ஏறின தம்பையாண்ணை மிதிச்ச மிதியில சொற்ப நேரத்துக்குள்ளாகவே பிரதான வீதி வந்து விட்டிருந்தது.இண்டைக்கு செய்து முடிச்சிட வேணும்.இலவசமா செய்யுறதும் பத்தாம ஒரு தொகை காசும் தாறாங்கள் எண்டு நேற்று வாசகசாலையில அறிஞ்சவுடன கிளம்பின பொறி இண்டைக்கு நெருப்பாக மாறி அவருள்ளே எரிந்து கொண்டிருந்தது.தம்பையருக்கு 20 வயசில கலியாணம் நடந்தது.பிறகு ஓடிப்போன 25 வருசத்திலை எட்டு பிள்ளையளுக்கு அப்பா ஆகி சிங்கம் கணக்கா இருந்தவர போன தை மாசம் மூத்தவன் சௌந்தர் ஒருத்தியோட ஓடிப்போய் தாத்தா ஆக்கி கேவலப்படுத்தினான்.அவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமா மனுசி முத்துலெட்சுமியை 9வது பிள்ளைக்கும் அம்மா ஆக்கி சில நாட்களுக்குள்ளேயே வீட்டில் பூகம்பம் வெடித்து விட்டது.எல்லாத்துக்கு காரணம் பாழாப்போன எரிச்சல் பிடிச்ச பக்கத்துவீட்டுக்காரன் ஜெயசுதன்தான்.பல தசாப்தமா பிள்ளை இல்லாம அம்மா பகவான்,அம்மன் எண்டு நேர்த்தி வச்சுக்கொண்டு திரியுற அவனுக்கு தம்பையர் வரிசை வரிசையா பெத்து தள்ளுறத கண்டு பொறுக்க முடியாம தங்கட வீட்டில டசின் கனக்கா குட்டி போட்டுக்கொண்டிருந்த பெட்டை நாய்க்கு லெட்சுமி எண்டு பெயர வச்சு விட்டான்.ஊரில முத்துலெட்சுமி அந்தக்கால ஐஸ்வரியா ராய்.தம்பையர் பலரோட அடிபட்டு போயிலைத்தோட்ட மறைப்புகளுக்க காதல் வளர்த்து ஓடிப்போய் கரம்பிடித்த பெண்மணி.அதிர்ந்து கூட பேசமாட்டாள்.பிள்ளைகளில அவ்வளவு பாசம்.அவளே "இனியும் கிட்ட வராதையுங்கோ" எண்டு சொல்லி தட்டிப்புழிய தம்பையாண்ணை உடைந்து போய்விட்டார்.தூக்கமில்லாம கடந்த இரவுகளூடு முகட்டை வெறித்தபடி பல நாள் யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருந்தார்.
இராச வீதியில் சைக்கிள் வேகமெடுக்க தம்பையாண்ணைக்கு உள்ளே படபடப்பு கூட தொடங்கியது.கொஞ்சக்காலத்துக்கு முதல் வீட்டு கடுவன் நாய் ஜிம்மிக்கு கதறக்கதற அறுவைச்சிகிச்சை செய்த காட்சி வேறு குறுக்கால் ஓடியது.வீட்டுக்கு திரும்பி போகேக்க ஜிம்மி வாலை ஆட்டிக்கொண்டு வந்து "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனச்சொல்வது போல ஏளனப்பார்ப்வை பார்க்குமோ? என்று வேறு சிந்தனை வந்தது.குழம்பமான எண்ண ஓட்டங்களால் சைக்கிளை வீதிவளைவில் திருப்பிய போது மணியை இயக்க மறந்து போக குறுக்கால காட்டுப்பண்டி கணக்கா வந்தவனில மோதும் தருணம் தம்பையர் சடுதியா ஹாண்டிலை திருப்பி வேலி பொட்டுக்க விட்டதும் தவறியது.

"சொறி சொறி ஐ ஆம் மிகவும் சொறி,இஸ்ஸரா யூ வந்தத ஐ ஆம் கவனிக்கலை" எண்டு சொல்லுக்கொண்டு போனவனை போனவனின் முகத்தை கவனித்ததும் தம்பருக்கு பொறி தட்டியது.

"தம்பி நீர் சிங்கத்தின்ர பெடியன் கமலரூபன் தானே?,இங்க என்ன செய்யுறீர்?".

"நான் லண்டன்ல MSc படிச்சிட்டு யாழ்ப்பாணமும் பெண்களும் என்ற தலைப்பில ஒரு கட்டுரை எழுதுவம் எண்டு வந்தனான்,அது தான் றோட்டுக்கரையா நின்று பெண்களை அவதானிக்கிறன்"
என்றபடி சடுதியாக நீளமான அளவு கோல் ஒன்றை எடுத்த அவன் சைக்கிள் போய் நின்ற வேலிப்பொட்டினை அளந்து குறித்துக்கொண்டான்.

"யாழ்ப்பாணப்பெண்களுக்கும் வேலிப்பொட்டுக்கும் என்ன சம்பந்தம்?" எண்டு வாயில வந்த கேள்வியை அடக்க தம்பையாண்ணை நிறையவே கஸ்டப்பட வேண்டி இருந்தது.

சிங்கம் தம்பரின்ர பழைய கூட்டாளி.சிங்கத்தின்ர அதே முகவெட்டு அப்படியே பெடியனுக்கு இருக்கிற படியா இலகுவா பிடிச்சிட்டார்.சுக துக்க விசாரணைகளில் தொடங்கிய விவாதம் வளர்ந்து தன்னையறியாமல் ஆஸ்பத்திரிக்கு ஒப்பிரேசன் செய்ய போற விசயத்தை சொல்வதில் நின்றது.

"சிங்கத்தார விட பெடியன் வலு கெட்டிக்காரனப்பா,நாக்கில கொழுக்கி போட்டு இழுக்கா குறையா கதை உருவிட்டான் பார்ரா" என எண்ணியபடி தம்பர் விறைச்சு போய் நிக்க கமலரூபன் தொண்டய செருமிய படி தொடங்கினான்."நீங்கள் இப்படி செய்யுறது ஆயிரம் வருசத்துக்கு பிறகு பலகோடி தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும்.இதால பத்தாவதா பிறக்கப்போற பிள்ளை இல்லாம போகும்,அந்த பிள்ளை 30 வருசத்திலை 3 பிள்ளைக்கு அப்பா ஆகுது எண்டு ஒரு பேச்சுக்கு வச்சுக்கொண்டா,அந்த மூண்டு பிள்ளையும் 60 வருசத்தில 9 பேருக்கு அப்பாக்கள் ஆகிடும் அப்ப 1000 வருச முடிவில இருக்க வேண்டிய 1x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3= 205891132100000
க்கு மேற்ப்பட்ட தமிழாட்கள் சந்ததி இல்லாம போக போகுது,சொந்த இனத்தை காட்டிக்கொடுக்கிறது எவ்வளவு கேவலமோ,அதை போலத்தான் இதுவும்,இது ஒரு தன்னினக்கொலை,அக்காட்ட விசயத்தை விளங்கப்படுத்தி, எவ்வளவு முடியுமோ அவ்வளவை பெறுங்கோ" எண்டு கமலரூபன் சொல்லி நிறுத்த முதல் தம்பையாண்ணை சைக்கிள் வீட்டை நோக்கி றெக்கை கட்டி பறக்க தொடங்கி விட்டது.

{வளரும்}

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே


தலைப்பைப் பார்த்த்தும் ஏதோ ஆட்டோகிராப் மாதிரி ஏதோ காதல் கதை எண்டு நினைச்சா தப்பு.(சீச்சீ......இந்தப் பழம் புளிக்கும்.)இது கட்டுப்பெத்தைக்கம்பஸ் பற்றி

எல்லோரும் போல் பல கனவுகளோடு வந்த எனக்கும் பிறகு தான் தெரிஞ்சது கம்பஸ் வாழ்க்கை எப்படி எண்டு.படிப்புப்பளு மட்டுமின்றி தங்குமிடம்,சாப்பாடு,மொழிப்பிரச்சனை என வெறுத்துப்போனவர்களுக்கு ஒரே ஆறுதல் நண்பர்களும் அவர்களின் பகிடிகளும் தான்.வேறு ஆறுதல் தேட முயன்றவர்களும் உண்டு.

ஒவ்வொரு தங்குமிட நண்பர் கூட்டத்திற்கும் ஒவ்வோர் புனை பெயர். பேய்வீடு,அறிவகம்,ஆச்சிரமம்,7ஜி எனப்பல பெயர்கள்.முதல் வருடம் தனித்துப்போன நான் அடிக்கடி அறிவகத்திற்கு விசிட் செய்வதுண்டு. இதற்கு அறிவக நண்பர்களின் பகிடிகளால் கவரப்பட்டது மட்டுமல்ல நோட்ஸ்,கோர்ஸ்வேக் எடுக்கலாம் என்ற சுயநலமான காரணமும் இருந்தது.இரண்டாம் வருடம் தான் அறிவகத்தில் இணைந்தேன்.அறிவகநண்பர்கள்செல்வரஞ்சன்,பிரகலாதன்,
சசிவர்ணன்,தீபரூபன்,ரஜித்,சிறீஸ்காந்,ஜெசி,கோகிலன்,ஜனா,குலோத்துங்கசாகரன் ஆகியோர். இதில் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியே எழுதலாம்.இதில் மெயின் முத்தையன்கட்டுக்கு கரண்ட் கொடுத்த,சுனாமி நேரம் மீன்ரின் தொழிற்சாலை போட்ட சசிவர்ணன்.என்ன தான் நக்கலடித்தாலும் சசிக்கு கோபமே வராது.(ரொம்ப நல்லவன்). சிரித்து சிரித்து சமாளிக்கும் சசியை நாங்களும் விடுவதில்லை.(சசிக்கும் தன்னைப்பற்றி மற்றவர்கள் கதைப்பதில் பெருமை).அந்த நேரம் அறிவகத்திற்கு முதல் கணனி கப்பலில்கொண்டுவந்து சேர்த்த பெருமை சசியையே சேரும்.ஆனால் அதில்எக்ஸாம் நேரம் படித்து முடித்த பிரகலாதனும் சசியும் படம் போட்டுப்பார்ப்பதும் செல்வரஞ்சன் திட்டித் திட்டி நோட்சுடன் கொட கன்ரீனுக்குப் போறதும் வேற கதை.ஆனால் செல்வரஞ்சன் நூலகத்திற்கு மட்டும் போறதில்லை,பிளாஸ்பேக்..............

ஒருநாள் நூலகத்தில் படித்துமுடிந்து கொட கன்ரீனில் இருக்கும்பொழுது பூட்டிய நூலகத்திற்கு முன்னால் ஒரே சத்தம். நூலகத்தில் கள்ளன் என்று.போய் பார்த்தால் எங்கட செல்வா தான்.கொஞ்சம் அயர்ந்து நித்திரை கொண்ட செல்வா எழும்பியபோது நூலகம் பூட்டு. லைட்டைப்போட்டு விடிய விடிய படிக்க யோசித்திருப்பான். அதற்குப்பிறகு கன்ரீன் தான். நண்பர்கள்செற்றாக சேர்ந்து கன்ரீன் மேசையில் கால் போட்டுப் படிக்கின்ற சுகமே தனி.இரவு ரவிகடை பிளேன்ரீ குடிச்சிட்டு கொயின்ஸ்பூத்தில ரண்டு பேரைக் கோல் பண்ணிக்குழப்பியிட்டு திரும்ப படிக்கிறதும் ஊருறங்கும்போது கையில் கல்லுடன் (நாய்ப்பயம்) இரவை ரசித்தவாறு ரூமுக்கு திரும்புவதையும் மறக்க முடியுமா.
இதற்குள் தோளில் பெரிய பையுடன் வரும் சுமைதாங்கி ஒருவரையும் இங்கு குறிப்பிட வேண்டும்,பின்னர் சொய்சாபுரவில் என் ரூம்மேட்டான மதுவதனன் தான் அது.அந்தப்பையில் சோப்பிலிருந்து துவாய் வரை எல்லாம் இருக்கும்.கன்ரீன் மேசையிலேயே நித்திரையும் கொள்வான்.ஒருவேளை ரூம் வாடகையை மிச்சப்படுத்துகிறானோ என்று யோசித்தேன்.பின்னர் ரூம்மேட்டான பிறகு தான் தெரிந்தது மது எவ்வளவு செலவாளி என்று.

பரீட்சைக்காலங்களிலும் கூட வெள்ளிதோறும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோயிலுக்குப் போகத்தவறுவதில்லை.பலர் போவது பக்தியால்மட்டுமில்லை கலர் பார்க்கவும் பக்கத்திலிருக்கும் அமிர்தாவில் சில்லிப்பரோட்டா சாப்பிடவும் தான். நண்பர்கள் எல்லாரும் அங்கே ஒன்றுகூடுவது தனி அழகு.
3ம் வருடம் எனக்கு ஏழரைச்சனி போல.எனக்கு ஏழரைச்சனி வந்தது சொய்சாபுர வீட்டு ஓணர்க்கிழவி வடிவில.அதோட முடிவெடுத்தது தான் ஓணரோட இல்லாத வீடு பார்க்க எண்டு.அங்கையிருந்து மீட்டெடுத்தது மதுவும் ராபியும் தான். பிறகு ஒருமாதிரி செமிசைவக்கடைச்சாப்பாடும் 255 பஸ்ஸுமாய் போனது.செமிசைவக்கடைக்கு பவான் வைத்த பெயர் புட்டுக்கடை.ஆனால் அங்க புட்டைத்தவிர மற்றவை தான் பரவாயில்லை.அந்தக்கல்லு மாதிரியான புட்டை பவான் விரும்பிச்சாப்பிட்டது உடம்பு மெலிய.இது தெரியாமல் மருத்துவப்பயிற்சிக்காக வந்திருந்த ராபியின் அண்ணா பவானின் சிபார்சால் கவரப்பட்டு 2 புட்டு மேலதிகமாய் எடுத்து சாப்பிட முடியாமல் எறிந்தது சோகக்கதை.புதுவருடத்தன்று 12 மணியளவில் சொய்சாபுரவில் மைதானத்தில் ஒன்றுகூடி வெடி கொளுத்தியதும் மறக்க முடியாது.

உண்மையில் பிரிந்துபசார விழாவின் போது தான் நண்பர்களின் பிரிவின் வேதனையை உணர்ந்தேன்.காதலில் மட்டுமல்ல நட்பின் பிரிவிலும் கூட ஒரு வித வலி உண்டு. இருந்தும் அந்த நினைவுகளை மீட்பதில் ஒரு சுகமும் இருக்கிறது.